லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

பிசினஸ் பார்ட்னர் டு லைஃப் பார்ட்னர்... இது நிஜ `பெல்லி சூப்புலு'

காயத்ரி - ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி - ராகுல்

அந்த டைம்ல நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருந்தோம். வெயிட்டை குறைக்கிறதுக்காக பேலியோ, கீட்டோனு பலதையும் முயற்சி பண்ணிட்டிருந் தோம்.

விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் 2016-ம் வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. இரண்டு தேசிய விருதுகளையும், ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்ற இந்தப் படம், ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

`பெல்லி சூப்புலு' படத்தில் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் ரித்து வர்மாவும் பெண் பார்க்கும் படலத்தில் கடந்தகாலம் பற்றிப் பேசு வார்கள். தன் காதலருடன் ஃபுட் ட்ரக் பிசினஸ் தொடங்கும் திட்டத்தில் இருந்தது பற்றி ரித்து வும் சமையலில் தனக்கிருந்த ஆர்வம் பற்றி விஜய் தேவரகொண்டாவும் பகிர்ந்து கொள்வார்கள். இருவரும் சேர்ந்து ஃபுட் ட்ரக் பிசினஸ் தொடங்குவார்கள். பிறகு, வாழ்க்கை யிலும் இணைவார்கள். இதுதான் கதை.

இப்போது எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா?

இது நிஜ பெல்லி சூப்புலு கதைக்கான இன்ட்ரோ. நிஜக் கதையின் நாயகி காயத்ரியும் நாயகன் ராகுலும் நிழல் ஜோடியைப் போலவே உணவு பிசினஸில் பார்ட்னர்களாக இணைந்து இன்று வாழ்க்கையிலும் இணைந்தவர்கள். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் ‘ரூஸ்' என்ற பெயரில் ஃபுட் சப்ஸ்கிரிப்ஷன் நிறுவனம் நடத்துகிறார்கள். எடைக்குறைப்புக்காகவோ உடல்நல பிரச்னைகளுக்காகவோ டயட் உணவுகள் சாப்பிட வேண்டியவர்களுக்கு வாரத்தில் 6 நாள்களுக்கு மூன்று வேளைகளும் சமைத்து இருப்பிடத்துக்கே அனுப்புகிறார்கள்.

பிசினஸ் பார்ட்னர் டு லைஃப் பார்ட்னர்...  இது நிஜ `பெல்லி சூப்புலு'

‘‘நான் சென்னை, காலேஜ் ஆஃப் இன்ஜினீ யரிங்ல சிவில் இன்ஜினீயரிங்கும் ராகுல் கோயம்புத்தூர்ல ஆட்டோமொபைல் இன்ஜினீ யரிங்கும் படிச்சோம். எனக்கு சமையல் ஆர்வம் அதிகம். கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் முடிச் சிட்டு, வீட்டுலயே சின்ன அளவுல கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனா, அதைத் தொடர முடியலை. அப்பதான் பொதுவான நண்பர்கள் மூலம் ராகுலை சந்திச்சேன். அவருக்கும் இன்ஜினீயரிங் தொடர்பான வேலையில ஆர்வமில்லை. ஃபுட் சம்பந்தமான பிசினஸ் பண்ற ஐடியாவுல இருந்தது தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘ரூஸ் சாஃப்டி கார்னர்’னு ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, அதைத் தொடங்க முடியலை. படிப்பை முடிச்சிட்டு ஒண்ணும் பண்ணலையேனு வீட்டுல கேட்டுட்டே இருந்தாங்க. ஃபுட் பிசினஸ்தான் என் விருப்பம்னு தெரிஞ்சு ஒரு கட்டத்துல வீட்டுல பர்மிஷனும் கொடுத்து ட்டாங்க. ஆனா, லேட் நைட்டெல்லாம் வேலை பார்க்கக் கூடாதுனு கண்டிஷனும் போட்டாங்க. ஹோட்டல் இண்டஸ்ட்ரியில நேரம்காலம் பார்க்க முடியாதே... என்ன பண்ணலாம்னு நிறைய யோசிச்சோம்...’ இன்ட்ரோ சொல்லி இடைவெளி விடுகிறார் காயத்ரி. அடுத்து நடந்தவை பகிர்கிறார் ராகுல்.

‘‘அந்த டைம்ல நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருந்தோம். வெயிட்டை குறைக்கிறதுக்காக பேலியோ, கீட்டோனு பலதையும் முயற்சி பண்ணிட்டிருந் தோம். கடைசியா எங்களுக்கான சரியான டயட் கவுன்சலிங் கிடைச்சது. அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சபோது வெயிட் குறைய ஆரம்பிச்சது. எங்களுக்கு சொல்லப்பட்ட டயட் சாப்பாட்டை சமைச்சுத் தர்றது வீட்டுல உள்ளவங்களுக்கும் பெரிய வேலையா இருந்தது. அப்பதான் எங்க பிசினஸ் ஐடியாவை இதோட இணைச்சு யோசிச்சு, டயட் உணவுக்காக ஒரு பிசினஸ் ஆரம்பிச்சா என்னனு யோசிச்சோம். டயட் சாப்பாடுன்னதுமே பலரும் காய்கறி களையும் சூப்பையும் சாப்பிடணுமானு யோசிப்பாங்க. அப்படியில்லாம அவங்களுக்குப் பிடிச்சதையே ஆரோக்கியமான முறையில சாப்பிடலாம்னு புரியவைக்க நினைச்சோம். சிறுதானியங்கள், சிவப்பரிசி மாதிரி ஆரோக்கிய மான அயிட்டங்களை வெச்சு மெனு ரெடி பண்ணினோம். முதல் ரெண்டு மாசங்களுக்கு எங்க குடும்ப நபர்கள், ஃபிரெண்ட்ஸுக்கு மட்டும் சப்ளை பண்ணி, எங்கே, என்ன தவறு நடந்திருக்குனு நிறைய கத்துகிட்டோம்.

பிசினஸ் பார்ட்னர் டு லைஃப் பார்ட்னர்...  இது நிஜ `பெல்லி சூப்புலு'

150 சதுர அடி அளவுள்ள சின்ன கிச்சன்ல ஒரே ஒரு ஸ்டவ்வோடு ஓர் உதவியாளரோடு ஆரம்பிச்சோம். வாய்வழி விளம்பரம் மூலமா முதல்ல ரெண்டு சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. சோஷியல் மீடியாவுல ஆக்டிவ்வா இருந்தோம். அது மூலமா நிறைய பேர் எங்களைப் பத்தி கேள்விப்பட்டு அணுகினாங்க. `டயட் சாப் பாடுன்னா வாய்லயே வைக்க முடியாதுனு நினைச்சிட்டிருந்தோம்... அந்த எண்ணத்தை மாத்திட்டீங்க'னு பாசிட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சது. மெள்ள மெள்ள வாடிக்கை யாளர்கள் அதிகரிச்சாங்க. எங்களுடைய ஸ்டாண்டர்டு மெனு தவிர நிறைய பேர் அவங்களுடைய டயட்டீஷியன் பரிந்துரைக்கிற மெனுவோட வருவாங்க. அதன்படி இத்தனை கப் சாதம், இத்தனை கப் காய்கறிகள் கணக்குப் பண்ணி சமைச்சுத் தருவோம்.

பத்து கிராம் அளவு கூடினாலோ, குறைஞ் சாலோகூட டயட் பண்றவங்களுக்கு ரிசல்ட் மாறலாம். அதனால அதிகபட்ச அக்கறையோடு சமைக்கணும். எங்களுடைய மெனுவில் பொரிச்ச உணவுகள், மைதா, ரீஃபைண்டு ஆயில், ப்ரிசர்வேட்டிவ், கலர்னு செயற்கையான எந்தப் பொருளையும் சேர்க்க மாட்டோம். புதுசு புதுசா யோசிச்சு வாரத்துக்கொரு முறை மெனுவை மாத்துவோம்...’’ பிசினஸில் வளர்ந்த கதை சொல்லி நிறுத்துகிறார் ராகுல்.

தினமும் 220 பேருக்கு சமைத்து அனுப்புகிறவர்களின் லிஸ்ட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ், பரத், ஹரிஷ் கல்யாண், ராஜேஷ் வைத்யா, கிகி, சாந்தனு, ஸ்ரேயா ஆஞ்சன், அமித் பார்கவ், அவர் மனைவி ரஞ்சனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், அவர் மனைவி சுஹாசினி, டாக்டர் அஷ்வின் விஜய் என பிரபலங்களும் இருக் கிறார்கள். மறைந்த சின்னத்திரை நடிகை சித்துதான் இவர்களின் முதல் வி.ஐ.பி கஸ்டமராம்.

‘‘2019-ம் வருஷம் பிசினஸ் ஆரம்பிச் சோம். இந்த ரெண்டு வருஷத்துல நிறைய பாடங்கள்... நிறைய அனுபவங்கள்... கஸ்டமருக்கு நல்ல, ஆரோக்கியமான சாப்பாடு கொடுக்கணும்னு யோசிச்சு ஒண்ணு செஞ்சிருப்போம். உதாரணத் துக்கு `லெட்யூஸ் ராப்'னு ஒரு அயிட்டம். ஆனா, அதை நாங்க பேக் பண்றபோதும், கஸ்டமருக்கு போய் சேரும்போதும் வேற வேறயா இருக்கும். ராப் பிரிஞ்சு, வெஜிடபுள்ஸ் தனித்தனியா வந்திருக்கும். கிரேவின்னா வெளியில சிந்தியிருக் கும். அந்த அனுபவம் பேக்கிங்ல எவ்வளவு கவனம் செலுத்தணும்னு கத்துக்கொடுத்தது.இப்படி ஒவ்வொண்ணையும் விஷுவலைஸ் பண்ணி கத்துக்கிட்டோம். இன்னிக்கு கீழ்ப் பாக்கத்துல 1,000 சதுர அடியில கமர்ஷியல் கிச்சனோடும், 12 வேலையாட்களோடும் வளர்ந்திருக்கோம். இன்னிக்கு எங்க டர்ன் ஓவர் வருஷத்துக்கு கிட்டத்தட்ட 1.3 கோடி ரூபாய். சென்னையின் எல்லாப் பகுதிகள் லேருந்தும் ஆர்டர் கேட்கறாங்க. அதனால சீக்கிரமே சென்னையின் பிரதான ஏரியாக்கள்ல இன்னும் ரெண்டு கிச்சன் செட் பண்ணப் போறோம்...’’ அடுத்த திட்டங்கள் சொல்லும் காயத்ரியும் ராகுலும் 2021, ஜனவரியில் வாழ்க்கையிலும் இணைந்திருக்கிறார்கள்.

‘‘ரெண்டு பேருக்கும் பிசினஸ் உட்பட பல விஷயங்கள்ல ஒருமித்த கருத்து இருந்தது. வாழ்க்கையிலயும் சேர்ந்திருக்கலாம்னு தோணவே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பர்சனலாகவும் பிசினஸ்லயும் நிறைய சாதிக்க கைகோத்திருக்கோம்’’

- கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு அத்தனையும் நனவாகட்டும்.