Published:Updated:

அப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்!

 ராதிகா வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா வசந்தகுமார்

மருத்துவரின் மறுபக்கம்

அப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்!

மருத்துவரின் மறுபக்கம்

Published:Updated:
 ராதிகா வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா வசந்தகுமார்

‘`வாரத்தின் மூன்று நாள்கள் நான் மருத்துவர். மற்ற நாள்களில் பிசினஸ் வுமன்’’ - அறிமுகத்திலேயே ஆச்சர்யம் தருகிறார் ராதிகா வசந்தகுமார். சென்னையின் சீனியர் மகப்பேறு மருத்துவர். ‘வயா லைஃப் பிரைவேட் லிமிடெட்'டின் நிர்வாக இயக்குநர்.

மருத்துவராக பல்லாயிரம் மக்களுக்கு இவர் கடவுள். பிசினஸ் வுமனாக ஒவ்வொரு வாடிக்கையாளருமே தனக்கு கடவுள் என்கிறார். இருவேறு துறைகள்... இரண்டுக்கும் தேவைப்படுகிற இருவேறு திறமைகள் என அசத்திக்கொண்டிருக்கிறார் ராதிகா. `ஆர்வம் இருந்தால் எதுவும், எந்த வயதிலும் சாத்தியம் என்பதற்கு நானே உதாரணம்’ என்றபடி தன் வாழ்க்கைப் பயணம் பகிர்கிறார்.

அப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்!

‘`1989-ம் வருஷத்துலேருந்து நான் டாக்டரா பிராக்டிஸ் பண்ணிட்டிருக்கேன். நான் ரொம்ப விரும்பித் தேர்ந்தெடுத்த படிப்பு அது. எம்.பி.பி.எஸ் முடிச்சதும் டி.ஜி.ஓ முடிச்சிட்டு, எம்.டியும் முடிச்சேன். காலேஜ்ல அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட். எம்.டி படிப்பில் மாநிலத்தில் முதலிடத்துல வந்தேன். எனக்கு கும்மிடிப்பூண்டி பப்ளிக் ஹெல்த் சென்டர்ல போஸ்டிங் கிடைச்சது. அப்புறம் பொன்னேரியில சின்னதா கிளினிக் ஆரம்பிச்சேன். அந்த ஏரியாவில் பெண்களுக்கான மருத்துவர்கள்னு அப்போ யாரும் இல்லை. கிளினிக் தொடங்கிய முதல்நாளே ஐம்பது பெண்கள் சிகிச்சைக்காகக் காத்திட்டிருந்தாங்க. எனக்கு நோய்களைக் கண்டறியவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் ரொம்பப் பிடிக்கும். மாலை நேரங்களில் சென்னையில் பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தேன். கிராமத்துல வேலை பார்த்ததால எனக்கு யாரோடும் போட்டிகளோ, பிரச்னைகளோ இருந்ததில்லை. நிறைய பெண்களுக்குப் புற்றுநோய் இருந்ததை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிச்சு, சிகிச்சைக்கு அனுப்பியிருக்கேன். டாக்டர் என்பதைத் தாண்டி, என்னை அவங்க வீட்டுல ஒருத்தரா பார்த்தாங்க அந்த மக்கள். யார் வீட்டுல என்ன விசேஷம் நடந்தாலும் முதல் ஆளா என்னைக் கூப்பிடுவாங்க. அவங்க அன்பும் அக்கறையும் மரியாதையும் வேற லெவல்ல இருந்தது. பல வருஷங்கள் குழந்தையில்லாம, என்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டு கர்ப்பமாகியிருந்தாங்கன்னா, அந்தச் செய்தியைச் சொல்ல அவங்க குடும்பத்தார் ஓடிவருவாங்க. தெருவா இருந்தாலும் கவலைப்படாம கண்ணீரோடு நன்றி சொல்வாங்க. இப்படி ரொம்ப ஆர்வத்தோடும் ஆத்ம திருப்தியோடும் 2006 வரைக்கும் முழுநேர மகப்பேறு மருத்துவரா இருந்திருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெறும் டாக்டரா ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதிக்கொடுக்கிறது, லேப் டெஸ்ட் எடுக்கப் பரிந்துரைக்கிறது, சிகிச்சைகள் கொடுக்கிறதுன்னு என் வேலைகள் போயிட்டிருந்துச்சு. டெஸ்ட் எடுக்கச் சொல்லி எழுதிக்கொடுக்கும்போது அந்த லேபில் என்ன நடக்குது, என்ன மெஷின் உபயோகிக்கிறாங்க, டெக்னீஷியன்ஸ் என்ன வேலை பார்க்கறாங்கன்னு எதுவுமே தெரியாம இருந்தேன். காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசாங்கம் கொண்டுவந்த விதிமுறைகளைத் தெரிஞ்சுக்க விரும்பினேன். ஒரு ஹாஸ்பிட்டலில் இத்தனை படுக்கைகள் அமைக்கணும்னா எவ்வளவு முதலீடு தேவைப்படும், மருந்துகளை எப்படி ஸ்டோர் பண்ணணும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நினைச்சேன். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ஐ.எஸ்.பி) சேர்ந்து படிக்கிறதுன்னு முடிவெடுத்தேன்’’ - அழகான அறிமுகம் சொல்லும் டாக்டர் ராதிகா, பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்தபிறகு தன் வாழ்வின் செகண்டு இன்னிங்ஸ் இன்னும் சிறப்பாக மாறியதாகச் சொல்கிறார்.

அப்போ டாக்டர்... இப்போ பிசினஸ் டாக்டர்!

‘`ஐ.எஸ்.பி-யில் சேர்ந்தபோது எனக்கு 50 வயசு. மத்தவங்க எல்லாரும் 30 ப்ளஸ்ஸில் இருந்தாங்க. ஐ.எஸ்.பி-யில் இடம்கிடைக்கிறதே பெரிய விஷயம். ஜிமேட் எக்ஸாம் எழுதணும், அதுல டாப் ஸ்கோரரா இருக்கணும். காலேஜ் முடிச்சதும் அதுல சேர முடியாது. ரெண்டு வருஷங்களாவது வேலை பார்த்த அனுபவம் இருக்கணும். அங்கே படிக்க வர்றவங்க பெரிய அறிவாளிகளா இருப்பாங்க. இன்டர்வியூவுக்குப் போனபோது, ‘நீங்க காலேஜ் டைம்ல டாப்பரா இருந்திருக்கலாம். இங்கே எந்த தைரியத்6துல வந்தீங்க. உங்களால படிக்க முடியுமா’ன்னு கேட்டாங்க. ‘நீங்க கேட்க நினைக்கிற கேள்விகளை என்கிட்ட தாராளமா கேளுங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க’ன்னு தன்னம்பிக்கையோடு பதில் சொன்னேன். இன்ஷூரன்ஸ் பத்தியும், இன்காம் டாக்ஸ் பத்தியும் அவங்க கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியா பதில் சொன்னபோது அசந்துட்டாங்க. பட்டுப் புடவையும் முதுகில் பையுமா காலேஜுக்குப் போன என்னை எல்லாரும் வியப்பா பார்த்திருக்காங்க. எனக்கு கணிதம் ரொம்பப் பிடிக்கும். டாக்டரா நான் பண்ணிட்டிருந்த வேலைகள் வேற. ஆனா, அதோடு தொடர்புடைய இன்னொரு பக்கத்தை நான் தெரிஞ்சுக்காமலேயே டாக்டரா இருக்கேனே என்ற குற்ற உணர்வுதான் 50 வயசுல என்னை காலேஜ் போகவெச்சது.

2002-ல் என் மகன் அமெரிக்கா போனான். அவன் படிச்ச காலேஜ்ல நோபல் பரிசு வாங்கினவங்க நிறைய பேர் இருந்தாங்க. அவங்களுக்காகவே பிரத்யேக கார் பார்க்கிங் இருக்கும். நோபல் பரிசு வாங்கின அறிகுறியே இல்லாம அவ்வளவு எளிமையானவங்களா இருந்தாங்க. அவங்களையும் அப்படியொரு பிரமாண்ட காலேஜ் சூழலையும் பார்த்தபோது எனக்கும் அப்படியோர் இடத்துல படிக்க மாட்டோமான்னு ஆசை வந்தது.

ஐ.எஸ்.பி-யில படிக்க அதுதான் இன்ஸ்பிரேஷன். ரொம்பக் கஷ்டமான படிப்பு. ஒரு வருஷம் அங்கேயே தங்கிப்படிச்சேன். அதுவரைக்கும் குடும்பத்தைப் பிரிஞ்சதில்லை. ஹோம் சிக்னெஸ் இருந்தது. வாராவாரம் வீட்டுக்கு வந்துடுவேன். அதையெல்லாம் மீறி, டாப் ஸ்கோரரா வந்தேன். பட்டமளிப்பு விழாவில் மொத்த காலேஜும் என்னைப் பாராட்டினதை மறக்கவே முடியாது’’ - முதல் ரேங்க் வாங்கிய குழந்தையின் குதூகலம் ராதிகாவிடம். ஆசைப்பட்டதைப் படித்து, அனுபவங்களைக்கற்று சவீதா மெடிக்கல் காலேஜில் சீஃப் ஆபரேட்டிங் ஆஃபீசராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகு எடுத்தது தான் பிசினஸ் வுமன் அவதாரம்.

‘` `டிபன் பாக்ஸ் தயாரிப்புக்காக ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாமா’ன்னு அமெரிக்காவில் இன்ஜினீயரா இருக்கும் என் மகன் வசிஷ்ட் கேட்டபோது ஆச்சர்யமாகவும் தயக்கமாகவும் இருந்தது. அந்த பிசினஸ் நல்லா வருமா, வராதாங்கிற கேள்விகளைப் புறந்தள்ளிட்டு, ஓர் அம்மாவா என் மகனின் சந்தோஷத்தை மட்டும் பார்த்து சம்மதிச்சேன். நான் அவனுடைய பிசினஸுக்கு உதவறதா சொன்னேன். என் மகனுக்கு என் கேரக்டர் தெரியும். மருத்துவரா மக்களின் அன்பையும் மரியாதையையும் சம்பாதிச்சுவெச்சிருக்கிறதும் அவனுக்குத் தெரியும். அதனாலதான் டிபன் பாக்ஸ் தயாரிப்பையே அதுவரைக்கும் யாரும் யோசிக்காதபடி, ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும் விஷயமா யோசிச் சிருந்தான். டிபன் பாக்ஸ், குழந்தைகளுக்கான கிட்ஸ் டம்ளர், பெரியவங்களுக்கான வாட்டர் பாட்டில், ஃபிளாஸ்க்னு நிறைய இருக்கு. பிளாஸ்டிக்கோ, ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கிற கெமிக்கல்களோ இல்லாத தயாரிப்புகள் எல்லாம். உணவு சூடாகவும் சுவையாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும். டிஸ்னி வேர்ல்டுக்குப் பணம் கட்டி, அவங்களுடைய கார்ட்டூன் கேரக்டர்களை எங்களுடைய தயாரிப்புகளில் பயன்படுத்தறோம். `டிபன் ஸ்டோரீஸ்' என்ற கான்செப்டில் குழந்தைகளுக்கான கதைகளையும் லஞ்ச் பாக்ஸில் அறிமுகப்படுத்து கிறோம். வேலைக்குப் போறவங்களுக்கு லஞ்ச் பேகை சுமந்துட்டுப் போற உணர்வே தெரியாதபடி டிசைன் பண்ணியிருக்கோம். உள்ளே இருக்கிற டப்பாக்களை அப்படியே வெச்சுக்கிட்டு, வெளியில உள்ள ஷெல்லை மட்டும் விதம்விதமா மாத்திக்கலாம். புடவைக்கும் சல்வாருக்கும் மேட்ச்சா தினமும் ஒரு கலர்ல எடுத்துட்டுப் போகலாம். அந்தக் காலத்துல பாத்திரங்களில் பெயர் பொரிச்சுக் கொடுத்ததைப் போலவே இந்த டிபன் பாக்ஸில் பெயர் பொரிச்சுத் தர்றோம். இன்னும் நிறைய புது புராடெக்ட்டுகளைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்திட்டிருக்கு. ஹாங்காங், தைவான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, யுகே, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ், ஜப்பான் உட்பட 15 நாடுகளில் பிசினஸ் பண்றோம். மருத்துவரா எனக்கிருக்கும் அதே பொறுப்புணர்வோடு இந்த பிசினஸையும் பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டிருக்கேன்’’ - பெருமையாகச் சொல்கிறார்.

‘`பிசினஸ்ல சவால்களுக்கும் ரிஸ்க்குகளுக்கும் குறைவிருக்காது. கடினமான சூழல்களைக் கையாளணும்; முடிவுகளை எடுக்கணும். வாடிக்கையாளர்களே எங்களுக்குக் கடவுள். எந்தவகையிலும் அவங்களுக்கு அதிருப்தியைக் கொடுத்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். எங்களுடைய குவாலிட்டி செக்கிங் டீம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு நூறு சதவிகிதம் திருப்தி ஏற்பட்டால் மட்டும்தான் ஒவ்வொரு பொருளையும் விற்பனைக்குத் தகுதியானதுன்னு வெளியில அனுப்புவாங்க. ஒரு மருத்துவரா நான் என் பேஷன்ட்டுக்குக் கொடுக்கும் சிகிச்சைகளில் காம்ப்ரமைஸ் பண்ணவே மாட்டேன். அதே மனநிலையோடுதான் இந்த பிசினஸையும் பார்க்கறேன். மருத்துவம் நான் விரும்பி ஏத்துக்கிட்ட வேலை. அதுல கிடைக்கிற ஆத்ம திருப்திக்கு இணையே இல்லை. கடந்த சில வருஷங்களா மருத்துவத்துக்கான நேரத்தை 20 சதவிகிதமா குறைச்சிட்டேன். வாரத்துல மூணு நாள்களை மட்டும் மருத்துவத்துக்காக ஒதுக்கியிருக்கேன். ‘நீங்கதான் பார்க்கணும்’னு கேட்கற பேஷன்ட்ஸுக்கு மட்டும் சிகிச்சைகள் கொடுக்கறேன். என் கணவர் லேப்ராஸ்கோப்பிக் சர்ஜன். அதனால வீட்டுல மருத்துவம் தொடர்பான உரையாடல்களும் இருக்கும். மருத்துவத்துறையில் நடக்கும் லேட்டஸ்ட் விஷயங்களை அப்டேட் பண்ணிட்டிருக்கேன். இரண்டு துறைகளுக்கும் சம அளவு நேரம் ஒதுக்க முடிஞ்சிருந்தா நல்லாருக்குமேனு நினைக்கிறதுண்டு. மற்றபடி நிகழ்காலத்தில் நிறைவை உணர்கிறவள் நான்’’ - அசத்துகிறார் ராதிகா!