Published:Updated:

வாழவைக்கும் வாழையிலை...

ராஜேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
ராஜேஸ்வரி

வெற்றிக்கதை பகிரும் தம்பதியர்!

வாழவைக்கும் வாழையிலை...

வெற்றிக்கதை பகிரும் தம்பதியர்!

Published:Updated:
ராஜேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
ராஜேஸ்வரி

சில்லென்ற காற்று... மிதமான மழைத் தூறல்... ரம்மியமான பருவநிலை... பச்சைக் கொடிகளைப்போல காற்றில் அசைந்தாடும் வாழையிலைகளைப் பக்குவமாக அறுவடை செய்து தரையில் அடுக்கி வைக்கின்றனர் பணியாளர்கள். அவர்களுடன் இணைந்து இலைகளை அறுவடை செய்தவாறே, பேக்கிங் செய்யும் பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

“இன்னிக்கு சாயந்திரம் மும்பைக்கு 100 கட்டு வாழையிலைகளை அனுப்பணும். அதனாலதான் வேகமா வேலை நடந்து கிட்டிருக்கு” என்று முகம் மலர சிரித்தபடியே வரவேற்கிறார். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகேயுள்ள நாகரணை கிராமத்தைச் சேர்ந்தவர், வாழையிலை விற்பனையில் கணவருடன் கரம்கோத்து புதுப்பாய்ச்சலைத் தொடங்கியுள்ளார். அண்டை மாநிலங்களுக்குத் தொடர்ச்சியாக வாழையிலைகளை அனுப்பி வரும் இந்தத் தம்பதியர், மாதம்தோறும் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டி அசத்துகின்றனர். வாழையிலையால் வாழ்க்கையில் ஜெயித்த கதையைப் பகிர்ந்தார் ராஜேஸ்வரி.

வாழவைக்கும் வாழையிலை...

“திருப்பூர்ல என் வீட்டுக்காரர் மணிகண்டன், பனியன் கம்பெனி வேலைக்குப் போயிட்டிருந்தார். அதனால அங்கயே குடியேறிட்டோம். அக்கம்பக்க உணவகங் களுக்கும், விசேஷ வீடுகளுக்கும் வாழையிலை தேவைப்படுறது தெரிஞ்சு, விவசாயி களிடமிருந்து நேரடியா வாழையிலையை வாங்கி, பஸ்ல கொண்டுபோய் விற்பனை செஞ்சேன். குறைந்த லாபமே கிடைச்சாலும், இந்தத் தொழிலின் ஏற்ற இறக்கங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. வீட்டுக்காரருக்கு நிலையான வேலை அமையாததால, 2012-ல் மறுபடியும் நாகரணை கிராமத்துக்கு வந்தோம். என் அப்பா எங்களுக்கு ரெண்டு ஏக்கர் விவசாய நிலத்தைக் கொடுத்தார். எப்போதும் நிலையான விற்பனை வாய்ப்பு இருக்குறதால, வாழையிலை தொழிலைப் பெரிசா செய்யலாம்னு முடிவெடுத்தோம்.

பல மாநிலங்களுக்கும் போய், புது வாடிக்கை யாளர்களைப் பிடிக்க ரொம்பவே மெனக் கெட்டார் என் கணவர். உள்ளூர் ஆர்டர் களைப் பிடிக்குற முயற்சிகளை நான் கவனிச்சு கிட்டேன். புதுப்புது ஆர்டர்கள் வரவே, சுத்து வட்டார ஊர்கள்ல சிறு, குறு விவசாயிகளின் தோட்டங்கள்ல வாழைத்தார் அறுவடை முடிஞ்சதும், அந்தப் பூமியை மூணு மாசங் களுக்கு மட்டும் குத்தகைக்கு எடுப்போம். அந்த வகையில, எங்க ரெண்டு ஏக்கர் வாழைத்தோப்பு தவிர, 15 ஏக்கர் நிலங்கள்ல இப்போ வாழை யிலைகளைச் சுழற்சி முறையில அறுவடை செய்யுறோம்”

- முயற்சி திருவினையாக்கிய அனுபவம் பகிர்பவர், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா விலுள்ள பல்வேறு வியாபாரிகளுக்கும் பல ஆண்டுகளாக வாழையிலைகளை விற்பனை செய்வதுடன், உள்ளூரிலும் வாழையிலைகளை விற்பனை செய்கிறார்கள்.

பேக்கிங் செய்த இலைக்கட்டுகளை டெம்போவில் ஏற்றிக்கொண்டிருந்த மணி கண்டன், “சத்தியமங்கலத்தைச் சுத்தியிருக்குற இந்தப் பகுதிகள்ல மண்வளம், நீர்வளம், பருவ நிலைனு பல்வேறு காரணிகளும் வாழை சாகுபடிக்கு ஏதுவா இருக்கு. பெரும்பாலான விவசாயிகள் வாழைத்தார் வியாபாரத்துல மட்டுமே கவனம் செலுத்துறாங்க. வாழையிலை தொழில் சிரமமானதுன்னாலும், எங்களை நம்பியிருக்குற வாடிக்கையாளர்களுக்காகவே இந்தத் தொழிலை சந்தோஷமா செய்திட்டிருக் கோம். கதலி, தேன்வாழை ரகங்களை மட்டுமே நாலு முதல் ஏழு நாள்கள் வரை வெச்சிருந்து பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் விரும்புற இந்த ரெண்டு ரக இலைகளைத்தான் ஒன்பது வருஷங்களா விற்பனை செய்யுறோம்” என்பவர், தொழில் நுணுக்கங்களைக் கூறி இடைவெளிவிட, பணியாளர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு வந்த ராஜேஸ்வரி தொடர்ந்தார்...

வாழவைக்கும் வாழையிலை...

“எந்த ரக வாழையா இருந்தாலும், சராசரியா பத்து மாதங்கள்ல வாழைத்தார் அறுவடை செய்யலாம். இதுக்கிடைப்பட்ட காலத்துல, இலைகளைப் பறிச்சா, வாழைத்தார் குலை தள்ளாது. அதனால, வாழைத்தார் அறுவடை முடியிற வரைக்கும் தாய் மரத்துல வாழை யிலைகளை அறுக்க மாட்டோம். அதன் பிறகு, அந்தத் தாய் வாழை மரத்தின் வளர்ச்சி குறைஞ்சுடும். இதுக்கிடையே, தாய் வாழை மரத்தைச் சுத்தி வளரும் பக்கக் கன்றுகளால, தாய் மரத்தின் வளர்ச்சி குறையக் கூடும் என்பதால், அவ்வப்போது பக்கக்கன்றுகளை நீக்கிடுவோம். தாய் வாழை மரத்துல தார் அறுவடை முடிஞ்ச பிறகு மட்டுமே, அதைச் சுத்தி வளர்ந்திருக்கும் ஏழெட்டு பக்கக் கன்றுகளையும் வளரவிட்டு, அதிலிருந்து மூணு மாதங்களுக்கு வாழையிலைகளை அறுவடை செய்வோம். அதன் பிறகு பக்கக் கன்றுகளின் வளர்ச்சியும் குறைவதால, எல்லா வாழை மரங் களையும் அழிச்சுட்டு, அடுத்த வெள்ளாமையை ஆரம்பிப்போம்.

ஆடி மாசத்துல பலமா காத்து வீசும்போதும், மழைக்காலம் மற்றும் கோடைக்காலத்துல இயல்புக்கு மாறா அதிகமா காத்து வீசினாலும் வாழை மரங்கள் சாஞ்சுடும். மழை அதிகமா பெய்தாலும் இலைகள் கிழிஞ்சுடும். வெயில் அதிகமா இருந்தா, வாழையில குருத்து வர்றது குறைஞ்சு, தரமான இலைகள் கிடைக்காது. இது மாதிரியான நேரங்கள்ல தரமான இலைகளை, கவனமா பார்த்து அறுவடை செய்ய ஆட்கூலி அதிகமாகும். கிழிசல் இல்லாம அகலமாவும், சராசரியா நாலடி நீளத்துல வளர்ந்திருக்குற இலைகளையும் மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்புவோம்.

கிழிஞ்ச இலைகளைப் பரப்பி அதன் மேல தரமான இலைகளை அடுக்கி வெச்சு, பாதுகாப்பா பேக்கிங் செஞ்சு, தண்ணியில முக்கி எடுத்து லோடுக்கு அனுப்புவோம். மேற்சொன்ன சிக்கல்களால தேவைக்கேற்ப இலைகள் கிடைக்காதபட்சத்துல, எங்களுக்கான லாபம் கிடைக்காட்டியும் பரவாயில்லைனு, வேறு வியாபாரி களிடமிருந்து இலைகளை வாங்கி உரிய நேரத்துக்குள்ள டெலிவரி அனுப்பிடுவோம். கொரோனாவுக்கு முன்பு வாரத்துல ஏழு நாள்களுமே ஆர்டர்கள் இருந்துச்சு. இப்போ வாரத்துல மூணு நாலு நாள்களுக்கு மட்டுமே ஆர்டர்கள் இருக்குது. சீக்கிரமே நிலைமை பழையபடி மாறும்னு மலைபோல நம்பியிருக்கோம்”

- தொடர் சவால்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கும் ராஜேஸ்வரி, பன்னிரண்டாம் வகுப்பும், மணிகண்டன் டிகிரியும் முடித்துள்ளனர். கொரோனாவுக்கு முன்பு ஆறு மாதங்கள் துபாய்க்கு வாழையிலைகளை ஏற்றுமதி செய்தவர்கள், மீண்டும் ஏற்றுமதி பணிகளைத் தொடங்க வுள்ளனர்.

“எங்க சுத்துவட்டார கிராமங்கள்ல பலரும் பாக்கு மட்டையைத் தவிர்த்துட்டு, எந்த நிகழ்வா இருந்தாலும் வாழையிலைகளைப் பயன்படுத்தவே விரும்புவாங்க. அதனால, ஆர்டர்களுக்கு அனுப்புறது போக, வீட்டுல எப்போதும் பல கட்டு வாழையிலைகளை வெச்சிருப்போம். துக்க காரியம் உட்பட அவசரத் தேவைகளுக்கு, எங்களைத் தேடி வர்றவங்கங்கிட்டே இல்லன்னு சொல்ல மாட்டோம். வாழை சார்ந்த எந்தத் தொழிலா இருந்தாலும், சரியான முறையில செஞ்சவங்க வீழ்ந்ததில்லைனு சொல்லுவாங்க. அதுபோல, எங்களையும், நாங்க வேலை கொடுக்குற பத்துக்கும் அதிகமான குடும்பங்களையும் வாழைதான் வாழ வைக்குது”

- புன்னகையுடன் விடைகொடுத்த ராஜேஸ்வரி, அறுவடை பணியில் மும்முரமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism