பிரீமியம் ஸ்டோரி

நம் ஆதித் தொழில்களில் ஒன்று, மண்பாண்டங்கள் செய்வது. இப்போது அந்தத் தொழிலும், அதைச் செய்பவர்களும் எப்படி இருக்கிறார்கள்?

சுமார் 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்துவரும் மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வசிக்கும் 58 வயதாகும் வசந்தாவிடம் பேசினோம்.

வசந்தா
வசந்தா

‘`ஆரம்பத்துல எங்க குடும்பங்கள்ல எல்லாரும் மண்பாண்டத் தொழிலைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தோம். இப்போதான் எங்க புள்ளைங்க எல்லாம் படிச்சு, இந்தத் தொழிலைவிட்டு வெளியேறி வேற வேற வேலைகளுக்குப் போறாங்க. அது ஒரு பக்கம் சந்தோஷம்தான்னாலும், இப்போ இந்தத் தொழிலை, வேலையைப் பண்ண ஆள் இல்லாம குறைஞ்சிட்டு வர்றது வருத்தமாவும் இருக்குது. எவர்சில்வர் பாத்திரங்களத்தான் எல்லா வீடுகள்லயும் பயன்படுத்துறாங்க. என்னதான் சில்வர் பாத்திரங்கள வாங்கினாலும், முன்னாடி எல்லாம் எல்லார் வீட்டுலயும் தண்ணி ஊத்தி வெச்சுக் குடிக்கவாச்சும் ஒரு மண்பானை இருக்கும். இப்போ ஃப்ரிட்ஜுல ஜில்லுனு தண்ணி வெச்சுக் குடிக்கிறாங்க’’ என்றவர், மக்களின் நவீனத் தேவைக்கேற்ப தங்கள் தொழில் எவ்வாறு மாற்றம் பெற்றுவருகிறது என்பது பற்றியும் பேசினார்.

2K kids: மீன் சீசன்ல மீன் குழம்பு சட்டி நல்லா விக்கும்!

‘`முன்னாடியெல்லாம் சந்தைக்கு வர்றவங்க மண் அடுப்பு, மண்பானை, மண்சட்டினு சமைக்க வாங்கிட்டுப் போவாங்க. இப்போ, சில்வர், பிளாஸ்டிக்குகள்ல என்னென்ன பொருள்கள் வருதோ அதே மாதிரி

மண் பொருள்களும் செஞ்சு கொடுத்தா விரும்பி வாங்குறாங்க. அதனால டம்ளர், பவுல், வாட்டர் பாட்டில், குழாய்வெச்ச மண்பானை, தோசைக்கல், கொழம்பு தாளிக்கிற சட்டி, இட்லி சட்டி, ஹாட் பாக்ஸ் மாதிரி சமைச்ச சாப்பாட்டை எடுத்து வைக்கிற பாத்திரங்கள்னு இதையெல்லாம் மண்பாண்டமா செஞ்சு கொடுக்குறோம். அதேபோல பிளவர்பாட், அலங்கார மணி, சுடுமண் சிற்பங்கள்னு கலைப்பொருள்களும் செய்றோம்’’ என்றவர்,

``விலை குறைவா மீன் கெடைக்குற சீஸன்ல மீன் குழம்பு சட்டி நல்லா விற்பனை ஆகும்’’ என்று சொல்லும்போது அவர் முகம் மலர்கிறது.

2K kids: மீன் சீசன்ல மீன் குழம்பு சட்டி நல்லா விக்கும்!

‘`சாமி உருவ பொம்மைகள், தீச்சட்டி, விநாயகர் சதுர்த்தி அப்போ செய்யுற பிள்ளையார் சிலைகள், திருமணப் பானைகள், அப்புறம் கார்த்திகை விளக்கு கள்னு இதுக்கெல்லாம் கலர் பண்ணி விற்பனை செய்வோம். விநாயகர் சதுர்த்தி க்குப் பிள்ளையார் பொம்மைகள், கார்த்திகை மாசம் விளக்குகள்னு இந்த ரெண்டு விற்பனை யும் எங்களுக்கு ரொம்ப முக்கியமானது.

வெயில் காலத்துல வீடுகளுக்கு மட்டு மல்லாம, பெரிய கம்பெனிகள்ல இருந்தும் மண்பானை வாங்குவாங்க. ஸ்கூல் பிள்ளைங்க, வீட்டுப்பாடம் ஏதோ செய்யச் சொல்றாங்கனு ஃப்ளவர்பாட் வாங்குவாங்க’’ என்று தங்கள் வியாபாரம் பற்றிச் சொன்னவர், மண் பொருள்கள் தயாரிக்கும் முறை பற்றியும் சொன்னார்.

2K kids: மீன் சீசன்ல மீன் குழம்பு சட்டி நல்லா விக்கும்!

‘`புகை வரும்ங்கிறதால, சிட்டிக்குள்ள சூளையெல்லாம் வைக்க அனுமதி இல்ல. கிராமப் பக்கமாதான் சூளை வைக்கிறோம். பக்கத்துல கண்மாய், ஏரி, குளம்னு ஏதாச்சும் இருக்குற எடமா பார்த்து சூளை போடுவோம். மண் எடுக்க முதல்ல கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கணும். அதுக்கு அப்புறம் ஆத்து மணல், களிமண் எடுத்து, காயவெச்சு, பதத்துக்கு எடுத்து, உருவமா பண்ணி காயவெச்சு, அப்புறம் சூளை வெக்கணும். காயவைக்கும் போது வெயில்ல உடையாம, மழையில கரையாமனு நெறைய பக்குவம் இருக்கு. ஒரு பானைய மட்டும் சூளை வைக்க முடியாது. 100, 150 பானையாவது வேணும்’’ என்றவர், இதில் தனது விற்பனை வாய்ப்பு பற்றி பகிர்ந்துகொண்டார்.

‘‘என் மாமியார், மாமனார் செஞ்சிட்டிருந்த இந்தத் தொழிலை கல்யாணத்துக்கு அப்புறம் நான் பார்க்க ஆரம்பிச்சேன். பெரிய அளவுல லாபம் இல்லாட்டி னாலும் அன்றாட குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யுற மாதிரி வருமானம் கிடைக்குது. மண்பாண்டங் களுக்கு மவுசு குறைஞ்சாலும் என் மனசுக்குப் பிடிச்ச வேலை இதுதான். என்னால முடியுற வரைக்கும் இதைச் செய்வேன்” - நெகிழ்ந்து பேசுகிறார் வசந்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு