லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாடித்தோட்ட ஆர்வம் டு மாதம் ஒரு லட்சம் வருமானம்!

கவிதா
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதா

- வீட்டுத்தோட்ட பிசினஸில் கலக்கும் கவிதா

“இயற்கை விவசாயத்தோட அவசியம், ரசாயன விவசாயத்தால ஏற்படுற கேடுகள் பத்தி கேள்விப் பட்டப்போ அதிர்ச்சியா இருந்துச்சு. உணவு உள்ளிட்ட எல்லா விஷயத்துலயும் குழந்தை களை ஆரோக்கியமா வளர்க்கணும்னு நினைச்சேன். அதுக்காகவே வேலைக்குப் போறதை நிறுத்திட்டு, மாடித்தோட்டம் அமைச்சேன். ஒருகட்டத்துல மாடித்தோட்ட அனுபவத்தையும் ஆர்வத்தையும் பிசினஸ் வாய்ப்பா மாத்தும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைச்சது. முறையான அனுபவத்துடன், மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான எல்லாப் பொருள் களையும் மாநிலங்கள் கடந்தும் விற்பனை செய்யுறேன்”

- தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வந்து பேசத் தொடங்கிய கவிதாவின் பேச்சில் பாசிட்டிவ் வைப்ரேஷன். ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர், வீட்டுத் தேவையில் 70 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்வதுடன், தோட்டத் தேவைக்கான பொருள்கள் விற்பனையில் வீட்டில் இருந்தே மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய்வரை லாபம் ஈட்டி அசத்துகிறார்.

“பத்து வருஷங்களுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு வந்தோம். மாடித்தோட்டம் அமைக்கும் திட்டத்துடனும் அதுக்கேத்த வழிமுறைகளுடனும் இந்த வீட்டைக் கட்டினோம். முடிஞ்சவரை செலவுகளைக் குறைச்சு, 600 சதுர அடி கொண்ட மாடித் தோட்டத்துல முதல் கட்டமா வீட்டுத் தேவைக்கான காய்கறிகளையும் பழ மரங்களை யும் வளர்த்தோம். ஒரு யூடியூப் சேனல் ஆரம் பிச்சேன். காஸ்டியூம் டிசைனிங் துறையில எனக்கு அனுபவம் உண்டு. அது தொடர்பான வீடியோக்களுடன், செடி வளர்ப்பு பத்தின பயனுள்ள வீடியோக்களையும் என்னோட சேனல்ல பதிவிட்டேன். செடி வளர்ப்புக்கான சந்தேகங்களுடன், அதுக்கான உபகரணங்கள் கிடைக்குமான்னு பலரும் கேட்டாங்க.

மாடித்தோட்ட ஆர்வம் டு 
மாதம் ஒரு லட்சம் வருமானம்!

குறுகிய காலத்துலயே சேனலுக்கு நல்ல ரீச் கிடைச்சு, யூடியூப் மூலமா மாசத்துக்குப் பல ஆயிரம் ரூபாய் வருமானமும் வந்தது. அதையே முதலீட்டுத் தொகையா பயன்படுத்தினேன். ‘மயூரா கிரியேஷன்ஸ்’ங்கிற என்னோட யூடியூப் சேனல் பெயரையே, பிசினஸுக்கு பிராண்டு பெயராவும் வெச்சேன். மாடித் தோட்டத்துல இருந்தே நாற்றுகள், விதைகள் தயார் பண்ணி விற்பனை செஞ்சதுடன், தோட்டம் அமைக்கத் தேவைப்படுற பொருள்களை பிற நிறுவனங்கள்கிட்ட இருந்து வாங்கியும் வித்தேன். படிப்படியா ஆர்டர்கள் அதிகரிச்சது. ஒருகட்டத்துல மாடித்தோட்டத்துல இடப்பற்றாக்குறை ஏற் படவே, வீட்டுக்குப் பக்கத்துலயே பத்தாயிரம் சதுர அடி கொண்ட எங்களுடைய விளை நிலத்துலயும் தோட்டம் அமைச்சேன். இந்த ரெண்டு இடத்துலயும் எங்க வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை வளர்ப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கான நாற்றுகள், விதைகள் விற்பனைக்காகவும் காய்கறிகள், மூலிகைச் செடிகளைப் பயிரிடுறேன்.

தக்காளி, கத்திரி, பச்சை மிளகாய், பாகல், புடலை, முருங்கை, பீர்க்கன், கீரை வகைகள் பலவும் ரெண்டு இடத்துலயும் எல்லாக் காலத்துலயும் சிறப்பான விளைச்சல் தருது. முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட மலைப்பிரதேச பயிர்களும் நல்லா வளருது. கொய்யா, டிராகன் ஃப்ரூட், செர்ரி, எலுமிச்சை, பப்பாளி, வாழை உள்ளிட்ட பல வகையான பழ மரங்களும் இருக்கு. இந்த விவசாய வேலைகளுடன், பிசினஸ் வாய்ப்பு களும் வேகமெடுத்துச்சு. தோட்டம் அமைக்கத் தேவையான எல்லாப் பொருள்களையும் ஒரே இடத்துல வாங்க நினைக்கிறவங்க பலரும், என்னோட ரெகுலர் வாடிக்கையாளர்களா இருக் காங்க. செடி நாற்றுகள், விதைகள், இயற்கை உரங்கள், தேங்காய் நார் கழிவு, பூவாளி, செடி வளர்க்கும் பைகள், தோட்டப் பராமரிப்புக்கான உபகரணங்களை மொத்தமா விலைக்கு வாங்கி, ஆர்டரைப் பொறுத்து விற்பனை செய்யுறேன். சராசரியா தினமும் நூறு ஆர்டர்கள் இருக்கும். இது தவிர, ஆர்வமுள்ளவங்களுக்குத் தோட்டம் அமைச்சுக் கொடுக்குறதோடு, அதைப் பராமரிக்கும் வேலைகளையும் செய்யுறேன். வீட்டுத் தோட்டம் அமைக்கிறது பத்தி ஆன்லைன் பயிற்சியும் நடத்துறேன்”

- ஆச்சர்யங்கள் கூட்டும் கவிதா, பலருக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கிறார்.

கவிதா
கவிதா

“கோபிசெட்டிப்பாளையம் ‘மைராடா வேளாண் அறிவியல் மைய’த்துல விவசாய பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிறேன்.பக்கத்துல இருக்கிற விவசாயிகள்கிட்ட சாணம், கோமியம் வாங்கி நானே இயற்கை உரங்க ளையும் தயாரிக்கிறேன். மழைநீரையும் முறையா சேகரிச்சு குடிநீர் தேவைக்குப் பயன் படுத்திக்கிறோம். எக்கச்சக்கமான யூடியூப் சேனல்கள் பெருகிட்ட நிலையில, யூடியூப் மூலமா முன்பைவிட இப்போ வருமானம் குறைவாதான் கிடைக்குது. ஆனா, இந்த சேனல் மூலமா புதிய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கிறாங்க. சேனல்ல பதிவிடுற வீடியோக்களை நானே செல்போன்ல பேசி பதிவு செஞ்சுடுவேன். அதை யூடியூப்ல பதிவேற்றம் செய்யுறதை என் கணவர் பார்த்துப்பார்.

என் கணவர் இன்ஜினீரியரிங் காலேஜ் பேராசிரியர். ‘பிஹெச்.டி படிச்ச என்னைவிட நீதான் அதிகம் சம்பாதிக்கிறே. படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லைங்கிறதுக்கு நீயும் ஓர் உதாரணம்’னு அவர் அடிக்கடி பாராட்டு வார். மக்களின் உடல்நலம் சார்ந்த விஷயத்துல தேவைகள் தொடர்ந்து அதிகமாகிட்டேதான் இருக்கு. கத்துக்கிற ஆர்வம் இருந்தா, வெற்றிக் கான வாய்ப்புகள் வசமாகும்”

- உற்சாகப் புன்னகையுடன் விடைபெற்றார் கவிதா!