Published:Updated:

வளமான பொருளாதாரத்தில் பெண்கள்... வானம் வசப்படட்டும்!

நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்

நிதி நிர்வாகம்

வளமான பொருளாதாரத்தில் பெண்கள்... வானம் வசப்படட்டும்!

நிதி நிர்வாகம்

Published:Updated:
நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்
வளமான பொருளாதாரத்தில் பெண்கள்... வானம் வசப்படட்டும்!

வருடம்தோறும் மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களைப் பலரும் வானளாவப் புகழ்ந்து தள்ளுவார்கள். அன்றைய தினம் வானத்தில் பறப்பார்கள். ஆனால், அடுத்த நாளே இவை அனைத்தும் மறைந்து, மறந்து வழக்கமான வாழ்க்கை தொடரும்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

பெண்களை கீழாகப் பார்க்கும் மனோபாவம், பெண் எனில், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள், பெண்ணுக்கெதிரான வன்முறைகள் – இவை அனைத்தும் இன்று மாறிவருகிறது என்பதில் சந்தேகமும் இல்லை. அதே சமயம், பெண்கள் பொருளாதார ரீதியில் சிறப்பாகச் செயல்பட என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

தாய்

வயதான காலத்தில் சொத்துகளைப் பராமரிப்பது மிகக் கடினம். ஒருவேளை, தந்தை இறந்திருந்தால் அவர் மறைவுக்குப் பின் தாய்க்கு சேர வேண்டிய சொத்துகள் குறித்த டாக்கு மென்ட் வேலைகளை முடித்து வைப்பது அவருக்குப் பெரும் நிம்மதியைத் தரும். சொத்துகளில் இருந்து வரக்கூடிய வருமானம், ஒழுங்காக அவரைச் சென்றடையும் வண்ணம் செய்வதும் அவரின் கவலையைக் குறைக்கும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது வலியைக் குறைக்கும் மருத்துவமும், அதைப் பெற உதவும் நிரந்தர வருமானமும்தான். ஆகவே, ஓரளவு பணத்தை இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தரும் பென்ஷன் பிளான்களில் முதலீடு செய்வது அவருக்கு நிரந்தர வருமானத்தை உறுதிப் படுத்தும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கக்கூடிய வயது வரம்புக்குள் இருப்பவர் எனில், உடனே ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் எடுப்பது நல்லது. வங்கி எஃப்.டி-களும் வயதானவர் களுக்குப் பரிச்சயமானவை என்பதால் அவற்றிலும் அவருக்காக முதலீடு செய்யலாம்.

நாம் இருக்கும்வரை அவரை நன்கு பேணினாலும், ஒரு வேளை நமக்குப் பிறகு அவர் இருக்க நேர்ந்தால் அவரைக் கவனித்துக்கொள்ள உடன்பிறந்தோர் (Siblings) இல்லாத வர்கள், ஒரு நம்பகமான நபரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் தாய்க்காக நாம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் பற்றிய விவரங்களைத் தெரிவித்து வைப்பதன் மூலம் தாய்க்கு பொருளாதார நிம்மதியைப் பரிசளிக்கலாம்.

வளமான பொருளாதாரத்தில் பெண்கள்... வானம் வசப்படட்டும்!

மனைவி

ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடும் பெண்கள் பொதுவாக, தங்கள் தனிப்பட்ட பொருளாதாரம் மீது அத்தனை கவனம் செலுத்துவதில்லை. சில பெண்களுக்கு முதலீடுகள் பற்றி அறிந்துகொள்ள ஆவல் இருந்தாலும், கேட்பதில் தயக்கம் இருக்கிறது. நன்கு படித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட பண விஷயத்தில் ஒதுங்கவே முயல்கிறார்கள். சொல்லி சொல்லிப் பார்த்து சலித்துப் போன கணவன்மாரும் ஒரு கட்டத்தில் முதலீடுகள் பற்றிய பேச்சுக்களைக் குறைத்து விடுகிறார்கள்.

நல்ல இன்ஷூரன்ஸைத் தேர்வு செய்து, தவறாமல் பிரீமியம் கட்டி, மனைவி பெயருக்கு நாமினேஷன் செய்திருந்தாலும், மனைவிக்கு அதுபற்றி எந்தத் தகவலும் தெரியாதிருக்கும் பட்சத்தில், அந்தப் பணத்தைப் பெறுவது எப்படி, தன் மறைவுக்குப் பின் குடும்பம் பணக் கஷ்டத்தில் தவிக்கக் கூடாதென்று கணவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீண்தானே? இப்படி கோடிக் கணக்கான பணம் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் வங்கிகளிலும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. சில குடும்பங்களில் கணவரின் ஆளுமை அதிகரிப்பது, செலவுகள், முதலீடுகள் போன்ற வற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருப்பது போன்றவை யும் நடக்கின்றன. இவை அனைத்துக்கும் காரணம் பெண் களுக்கு பொருளாதார விஷயங் களில் பரிச்சயமின்மைதான்.

இன்று படிப்பறிவில்லாத பெண்கள் குறைவு. வாங்கி யிருக்கும் கடன்கள், அவற்றுக் கான வட்டி விகிதம், இன்டர்நெட் பேங்கிங், மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் அக்கவுன்ட், வீட்டு இன்ஷூரன்ஸ் ஆகியவை பற்றி கணவர் எடுத்துரைத்தால் மனைவி கண்டிப்பாகப் புரிந்துகொள்ள இயலும். அத்துடன் தன் காலத்துக்குப் பிறகு, குடும்பம் பணமின்றி தத்தளிக்காமல் இருப்பதற்கு, தான் செய்திருக்கும் ஏற்பாடுகள் பற்றியும் மனைவிக்குத் தெரிவித்தால்தான் அந்த ஏற்பாடுகள் மூலம் குடும்பம் பயன் பெற முடியும். எந்த முதலீடாக இருந்தாலும் அதற்கு குடும்பத்தினரை நாமினியாக நியமிப்பதும், அதை மனைவிக்குத் தெரிவிப்பதும் முக்கியம்.

மனைவியை வேலைக்குச் செல்ல ஊக்குவிப்பது மட்டுமன்றி , அதற்கு உதவியாக இருப்பது, அவருடன் ஜாயின்டாக சொத்து வாங்குவது, வரவு, செலவு, முதலீட்டு முடிவுகளை இருவரும் சேர்ந்து எடுப்பது போன்றவற்றைச் செய்து மனைவிக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பரிசாகத் தரலாம்.

மகள்

இரண்டரை வயதாகும்போதே குழந்தைகளுக்கு ஆணென்றால் இப்படித்தான் இருப்பான்; பெண் எனில், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ப தெல்லாம் புரிந்துவிடுகிறதாம். ஆகவே, அந்த வயதில் இருந்தே குழந்தைகளை சமத்துவத்துடன் நடத்த வேண்டும்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சுகன்யா சம்ருதி யோஜனா, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், சாவரின் கோல்டு பாண்ட் போன்ற முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து தவறாமல் சேமித்து வரலாம். கல்வியை மகனுக்குத் தர விரும்பும் அதே அளவுக்கு மகளுக்கும் தர வேண்டும். தனக்கு ஏதேனும் நேர்ந்தாலும் மகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் குறையாமல் இருப்பதற்கு உயில் எழுதுவதும், அதை நிறைவேற்ற நல்ல கார்டியனைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். இவற்றைச் செய்வதன் மூலம் மகளுக்கு ஒருநல்ல பொருளாதார எதிர்காலத்தைப் பரிசளிக்க முடியும்.

பெண்களுக்கு ஒரு வார்த்தை

‘குதிரையை குளத்துக்கு அருகே கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால், தண்ணீரைக் குடிக்க வைக்க முடியாது’ என்பார்கள். அதுபோல, உலகில் உள்ள அத்தனை அரசுகளும் நிறுவனங்களும், ஆண் வர்க்கமும் பெண் சமத்துவத்துக்காக எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவற்றை வெற்றி பெறச் செய்யும் சாவி பெண்களிடமே உள்ளது. அதிகரித்து வரும் வாழ்நாள், பெருகிவரும் தனிக் குடும்பங்கள், நிலையில்லாத வேலைகள், முறிந்துவிடும் திருமணங்கள், அதிகரிக்கும் சிங்கிள் மதர் கலாசாரம் போன்றவை பெண்களும் பொருளாதார உலகில் கால் பதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்து கின்றன.

படிப்பு, வேலை, சமையல், குழந்தை, கணவன் என்று சுற்றிச் சுழலத் தெரிந்தவர்களுக்கு, இயல்பிலேயே ஆறை நூறாக்க வல்ல பெண் குலத்துக்கு, பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்வது ஒன்றும் கடினமல்ல. இது இன்டர்நெட் உலகம். சிறு ஊர்களில் உள்ளவர்கள்கூட வாட்ஸ்அப், யூடியூப் போன்றவற்றை உபயோகப்படுத்தும் காலம். பொழுது போக்காக இவற்றில் ஈடுபடுவதோடு, நெட்டில் வரும் பல பொருளாதாரச் செய்திகள், மீட்டிங்குகள், வெபினார் போன்றவற்றுக்கும் சிறிது நேரம் ஒதுக்குவது நம் பொருளாதார அறிவைச் செறிவாக்கும் என்பதை இனியாவது பெண்கள் உணரட்டும்!