Published:Updated:

வாழ்க்கையை மாற்றிய `வழலை' பிசினஸ்! - திருச்சி இந்துமதி

திருச்சி இந்துமதி
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி இந்துமதி

#Motivation

வாழ்க்கையை மாற்றிய `வழலை' பிசினஸ்! - திருச்சி இந்துமதி

#Motivation

Published:Updated:
திருச்சி இந்துமதி
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி இந்துமதி

பின்புலம், முன் அனுபவம் ஏதுமின்றி, குறைந்த முதலீட்டில் சாமான்ய பெண்களும் பிசினஸில் ஜொலிக்கலாம் என்பதற்கு எடுத்துக்கட்டாக, மூலிகை சோப்பு தயாரிப்பில் இறங்கிய இந்துமதி, இரண்டே ஆண்டுகளில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார்.

சோப்பு விற்க கடைகடையாக ஏறிய நிலையில், இன்று இவரின் வீடு தேடி ஆர்டர்கள் வருகின்றன. எந்தக் கடனுதவியும் பெறாமல் வீட்டிலிருந்தே தொழில் செய்து நிறைவாகச் சம்பாதிக்கிறார். சிரித்த முகத்துடன், தனது வெற்றிக் கதையைப் பகிர்கிறார் இந்துமதி.

“ப்ளஸ் டூ படிக்கும்போதே கல்யாணமாயிடுச்சு. மேற்கொண்டு படிக்கலை. கணவர் லேத் ஆபரேட்டரா வேலை செய்யுறார். அவரோட வேலைக்கு உதவிகிட்டே, பிள்ளைகளைக் கவனிச்சுகிட்டு இருந்தேன். ஓய்வுநேரத்துல ஏதாவது பண்ணலாமேங்கிற தேடல்லதான் சுயதொழில் ஆர்வம் ஏற்பட்டது. யூடியூப்ல மூலிகை சோப்பு தயாரிப்பு பத்தி தெரிஞ்சுகிட்டதும் முதல்ல என் குடும்பத்தினருக்காக கெமிக்கல் சேர்க்காம தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிச்சேன். அதை அக்கம்பக்கத்தினருக்கும் சொந்தங்களுக்கும் பயன்படுத்தக் கொடுத்தேன். நல்ல ஃபீட்பேக் கிடைச்சுது. பிசினஸா செய்யலாமேனு தோணுச்சு. சில இயற்கை ஆர்வலர்கள்கிட்ட முறைப்படி அனுபவங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

வாழ்க்கையை மாற்றிய `வழலை' பிசினஸ்! - திருச்சி இந்துமதி

ஜாதிக்காய், மாசிக்காய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வெட்டிவேர், வசம்பு, கஸ்தூரி மஞ்சள் உட்பட 20 மூலிகைகளைச் சேர்த்து சோப்பு தயாரிச்சு பலருக்குப் பயன்படுத்தக் கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைக்கவே, சோப்புகளை சென்னையிலுள்ள ஒரு லேப்ல கொடுத்து தரத்தை உறுதிசெய்து சர்டிஃபிகேட் வாங்கினேன்.

இந்தத் தொழிலுக்கு 10,000 ரூபாய்தான் முதலீடு செய்தேன். சோப்புங்கிறதை தமிழ்ல ‘வழலை’னு சொல்வாங்க. எனவே, என் பிராண்டுக்கு ‘இயற்கை வழலை’னு பெயர் வெச்சேன். நடுத்தர குடும்பம்னாலும் எனக்கு வேலைக்குப் போகணும்னு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனா, எனக்கான அடையாளத்தை உருவாக்கணும்னு உறுதியா இருந்தேன். தேங்காய் எண்ணெய் மற்றும் மூலிகை சோப்புகளை தயாரிச்சு திருச்சியிலுள்ள பல்வேறு இயற்கை அங்காடிகள், மளிகைக் கடைகள்ல சாம்பிள் கொடுத்தேன்.

ஆரம்பத்துல யாருமே என்னை நம்பி சோப்பு வாங்கலை. புதுசா தொழில் தொடங்குகிற எல்லோருமே இந்தச் சவாலைக் கடந்துவந்தால்தான் அடுத்தகட்டத்துக்குப் போக முடியும். என் நம்பிக்கையை இழக்கலை. ஓர் இயற்கை அங்காடியில் சில சோப்புகளை சாம்பிள் வாங்கினவங்க, கொஞ்ச நாள்லயே ஆர்டர் கொடுத்தாங்க. படிப்படியா மற்ற கடைகள்லயும் சாம்பிள் சோப்புகள் வாங்கினாங்க'' என்பவர், விற்பனைக்காக எட்டு மாதங்களாக ஏராளமான கடைகளுக்கு தளராமல் ஏறி இறங்கியிருக்கிறார்.

``பலதரப்பட்ட மக்களையும் கவர பல்வேறு ஃப்ளேவர்கள்ல சோப்பு தயாரிச்சேன். அதனால நிறைய வாடிக்கையாளர்களை ரீச் பண்ண முடிஞ்சது. வீடு தேடியே நிறைய ஆர்டர்கள் வரவே, கடந்த ஒரு வருஷத்துல தொழில் நல்லா பிக்அப் ஆகிடுச்சு.

என்கிட்ட சோப்பு வாங்கிய மக்கள்ல பலரும் டீலரா மாறினாங்க. அவங்களுக்குத் தேவை யான சோப்புகளை கூரியர்ல அனுப்பு வேன். அவங்க, தங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு விற்பனை செஞ்சு தொழில்முனைவோரா மாறிட்டு இருக்காங்க. இப்படி, இல்லத்தரசிகள் முதல் டாக்டர்கள் வரை பலரும் என் டீலரா இருக்காங்க”

- ஆச்சர்யம் கூட்டும் இந்துமதி, ரோஜா, பப்பாளி, வெள்ளரிக்காய், வேப்பிலை, துளசி, வெட்டிவேர், கற்றாழை உட்பட 10 வகையான சோப்புகள் தயாரிக்கிறார். இரண்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், மாதம் 40,000 ரூபாய் லாபம் ஈட்டி அசத்துகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அனைத்து சோப்பு களையும் 110 கிராம் அளவில் தயாரிக்கிறேன். கடைகளில் மொத்தமாக விற்கும்போது ஒரு சோப்பை 45 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யறேன்.

மாசத்துக்கு 7,000 சோப்புகளுக்குமேல் தயாரிக்கிறோம். தவிர, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், கிராம்பு, வால்மிளகு, ஏலக்காய், இந்துப்பு, ஆலம் பட்டை, வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை உட்பட பல்வேறு மூலிகைகளைச் சேர்த்து மூலிகை பல்பொடியும் தயாரிக்கிறேன். மூலிகை ஹேர் ஆயிலும் விற்பனை செய்யறேன். ஒண்ணு கைவிட்டாலும் இன்னொன்று காப்பாத்திடும்.

வாகை மரத்தாலான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்தான் என் சோப்பு தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள். மற்ற மூலப்பொருள்களை பல்வேறு இடங்கள்ல இருந்தும் ஹோல்சேலா வாங்குறேன். தரமான பொருளைக் கொடுத்தால் நம்ம தயாரிப்புக்கு நியாயமான வரவேற்பு இருக்கும்.

தொழில் ஓரளவுக்கு பிக்அப் ஆனதுமே, வெப்சைட் டெவலப் மென்ட் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். வெப்சைட் மூலமா, வெளியூர் ஆர்டர்களை ஈர்க்க முடியுது. எந்த லோனும் வாங்காம, வருமானத்தை மீண்டும் தொழில்லயே முதலீடு செய்யறேன்.

கொரோனாவால மூலிகைப் பொருள்கள் மேல மக்களுக்கு ஆர்வம் அதிகமாகியிருக்கு. அதனால முன்பைவிட வியாபாரம் எனக்கு அதிகமாகியிருக்கு. வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்னு உறுதியா நம்புறேன்'' என்று கண்கள் பிரகாசிக்கச் சிரிக்கிறார் இந்துமதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழில் யுக்தி!

“மக்களைக் கவர எல்லா சோப்புகளையும் இதய வடிவில் தயாரிப்பதுடன், அவற்றைச் சின்ன காட்டன் பையில் பேக் பண்ணி விற்பனை செய்யுறேன். அதிகாலையில் சோப்பு தயாரிச்சு சூரிய உதயத்தின்போது அவற்றை வெயில்ல வெச்சு சாயந்திரம் எடுத்திடுவோம். பிறகு, வீட்டுக்குள் திறந்தவெளியில் 48 நாள்கள் சோப்பை வெச்சிருந்து பக்குவப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவோம்” என்கிறார் இந்துமதி.

எப்படிச் செய்யலாம்?

முதலீடு: குறைந்தபட்சம் 30,000 ரூபாயில் இந்தத் தொழிலைத் தொடங்கி, தொடக்கத்திலேயே மாதம் 5,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.

மூலப்பொருள்கள்: தேங்காய் எண்ணெய், மூலிகைகள், காஸ்டிக் சோடா, தண்ணீர். தொடக்கத்தில் விவசாயிகளிடம் நேரடியாகவோ, இயற்கை அங்காடியிலோ குறைந்த அளவில் மூலப்பொருள்களை வாங்கலாம். விற்பனை வாய்ப்புகள் அதிகரித்ததும் ஹோல்சேலாக வாங்கலாம். சோப்பு தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான காஸ்டிக் சோடா அதிக வீரியம் கொண்டது. எனவே, சோப்பு தயாரிக்கும்போது கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

உபகரணங்கள்: சோப்பு தயாரிக்கும் அச்சு, எடை மெஷின், பேக்கிங் பை அல்லது கவர். தொடக்கத்தில் கையாலேயே சோப்பு தயாரிக்கலாம். விற்பனை வாய்ப்பு அதிகரித்ததும் சோப்பு தயாரிக்க எந்திரத்தை வாங்கலாம்.

பயிற்சி: சோப்பு தயாரிப்போரிடம் நேரில் சென்று பயிற்சி பெறலாம். இலவசமாகப் பயிற்சி அளிக்கவும், வழிகாட்டவும் நானும் தயாராக இருக்கிறேன்.

விற்பனை வாய்ப்பு: தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்குக் குறைந்த எடைகொண்ட சாம்பிள் சோப்புகளைக் கொடுக்கலாம். அதில் ஆர்வமுள்ளவர்களுக்கு 10, 20 சோப்புகளைக் கொடுத்து விற்பனை செய்ய ஊக்கப்படுத்தி, லாபத்தில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கலாம். இப்படியே விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இதே முறையில், நம் தயாரிப்புகளை மளிகைக் கடைகள், இயற்கை அங்காடிகளிலும் விற்பனை செய்யலாம். நம் பொருளுக்கு டிமாண்ட், வரவேற்பு அதிகரிக்கும் வரை அதிக லாபம் எதிர்பார்க்கக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism