Published:Updated:

``மோடி, ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா... எல்லாருக்கும் ஸ்பெஷல் ஏலக்காய்!’’ - இந்திராணி

`மாதம் ஐம்பது மாலைகள் வரை கட்டிட்டு இருக்கோம். ஒரு கிலோ மாலை 4,500 ரூபாய் வரை விலை போகும். ஒருவேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட நான், இப்போ மூன்று லட்சம் வரை மாதம் டர்ன் ஓவர் செய்றேன்.’

``நான் வெற்றிக்காக போராடல, என் மகனுடைய எதிர்காலத்துக்காகத் தனி மனுஷியா போராட ஆரம்பிச்சேன். அதுதான் இன்னைக்கு என்னையும் என் மகனையும் வாழவெச்சுருக்கு" - வலிகளை வார்த்தைகளில் கடத்துகிறார் இந்திராணி.

தேனியைச் சேர்ந்த இவர், பத்து வருடங்களாக ஏலக்காய் மாலை தயாரிப்பைத் தொழிலாகச் செய்துவருகிறார். ஏலக்காய் மாலை தயாரிப்பு பற்றியும், மக்கள் கொடுக்கும் வரவேற்பு பற்றியும் இந்திராணியிடம் பேசினேன்.

பிசினஸ்
பிசினஸ்

நான் கர்நாடக மாநிலத்துல பிறந்தவ. திருமணத்துக்குப் பின் கணவருடன் தேனியில் செட்டில் ஆகிட்டேன். ஏலக்காய் மாலை தயாரிப்பு என் கணவரோட பிசினஸ் . நான் அவ்வப்போது மாலைகள் கோக்க உதவிகள் மட்டும் செய்வேன். அவர் ஒருத்தரோட வருமானத்தைத்தான் எங்கள் குடும்பமே நம்பி இருந்துச்சு. பெரிய அளவு வருமானம் இல்லைனாலும், நிறைவான வாழ்க்கையாக இருந்துச்சு. ஆனால், அதையும் கடவுள் எங்ககிட்ட இருந்து எடுத்துப்பாருனு கனவுலகூட நினைக்கல.

என் மகன் பிறந்திருந்த நேரம், விபத்தில் சிக்கி, எங்க வீட்டுக்காரருக்குக் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுச்சு. கடனை வாங்கி வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே கல்லீரல் பாதிப்பு வந்துருச்சு. அதனால் அவரால் தொழிலை நடத்தமுடியல. வருமானம் இல்ல, அதே நேரம் வைத்தியத்துக்கும் செலவு செய்ய வேண்டிய சூழல். வேற வழியே இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சேன்.

ஏலக்காய்களை உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்துவார்கள். பிறகு புகைபோட்டு காயவைத்து விலைக்கு கொடுப்பாங்க. புகைபோடும்போது ஏலக்காய் உறுதியாயிரும்.
இந்திராணி

எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல... அவரு குணமானால் போதும்னு இருந்துச்சு. சக்திக்கு மீறி கடன் வாங்கி அவரை பார்த்துக்கிட்டேன். திடீர்னு ஒரு நாள் மருத்துவர்கள் என்னை கூப்பிட்டு, `அவரக் காப்பத்த முடியல'னு சொன்னாங்க. . வாழ்க்கையில் இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. அவரோட சாவுக்கு வந்த சொந்த பந்தமெல்லாம் ரெண்டு நாளுல கிளம்ப, நானும் என் மகனும் அநாதையா நின்னோம்" என்றவர் குரல் உடைந்து சில நிமிடங்கள் அமைதியானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறைய கடன். வருமானத்துக்கு வழியில்ல. வாழ்க்கையை முடிச்சுக்கலாம்னு நினைக்கும்போது, அதுலயும் தோல்விதான். என் மகனோட எதிர்காலத்தை யோசிச்சுப் பார்த்தேன். தனியாப் போராடி, எல்லார் முன்னாடியும் அவனை உருவாக்கி காட்டணும்னு தோணுச்சு. அவனுக்காக ஓட ஆரம்பிச்சேன். படிப்பு இல்லாததால் எங்கேயும் வேலை கிடைக்கல. எதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைக்கும்போது, புதுசா எதாவது ஒரு தொழிலை ஆரம்பிக்கிறதுக்குப் பதிலா கணவரோட தொழிலையே தொடர்ந்து செய்யலாம்னு எண்ணம் வந்துச்சு.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து மாலைகள் கட்டிக்கொடுக்க ஆரம்பிச்சேன். மாலைகளுக்கான ஏலக்காய் தேர்வு, நேர்த்தியா மாலை கட்டுறது, விசேஷங்களுக்கு தகுந்தாற் போல் மாலையில் வித்தியாசம் காட்டுறதுன்னு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சு. நாளடைவுல, அனுபவம்தான் எல்லாத்தையும் கத்துக்கொடுத்துச்சு. தொழில் தொடங்கிய சில வருடங்கள் கடனை கட்டவே வருமானம் சரியாக இருந்துச்சு. இப்போ கடன்காரர்கள் தொல்லையில்லாமல், மகனை படிக்க வெச்சுக்கிட்டு இருக்கேன்.

படிப்பைத் தாண்டி என் மகன் ஒரு தடகள வீரனாவும் இப்போ நிறைய பதக்கங்களை வாங்கிக் குவிச்சுட்டு இருக்கான். அதைப் பார்க்கும்போது நான் படும் கஷ்டம் எல்லாம் மறந்து போயிரும்" என்று நெகிழ்கிறார் இந்திராணி.

இந்திராணி
இந்திராணி

தேனி, மலைப்பகுதி என்பதால் இங்கு ஏலக்காய் வியாபாரம்தான் பிரதான தொழில். கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் இருந்து, முதல் தர ஏலக்காயை வியாபாரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தமாகக் கொள்முதல் செய்து வைத்துவிடுவார்கள்.

``ஏலக்காயை அளவு பிரிச்சு, தனித்தனி ரகமாக சேர்த்து, உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்தி, புகைபோட்டு காயவைப்பாங்க. புகைபோடும் போது ஏலக்காய் உறுதி ஆயிரும். அதைத்தான் நாங்க வாங்குவோம்.

மாலையை பொறுத்தவரை ஆறு மில்லிமீட்டர் உயரமுள்ள ஏலக்காய்கள்தான் பார்க்க அழகாக இருக்கும். எளிதில் கோக்கவும் முடியும். என்பதால் ஏலக்காய்களைத் தேர்வு செய்யும்போது கவனமா இருக்கணும். பொதுவா, ஆடி மாசம் தவிர எல்லா மாசமும் ஆர்டர்கள் இருக்கும். ஏலக்காய் விலை உயர்வு அவ்வப்போது ஏறும், இறங்கும் என்பதால் மொத்தமாக வாங்கி வைக்க மாட்டேன். ஆர்டருக்கு தகுந்தாற்போல் அவ்வப்போது கிலோ கணக்கில் வாங்கிப்பேன்.

இந்திராணி
இந்திராணி

மாலை தயாரிக்க நூல், குஞ்சம், மாலையின் கழுத்துப் பகுதிக்கு தேவையான கட்டைகள், வளையம் என தேவைப்படும் எல்லாவற்றையும் மதுரை கிழக்கு வாசலில் போயி மாதம் ஒரு முறை வாங்கிட்டு வந்து ஸ்டாக் வெச்சுப்பேன். நிறைய ஆர்டர்கள் வருவதால் பதினைந்து பெண்களை வேலைக்கு வச்சிருக்கேன். ஒரு கிலோ ஏலக்காய் கோக்க 200 ரூபாய் கூலி கொடுப்பேன்.

எங்க வீடு சிறியது. மாலைக்குத் தேவையான பொருள்களை எல்லோருக்கும் பிரிச்சு கொடுத்துருவேன். அவங்க அதை அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயி நூலில் கோத்து கொடுப்பாங்க. நாங்க கொடுக்குற மாலை நேர்த்தியுடனும், தனித்துவமாகவும் இருக்கணும் என்பதால் மாலையை ஃப்னிஷிங் பண்ற வேலையை மட்டும் எப்போதும் நான்தான் செய்வேன்.

மாலை
மாலை

மாலைக்கு ஏலக்காய் கோப்பதைத் தாண்டி, குஞ்சம் தயாரித்தல், மாலைக்கு நடுவில் வைக்கும் சின்னச் சின்ன புகைப்படங்களுக்கான பேட்ச் தயாரிப்பது, கழுத்துப் பகுதிக்கான கட்டையில் ஜரிகை நூல் சுற்றுவதுனு நிறைய வேலைவாய்ப்பு இதில் இருக்கு. அவங்க அவங்க செய்யும் வேலைக்குத் தகுந்த மாதிரி கூலியும் நிர்ணயம் செய்வோம். ஒரு சரம் முதல் ஏழு சரம் உடைய மாலைகள் வரை நிறைய வகை, டிசைன்கள் இருக்கு. எல்லா டிசைன்களுக்குமான புகைப்படங்கள் என்னிடம் ஆல்பமாக இருக்கும். ஆர்டர் கொடுக்க வர்றவங்க ஆல்பத்தை பார்த்து அவங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்வாங்க.

நாங்க கட்டுற மாலை தமிழ்நாடு முழுக்கப் போகுது. ஜெயலலிதா அம்மா, கருணாநிதி ஐயா, அப்துல்கலாம் சார், பிரதமர் மோடி, ஸ்டாலின் என எல்லா அரசியல் தலைவர்களுக்கும் செய்து கொடுத்துருக்கோம். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் திருவிழா என்றால் எங்கள் மாலையில்லாமல் நிச்சயம் இருக்காது. கஸ்டமர்கள் கேட்கும் மாடல்களுக்கு எவ்வளவு கிலோ ஏலக்காய் தேவைப்படுமோ அதற்கு தகுந்தாற்போல்தான் விலை நிர்ணயம் செய்வோம். பெரியஅளவு நஷ்டம் இருக்காது. யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முடியும் என்பதால் நிறைய பெண்கள் என்கிட்ட வழிகாட்டுதல் கேட்டு பிசினஸ் ஆரம்பிச்சுருக்காங்க.

இந்திராணி
இந்திராணி

மாதம் ஐம்பது மாலைகள் வரை கட்டிட்டு இருக்கோம். ஒரு கிலோ மாலை 4,500 ரூபாய் வரை விலை போகும். ஒருவேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட நான், இப்போ மூன்று லட்சம் வரை மாதம் டர்ன் ஓவர் செய்றேன். போராட ஆரம்பித்தால் வாழ்க்கையின் பாதைகளை மாற்ற நிச்சயம் நம்மால் முடியும்" உறுதியாகச் சொல்கிறார் இந்திராணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு