Published:Updated:

கமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோவுக்கான விதை!

லியா
பிரீமியம் ஸ்டோரி
லியா

கேமிங் யூடியூபர் லியா

கமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோவுக்கான விதை!

கேமிங் யூடியூபர் லியா

Published:Updated:
லியா
பிரீமியம் ஸ்டோரி
லியா

“பெண்களும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் சிறந்த வர்கள் என்பதைக் காட்டவே யூடியூப் சேனல் தொடங்கினேன்” விளையாட்டாகப் பேசினாலும் விஷயத்தோடு பேசுகிறார் 28 வயது லியா ஷீலீஷ். யூடியூப் ரசிகர்களுக்கு ‘ஸ்னிப்பர் வுல்ஃப்’ (SSSniperWolf). இங்கிலாந்தைச் சேர்ந்த லியா சுமார் 27 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்திருக்கிறார்.

2013-ல் சேனலைத் தொடங்கிய லியாவின் அடையாளம் கேமிங் வீடியோக்கள். அதாவது, வீடியோ கேம்ஸை விளையாடி அதை வீடியோவாகப் பதிவேற்றுவார். 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்டவுடன் கியரை மாற்றி ரியாக்‌ஷன் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். கேம்ஸ், டிக்டாக் வீடியோக்களை ஓடவிட்டு அதற்கு ரியாக்ட் செய்வது போன்ற வீடியோக்கள். அவையும் சூப்பர் ஹிட்!

“நான் குழந்தையாக இருந்தபோது என் தம்பிக்கும் எனக்கும் எப்போதும் வீட்டில் சண்டைதான். எங்கள் சண்டையை நிறுத்து வதற்கு அப்பா ஒரு பிளே ஸ்டேஷன் வாங்கிக்கொடுத்தார். அவர் ஐடியா வொர்க்அவுட் ஆனது. அதற்குப் பிறகு இருவரும் சண்டையிடாமல் விளையாட ஆரம்பித்தோம். நான் மூத்தவள் என்பதால் கேம்ஸ் விளையாடும்போது நான்தான் எப்போதும் பிளேயர் ஒன், தம்பி பிளேயர் டூ ஆக இருப்பான்.

கமென்ட் பாக்ஸில் கிடைக்கும் வீடியோவுக்கான விதை!

என் பெற்றோர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நண்பர்களின் வீடு, பார்ட்டி, பள்ளி விழாக்கள், சுற்றுலா என எங்கும் அனுப்ப மாட்டார்கள். அதனால் வீட்டில் நான் அதிக நேரம் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருப்பேன். அதுவே என் கரியராக மாறும் என்று நான் நினைக்கவில்லை” என்பவர் ‘லிட்டில் லியா’ என்ற இரண்டாவது சேனலையும் தொடங்கி அதில் ஆர்ட் அண்டு கிராஃப்ட், டூ இட் யுவர்செல்ஃப் (DIY) வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். அந்தச் சேனலுக்கும் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

“எப்போதும் வெவ்வேறு கன்டென்ட்டைக் கொடுத்து அதில் எதை ஆடியன்ஸ் அதிகம் ரசிக்கிறார்கள் என்று பரீட்சித்துப் பார்ப்பேன். எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தால்தான் எந்த கன்டென்ட் ஹிட் அடிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்” எனும் லியா தினம்தோறும் வீடியோக்கள் வெளியிடுகிறார்.

‘‘ஓய்வு நேரத்தில் வேறு யூடியூப் சேனல்கள் பார்த்து சேனலை மேலும் மெருகூட்டுவதற்கான விஷயங்களைத் தேடிப்பிடித்தேன். அப்படித் தொடங்கியதுதான் ரியாக்‌ஷன் வீடியோக்கள். அவை ஆடியன்ஸுக்கு பிடித்துப்போய் என் சேனலை வேறு உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்” - இப்படிச் சொல்கிற லியாவை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கேமிங் துறையில் டாப் இன்ஃப்ளுயென்ஸர்களில் ஒருவராக கௌரவித்திருக்கிறது.

வீடியோ உருவாக்குவதில் லியா ஒன் வுமன் ஆர்மிதான். “இதற்கு முன்பு ரெக்கார்டிங், எடிட்டிங், வீடியோ அப்லோட் செய்வது அனைத்தையும் நானே செய்தேன். இப்போது எடிட் செய்வதற்கு மட்டும் ஒருவரை பணியமர்த்தியிருக்கிறேன். வீடியோவைத் தயாரிக்கும்போது, கேமரா, கேமராவை செட் செய்து வைப்பதற்கு ஒரு பாக்ஸ், என் பின்னால் ஒரு கம்ப்யூட்டர்...இவ்வளவுதான் என் தேவை. எந்த வேலையையும் சிம்பிளாகச் செய்வதுதான் எனக்குப் பிடிக்கும்” என்பவர் நள்ளிரவு தொடங்கி காலை 6 மணியளவில் ஷூட்டிங்கை முடிப்பாராம்.

“நான் பல ஆண்டுகளாக தினமும் வீடியோ வெளியிடு கிறேன். சில நேரம் வீடியோவுக்கு ஐடியாவே கிடைக்காது.அப்போதெல்லாம் என் சப்ஸ் கிரைபர்ஸ்தான் என்னைக் காப்பாற்றுவார்கள். கமென்ட் பாக்ஸில் எனக்கான ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கும். அப்புறம் என்ன அதிரி புதிரி வீடியோ ரெடி!”

டபுள் ரைட்!