பிரீமியம் ஸ்டோரி

குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கான சரியான வழிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகளுக்கான சேமிப்பு வழிகாட்டலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் வித்யா பாலா.

திட்டமிடல்: முதலில் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். குழந்தையின் கல்விக்கான சேமிப்பு, உயர்கல்விக்கான சேமிப்பு, திருமணத்துக்கான சேமிப்பு என மூன்றாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எதற்காகச் சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள். அதைப் பொறுத்தே மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும், எந்த வயதிலிருந்து சேமிக்க வேண்டும். எதில் சேமிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

குழந்தைகளுக்கான சேமிப்பு...
எப்போது, எதில், எவ்வளவு?

காலதாமதம் வேண்டாம்: பொதுவாக குழந்தைகளின் வயது அதிகரிக்கும்போது அவர்களின் கல்விச்செலவுகளும், வீட்டின் நிதித் தேவைகளும் அதிகரிக்கும். அந்தச் சூழலில் அதிக அளவு தொகையை நம்மால் சேமிப்புக்கு ஒதுக்க இயலாது. எனவே, குழந்தையை தாய் கருவுற்றதிலிருந்தேகூட சேமிக்கத் தொடங்கலாம்.

குழந்தையின் ஒரு வயதிலிருந்து சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்றால் மாதம் குறைந்த அளவு நிதி ஒதுக்கீட்டின் மூலமே இலக்கை அடைந்து விட இயலும். குழந்தையின் 10-வது வயதில்தான் சேமிக்கத்தொடங்குகிறீர்கள் என்றால் ஒவ்வொரு மாதமும் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இது குடும்பத் தின் நிதிநிலையை பாதிக்கலாம் என்பதால் சீக்கிரமே சேமிக்கத் தொடங்குவது நல்லது.

உதாரணத்துக்கு, குழந்தையின் உயர்கல்விக் காக, அவர்களின் ஒரு வயதிலிருந்து சேமிக்கும் பட்சத்தில், உங்கள் இலக்குக்கு மாதம் 2,000 ரூபாய் சேமித்தால்கூட போதுமானதாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் 10 வயதில் தான் சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்றால் மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் சேமித்தால்தான் இலக்கை எட்ட முடியும் என்பதால் சீக்கிரமே சேமிக்கத் தொடங்குவது நல்லது.

எந்த வகையான சேமிப்பு பெஸ்ட்: குழந்தைகளுக் காக மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புக் கணக்கிலோ, பொன் மகன் சேமிப்புத் திட்டத்திலோ சேமிக்கலாம். இது நீண்ட கால சேமிப்பாக இருக்கும். குழந்தையின் பள்ளிக் கல்விக்காகச் சேமிக்கிறீர்கள் எனில், அந்தத் தொகை குழந்தையின் நான்கு வயதிலேயேகூட உங்களுக்குத் தேவைப்படலாம்.

குழந்தையின் உயர்கல்விக்காகச் சேமிப் பவர்கள், அஞ்சலக சேமிப்பு, வங்கியில் ஆர்.டி அல்லது எஃப்டி, பி.பி.எஃப் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பு முறைகளைத் தேர்வு செய்யலாம். சேமிப்பே முதலீடாகவும் மாறி பலன் கொடுக்க வேண்டும் எனில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த வற்றில் முதலீடு செய்யலாம். குறைந்தகால திட்டமிடலுக்கு, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களிலும், நீண்டகால திட்டமிடலுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்கவைக்க விரும்பும் பெற்றோர், இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் இந்திய பணம் டாலர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் பிற்காலத்தில் கைகொடுக்கும்.

சிலர் தங்கமாக சேமிக்க விரும்புவார்கள். நீங்கள் தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எல்லாம் கொடுக்க வேண்டி யிருக்கும், விற்கும்போதும் கழிவுகள் இருக்கும் என்பதால் தங்கமாக வாங்க விரும்புபவர்கள் தங்க நாணயங்கள், பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

 வித்யா பாலா
வித்யா பாலா

குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது ஒரு திட்டத்தை மட்டும் நம்பி அதில் மட்டும் சேமிப்பையோ, முதலீட்டையோ சுருக்கக் கூடாது. அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் எனப் பலவற்றில் பிரித்து சேமிக்கும்போது, ஒரு திட்டத்தில் லாபம் குறைந்தாலும், இன்னொரு திட்டத்தில் கிடைக்கும் லாபம் அதை ஈடு செய்யும்.

சேமிப்பை உயர்த்த வேண்டும்: பெரும்பாலும் நாம் பணவீக்கத்தைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. உதாரணமாக இன்று குழந்தையின் உயர் கல்விக்கு 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னும் 15 ஆண்டுகள் கழித்தும் அதே தொகை தான் தேவைப்படும் எனக் கணக்கிடக் கூடாது. பண வீக்கம் அதிகரிக்க அதிகரிக்க உங்களின் சேமிப்புத் தொகையை நீங்கள் அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் குடும்பத் தின் மொத்த வருமானத்தில் 10- 20 சதவிகிதம்வரை சேமிப்புக்காக ஒதுக்கலாம்.

கவனிக்க வேண்டியவை: `சைல்டு கேர்’, `சில்ட்ரன்ஸ் பிளான்’ எனக் குழந்தைகளின் பெயரில் இருக்கும் எல்லா சேமிப்புத் திட்டங்களும் நல்ல பலன் தரும் என்று சொல்ல முடியாது. அதனால் சேமிப்புத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பும் நன்கு விசாரித்து சேமிக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தில் குறுகிய கால முதலீடு செய்திருக்கிறீர்கள் எனில், அந்தச் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் உயரும்பட்சத்தில் அதை நீண்டகால சேமிப்புத் திட்ட மாக மாற்றிக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு