Published:Updated:

என் பிசினஸ் கதை - 3: சாரதா பிரசாத் - பக்கா பிளானிங்... ₹12 கோடி டர்ன் ஓவர்!

முதலாளியாகவே இருந்தாலும், நம்ம நிறுவனத்துல நடக்கிற எல்லா வேலை களையும் தெரிஞ்சு வெச்சுக்கணும்.

பிரீமியம் ஸ்டோரி

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையில் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு இது. இந்த இதழில், சென்னை RediSolve Software Private Limited நிறுவன நிர்வாக இயக்குநர் சாரதா பிரசாத்.

மகிழ்ச்சியான இளமைப் பருவம், திருமண வாழ்க்கை என்று சென்றுகொண்டிருந்த சாரதாவின் வாழ்க்கையில், கணவர் மறைவால் பெரும் புயல் வீசியிருக்கிறது. அதன்பிறகு, எவ்வித அனுபவமும் இல்லாமலே கணவரின் ஐ.டி நிறுவனத்துக்குத் தலைமை ஏற்றவர், இன்று நிறுவனத்தை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றிருக்கிறார். எளிமையான சாதனையாளர் சாரதா, தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

`விரலுக்கேத்த வீக்கம்’தான் எங்க கான்செப்ட். எதுக்கும் கடன் வாங்க மாட்டோம்!

மகிழ்ச்சியான இளமைக்காலம்

``சென்னையில் பிறந்தாலும், வளர்ந்ததெல்லாம் சேலத்தில். அப்பா சார்ட்டட் அக்கவுன்டன்ட். படிப்புக்கும் தனித்திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற குடும்பம். எம்.ஏ படிப்பதற்காக சென்னை வந்தேன். ஸ்கூல்ல இந்தி, சம்ஸ்கிருதம் படிச்ச நிலையில, அப்பாவின் விருப்பத்துக்காக ஜெர்மன் மொழி கத்துகிட்டதெல்லாம் இப்போ பிசினஸ் பயணத்துல பெரிசா உதவுது. என் இளமைக்காலம் மகிழ்ச்சியா கழிந்தது. எதிர்காலம் பத்தி அப்போ பெரிசா எந்தத் திட்டமிடலும் இல்லை. என் கணவர் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். திருமணமானதும் அமெரிக்காவில் குடியேறிட்டோம்.

சாரதா பிரசாத்
சாரதா பிரசாத்

அங்கே பிரபல ரெடிங்டன் நிறுவனத்துல, ஆபரேஷன் ஹெட்டாக கணவர் வேலை செய்தார். கிரீன் கார்டு வாங்கிய பிறகு, நானும் ஒரு நிறுவனத்தின் ஊழியரானேன். ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில, வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் பெண்கள் தங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிற வேலையைச் செய்தேன். அப்போ பல விஷயங்கள்ல கவனம் செலுத்தினாலும், பிசினஸ் ஆர்வம் சுத்தமா இல்லை. 14 ஆண்டுகள் அமெரிக்காவுல வசிச்ச நிலையில், குழந்தைகளின் நலனுக்காக 2004-ம் ஆண்டு, சென்னைக்குக் குடியேறினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவரின் திடீர் மரணம்

அந்தக் காலகட்டத்துலதான் தென்னிந்தியாவுல பி.பி.ஓ நிறுவனங்கள் வளர ஆரம்பிச்சது. தனியா பிசினஸ் நடத்தணும்கிறது என் கணவரின் கனவு. அதுக்கு, அமெரிக்காவுல சம்பாதிச்சது மற்றும் அங்கிருந்த எங்களுடைய வீட்டை விற்றதால் கிடைச்ச பணம் உதவுச்சு. பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் நாலு ஊழியர்களுடன் உடனடியா சென்னையில ஐ.டி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் கணவர். `விரலுக்கேத்த வீக்கம்’தான் எங்க கான்செப்ட். எதுக்கும் கடன் வாங்க மாட்டோம். அதனால, அடுத்த ஆறு ஆண்டுகளில், சிக்கல்கள் ஏதுமின்றி நிறுவனம் மெதுவா வளர ஆரம்பிச்சது. அப்போ ஒரு ஸ்கூல்ல நான் டீச்சரா வேலை செஞ்சேன்.

என் பிசினஸ் கதை
என் பிசினஸ் கதை

கோல்ஃப் விளையாட்டு வீரரான என் கணவர் சாய் பிரசாத், ஆரோக்கியமாகத் தான் இருந்தார். 2010-ம் ஆண்டில் ஒருநாள், வழக்கம்போல அலுவலகம் கிளம்பத் தயாராகிட்டிருந்தவர், திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்துட்டார். நிலைகுலைஞ்சு போயிட்டேன். என் வாழ்க்கையில எல்லாமுமா இருந்தவர் அவர்தான். ஸ்கூல் படிச்சுக்கிட்டிருந்த எங்க இரண்டு குழந்தைகளையும் சிங்கிள் பேரன்ட்டா வளர்க்க வேண்டிய பொறுப்பும் தவிப்பும் இருந்துச்சு. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை. கணவரின் நிறுவனத்தை நான் தலைமை ஏற்று நடத்தணும். இல்லைன்னா, நிறுவனத்தை மூடணும்கிற ரெண்டே முடிவுகள்தாம் எனக்கிருந்துச்சு.

வைராக்கியத்தால் வெற்றி

ப்போ பிசினஸ் பத்தியும், நிதி நிர்வாகம் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. கணவரின் நிறுவனத்துல 45 ஊழியர்கள் இருந்தாங்க. அவங்க குடும்பத்தின் நிலையை யோசிச்சுப் பார்த்தேன். ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாதுன்னு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். சிலர் எனக்கு ஆலோசனைகள் சொல்லி ஊக்கம் கொடுத்தாங்க. இணையதளம் பத்தின அடிப்படை விஷயங்கள் மட்டுமே அப்போ எனக்குத் தெரியும். அலுவலக விஷயங்கள் மற்றும் நிர்வாக வேலைகளை நோட்ஸ் எழுதிப் படிப்பேன். கூச்சம் பார்க்காம, ஊழியர்களிடமிருந்து எல்லா விஷயங்களையும் கத்துகிட்டேன். `பெண்தானே’ங்கிற நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். எல்லாச் சவால்களையும் என் வைராக்கியத்தால் சமாளிச்சு, தலைமைப் பொறுப்புக்குத் தயார் படுத்திக்கிட்டேன். அப்போ எங்க நிறுவனத்துக்கு மூணு கஸ்டமர் நிறுவனங்கள் மட்டுமே இருந்துச்சு.

ஊழியர்களுடன் சேர்ந்து இரவு பகலா வேலை பார்த்தேன். புது புராஜெக்ட்ஸ் எடுக்கிறதில் முனைப்புகாட்டி, அதை நிகழ்த்தியும் காட்டினேன். என் நிறுவனம்தான் எனக்கான உலகம். அதற்காகவே அதிக நேரம் செலவிட்டேன். எங்களுடைய உழைப்பு வீண்போகலை. கடந்த ஒன்பது ஆண்டுகள்ல, நல்ல வளர்ச்சி கிடைச்சிருக்கு. ஏராளமான புராஜெக்ட்டுகளைச் செய்திருக்கிறோம். இப்போ உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, அவுட்சோர்சிங் பார்ட்னராக எங்க நிறுவனம் செயல்படுது.

நம்பிக்கையுடன் கடின உழைப்பும் இருந்தா, நிச்சயம் வெற்றி கிடைக்கும். அப்படித்தான் நானும் வெற்றி பெற்றேன்!

முதல் கடமை

ன்லைன் ஷாப்பிங் தளத்தில் நமக்கு வேண்டிய பொருள்களை ஆர்டர் செய்து, இருந்த இடத்திலிருந்தே வாங்குகிறோம், இல்லையா? அந்த ஷாப்பிங் தளத்தில் பொருள்கள், சலுகைகள் உட்பட எல்லா விஷயங்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். அதற்குப்பின் நடக்கும் அந்த நிறுவனத்தின் இணையதள சேவைகள் எல்லாவற்றையும் (website foundation & all e-store running process) நாங்கள் செய்துகொடுப்போம். ஆன்லைன் சேவை வழங்கும் பல்துறை நிறுவனங்களுக்கும் பிளாட்ஃபார்ம் கட்டமைப்பு உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்க நிறுவனத்தின் பணி. வாடிக்கையாளர் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாக்கிறதுதான் எங்களின் முதல் தலையாயக் கடமை. அதனால், எங்க நிறுவனத்துக்குள் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த முடியாது. அலுவலகத்துல இருந்து எந்தத் தகவலையும் எடுத்துட்டுப் போக முடியாது.

கார்ப்பரேட் நிறுவனம் மாதிரி இல்லாம, பல்வேறு சலுகைகளுடன்கூடிய மகிழ்ச்சியான சூழல்லயே என் ஊழியர்கள் வேலை செய்றாங்க. நிறுவன ஊழியர்களுக்குத் தினமும் இரண்டு வேளைகளுக்கான உணவு, காபி / டீ, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை இலவசமா கொடுத்திடுவேன். ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் எதையும் கடமைக்குன்னு செய்யமாட்டேன். எனவே, அவங்களுக்கான உணவுகளைத் தரமானதா கொடுத்து, திருப்தியடைகிறேன்.

எல்லாம் நன்மைக்கே...

ங்க வாடிக்கையாளரான `சென்னை ஆன்லைன்.காம்’ பத்திரிகை ஸ்டார்ட் அப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிட்டேன். இந்த ஆன்லைன் பத்திரிகை விரைவில் புதிய வடிவமைப்பில் வெளிவரப் போகுது. இதில், அரசியல் மற்றும் நெகட்டிவான செய்திகளைத் தவிர்த்துட்டு, மக்களுக்குப் பயனுள்ள செய்திகளை மட்டுமே வழங்கவிருக்கிறேன்.

சாரதா பிரசாத்
சாரதா பிரசாத்

என் கணவர் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததிலிருந்து இப்போவரை, நிறைய வாடிக்கையாளர் நிறுவனங்கள் எங்க நிறுவனத்துடன் நட்பில் இருக்காங்க. நஷ்டம் ஏற்படாத வகையில, நிதானமா நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போயிட்டிருக்கேன். எந்தச் சூழலிலும் எல்லாம் நன்மைக்குன்னு நினைச்சு உற்சாகமாக இயங்கிட்டிருக்கேன். என்னைத் தாங்கி நிற்கும் என் பிள்ளைகள், குடும்பத்தினர், ஊழியர்கள்தாம் என் பலம். அதனால்தான் நம்பிக்கையுடன் என் முழுத் திறமையையும் வெளிபடுத்திட்டிருக்கேன். நம்பிக்கையுடன் கடின உழைப்பும் இருந்தா, நிச்சயம் வெற்றி கிடைக்கும். அப்படித்தான் நானும் வெற்றி பெற்றேன்!”

100 ஊழியர்களுடன் வெற்றி நடை!

ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய வணிக நிறுவனங்களின் (E-Store) கட்டுமானப் பணிகள், வெப்சைட் பிராசஸ், இ-மெயில் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட ஆன்லைன் சாட்டிங் தகவல் பரிமாற்றம், ஆன்லைன் ஷாப்பிங், உணவு ஆர்டர் செய்வது, டிக்கெட் புக் செய்வது உட்பட பல்துறை நிறுவனங்களின் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் (back end service) அனைத்துப் பணிகளையும் செய்துகொடுக்கிறார். 100 ஊழியர் களுக்கு முதலாளியான சாரதா, பகுதிநேரமாக நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கிறார். ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

``பெப்ஸிகோ நிறுவனத்தின் பிரசிடென்ட் டெசிக்னேட் பதவி கிடைச்ச சந்தோஷத்தைக் குடும்பத்தினரிடம் சொல்ல, ராத்திரி நேரம் வேகமா வீட்டுக்கு வர்றாங்க, இந்திரா நூயி. முதலில் தன் அம்மாகிட்ட செய்தியைச் சொல்றாங்க. `அதெல்லாம் இருக்கட்டும். வீட்டுல பால் இல்லை. உடனே போய் பால் வாங்கிட்டுவா!’ன்னு சொல்லி யிருக்காங்க அவங்க அம்மா.

எவ்வளவு பெரிய பொறுப்புக்குப் போனாலும், நடைமுறை யதார்த்த வாழ்க்கையில பெரும்பாலான பெண்களின் நிலையும் இதுதான். அதுபோலதான் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் இரண்டு பிள்ளைகளையும் இன்னிக்கு மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்தியிருக்கேன். குடும்பம், பணிச்சூழல்னு இரட்டைச் சவாரியிலும் வெற்றிகண்ட இந்திரா நூயின் வாழ்க்கைதான், என் தனிப்பட்ட மற்றும் பிசினஸ் பயணத்துக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்!”

என் அனுபவத்திலிருந்து...

முதலாளியாகவே இருந்தாலும், நம்ம நிறுவனத்துல நடக்கிற எல்லா வேலை களையும் தெரிஞ்சு வெச்சுக்கணும். அப்போதான் ஒவ்வொரு வேலைக்கும் சரியான ஊழியர்களை நியமிச்சு, வேலை வாங்க முடியும். நான் இன்னும் என் ஊழி யர்கள்கிட்ட இருந்து புது விஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருக்கேன்.

ஒவ்வொரு பொறுப்புக்கும் தகுதியான நபர்களை வேலைக்கு அமர்த்தினா, நிச்சயம் எல்லா வேலைகளும் சரியா நடக்கும். திறமையான ஊழியர்களுக்கான அங்கீகாரமும் சரியான முறையில் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு