Published:Updated:

`எலந்தவடை பிசினஸ்... மாதம் 8 லட்சம் வருவாய்!' - ராஜலட்சுமியின் `மாத்தியோசி' கதை

மிட்டாய் தயாரிப்பு
மிட்டாய் தயாரிப்பு

30 பாக்கெட் உற்பத்தியில் ஆரம்பிச்ச எங்களோட பிசினஸ் இப்போ 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாக்கெட் உற்பத்தியாக மாறியிருக்கு.

"புதுசு புதுசா ஆயிரம் இனிப்புகள் தயாராகி வந்தாலும், தேன் மிட்டாய், எலந்த வடை, ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை என நம்முடைய பாரம்பர்ய இனிப்பு வகைகளுக்கு ஈடாகுமா சொல்லுங்க? இதையெல்லாம் சின்ன வயசில் எல்லாருமே சாப்பிட்டு இருப்போம். இத்தனை வருஷம் கழிச்சு, இப்போ கடைகளில் பார்த்தா கூட சின்ன வயசு ஞாபகம் வந்துரும். எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனே அதை வாங்கி சாப்பிட மனசு ஏங்கும். இது தானுங்க நம்ம மிட்டாய்கள் நமக்கு ஏற்படுத்தும் தாக்கம்" எனக் கிராமத்துப் பெண்ணுக்கே உரிய தொனியில் பேசத் தொடங்குகிறார் ராஜலட்சுமி. தன் கணவர் நாராயணசாமியுடன் சேர்ந்து மிட்டாய் தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இவர், மிட்டாய்களுக்கு தற்போது இருக்கும் வரவேற்பு பற்றியும், அந்தத் தொழிலில் உள்ள சிக்கல்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார்.

சுயதொழில்
சுயதொழில்

"எங்களுக்குச் சொந்த ஊரு ராஜபாளையம். ரெண்டு பேருமே பருத்தி மில்லில் வேலை பார்த்துட்டு இருந்தோம். எங்க ஊருல இருக்க பெரும்பாலானவங்களுக்கு பருத்தி மில்தான் படி அளக்குற சாமி. ரெண்டு பேரும் காலையில் போனா பொழுது அடைஞ்சுதான் வீட்டுக்கு வருவோம். ரெண்டு பேரோட சம்பளம் குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தாலும், வாழ்க்கை நிறைவா இல்லாமல் இருந்துச்சு. எதாவது தொழில் தொடங்கணும்னு ஆசை எனக்கு. என்னென்ன தொழில்கள் பண்ணலாம்ங்கிற ஐடியாவும் அவ்வப்போது மனசுகுள்ள வந்து போகும். ஆனா, அதுக்கெல்லாம் முதலீடுனு வேணுமேனு யோசிச்சுட்டு, என்னோட ஆசையை மனசுக்குள்ளயே வெச்சுக்குவேன். 

ஒருநாள் என் பிசினஸ் ஆசையை என் கணவர்கிட்ட சொல்ல, அதுக்கென்ன ஆரம்பிச்சுருவோம்னு ரொம்ப இயல்பா சொன்னாரு. அதுக்கு பணம் எங்க இருக்குனு கேட்க, பிசினஸ்னா பெரிய குடோன் இருக்கணும், நாலு பேரு வேலை பார்க்கணும் அவசியம் இல்ல. சின்னதா வீட்டுலயே ஆரம்பிச்சு நாம ரெண்டு பேரும் பாடுபடுவோம். பிக்அப் ஆன பிறகு வேலையை விட்டுட்டு இதையே முழுநேர தொழிலா செய்வோம்னு சொன்னாரு.

எலந்த வடையெல்லாம் பட்டிக்காட்டு ஜனங்கதான் சாப்பிடுவாங்க, இங்க யாரும் வாங்க மாட்டாங்கனு நிறையபேர் முகத்துக்கு நேரா சொல்லி திருப்பி அனுப்பிருவாங்க.
ராஜலட்சுமி.
என் பிசினஸ் கதை - 2: ரூ. 10,000 முதலீடு... கேட்டரிங் தொழில் கோடிகளில் வருமானம்!

நான் சமையல் நல்லா செய்வேன். அதனால, குழந்தைகளுக்கான தின்பண்டங்களைத் தயார் செய்வதை பிசினஸாக செய்தால் வாடிக்கையாளர்களை ஈஸியா உருவாக்கமுடியும்னு தோணுச்சு. எங்களுக்கு மில்லில் லீவு கிடைச்ச நேரத்தில், எங்கள் ஊரில் தின்பண்டங்கள் தயாரிக்கிற நிறைய குடும்பங்களை நேரில் போயி பார்த்து, அவங்களோட அனுபவங்களைக் கேட்டோம். அதன் பிறகு தின்பண்டங்கள்னு பொதுவா இல்லாமல் மிட்டாய்கள் செய்ய ஆரம்பிக்கலாம்னு யோசனை வந்துச்சு. எங்க ஊருல இருக்க மிட்டாய் செய்யும் ஒரு தாத்தாகிட்ட எல்லா ரெசிப்பிகளும் கேட்டு கத்துக்கிட்டேன். நாங்க பிசினஸ் ஆரம்பிக்கப் போறோம்னு சொல்லியும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரு எனக்கு சொல்லிக்கொடுத்தார் அதுதான் கிராமத்து மனசு" என்று பெருமூச்சு விட்ட ராஜலட்சுமி மிட்டாய் தொழிலின் தொடக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

மிட்டாய் தாத்தாகிட்ட கத்துக்கிட்டு வந்த ரெசிப்பிகளை வீட்டில் தயார் செய்துபார்த்தேன். நல்லா வந்துச்சு. சாப்பிட்டுப் பார்த்த எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னாங்க. அதனால, இதுதான் நம்ம பிசினஸ்னு முடிவு பண்ணி களத்தில் இறங்கிட்டோம். தினமும் வேலை முடிஞ்சு வந்ததும் நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து மிட்டாய் செய்ய ஆரம்பிப்போம். முதலில் இஞ்சி மிட்டாய் தயாரிப்பில்தான் தொடங்கினோம். எங்க ஊருல இருக்குற சில கடைகளுக்கு விநியோகம் பண்ணோம். ஆனால், எங்க ஊருலயே நிறைய பேர் மிட்டாய் தொழில் பண்றதால் எங்களுக்குப் பெரிய அளவு வளர்ச்சி எதுவும் இல்ல.

சுயதொழில்
சுயதொழில்

சரி மிட்டாய் தயாரிப்பை விட்டுறலாம்னு முடிவு பண்ணப்போதான், `நம்ம ஊருல இது இயல்பா கிடைக்குறதால நமக்கு வியாபாரம் இல்ல. வெளியூர்கள்ல வித்துப்பார்ப்பபோம்'னு என் கணவர் துணிந்து முடிவு எடுத்தார். ரெண்டு பேரும் வேலையை விட்டுட்டோம். எங்க கிட்ட இருந்த ஒரு லட்ச ரூபாய் சேமிப்பில் மிட்டாய் தயாரிப்புக்கான பொருள்களை வாங்கினோம். `தேவை இல்லாத வேலை'னு ஊரில் எங்களைத் திட்டாத ஜனங்க பாக்கியில்ல. அகலக் கால் வைக்குறோமோனு எனக்கும் பயமா தான் இருந்துச்சு.

இஞ்சி மிட்டாய், எலந்த வடையையும் தயாரித்து பேக் செய்து, வெளியூர்களுக்கு எடுத்துட்டுபோயி பல கடைகளில் கொடுத்து ஆர்டர் கேட்டோம். இதைக் கடைகளில் வையுங்க யாராவது ஆர்டர் கேட்டாச் சொல்லுங்கனு சொன்னாலே, `இதெல்லாம் பட்டிக்காட்டு ஜனங்க சாப்பிடறது, இங்க யாரும் வாங்க மாட்டாங்கன்'னு நிறைய பேர் முகத்துக்கு நேராச் சொல்லி திருப்பி அனுப்பிருவாங்க. அடுத்தடுத்த கடைகளில் இதே பதில்களைக் கேட்டபோது, என்னை அறியாமல் எனக்கு அழுகை வந்துருச்சு. கிராமத்து ஜனங்களுக்கு ஒரு நாக்கு, நகரத்து ஜனங்களுக்கு வேற நாக்கையுமா கடவுள் படைச்சுருக்காருனு கேட்கணும்னு தோணும். ஆனா, எதுவும் பேசாம அமைதியா வந்துருவோம். கொண்டுபோன காசையெல்லாம் போக்குவரத்துக்கும், சாப்பாட்டுக்கும் செலவு பண்ணிட்டு கையில் காசே இல்லாமல், மனசு நிறைய ஏமாற்றத்தோடத்தான் வீட்டுக்கு வந்தோம். 

30 பாக்கெட் உற்பத்தியில் ஆரம்பிச்ச எங்களோட பிசினஸ் இப்போ 30,000-க்கும் அதிகமான பாக்கெட் உற்பத்தியாக மாறியிருக்கு!
ராஜலட்சுமி
`லைஃப் பார்ட்னர் பிசினஸ் பார்ட்னராகவும் இருந்தால்'-அனுபவம் பகிரும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மணி

அதுக்கப்புறமும் என் கணவர் நம்பிக்கையை இழக்கல. சென்னைக்குப் போயி சில கடைகளில் மிட்டாய்களைக் கொடுத்துட்டு வந்தாரு. முதல் ரெண்டு மாசம் ஆர்டரே வரல. குடும்பத்தை நடத்தவே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்புறம் மெதுவா ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. ஒவ்வொரு ஊர்லேயும் மாசம் 30 பாக்கெட்டுகள் கேட்க ஆரம்பிச்சாங்க. நான் வீட்டுல இருந்து தயார்செய்து கொடுப்பேன். என் கணவர் அதை வெளியூர்களுக்கு சப்ளை பண்ணிட்டு வருவார். சில நேரத்துல ஊர்லேருந்து கிளம்புற பஸ்ஸுகளில்கூட போட்டு விடுவோம்.

கேஸ், செய்யுறகூலி, பொருள்கள் வாங்குற செலவு, மிட்டாய்களை அனுப்புற செலவு, கரென்ட் பில் இதெல்லாம் போக கையில் சில ஆயிரங்கள்தான் இருக்கும். அதுக்காக அந்தச் செலவுகளை ஈடுகட்ட மிட்டாய் விலையை அதிகமாக்கவும் முடியாது. சாக்லேட்டுகளை 100 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், மிட்டாய்களை 15 ரூபாய்க்கு மேல வெச்சு வித்தா கண்டிப்பா வாங்க மாட்டாங்க. அதனால, எங்களோட லாபத்தை அதிக ஆர்டர் மூலமா எடுக்கணும்னு முடிவு பண்னோம். எங்க பொருள் மக்கள்கிட்ட போயி சேரசேர ஆர்டர்களும் அதிகமாச்சு. சென்னையிலேருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு. ஒவ்வொரு முறையும் போக்குவரத்துக்கு காசு செலவு பண்றதுக்குப் பதிலா சென்னையில் செட்டில் ஆகலாம்னு சென்னைக்கு வந்துட்டோம்.

ராஜலட்சுமி
ராஜலட்சுமி

ஆரஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், கடலை பர்பி, தேங்காய் பர்பி, கடலை உருண்டை, புளி மிட்டாய்னு  ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பிச்சோம். இதெல்லாம் பெரிய பெரிய சாக்லேட் கம்பெனிகளோட போட்டிப்போட்டு ஜெயிக்காமல் எங்களுக்கான இடத்தை உருவாக்கணுகிறதில் தெளிவா இருந்தோம்" என்ற ராஜலட்சுமி மிட்டாய் தயாரிப்புகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

எங்களோட மிட்டாய்களில் இலந்த வடைதான் நல்ல ரீச். எலந்தப்பழம், வெல்லம், பெருங்காயம், பச்சை மிளகாய், புளினு எல்லாச் சுவையும் கலந்து செய்றோம். அதனால அதுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். எலந்தவடையைப் பொறுத்தவரை, எலந்தப் பழம் கிடைக்குறதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்துச்சு. எல்லா சீசன்லையும் எலந்தைப்பழம் கிடைக்காது. ஒரு சீசனில் கிடைக்குறதை நிறைய மாசங்கள் பதப்படுத்தவும் முடியல.

மிட்டாய்கள்
மிட்டாய்கள்

ஆனா, ஒருமுறை கஸ்டமர்கள் கேட்டு வந்ததை நாம கொடுக்கலைனா அடுத்த முறை அது வாங்கணுங்கிற நியாபகமே அவங்களுக்கு வராது என்பதால், தமிழ்நாட்டில் சீசன் முடிஞ்ச பிறகு ஆந்திராவிலிருந்து எலந்தைப் பழங்கள் வாங்கி, எலந்தை வடை செய்தோம். அடுத்த மூணு மாசத்தில் தமிழ்நாட்டில் எலந்தை சீசன் வந்துரும். இப்படிதான் தொடர்ந்து இலந்தை வடை தயார் செய்துட்டு வர்றோம்.

பழங்களை அரைக்கிறதிலிருந்து பேக் பண்ற வரை எல்லாமே மிஷின் உதவி இல்லாமல் கையில்தான் செய்யுறோம். மிட்டாய் வகைகள் செய்ய அதுக்கான அச்சுகள் பயன்படுத்துறோம். மாசத்துக்கு 30 பாக்கெட் உற்பத்தியில் ஆரம்பிச்ச எங்களோட பிசினஸ் இப்போ 30,000-க்கும் அதிகமான பாக்கெட் உற்பத்தியாக மாறியிருக்கு. கேரளா, ஒசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு அனுப்புறதோட சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்றோம். அங்கேருந்தும் ஆர்டர்கள் வந்துட்டு இருக்கு.

எலந்த வடை
எலந்த வடை

மிட்டாய்களைப் பேக் பண்றதுக்கு, பாகு காய்ச்சுறதுக்குனு 10 பேரை வேலைக்கு வெச்சுருக்கோம். ஆனால், எந்தப்பொருளுக்கு என்ன அளவுங்கிறதை நாங்கதான் மிக்ஸ் பண்ணுவோம். அப்போதான் எப்போதும் ஒரே மாதிரியான டெஸ்ட் இருக்கும். உண்மையைச் சொல்லணும் இப்பவும் ஒரு பாக்கெட்டில் மூன்று ரூபாய்க்கு மேல் நாங்க லாபம் வைக்கிறது இல்ல. வேலையை விட்டுட்டு மிட்டாய்களைத் தொழிலாக எடுத்த எங்களோட மாத வருவாய் இப்போ எட்டு லட்சம் ரூபாய். இது என்னைப்போன்ற சாமானிய பெண்ணுக்கு மிகப்பெரிய வெற்றிதான்!" என்று தம்ஸ் அப் செய்கிறார் ராஜலட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு