Published:Updated:

மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!

‘இயற்கையின் மகள்’ பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
‘இயற்கையின் மகள்’ பார்வதி

‘இயற்கையின் மகள்’ பார்வதி

மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!

‘இயற்கையின் மகள்’ பார்வதி

Published:Updated:
‘இயற்கையின் மகள்’ பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
‘இயற்கையின் மகள்’ பார்வதி

‘`என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே மறுத்த குடும்பத்துலயிருந்து வந்த பொண்ணு நான். இன்னிக்கு பல மாநிலங்களுக்குப் போய் மூலிகைகள் பத்தி வொர்க்‌ ஷாப்ஸ் நடத்துறேன். நானும், நம்ம மண்ணோட மூலிகைகளும் சேர்ந்து ஜெயிச்சுட்டு வர்றோம்’’ என்று தன்னம்பிக்கை நிரம்பப் பேசுகிறார் பார்வதி நடராஜன். மூலிகை வளர்ப்பு, பாதுகாப்பு, அது குறித்த பயிற்சிப் பட்டறைகள் என்று இயங்கிக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்.

மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமம். வேலிகள் அமைக்கப்பட்ட தோட்டத்தின் நடுவே பெண்கள் பலர் ஆளுக்கொரு வேலையாகச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார் 42 வயதாகும் பார்வதி நாகராஜன்.

‘`நான் பிறந்தது, மரக்காணம் பக்கத்துல நல்லூர் கிராமம். நாலு பொண்ணு, ரெண்டு பையன்னு எங்க வீட்டுல மொத்தம் ஆறு பிள்ளைங்க. ரெண்டாவது பிள்ளையான என்னை, அஞ்சாவது முடிச்சதுமே ‘பொம்பளப் புள்ள படிச்சது போதும்’னு சொல்லி

நிப்பாட்டிட்டாங்க. ஒரு வாரம் சாப்பிடாம இருந்தேன். அப்படியும் எதுவும் நடக்கல. 6 கிலோ மீட்டர் தொலைவுல இருந்த ஸ்கூலுக்கு நானே போய், அங்க இருந்த ஒருத்தர் உதவியால ஒருவழியா ஆறாம் வகுப்புல சேர்ந்துட்டேன். வீட்டுக்குப் போனதும், ‘நானே வேலைக்குப் போய் பேனா, பென்சில், நோட்டெல்லாம் வாங்கிக்கிறேன்’னு சொன்னேன். அதுக்காக லீவு நாள்கள்ல சின்னச் சின்ன வேலைகளுக்குப் போனேன்’’ என்றவர், மூலிகையில்தான் தன் எதிர்காலம் இருக்கிறது என்பதை விரைவிலேயே உணர்ந்திருக்கிறார்.

‘`எனக்கு 6 வயசுவரை, எங்க ஊருல ‘பாவாடை படை’னு சொல்ற படை நோய் இருந்துச்சாம். வீட்டுல, என்னை காப்பாத்த முடியாதுனு நினைச்சுட்டாங்களாம். அப்போ எங்க அப்பாவோட அம்மா, பாட்டி அமிர்தாம்பாள் எனக்கு வைத்தியம் பண்ணி குணப்படுத்தியிருக்காங்க. பாட்டி, பாரம்பர்யமா இயற்கை வைத்தியம் பார்த்து வந்தவங்க வழிவந்தவங்க. அவங்ககூட மூலிகை சேகரிக்க போகும்போதுலாம், அதைப் பத்தி எனக்கு நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. எனக்கு ஏற்பட்ட படை நோயைக் குணப்படுத்திய ‘நீரின் மேல் நெருப்பு’ மூலிகை உட்பட, பல மூலிகைகளை நான் பார்த்து, தொட்டு, முகர்ந்து, கசக்கினு தெரிஞ்சுக்கிட்டேன். பாட்டிக்கு அப்புறம், அம்மா அதைச் செய்யத் தொடங்கினாங்க. அவங்களுக்கு மூலிகைகளை நான்தான் சேகரிச்சுட்டு வந்து கொடுப்பேன்’’ என்று சொல்லும் பார்வதி, இதற்கிடையில் தன் படிப்புக்கும் தொடர்ந்து போராடியுள்ளார்.

‘`பத்தாவது முடிச்சப்போ, பதினோராம் வகுப்புக்கு திண்டிவனம் போய் படிக்கணும் என்பதால வீட்டுல மறுத்தாங்க. நான் பிடிவாதமா திண்டிவனம் அரசு உதவி பெறும் பள்ளியில சேர்ந்துட்டேன். 12-ம் வகுப்பு முடிச்சப்போ, ஊர்ல கேட்குறவங்களுக்கு மூலிகை மருந்துகளைத் தயார்செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். பகுதி நேரமா சில வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ‘பொம்பளப் புள்ள எப்போ பார்த்தாலும் பஸ்ஸு ஏறி போறா...’னு ஊருல பேசினாங்க. வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க, கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு எங்க வயல்ல விவசாய வேலை பார்த்தேன்’’ என்பவருக்கு, அப்போது தான் அவர் மனம்போலவே வேலை அமைந்திருக்கிறது.

‘`அந்த நேரத்துலதான் ‘பிச்சாண்டிக்குளம் மூலிகை பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையத்தில்’ வேலை கிடைச்சது. அங்க மூலிகை பயிற்சி அளிக்கிறதும், மூலிகை பயன்பாடுகள் பத்தி வெளியுலகத்துக்கு சொல்றதும்தான் என்னோட வேலை. மூலிகைகளே என் வாழ்க்கையாக ஆரம்பிச்சது அதிலிருந்துதான். 55 ஏக்கர் பரப்பளவில் பிச்சாண்டி குளம் பகுதியில காடுகளை வளர்த்த ஜாஸ் புரூக் என்ற வெளிநாட்டவருடைய அறிமுகம் கிடைச்சது, எனக்கு ரெண்டாவது ஊக்கமா இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை 21 வருஷமா பயிற்சியாளரா இருக்கேன்’’ என்ற பார்வதி, தன் பணிச் சூழலில் பல ஏழைப் பெண் களுக்கு ஏணியாக இருந்து வருகிறார்.

‘`நடுக்குப்பம் பகுதியில உள்ள பெண்களுக்கு தற் சார்பு வேலைவாய்ப்பை உருவாக்கணும் என்பதற்காக ‘கழுவெளி - பெண்களின் நிலையான வாழ்வாதார கூட்டமைப்பு’ங்கிற அமைப்பை கடந்த 10 வருஷத் துக்கு முன் ஏற்படுத்தினோம். இங்குள்ள எந்தப் பெண்ணும் தொழிலாளி இல்ல; அவங்களுக்கு அவங்களே முதலாளி. குழுவா இணைந்து வேலை செய்றாங்க. இயற்கை மூலிகைகள்ல இருந்து

பல வகையான பொருள்களை உற்பத்தி செய்யுறாங்க. நான், இந்தப் பெண்களுக்கு வழி காட்டியா இருக்கேன். இங்கு 60-க்கும் மேற் பட்ட மூலிகை தாவரங்களை வளர்க்குறோம். சுற்றுவட்டாரத்துல இயற்கையாவே விளைஞ்சு கிடக்குற மூலிகைகளையும் சேகரிக்குறோம்.

மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!
மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!

நாம இயற்கையிலிருந்து எவ்வளவு எடுக்கு றோமோ, அதே அளவு கொடுக்கவும் செய்யணும். அதனால நர்சரி மூலமா சுமார் 280 வகை தாவரங்களை உருவாக்கி விற்பனை செய்றோம். மூலிகைகள்ல இருந்து எண்ணெய், தைலம், லேகியம், பவுடர், ஜாம், உணவுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள்னு உற்பத்தி செய்றோம்’’ என்பவர், இதில் சில கொள்கைகளையும் வைத்திருக்கிறார்.

‘`நாங்க மூலிகை மருந்து தயாரிக்கும் செய் முறையை ரகசியமா வைக்காம, எல்லாருக்கும் சொல்லித் தர்றோம். இது அதிக மக்களை சென்றடையணும் என்பதுதான் எங்களோட நோக்கம். அதேபோல, இங்கு செய்யும் பொருள்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்றது இல்ல. அப்படி செய்தா அதிக லாபம் பார்க்கலாம். ஆனா, அதுக்கு அதிக அளவிலான மூலிகைகள் தேவைப்படும், மூலிகைகள் அழிவை நோக்கிச் செல்லும் என்பதால அந்த வழியை நாங்க தேர்ந்தெடுக்கலை. மனுஷங்க இயற்கைக்குக் கொஞ்சம் கொடுத்தா, இயற்கை நமக்கு பல மடங்கு கொடுக்கும். இந்த பூமியில எதுவும் மனுஷனுடையது இல்ல. எல்லாமே இயற்கை கொடுத்தது’’ என்று அழுத்தமாகப் பேசும் பார்வதி, தற்போது மனித உரிமைகள் தொடர்பான முதுநிலை படிப்புவரை முடித்துள்ளார்.

‘`பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு தடுக்கப்பட்ட நான், இன்னிக்கு கர்நாடகா, சத்தீஸ்கர்னு பல இடங்களுக்கு போய் மூலிகை குறித்த பயிற்சிகள் அளிக்கிறேன். பல கல்லூரி களுக்கும் அமைப்புகளுக்கும் சென்று மூலிகை உணவு தயாரிப்பு, மூலிகை மருந்து தயாரிப்பு, அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பு, மாடித்தோட்டம் அமைக்கிறது, மூலிகை பாதுகாப்பு பத்தி பேசுறேன். அதனால, ஆரம்பக்கால தடைகளுக்கு பெண்கள் தங்களைக் கொடுத்துடக் கூடாது. முட்டி மோதி வந்துட்டா, உலகம் நம்மை அரவணைச்சுக்கும்’’ என்று தன்னம்பிக்கை தரும் பார்வதிக்கு, ‘நீடித்த வகையில் இயற்கை வளத்தைப் பயன்படுத்தியும் பாதுகாத்தும் வருபவர்’ என்ற விருதை, இந்திய பயோடைவர்சிட்டி துறை 2018-ம் ஆண்டு வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கி யிருக்கிறது.

மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!

‘`எங்க கூட்டமைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் மூலிகைப் பொருள்களை அரசு கண்காட்சிகளிலும் கிராமப்புறங்கள்லயும், மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி விற்பனை செய்றோம். என்னைப் பொறுத்தவரை முதல் மற்றும் கடைசி கடவுள் இயற்கை மட்டும்தான்” - பார்வதியின் வார்த்தை களில் அனுபவத்தின் அடர்த்தி!