Published:Updated:

``ஐ.டி ஊழியர் டு ஊராட்சி மன்றத் தலைவியானது எப்படித் தெரியுமா?!’’ - சாதித்த பெண் இயற்கை விவசாயி

குடும்பத்தினருடன் ரேகா
குடும்பத்தினருடன் ரேகா

"ஹோட்டல் சாப்பாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்தோம். படிப்படியா இயற்கை வாழ்வியலுக்குத் திரும்பினோம்." 

ஐ.டி வேலையில் நிறைவான சம்பளம். ஆனாலும், தற்சார்பு விவசாயத்தின் அவசியத்தை உணர்ந்து, முழுநேர இயற்கை விவசாயிகளாக மாறியவர்கள், பார்த்தசாரதி - ரேகா தம்பதி. சென்னையை அடுத்த ஆவடிக்கு அருகிலுள்ள பாண்டேஸ்வரம் கிராமத்தில் வசிக்கிறார்கள். தங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரையும் இயற்கை விவசாயத்துக்குத் திருப்பிய பெருமை இவர்களுக்கு உண்டு. பல்வேறு மாநில இயற்கை விவசாயிகளின் விளைபொருள்களை வாங்கி, தங்கள் இயற்கை அங்காடியின்மூலம் விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார், ரேகா. 

பெண் விவசாயி ரேகா
பெண் விவசாயி ரேகா

`நம் வாழ்க்கை நம் விருப்பப்படிதான் இருக்க வேண்டும்' என்ற கோட்பாட்டில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயற்கை விவசாயி அனுபவம் முதல் தேர்தல் வெற்றி வரை விரிவாகப் பேசுகிறார், ரேகா.

``கணவரும் நானும் ஐ.டி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தோம். இருவருடையதும் விவசாயக் குடும்பம்தான். திருமணத்துக்குப் பிறகு, எங்களுக்கும் எங்க குழந்தைக்கும் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதற்கான காரணம் தேடியபோதுதான், ரசாயன விவசாயத்தின் தீமைகள் புரிஞ்சது. இயற்கை உணவுப் பொருள்களுக்காக, சில இயற்கை அங்காடிகளை நாடினோம். அவற்றின் தரத்தின் மீதும் நம்பகத்தன்மை குறைவாக இருந்துச்சு. அப்போதுதான் இயற்கை விவசாயத்தின் தேவையை அனுபவ ரீதியாக உணர்ந்தோம். ஹோட்டல் சாப்பாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்தோம். படிப்படியா இயற்கை வாழ்வியலுக்குத் திரும்பினோம். 

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

முதலில், என் கணவர் பார்த்தசாரதி வேலையை விட்டுட்டு முழுநேர இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். அதற்கு, குடும்பத்தினரும் ஆதரவு கொடுத்தோம். சில வருஷம் கழிச்சு, நானும் வேலையை விட்டுட்டேன். கடந்த 10 வருஷமா நாங்க இயற்கை விவசாயம்தான் செய்றோம். குடும்பத்துக்கு, பொதுவாக 35 ஏக்கர் நிலமிருக்கு. நீர் பற்றாக்குறையால, சராசரியா 20 ஏக்கர் நிலத்துல மட்டும் விவசாயம் செய்றோம். 11 மாடுகள் வளர்க்கிறோம். அவற்றின்மூலம் கிடைக்கும் பால், எங்க குடும்பத் தேவைக்குப் போக மீதமுள்ளதை கன்றுக் குட்டி குடிக்க விட்டுடுவோம்" என்பவர், ஊர் மக்கள் சிலரையும் இயற்கை விவசாயத்துக்கு மாற்றியது குறித்துப் பேசுகிறார்.

``நாங்க மட்டும் இயற்கை வாழ்வியலுக்கு மாறினா போதுமா? நம்மைச் சுத்தியிருக்கிற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாத்துறதுதானே சிறந்தது. ஆண்டுக்கு மூணு போகம் நெல் பயிரை மட்டுமே சாகுபடி செஞ்சு பழக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மற்ற பயிர்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்துச்சு. மழை பொய்த்துப்போறது உள்ளிட்ட பருவநிலை மாற்றப் பிரச்னைகளால், சரியாக நெல் சாகுபடி செய்ய முடியாத சூழலில், அவங்க வாழ்வாதார தேவைக்கு சிரமப்படும் நிலை தொடர்கதையாச்சு. அத்தகைய விவசாயிகள் எங்களை அணுகினாங்க. 

பெண் விவசாயி ரேகா
பெண் விவசாயி ரேகா

கார் மற்றும் சம்பா பட்டம்னு இருபோகத்தில் மட்டும் நெல் சாகுபடி செய்வதுடன், நெல் சாகுபடி செய்யாதப்போ பச்சைப்பயறு, உளுந்து, கீரைகள் உள்ளிட்ட மாற்றுப் பயிர் சாகுபடி முறையை மேற்கொள்வது எங்க வழக்கம். அதை மற்ற விவசாயிகளுக்கும் பழக்கப்படுத்தினோம். மேலும், மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கொடுத்தோம். தவிர, எங்கள் ஊர் மற்றும் பிற பகுதிகளிலுள்ள இயற்கை விவசாயிகளிடமிருந்து அவங்க நிர்ணயிக்கும் விலையில் விளைபொருள்களை வாங்கிக்குவோம். அதை, எங்க வீடு மற்றும் சென்னை கோட்டூர்புரம் பகுதியிலுள்ள எங்களுடைய இயற்கை அங்காடியில் விற்பனை செய்கிறோம்.

இதற்காக, `ஃபார்மர் அண்டு கோ' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்திட்டிருக்கிறோம். அதில், இயற்கை விளைபொருள்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் விற்பனை செய்றோம். கடன் வாங்காம, எங்க வருமானத்தை முதலீடாகப் பயன்படுத்தியே பிசினஸை நடத்திட்டிருக்கிறோம். இதன்மூலம் விவசாயிகள் பலருக்கும் பலன் கிடைக்குது" என்பவர், ஊராட்சி மன்றத் தலைவியான கதையைப் பகிர்கிறார்.

பெண் விவசாயி ரேகா
பெண் விவசாயி ரேகா

``எங்க கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல நீர்நிலைகள் இருக்கு. அவற்றில் மணல் கொள்ளை நடப்பது தொடர்கதையா இருந்துச்சு. சரியான வேலை வாய்ப்பு இல்லாததால, கிராம மக்களில் சிலரும்கூட மணல் அள்ள ஆரம்பிச்சாங்க. இதனால மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கணும்னு நினைச்சு அவங்களையும் இயற்கை விவசாயத்துக்குத் திருப்பினோம்.

மகளிர் சுய உதவிக்குழுவை ஏற்படுத்தி, கிராமப் பெண்கள் சிலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினோம். தவிர, கிராமத்தின் நலனுக்கான சில நல்ல விஷயங்களைச் செயல்படுத்த நினைச்சாலும், அதற்கெல்லாம் ஊராட்சி மன்றத் தலைவரின் ஒப்புதலை எதிர்நோக்கிக் காத்திருக்கவேண்டிய நிலை இருந்துச்சு.

பெண் விவசாயி ரேகா
பெண் விவசாயி ரேகா

 இந்த நிலையில, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாச்சு. எங்க பாண்டேஸ்வரம் ஊராட்சித் தலைவர் பொறுப்பு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுச்சு. தேர்தலில் போட்டியிடச் சொல்லி பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினாங்க. நானும் என் கணவரும் நிறைய ஆலோசனை செஞ்சோம். ஊரில் பொது நலத்துடன் இயங்கிய குடும்பம் என்பதால எங்களுக்கு மக்களிடம் நல்ல மதிப்பு இருந்துச்சு. அதனால, நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், தேர்தலில் போட்டியிடலாம்னு முடிவெடுத்தோம். அரசியல் கட்சிகளின் சார்பு இல்லாம, நடுநிலையோடு பணி செய்யணும்னு சுயேச்சையா போட்டியிட்டேன்.

எங்க ஊரில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு. நான் தேர்தலில் போட்டியிடப்போகிறேன் என்பதைத் தெரியப்படுத்தவும், என் தேர்தல் அறிக்கைகள் குறித்துச் சொல்லவும், தேர்தல் அறிக்கைகளை எப்படியெல்லாம் செயல்படுத்துவேன் என்பதை விளக்கவும், எல்லா வீடுகளுக்கும் மூணு முறை சென்று மக்களிடம் வாக்களிக்க வலியுறுத்தினேன். மும்முனைப் போட்டி நிலவிய சூழலில், 881 வாக்குகள் பெற்றேன். 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 

பெண் விவசாயி ரேகா
பெண் விவசாயி ரேகா

தேர்தல் வெற்றிக்காக பெருசா மகிழ்ச்சியடையலை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. அதற்கு அரசின் நிதியைப் பெற்று மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டிய பணிகளில் யாருடைய தலையீடும் இல்லாம செயல்பட இருக்கிறேன். எங்க விவசாயம் மற்றும் பிசினஸ் வேலைகளைக் கணவர் முழுமையாக கவனிச்சுப்பார். பிடிச்ச வாழ்க்கையை நானும் கணவரும் அர்த்தமுள்ளதாக மாத்திக்கிட்டோம். அது எங்களை ஆக்கபூர்வமான பாதையில் கொண்டுபோகுது" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், ரேகா.

பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81
பின் செல்ல