வீடுகளில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்கள், பணிச் சூழலில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல. வேலை செய்யும் இடம் பாதுகாப்பானதா என்பதை பரிசீலித்தே பல பெண்களும் வேலையில் சேர்கிறார்கள். இந்தியாவில், பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரங்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்த `அவதார்’ என்ற நிறுவனம், அந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

111 நகரங்களில், 300 நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கும் அதிகமாக உள்ள நகரங்களில், `சென்னை பெண்கள் வேலை செய்வதற்கான பாதுகாப்பான சிறந்த இடம்' என முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் புனேவும், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்கள் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளன.
ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த இடமாக திருச்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் வேலூரும் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களை முறையே ஈரோடு, சேலம், திருப்பூர் பிடித்துள்ளது.

பெண்களை வேலை செய்யும் இடத்தில் சமமாக நடத்துவது, ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்துவது, அவர்கள் வளர்ச்சிக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.