மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்!

 உமா சேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
உமா சேகர்

“பூர்வீகம் ஈரோடு மாவட்டம் கள்ளியம்புதூர் கிராமம். மிடில் கிளாஸ் குடும்பம்.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையில் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், கோயம்புத்தூர் ‘அவணீதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளர், உமா சேகர்.

அப்பா, பிரபல தொழிலதிபர் கே.பி.ராமசாமி (கே.பி.ஆர் நிறுவனத் தலைவர்). கணவர், கொங்கு மண்டலத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான ‘டெக்ஸ்வேலி’யின் நிர்வாக இயக்குநர். பிசினஸ் குடும்பம் என்றாலும், தனக்கு அனுபவமில்லாத பிசினஸ் பாதையில் பயணித்த உமா, இன்று சுய அடையாளத்துடன் தடம் பதித்திருக்கிறார். பல்வேறு சவால்களைக் கடந்து சாதனையாளராக உயர்ந்திருக்கும் உமா, தனது வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

கணவரின் கண்டிஷன்!

“பூர்வீகம் ஈரோடு மாவட்டம் கள்ளியம்புதூர் கிராமம். மிடில் கிளாஸ் குடும்பம். விவசாயியான அப்பா, விசைத்தறித் தொழிலும் செய்து வந்தார். பிறகுதான் கோயம்புத்தூர்ல டெக்ஸ்டைல் பிசினஸைத் தொடங்கினார். அப்பாவின் தொழிலுக்கு என்னாலான சிறிய உதவிகளைச் செய்தது தவிர, வேறு எந்த அனுபவமும் எனக்கில்லை. அரசுப் பள்ளியில்தான் படிச்சேன்.

 உமா - கல்பனா
உமா - கல்பனா

எம்.பி.ஏ முடிச்சதும் கல்யாணமாச்சு. வீட்டில் சும்மா இருக்க விருப்பமில்லை. ‘நாம் வாழப் பிறந்தவர்கள் அல்லர்; எல்லோருமே ஆளப்பிறந்தவர்கள்’னு அப்பா அடிக்கடி சொல்வார். அது மனசுல ஆழமா பதிஞ்சதால, பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். ‘சரிவருமா?’ன்னு எனக்குள் இருந்த பயத்தைப் போக்கினார் அம்மா. என் கணவரின் சகோதரிகள் இருவருடன் இணைந்து இரண்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் குழந்தைகளுக்கான ரெடிமேட் உடைகள் ஷோரூமைத் தொடங்கினோம்.

பிறகு, குழந்தைகள் மற்றும் பச்சிளம் தாய்மார்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்ய ‘பேபி வேர்ல்டு’ என்ற பெயரில் புதிய ஷோரூமைத் தொடங்கினோம். இதுதான் ஈரோட்டில் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான முதல் ஷாப். இது சிறப்பாக இயங்கியது.

எனக்கு ரிஸ்க் எடுக்கப் பிடிக்கும். எனவே, பெரிய இலக்குடன் புதிய தொழில் தொடங்க முடிவெடுத்தேன். ஆனா, ‘பசங்க இருவரும் அஞ்சு வயசைக் கடந்த பிறகு உன் விருப்பத்தைச் செயல்படுத்து’ன்னு கணவர் ராஜசேகர் சொன்னார். அதற்கான தருணம் அமைந்ததும், அப்பாவும் கணவரும் வழிகாட்டினாங்க. என் தங்கை கல்பனாவும் நானும் பார்ட்னராக இணைந்தோம். வங்கிக் கடன் உட்பட 30 கோடி ரூபாய் முதலீட்டில், 2006-ம் ஆண்டு, கோயம்புத்தூர் அருகேயுள்ள கணியூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

கைகொடுத்த சட்டப்படிப்பு!

நிர்வாகம் மற்றும் உற்பத்திப் பிரிவுகளை நானும், விற்பனைப் பிரிவை தங்கையும் கவனிச்சுக்கிட்டோம். தொடக்கத்தில் 350 ஊழியர்கள் இருந்தாங்க. அப்பாவின் பிசினஸில் பார்ட்னராக இணைந்து செயல்படும் என் சித்தப்பாதான், முதல் ரெண்டு வருஷம் பருத்தி வாங்குவதற்கு உதவியா இருந்தார். திடீர்னு ஒருநாள், ‘இனி நீயே பருத்தி வாங்கி அனுபவத்தைக் கத்துக்கோ’ன்னு சொல்லிட்டார். பிறகு, நானே குஜராத் போய் பருத்தி வாங்குவது தொடர்பான எல்லா விஷயங்களையும் படிப்படியா கத்துகிட்டேன். அப்போ எனக்கு வங்கிச் செயல்பாடுகள் பத்தி எதுவும் தெரியாம, வங்கி அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தடுமாறி பலமுறை திட்டுவாங்கியிருக்கேன்.

 உமா சேகர்
உமா சேகர்

இதுபோலவே நிறுவனத்தை நடத்துறதிலும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டு தனிமையில் உட்கார்ந்து கலங்கியிருக்கேன். ஆனா, ‘நிறுவனத்தை மேற்கொண்டு நடத்த முடியாது’ன்னு ஒருபோதும் எதிர்மறையா நினைச்சதில்லை. ஊழியர்களுடன் இணைந்து ஈகோ பார்க்காம ஒவ்வொரு வேலையையும் கத்துக்கிட்டேன். தகுதியை வளர்த்துகிட்டேன்.

அந்தக் காலகட்டத்தில் ரொம்பவே இறுக்கமான மனநிலையில் இருந்ததால, என்னைப் புதுப்பிச்சுக்க சட்டம் படிச்சேன். அது என் பிசினஸ் சட்டத் தேவைகளுக்கும் உதவியது. முறையான அனுபவத்துடன் நிறுவனத்தைப் படிப்படியா விரிவுபடுத்தினேன். வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்தேன். அதற்குக் கணிசமான தொகையை (Duty) வரியாகச் செலுத்தணும். அல்லது தொகையின்

எட்டு மடங்கு மதிப்பில் அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யணும். அதன்படி செயல்பட்டேன்.

தினந்தோறும் சவால்தான்!

வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டேன். அங்கு நடைபெறும் வர்த்தகக் காட்சிகளில் கலந்துகிட்டு அனுபவங்களைப் பெற்றேன்.

என் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்!

தொழிற்சாலையில் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் வேலைகள் நடந்தன. வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்களும் சரியாக நடந்தன. ஒருமுறை தான்சானியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பருத்தி, எங்களிடம் வந்து சேர்ந்தபோது பிரவுன் கலரில் இருந்துச்சு. அதை எங்களால் பயன்படுத்த இயலாததால, குறைந்த விலையில் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்றேன். இதனால நஷ்டம் உண்டானது. அந்த அனுபவத்துக்குப் பிறகு, குஜராத் தவிர ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமே தரமான பருத்தியை இறக்குமதி செய்து வருகிறேன்.

எங்களிடம் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை உட்பட எல்லாத் தேவைகளுக்கும் அனுபவமிக்க ஆட்கள் வேலை செய்றாங்க. ஆரம்பம் முதலே, டி-ஷர்ட் தயாரிப்பதற்கான காட்டன் நூலை மட்டுமே கோன் வடிவில் உற்பத்தி செய்கிறோம். எங்க நிறுவனத்தின் 80 சதவிகித உற்பத்திப் பொருள்கள் திருப்பூரில் விற்பனையாகுது. மீதி, வங்காளதேசம், சீனா, போர்ச்சுக்கல், எகிப்து உள்ளிட்ட 10 நாடு களுக்கு ஏற்றுமதியாகுது.

என் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்!

ஒருமுறை, 30 கன்டெய்னரில் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த ஏற்றுமதி ஆர்டரில், 24 கன்டெய்னரில் இருந்த உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்திக்கிட்டு உரிய பணத்தைக் கொடுத்துட்டாங்க. ஆனா, மீதி ஆறு கன்டெய்னர் பொருள்களை மட்டும் பயன்படுத்தாமல் துறைமுகத்திலேயே நீண்ட நாளாக வெச்சிருந்தாங்க. தரத்தில் குறைபாடுன்னு பொய்யாகக் குறை சொல்லி என் பொருளுக்கு 45 லட்சம் ரூபாய் குறைவாகக் கொடுப்போம்னு பிரச்னை செய்தாங்க. இப்படி ஏற்றுமதி ஆர்டரில் பல்வேறு சவால்கள் தொடர்ந்தாலும், அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்துவிடுவேன்.

செலவைக் குறைக்கும் காற்றாலை!

‘தொழில் மந்தநிலையில் இருக்கும்போது, துணிச்சலுடன் நிறுவனத்தைப் படிப்படியாக விரிவுபடுத்தணும். நிலைமை சரியானதும் உற்பத்தியை அதிகரிக்கலாம்’ என்பது அப்பா கடைப்பிடித்த யுக்தி. அதை நானும் கடைப்பிடித்து பலன் பெற்றேன். தொடர்ந்து வேலை நடந்தாலும், உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு டிமாண்டு இருந்துகிட்டே இருக்குது. எனவே, எங்க நிறுவன உற்பத்தியோடு, இந்தியாவிலுள்ள மற்ற நிறுவனங்களிடமிருந்து உற்பத்திப் பொருள்களை வாங்கி டிரேடிங்கும் செய்கிறோம். இதனால் ஓரளவுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதுடன், டாலர் வருமானம் மற்றும் டர்ன் ஓவரும் அதிகமாகுது. இதன்மூலம் வங்கிக்கடன் பெற முடிவதுடன், நட்சத்திர ஏற்றுமதியாளர் என்ற பெருமையைத் தக்க வைக்கவும் முடிகிறது.

என் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்!

மின்சாரச் செலவுகளைக் குறைக்க, ஆறு மெகா வாட் திறன் கொண்ட காற்றாலையைத் தேனி மாவட்டத்தில் அமைச்சிருக்கோம். நிறுவனத்துக்குத் தேவையான மின்சாரத் தேவையில், 40 சதவிகிதம் எங்க காற்றாலை மூலமாகவே கிடைக்குது. எங்க நிறுவனத்துக்கு ஒருநாளைக்கு 50 டன் பருத்தி தேவைப்படுது. பருத்தியின் விலை நிலையில்லாமல் ஏறிக்கொண்டே இருப்பது சவால்தான். இருந்தாலும், தரத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

குடும்பத்துக்கு குவாலிட்டி டைம்!

அப்பாவின் நிறுவனத்துல ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்குது.

டி.வி.எஸ் நிறுவன டீலராகவும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கும் ‘டெக்ஸ்வேலி’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார் என் கணவர். தங்கையின் கணவர் ஆனந்குமார், திருப்பூரில் ஜவுளி நிறுவனத்தைத் நடத்துகிறார். பிசினஸில் நிறைய சவால்கள், கஷ்டங்கள் இருந்தாலும் அப்பாகிட்டயும் கணவர்கிட்டயும் நாங்க உதவிகேட்டு நின்னதில்லை. பிசினஸ் குடும்பமா இருந்தாலும், நானும் தங்கையும் சொந்தத் திறமையால்தான் வெற்றி பெற்றிருக்கோம். குடும்பத்துக்கான நேரம் செலவிடுறதுதான் எங்களுக்குப் பெரிய சவால். ஆனா, குறைவான நேரத்தையும் குவாலிட்டியாகச் செலவிடுவதால் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

என் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்!

டெக்ஸ்டைல் பிசினஸ் தவிர, ‘பேபி வேர்ல்டு’ நிறுவனத்திலும் தொடர்ந்து பார்ட்னராக இருக்கிறேன். கொங்கு வட்டாரத்தில் 1,500-க்கும் அதிகமான ஸ்பின்னிங் மில் இருந்தாலும், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பில் சில பெண் தொழில்முனைவோர்கள்தாம் இருக்காங்க. அதில் இடம்பிடித்திருப்பதுடன், 30 ஏக்கரில் பலநூறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் எங்க நிறுவனத்தைப் பெரிய அளவில் கட்டமைத்திருப்பதில் எங்களுக்குப் பெருமை. இன்னும் பெரிய அளவில் நிறுவனத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம். அதையும் நிகழ்த்திக்காட்டுவோம்!”

1,000 ஊழியர்கள்...

₹400 கோடி டர்ன் ஓவர்!

900 பெண்கள் உட்பட 1,000 ஊழியர்களுக்கு முதலாளியான உமா, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக டர்ன் ஓவர் செய்கிறார். தினமும் 40 டன் உற்பத்தி நடக்கிறது. ஊழியர்களுக்கு 24 மணிநேர உணவு வசதி, விடுதி வசதி, விளையாட்டுப் பயிற்சி, தொழில்முனைவோராக ஊக்குவிக்கத் தொழிற்பயிற்சி, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்கான பயிற்சி என அனைத்தையும் இலவசமாகவே செய்துகொடுக்கிறார். இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உயர்கல்வி பயின்று வெளிவேலைகளுக்குச் சென்றுள்ளனர்.

உமா பார்ட்னராக இருக்கும் ‘பேபி வேர்ல்டு’ நிறுவனத்தின் ஏழு கிளைகள் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் இயங்கிவருகின்றன. அந்த நிறுவனத் திலும் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் நடக்கிறது.

சமூகப் பணியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டிருக்கும் உமா, சிங்காநல்லூர் குளத்தில் நகர்ப்புறப் பல்லுயிர் பெருக்கம் உருவாகவும் பணியாற்றிவருகிறார்.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

`புதிய ஐடியாவை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஒரு செயலைச் செய்துமுடிக்காததற்கு எந்தக் காரணத்தையும் முன்வைக்கக் கூடாது. வாய்ப்புகளை உருவாக்கச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்’ உள்ளிட்ட தன்னம்பிக்கையூட்டும் பல்வேறு கருத்துகளை, ‘தி மேஜிக் ஆஃப் திங்கிங் பிக்’ என்ற நூலில் அமெரிக்க எழுத்தாளரான டேவிட் ஷூவார்ட்ஸ் எழுதியிருக்கிறார். பிசினஸ் உட்பட அவரவர் துறையில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் தன்னம்பிக்கையூட்டும். எனக்கும், இந்தப் புத்தகமே இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.

இதுதான் பிராசஸ்!

  • பல்வேறு விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு நிறுவனத்துக்கு மொத்தமாக வரும் பருத்தியில், தரமற்ற மற்றும் நிறம் மாறுபட்டிருக்கும் பருத்தியை நீக்கிவிட்டு, மற்றவற்றைச் சுத்தம் செய்வோம்.

  • நிறுவனத்துக்கு வரும் பருத்தியில் 20 சதவிகிதம் பயன்படுத்த முடியாததாக இருக்கும். மீதிமுள்ள 80 சதவிகிதம் பருத்தியின் நிறம் ஒரே மாதிரி இருப்பதை உறுதிசெய்வோம்.

  • தரமான பருத்தியை, பல்வேறு படிநிலைகளுக்குப் பிறகு நூலாக்கி, கோன் வடிவில் மாற்றுவோம். இதற்கு மூன்று நாள்களாகும்.

  • எங்கள் உற்பத்திப் பொருளை, திருப்பூர் நிறுவனங்களுக்கு 60 கிலோ எடையில் பையிலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு 45 கிலோ எடையில் பாக்ஸிலும் அனுப்பிவைப்போம்.

  • பயன்படுத்த இயலாத (வேஸ்ட்) பருத்தியை வெளி நிறுவனங்களுக்கு விற்றுவிடுவோம்.

என் அனுபவத்திலிருந்து...

  • விற்பனைச் சூழல் கடினமாக இருந்தாலும், வருமானம் குறைந்தாலும், நம் உற்பத்திப் பொருளின் தரம் ஒருபோதும் குறையவே கூடாது.

  • நம் தேவைக்கேற்ப வாடிக்கையாளர் வேண்டும் என்று நினைக்கக் கூடாது. வாடிக்கையாளர் தேவைக்கேற்பவே நம் தொழிலும் கட்டமைப்பும் அமைய வேண்டும்.

  • பிசினஸில் எந்த முடிவானாலும் உடனுக்குடன் எடுத்துவிட்டு, அடுத்தடுத்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.