தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்!

கருவாடு
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாடு

- கருவாடு வியாபாரம் செய்யும் பாக்கிய ராணி

கொரோனா ஊரடங்கு கடுமையாக இருந்த காலத்தில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்திய உணவுப்பொருள் கருவாடு. கிராமமோ, நகரமோ பெரும்பாலான வீடுகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருளும் கருவாடுதான். நாளைய தேவைக்காக உணவைச் சேமித்துப் பதப்படுத்தி வைக்கும் ஆதிசமூக உணவுப்பழக்கத்தின் நீட்சியாகக் கருவாடு, உப்புக்கண்ட பயன்பாடு நம் மக்களிடம் தொடர்கிறது.

பொதுவாக, மீனைவிட அதிக விலைக்கு விற்கப்படுவது கருவாடு. வஞ்சிர மீன் கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரை என்றால், அதன் கருவாடு ரூ.1,000 முதல் ரூ. 1,500 வரை விற்கப் படுகிறது. தமிழகக் கடோலாரப் பகுதிகளில் மீன் வியாபாரத்துக்கு அடுத்தபடியாகக் கருவாடு வியாபாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் ராணியாக வலம்வருகிறார், பாம்பனைச் சேர்ந்த பாக்கிய ராணி.

சிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்!

‘`ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி பகுதிகள்ல கருவாட்டு வியாபாரிகள் நிறைய பேரு இருந்தாலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சில்லறை வியாபாரிங்க, எங்கிட்டதான் அதிக அளவுல கருவாடுகள வாங்கிட்டுப் போவாக. அந்த அளவுக்கு தரமான பொருள், நியாயமான விலை’’ என்று பேச ஆரம்பித்தார் பாக்கிய ராணி.

‘`தமிழ்நாட்டு மக்கள் விரும்பிச் சாப்பிடுற சீலா (வஞ்சிரம்), வாளை, கட்டா, பன்னா, குமுளா, நகரை, சுவ்வாரை, நெத்திலி, ஊளா, சூடை, காரல், கனவா, சென்னாங்கூனி, திருக்கை கருவாடுகள பலரும் வியாபாரம் செஞ்சாலும், நமக்குனு இதுல ஒரு பேரு, வியாபாரிங்க, வாடிக்கையாளர் கூட்டம்னு ஜம்முனு இருக்கேன்’’ என்கிறார் கருவாட்டுக் கூடை களை அடுக்கியபடி.

சிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்!

‘ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்... ஒவ்வொரு நாளும் துயரம்...’ என்ற வாலியின் வரிகளைப்போல, மீனவர்களின் வாழ்க்கை எப்போதும் போராட்டமானது. அதிலும் மீனவப் பெண்களின் வாழ்க்கை அதைவிட கொடுமையானது. கடல் அலை ஓய்வேடுத் தாலும் ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருப்பார்கள். மீன்பிடிக்கச் செல்லும் வீட்டு ஆண்களுக்குத் தேவையான உதவி களைச் செய்வது, கடலுக்குச் செல்வதற்கான பொருள்களைத் தயார் செய்வது, வலைகளைத் தைப்பது, மீன் கூடைகளை இறக்குவது, தூக்கிச் சுமப்பது, மீன் சந்தைகளில் வியாபாரம் செய்வது, கருவாட்டுக்கான மீன்களுக்கு உப்பு வைப்பது, காய வைப்பது எனச் சுழன்று கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவராக இருந்த பாக்கிய ராணி, ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்துவரும் கருவாடு மொத்த வியாபாரத்தில் தான் எழுந்து வந்த கதையைப் பகிர்ந்தார்.

‘`பிறந்ததுல இருந்து இந்தக் கடற்கரையில தான் வாழ்க்கை. சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சு. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் சில பிரச்னைகளால வீட்டுக்காரரை பிரிஞ்சு வந்துட்டேன். எனக்கு வேற எந்த வேலையும் தெரியாது, எங்கூருல வேற எந்தத் தொழிலும் கெடையாது. ஒத்த பொம்பளப் புள்ளையை வளர்த்து ஆளாக்கணுமே... மனசு மருகுனாலும், சொந்த, பந்தம் யாருகிட்டேயும் கை ஏந்திடக் கூடாதுனு 40 வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கருவாட்டுக் கூடையைத் தூக்க ஆரம்பிச்சேன். கருவாட்டு நாத்தம்னு சிலர் என் தொழிலையும் என்னையும் பார்த்து மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக் காத்தே இந்தக் கருவாட்டு வாசம்தான். பல கஷ்டங்களைக் கடந்து இன்னிக்கு நல்ல நெலைக்கு வந்திருக்கேன்.

சிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்!

எனக்குக் கீழ ஏராளமான கருவாட்டு வியாபாரிங்க இருக்காங்க. என்கிட்டயும் சில பேரு வேலை செய்யுறாங்க’’ என்று ஜோடனை இல்லாமல் பேசிக்கொண்டே வியாபாரத் தையும் கவனிக்கிறார் பாக்கிய ராணி. ஆரம்பக்கல்வியைத் தாண்டாதவர் கால்கு லேட்டர்போல கணக்கை துல்லியமாகப் போடுகிறார்.

“ஆரம்பிச்சப்போ, கொஞ்சமா கருவாடு வாங்கி உள்ளூர்ல விக்க ஆரம்பிச்சேன். பாம்பன் பகுதி கருவாட்டுக்கு பல ஊர்லயும் டிமாண்டு இருந்ததால ராம்நாடு, சத்திரக்குடி, பரமக்குடி வார சந்தைக்கு கருவாடு விக்கப் போறவங்களோட சேர்ந்து நானும் போனேன். அப்பயெல்லாம் பாம்பன் பாலம் வேலை முடியாததால பஸ், லாரியில போக முடியாது. ரயில்ல தான் கருவாட்டுக் கூடைகளைத் தூக்கிட்டுப் போகணும். நாங்க லக்கேஜுக்கு பணம் கட்டி, டிக்கெட்டு எடுத்துட்டுப் போனாலும் கக்கூஸ் பக்கத்துலதான் இருக்கச் சொல்லுவாங்க. வண்டியில சீட்டு காலியா கெடந்தாலும் உக்கார விடமாட்டாங்க. அதே நெலமதான் இப்ப பஸ் விட்ட பெறகும் தொடருது. லட்ச ரூபா எங்க சுருக்குப் பையில இருந்தாலும் எங்களை ஏளனமாதான் பார்ப்பாங்க, பஸ்ஸுல ஏத்த மாட்டாங்க. நல்ல மனசு உள்ள கண்டக்டர் யாராவது எங்கள ஏத்தி கடைசி சீட்டுல உக்கார வைப்பாரு.

அது மட்டுமல்ல, சந்தையிலகூட எங்கள கடைசியா ஒதுக்கிடுவாங்க. எல்லாரையும் போலத்தான் சந்தை யில கடை போட எங்க கிட்டயும் பணம் வாங்குறாங்க. ஆனா, மத்த கடைகள் மாதிரி எங்களுக்கு செட்டு கிடையாது. மழையில நனைஞ்சாலும், வெயில்ல காய்ஞ்சாலும் நாங்க வானத்தைப் பார்த்துக்கிட்டேதான் இருக்கணும். அதிலயும் மழக்காலத்தில சேறு, சகதிக்குள்ள இருந்துதான் வியாபாரம் பண்ணுவோம். கருவாடும் திங்குற பொருள்தான், அதை விக்கிற நாங்களும் மனுசங்க தானே? அதே நேரம் சூப்பர் மார்க் கெட்டுல இதே கருவாடை பாக்கெட்டு, டின்னுனு அடைச்சு விக்கும்போது மட்டும் யாரும் முகம் சுளிக்கிறதில்ல. என்ன உலகமோ இது...’’ என்று குரல் இறங்கும் பாக்கிய ராணி, தன் வியாபாரக் கதைக்கு மீண்டும் வந்தார்.

“என் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமா காலூன்றுச்சு. கருவாட்டு வியாபாரத்துல என் பேரும் நிலைச் சுச்சு. ராமேசுவரத்துக்கு காருல வர்றவங்க, என்னை தேடி வந்து கருவாடு வாங்கிட்டுப் போறாங்க. நான் ஊர், ஊரா போய் வித்த காலம் போயி இப்ப பல ஊரு வியாபாரிகளும் என்கிட்ட வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆரம்பத்துல நானே மீனை வாங்கி, கீறி, உப்பு வச்சு, கருவாடா ஆக்குவேன். இப்ப, அது மாதிரி தரமா பண்றவங்ககிட்ட கொள்முதல் பண்ணி கை மாத்தி விடுறேன். நம்பிக்கையான வியாபாரி களுக்குக் கடனுக்கும் கொடுப்பேன்.

சிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்!

இந்த வியாபாரத்தை இன்னும் பெருசா செய்யலாம்னும், வெளி நாட்டுக்கு ஏத்துமதி பண்ணலாம்னும் சில பேரு சொல்லுவாங்க. எனக்கு இந்த வியாபாரமே போதும். என்னை நடுவுல வெச்சு, இங்கிட்டு கருவாடு காய வைக்கிறவங்களுக்கும், அங்கிட்டு சந்தைக்குப் போய் கருவாடு விக்கிறவங்களுக்கும் வரு மானம் சரியா வந்தா போதும்னு நெனைக்கிறேன். தினமுமே லட்சக் கணக்குல வியாபாரம் நடக்குது. சும்மா இல்ல... என் 40 வருஷ உழைப்பும் வியர்வையும், அனு பவமும், கஷ்ட நஷ்டங்களும் அதுல கெடக்கு’’ என்கிறார் கருவாடுகளைப் பதம் பார்த்தபடி.

‘`என் மகள டீச்சருக்குப் படிக்க வச்சேன். படிப்பை முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கு. படிப்பு தான் நம்மள மாதிரி ஆளுங்களுக்குத் துடுப்புனு மககிட்ட சொல்லி சொல்லி வளர்த்தேன். அப்புடி அதுவும் டீச்சராக எங்க புள்ளைகள மேடேத்தி விடட்டும்’’ என்பவர் இறுதியாக, “அரசாங்கத்துக்கிட்ட ஒரு கோரிக்கை வெச்சுக்குறேன். கருவாட்டுப் பெட்டிகள வெளி யூருக்குக் கொண்டு போறதுக்கு பஸ்ஸுல ஓர் இடம் ஒதுக்கிக் கொடுங்க. கருவாடு விக்கிறவங்கள பஸ்ஸுல ஏத்துங்க’’ என்றார் ஆறாத உப்புக் காயத்தின் குரலாக.