லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“தீபாவளி மாசம் சக்கப்போடு போடும்!”

அமுதா
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதா

எங்க ஊரை சுத்தி பெரும்பாலும் தறி நெய்யுறவங்கதான். வீட்டுல தறிபோட்டு, கடையில டிசைன் வாங்கிட்டு வந்து நெய்து கொடுப்போம்.

தீபாவளி என்பது நம்மில் பலருக்கும் ஒரு நாள் கொண்டாட்டம். இன்னொரு பக்கம், தீபாவளி சார்ந்த பொருள்களைக் கொண்டு தொழில் செய்யும் குறு, சிறு தொழில்முனைவோர்களுக்கு, அந்த வருமானம்தான் அவர்களுக்கு கால் வருடம், அரை வருடத்துக்கான ஆதாரம். அப்படி சில தொழில்முனைவோர்கள் இங்கே...

“தீபாவளி மாசம் சக்கப்போடு போடும்!”

ஸ்ரீ.மகாலட்சுமி, ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர், திருச்சி

``திருச்சி மலைக்கோட்டை பஜார்ல இருக்கு எங்க ஃபேன்சி கடை. நானும் வீட்டுக்காரரும் சேர்ந்து கடையைப் பார்த்துக்குறோம். பொதுவா பண்டிகை காலம்னாலே எங்களுக்கு வியாபாரம் கொஞ்சம் நல்லா போகும். ஆனாலும் தீபாவளிதான் ரொம்ப முக்கியமான பண்டிகை. அதுதான் எங்க வியாபாரத்தை கைதூக்கிவிடும். ஆயுத பூஜையில இருந்தே வியாபாரம் களைகட்ட ஆரம்பிச்சிடும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னயிருந்தே சோறு, தண்ணியில்லாம வியாபாரம் பார்க் குற அளவுக்கு கூட்டம் அள்ளும். பஜாரே ஜேஜேனு இருக்கும். அந்தக் கூட்டத்தை யெல்லாம் பார்க்க பார்க்க சந்தோஷமா இருக்கும். அந்தந்த வருஷ தீபாவளிக்கு புதுசா வர்ற வளையல், கம்மல், செயின்னு நாங்க வாங்கிட்டு வந்து விப்போம். இந்த தீபாவளிக்கு மீனாகாரி ஜிமிக்கி, கல்லு வச்ச வளையல்னு வந்திருக்கு. இப்போ சீசன்ல வர்ற பணத்தை, இனி அடுத்த தீபாவளிக்குத்தான் பார்க்க முடியும். அதனால, இப்போ வர்ற காசுலதான் வீட்டுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை பண்ணிக்குவோம். எங்களுக்கு ரெண்டு பெம்பளப் புள்ளைங்க. அவங்களுக்கு ஏதாச்சும் நகை எடுத்துட்டு, அடுத்த சில மாசங்களை அந்தக் காசுல ஓட்டுவோம்.’’

“தீபாவளி மாசம் சக்கப்போடு போடும்!”

கமலா கோவிந்தராஜ் குடிசை தொழிலாக தின்பண்டம் செய்பவர், சேலம்

``நாங்க பரம்பரை பரம்பரையா, கிட்டதட்ட 40 வருஷமா இந்த ஸ்வீட், காரம் செய்யுற தொழில் செய்யுறோம். வீட்லதான் செஞ்சு விற்பனை செய்யு றோம். சில ஆர்டர்களை அவங்க கேக்குற இடத்துக்கு போய் செஞ்சு கொடுத்துட்டும் வருவோம். வருஷம் முழுக்க பலகாரம் சுட்டாலும், தீபாவளி மாசம்தான் சக்கபோடு போடும். குறிப்பா, தீபாவளி சீட்டு புடிக்கிறவங்க, சீட்டு போடுறவங்களுக்குக் கொடுக்க நம்மகிட்ட ஸ்வீட் ஆர்டர் கொடுப்பாங்க. அது நமக்கு பெரிய ஆர்டரா அமைஞ்சு போயிடும். வழக்கமா மாசத்துக்கு 20, 30 கிலோ ஸ்வீட் வியாபாரம் ஆகுதுனா, தீபாவளி சமயத்துல 500 கிலோ வரைக்கும் வியாபாரம் ஆகும். அந்த வருமானம்தான் வருஷத்துக்கும் கைகொடுக்கும். எப்போவது தீபாவளி வருமானம் குறைஞ்சா, ரொம்பவே கஷ்ட மாகிடும். அதனால, தீபாவளிக்கு நோய், நொடி, பிரச்னைனு எதுவும் வராம எல்லாரும் நல்லா கொண்டாடணும்.’’

“தீபாவளி மாசம் சக்கப்போடு போடும்!”

கிருஷ்ணவேணி, பட்டாசு சிறுதொழில், சிவகாசி

``நான் சின்ன வயசுல இருந்து பட்டாசு வேலைகள் பார்க்குறேன். இப்போ சிறுதொழிலா பட்டாசு தயாரிப்பு செய்யுறேன். என் வீட்டுக் காரர் இறந்துட்டார். ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு இருக்காங்க. பட்டாசு தொழில்ல வருஷத்துல பத்து மாசமும் பெருசா வேலை இருக்காது. தீபாவளி மாசமும் அதுக்கு முந்தின மாசமும்தான் கடுமையா உழைப்போம். ஒரு வருஷ உழைப்பையும் அந்த ரெண்டு மாசத்துல உழைப்போம். தீபாவளி யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, எங்களுக்கெல்லாம் அது மட்டும்தான் சந்தோஷமே, அதுதான் பண்டிகை. இப்போ நாங்க பார்க்குற காசுதான் எங்களுக் குப் பெரிய காசா இருக்கும். அத னால, வெடிமருந்துக்குள்ள கிடந்து வேலைபார்த்தாலும் உற்சாகமா பார்ப்போம்.’’

“தீபாவளி மாசம் சக்கப்போடு போடும்!”

அமுதா ,தறி நெய்பவர், ரெட்டிபட்டி, சேலம் மாவட்டம்

``எங்க ஊரை சுத்தி பெரும்பாலும் தறி நெய்யுறவங்கதான். வீட்டுல தறிபோட்டு, கடையில டிசைன் வாங்கிட்டு வந்து நெய்து கொடுப்போம். எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. என் வீட்ல ஓடுற ஒத்தை தறிதான் அவங்களை படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக்கொடுக்குற வரைக்கும் உதவியிருக்கு. பசங்க வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாலும் நான் தறியைவிடலை. தீபாவளி நேரம்னா வேலை அதிகமாகிடும். மத்த நேரத்துல ஒரு டிசைன்ல அஞ்சு, ஆறு சேலை நெய்தோம்னா, இந்த சீசன்ல 100, 150னு நெய்வோம். எத்தனை புடவை நெய்றோமோ அவ்ளோ காசு கிடைக்கும், தீபாவளி அவ்ளோ சந்தோஷமா இருக்கும். மக்கள் எல்லாரும் தீபாவளிக்கு சீட்டு போட்டு கையில காசு வெச்சிருப் பாங்க, போனஸ் காசு வெச்சிருப்பாங்க, தீபாவளி மாசம் தொழில் நல்லா ஓடி கையில காசு வெச்சி ருப்பாங்க. தவறாம துணிமணி வாங்குவாங்க. எங்க பொழப்பும் தழைக்கும்.’’

இப்படி, ஒவ்வொரு பண்டிகையின் மூலமும் பிழைக்கும் தொழில்கள் பல, மனிதர்கள் பலர். கொண்டாடுவோம்!