நம் நாட்டில் பட்டதாரிகள் அதிகரித்துக்கொண்டே வர, அந்த எண்ணிக்கைக்கு ஈடுகொடுத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. இதனால், படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை, தொழில்களை பலர் செய்து வருகின்றனர். சிலர், வாழ்க்கையில் முன்னேற படிப்பு மட்டுமே வழியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொழில்களை கையில் எடுக்கின்றனர். எல்லாருக்குமே அடிப்படை நோக்கம் ஒன்றுதான்... வாழ்வில் வருமானத்துக்கான வழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில்தான் ஒரு முடிவெடுத்து இருக்கிறார், பீகாரை சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான பிரியங்கா குப்தா. பொருளாதார பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2019-ல் படிப்பை முடித்த இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்புக்கேற்ற எந்த வேலையும் கிடைக்காமல் தவித்துள்ளார். இந்நிலையில், பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரிக்கு அருகில் டீக்கடை அமைத்திருக்கிறார், பிரியங்கா குப்தா. டீ கடையை முன்வைத்து தொழில் தொடங்கிய, இந்திய அளவில் பிரபலமான சுயதொழில்முனைவோர், பிரஃபுல் பில்லோரிதான் இதில் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார்.
இளம் தொழில்முனைவோரான பிரஃபுல் பில்லோரி, `எம்.பி.ஏ சாய் வாலாவின்' (MBA Chai Wala) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. தேநீர் விற்பனையை ஆரம்பமாகக் கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்து கோடிக்கணக்கில் பிசினஸ் டர்ன் ஓவர் பார்ப்பவர். மத்திய பிரதேசத்தில் தன் முதல் டீ ஸ்டாலை ஆரம்பித்தவருக்கு, இப்போது நாடு முழுக்க 22-க்கும் மேற்பட்ட அவுட்லெட்கள் உள்ளன.

பிரியங்கா குப்தா டீ விற்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``பல சாய்வாலாக்கள் உள்ளனர். ஏன் ஒரு சாய்வாலி இருக்கக்கூடாது?'' என பதில் அளித்துள்ளார்.