Published:Updated:

"நாம் வாங்குற பொருளை 3 மடங்கு லாபத்திற்கு வெளிநாடுகளில் விற்க முடியும்!" - பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் திவ்யா

Women Entrepreneurs
Women Entrepreneurs

"எனக்கு திறமையிருக்கு. எதாவது சாதிக்கணும்னு நினைக்கிற பெண்களுக்கு வழிகாட்டி அவங்களை தொழில் முனைவோர் ஆக்குவதுதான் என்னுடைய லட்சியம்."

"யாரோட வெற்றியுமே, எப்போதுமே தனிப்பட்ட வெற்றியா இருக்க முடியாது. அதில் இன்னொருத்தருடைய உதவியோ உழைப்போ கலந்திருக்கும். இதைத்தான் நான் என்னோட பாலிஸியாக வெச்சுருக்கேன்" என்று சொல்லும் திவ்யா, பிசினஸ் செய்ய ஆர்வமுள்ள பெண்களைத் தேடிக்கண்டுபிடித்து, அவர்களுக்கு விருப்பமுள்ள தொழிலைத் தொடங்குவது முதல் அரசின் நிதியுதவிகளைப் பெற்றுத்தருவது வரை உதவுகிறார். தொடங்கும் தொழிலை அடுத்தடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லும் வழிமுறைகளை வழங்குவது உட்பட சுயதொழில் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கி, அவர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக்கும் பணிகளைச் சேவையாகச் செய்துவருகிறார். கடந்த இரண்டு வருடங்களில் திவ்யா உருவாக்கிய பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை 40 பேர். இது குறித்து திவ்யாவிடம் பேசினோம்.

Women Entrepreneurs
Women Entrepreneurs

"என்னதான் குடும்பம், குழந்தைனு செட்டில் ஆனாலும் எல்லாப் பெண்களுக்குமே வாழ்கையில் பொருளாதாரச் சுதந்திரம் அவசியம். அதை அவங்க உணரும் போது, அடுத்த கட்டத்திற்கு நகர உதவிகள் தேவைப்படலாம். உதவி என்பது சிலருக்கு மட்டும்தான் பணத்தேவையாக இருக்கு, பலருக்கு தகுந்த வழிகாட்டுதல்தான் மிகப்பெரிய தேவையாக இருக்கு. எல்லாப் பெண்களுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது இல்ல. வேலை கிடைக்கவில்லை என்பதால் சோர்ந்துபோயி உட்கார்ந்துட்டா, வாழ்க்கை முழுவதும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டியதுதான். வேலை இல்லை. ஆனால், எனக்குத் திறமையிருக்கு எதாவது சாதிக்கணும்னு நினைக்கிற பெண்களுக்கு வழிகாட்டி அவங்களை தொழில் முனைவோராக்குவதுதான் என்னுடைய லட்சியம். என்னால் இன்னொருத்தர் வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றம் நிகழுதுங்கிற மனதிருப்தியைத் தவிர வேற எந்த லாபமும் எனக்கு இல்லை.

ஒரு பிசினஸை யார் வேண்டுமானாலும் தொடங்கிடலாம். ஆனால், அதில் வெற்றி அடையணும்னா நிறைய அனுபவமும் வழிகாட்டுதலும் தேவை. இல்லைனா நஷ்டம்தான் மிஞ்சும். பெண்கள், தொழில்செய்ய தேவையான நிதியுதவிகள் அரசாங்கத்திடம் இருந்தே கிடைக்கின்றன. நம்நாட்டில் தயாரிக்கும் பொருள்களை வெளிநாடுகளுக்குச் சென்று விற்பனை செய்யக்கூட அரசு நிதியுதவி செய்யுறாங்க. ஆனா, அரசின் நலத்திடங்கள் பற்றிய விழிப்புணர்வு நிறைய பெண்களுக்கு இருக்கிறது இல்ல. வெளியே கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பிச்சா அதுக்கு வட்டி கட்டுவதிலேயே நம்முடைய மொத்த லாபமும் கரைஞ்சு போயிரும். அந்தத் தப்பைத்தான் பல பெண்கள் செஞ்சுட்டு இருக்காங்க. அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என்னுடைய நோக்கமே! எந்தத் தொழிலுக்கு எங்கே அதிகப்படியான தேவைகள் இருக்கு. எங்கிருந்து பொருள்களை மொத்தமாக வாங்கலாம்? நிதியுதவி எப்படி பெறுவது... போன்ற வழிகாட்டுதல்களை வழங்குறேன். இந்தத் தகவலை எம்.எஸ்.எம்.யிடமிருந்து நான் தெரிஞ்சுக்கிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துறேன்" என்ற திவ்யாவிடம் இந்த ஆர்வம் எப்படி வந்தது என்று கேட்டோம்.

திவ்யா
திவ்யா

"நான் பிறந்தது ஆந்திராவில். எங்க அம்மா சிங்கிள் மதர். போலியோ பாதிப்பால் நடக்கும் வாய்ப்பை இழந்தவங்க. அப்பா எங்கள விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம் என்னையும் என் தங்கச்சியையும் அம்மாதான் வேலைக்குப் போயி படிக்க வெச்சு வளர்த்தாங்க. ஒரு நாள்கூட அவங்க குறையையோ சூழ்நிலையையோ காரணம்காட்டி எங்களோட தேவைகளை மறுத்தது இல்ல. 'உடலில் குறைபாடு இருந்தாலும், உங்களை நல்லபடியா வளர்க்கணும்ங்கிற வைராக்கியம் மனசுக்குள்ள இருக்கு'னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அம்மா எங்களுக்காகக் கஷ்டப்பட்டதைப் பார்க்கும் போதெல்லாம் இந்த நிலைமை வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதுனு நினைச்சுப்பேன். அதனால் சின்ன வயசிலேயே பெண்கள் நலனுக்காகத்தான் என்னோட எதிர்காலம் இருக்கணும்னு முடிவுபண்ணிட்டேன்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முடிச்சுட்டு இரு பெரிய நிறுவனத்தில் ஹெச்.ஆராக வேலைக்குச் சேர்ந்தேன். அடுத்தடுத்து நிறைய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு, ஒரு லட்சம் சம்பளம்னு என் குடும்பப் பொருளாதாரத்தைக் கொஞ்சம் ஸ்ட்ராங் பண்ணிக்கிட்டேன். என்னோட சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னைகள் என்னை ஒரு இடத்தில் தேங்க வெச்சிடுச்சு. விரக்தியோட எல்லையில் இருக்குற மாதிரி இருந்துச்சு." சில நிமிடங்கள் அமைதியாகி தொடர்கிறார்.

நாம் வாங்குற பொருளை மூணுமடங்கு லாபத்திற்கு வெளிநாடுகளில் விற்க முடியும்.
திவ்யா

"ஒரு கட்டத்திற்கு மேல் என் மகளுக்காக ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு. மாசம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிட்டு இருந்த ஹெச்.ஆர் வேலையை விட்டுட்டு, பிசினஸ்ஸை ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்தேன். நிறைய ஊர்களுக்கு பயணிச்சேன். வெளிநாடுகளில் நம்முடைய பாரம்பர்ய பொருளுக்கு நல்ல வரவேற்பு இருக்குங்கிற விஷயம் தெரிஞ்சுது. அதனால கிராமங்களில் புடவை நெய்பவர்களிடமிருந்து புடவைகளை வாங்கி, வெளிநாடுகளில் ஸ்டால்கள் போட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க, நாம் வாங்குற பொருளை மூணுமடங்கு லாபத்திற்கு வெளிநாடுகளில் விற்க முடியும். என்னுடைய பிசினஸ்ஸிற்கு நிதியுதவி பெறுவதிலிருந்து அரசு வழங்கும் திட்டங்கள் வரை எல்லாவற்றையும் எம்.எஸ்.எம்.இ யில் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அதில் நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கத்தான் செஞ்சுது. எல்லாவற்றையும் போராடித்தான் தெரிஞ்சுக்கிடேன். அப்போதுதான் சராசரி பெண்கள் தடுமாறி அரசின் நிதியுதவியே வேண்டாம்னு போறாங்கனு தோணுச்சு. பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவணும் என்ற என்னோட சின்ன வயசு ஆசையைச் சுயதொழில் தொடங்க வழிகாட்டுவது மூலமாகச் செய்யலாம்னு முடிவுக்கு வந்தேன்.

தமிழ்நாட்டில் நிறைய ஊர்களுக்குப் பயணிச்சு, நிறைய பெண்களை நேரில் பார்த்து பேசினேன். ஏற்கெனவே செய்துட்டு இருந்த பெண்களில் சிலர், தங்களுடைய பிசினஸ்ஸை வெளிநாடு வரை கொண்டு போக தயாராக இருந்தாங்க. சிலர் புதுசா பிசினஸ் ஆரம்பிக்கவும் உதவிகேட்டாங்க. அவங்க எல்லோருடய தகவலையும் தொகுத்துட்டு வந்து யாருக்கெல்லாம் அரசு வழங்கும் நிதியுதவி கிடைக்கும். அவங்க பண்ற பிசினஸை எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டு போலாம்னு அவங்களுக்கு உதவ ஆரம்பிச்சேன்.

சின்னச் சின்னப் பொருள்களை விற்பனைசெய்யும் மக்கள், சாலையோரங்களில் கடைபோட்டு இருப்பவர்களை நேரில் பார்த்து அவங்களுக்கு உதவி செஞ்சுட்டு இருக்கேன்.
திவ்யா

புடவை தயார் செய்யுறவங்க, உணவுப்பொருள்களை பதப்படுத்தப்படும் தொழில் செய்றவங்க, ஃபேன்ஸி நகைகள் உருவாக்கிறவங்க, கைவினைப்பொருள்கள் செய்றவங்க... எனப் பலரையும் தொகுத்து சென்னையில் சில இடங்களில் ஸ்டால்கள் போட்டோம். அது நல்ல வெற்றியடையவே என்னுடைய சில நண்பர்களிடம் நிதியுதவி பெற்றும், அரசிடமிருந்து நிதியுதவி பெற்றும் வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று, அங்க ஸ்டால்கள் போடலாம்னு பிளான் பண்ணினோம். ஆனால், சில பெண்கள் வெளிநாடுனு சொன்னதும் கொஞ்சம் தயங்குனாங்க. அவங்களைச் சமாதானப்படுத்தி, அவங்க வீட்டிலிருப்பவர்களிடம் புரியவெச்சுதான் துபாய்க்குக் கூடிட்டு போயி ஸ்டால் போட்டோம். அதுக்கு தேவையான நிதியை அரசிடம் இருந்தே பெற்றோம்.

மொழிப்பிரச்னை, உணவு எல்லாத்தையும் தாண்டி வெளிநாடு போனதும் பெண்கள் எல்லோரும் புதுசா இன்னொரு கிரகத்துக்கு வந்தது மாதிரி உற்சாகம் ஆகிட்டாங்க. மூன்று நாள் ஸ்டால் போட்டோம். உண்மையைச் சொல்லணும்னா நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல லாபம் கிடைச்சுது.

Women Entrepreneurs
Women Entrepreneurs

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், பெண்கள் எல்லோருக்கும் ஒரு புதுத் தெம்பு கிடைச்சுருச்சு. அவங்களே தங்களோட தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டுபோக ஆரம்பிச்சுடாங்க. எதாவது நிதியுதவி, கடனுதவி, அரசின் புதுத்திட்டங்களை மட்டும் நான் அவங்களுக்கு அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். என்னோட புடவை பிசினஸும் இப்போ வெளிநாட்டில் நல்லா பிக் அப் ஆயிருச்சு" என்றவரிடம் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டோம்.

"நிச்சயமாக இன்னும் ஆயிரக்கணக்கான பெண் தொழில் முனைவோரை உருவாக்கணும் என்பதுதான் எதிர்காலத்திட்டம். அதுக்காக மக்களைத் தேடி பயணிச்சிட்டு இருக்கேன். இப்போ அடுத்த செட் பெண்களைத் தயார்படுத்த ஆரம்பிச்சுருக்கேன். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை ஆயிருச்சுனா மெரினா பீச்சில் கடை போட்டு இருப்பவர்கள், ரயில் பயணங்களில் சின்னச் சின்ன பொருள்களை விற்பனைசெய்யும் மக்கள், சாலையோரங்களில் கடை போட்டு இருப்பவர்களை நேரில் பார்த்து அவங்களுக்கு உதவி செஞ்சுட்டு இருக்கேன். 40 பேரை, புதிய தொழில்முனைவோராக உருவாக்கியிருக்கேன் என்பதோடு, 50 பெண்களுக்கு அவங்களோட தொழிலை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிகாட்டுதல்கள் கொடுத்திருக்கேன்.

நிறைய இடங்களில் திறமை இருந்தும் பெண்கள் அவங்களுக்கான அடையாளத்தை தொலைச்சுட்டு நிக்கிறாங்க. அவர்களையெல்லாம் வெளியே கொண்டுவந்து பெண்கள் சமுதாயத்தில் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வருவேன்" என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் வழியனுப்புகிறார் திவ்யா.

அடுத்த கட்டுரைக்கு