Published:Updated:

அன்று இட்லிக் கடை... இன்று மாதம் லட்சங்களில் சம்பாத்தியம்! - சாதனைப் பெண் தேன்மொழி

தேன்மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
தேன்மொழி

ஒரு பேருந்து விபத்துல என் வலது கால் தொடைக்குக் கீழே உடைஞ்சு போயிட்டு. மருத்துவமனையில, `பிளேட் வைக்கணும், ஒன்றரை லட்சம் ஆகும்'னு சொன்னாங்க.

துரத்திய வறுமை, விபத்து என்று தன்னை முடக்கப் பார்த்த விதியை, தன் அபாரமான தன்னம்பிக்கை யால் வென்று இன்று மாதம் லட்சங்களில் சம்பாதிக்கும் சாதனைப் பெண், கரூரைச் சேர்ந்த தேன் மொழி. கல்லூரியில் படிக்கவே வசதியில்லாத நிலையில் இருந்தவர், இன்று இந்தியா முழுக்க 140 பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐ.டி ஜாப் கொடுத்துக்கொண்டிருக்கிறார். தேன்மொழியின் முன், பின் பாதி வாழ்க்கை, ஓர் உருக்கமான சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த கதைக்கரு!

``எனக்குச் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையம். வீட்டுல மூணு பொம்பளப் புள்ளைங்க. நான் ஆறாவது படிச்சுக்கிட்டு இருந்தப்போ எங்கப்பா ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டார். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். ரெண்டு தங்கச்சிகளையும் கூட்டிக்கிட்டு, தன்னோட சொந்த ஊரான கரூருக்கே போயிட்டாங்க எங்கம்மா. நான் மட்டும், பள்ளிப்பாளையத்தில் பாட்டிகிட்ட வளர்ந்தேன்.

திங்கள், செவ்வாய்க்கிழமைகள்ல ஈரோட்டில் நடக்கும் பனியன் சந்தைக்கு எங்க பாட்டி இட்லி சுட்டு எடுத்துட்டுப் போய் விற்கும் போது என்னையும் கூட்டிக்கிட்டுப் போவாங்க. வியாபாரத்தை முடிச்சிட்டுத் தான் ஸ்கூலுக்குப் போவேன். பத்தாவது முடிச்சப்போ, `இனிமே படிப்பு வேணாம், இட்லி வியாபாரத்துக்கு ஒத்தாசை பண்ணு'னு பாட்டி சொன்னாங்க. எங்க பள்ளி தலைமை ஆசிரியர் பாட்டியைக் கூப்பிட்டுப் பேச, ஒருவழியா ப்ளஸ் ஒன்ல சேர்ந்தேன்.

தேன்மொழி குடும்பத்தினர்
தேன்மொழி குடும்பத்தினர்

ஆவாரங்காடு கிராமம், கிருஷ்ணவேணி மேல்நிலைப் பள்ளியில் படிச்சுட்டே, இன்னொரு பக்கம் வழக்கம் போல காலை யில அஞ்சரை மணிக்கே எழுந்து, பாட்டி யோட சேர்ந்து இட்லி சுட்டு, தினமும் 300 இட்லி, சட்னி, சாம்பாரை சைக்கிள்ல வச்சு கட்டிக்கிட்டு, ஈரோடு சந்தைக்கு விற்கப் போவேன். பலநாள் ஸ்கூலுக்கு லேட்டா போய் திட்டு வாங்கியிருக்கேன். போட்டுக்க நல்ல டிரஸ்கூட இருக்காது. எங்க ஊர் சலவைத் தொழிலாளர்கள், பெரிய மனுஷி யான புள்ளைகளோட தீட்டுத் துணியை துவைச்சு குறைஞ்ச விலைக்கு விற்பாங்க. அதை வாங்கி உடுத்திக்குவேன்'' என்பவர் இத்துணை சிரமங்களுக்கு மத்தியிலும் ப்ளஸ் டூவில் 900/1200 மதிப்பெண் பெற்றிருக் கிறார்.

``ஆனா, வறுமையால பாட்டி என்னை மேல படிக்கவைக்கல. நானும் பாட்டியும் இட்லியுடன் மதிய சாப்பாடும் செஞ்சு விற்க ஆரம்பிச்சோம். கூடவே, ஈரோட்ல ஒரு ஹோல்சேல் மருந்துக் கம்பெனியில மாதம் 1,400 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அந்த கம்பெனி முதலாளி சக்திவேல் சார், என்னை பி.காம் கரஸ்ல சேர்த்துவிட்டார். இட்லி விற்பனை, மருந்துக் கம்பெனி வேலை, கரஸ் படிப்புனு நாலு கால் பாய்ச்சல்ல ஓடினேன்.

ஒரு குடும்பம் என்னைப் பொண்ணு கேட்டு வந்தப்போ, `என் தங்கச்சிங்களப் படிக்க வைக்கணும், இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்'னு சொன்னேன். கோபமான பாட்டி, என்னை கரூர்ல அம்மாகிட்ட கொண்டு வந்து விட்டுட்டாங்க. 2006-ம் வருஷம், கரூர்ல ஒரு டைல்ஸ் கம்பெனியில விற்பனைப் பிரிவுல வேலைக்குச் சேர்ந்து, மளிகை, தங்கச்சிங்க படிப்புனு பார்த்துக்கிட்டேன். காலை நேரத்துல ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்குப் போனப்போ, என் கணவர் முஜிபுர் ரஹ்மானை அங்கதான் பார்த்தேன். டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலைபார்த்துக்கிட்டு இருந்தார். அவர் தன் காதலைச் சொன்னப்போ, குடும்பச் சூழலால மறுத்துட்டேன்'' என்பவரை, ஒரு விபத்து மீண்டும் பின்னிழுத்திருக்கிறது.

``ஒரு பேருந்து விபத்துல என் வலது கால் தொடைக்குக் கீழே உடைஞ்சு போயிட்டு. மருத்துவமனையில, `பிளேட் வைக்கணும், ஒன்றரை லட்சம் ஆகும்'னு சொன்னாங்க. காசில்லாததால, வைத்தியசாலையில ஒரு வருஷம் நானும் அம்மாவும் தங்கி எண்ணெய்க் கட்டு கட்டிக்கிட்டோம். அப்போ ரஹ்மான், `உனக்குக் காலே போனாலும் நான் இருப்பேன்'னு சொன்னார். அங்க எஃப்.எம் மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு. கூடவே, `அவள் விகடன்' வாங்கிப் படிப்பேன். அதுல ஒருமுறை, சென்னை யில் ஒரு பெண், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்து ஜெயிச்ச வெற்றிக் கதையைப் போட்டிருந்தாங்க. அவங்க நம்பரை வாங்கி, என் நிலைமையைச் சொல்லி, வேலை கிடைக்குமானு கேட்டேன். `உடம்பு சரியாகட்டும். சொந்தமா கம்ப்யூட்டர் வாங்கு. வேலை தர் றேன்'னு சொன்னாங்க'' - தேன் மொழியின் கதையில் `அவள் விகடன்' திருப்புமுனையாக இருந்ததை அவர் சொன்னபோது நமக்கே சர்ப்ரைஸ்!

``கால் சரியாகி வீட்டுக்குப் போனதும், லோன்ல கம்ப்யூட்டர் வாங்கினேன். அப்போ ஆன், ஆஃப் பண்ணக்கூடத் தெரியாது. ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். டேட்டா ஃபார்ம் ஃபில்லிங் ஜாப்ல முதல் மாசம் 797 ரூபாய்க்கு செக் அனுப்பினாங்க. அடுத்தடுத்த மாசம் 1,000 ரூபாய், 1,500 ரூபாய்னு கிடைச்சது. வேலையைக் கத்துக் கிட்டதும், நாமே தனியா ஜாப் வாங்கிப் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். ரஹ்மான் சப்போர்ட் பண்ணினார். தனியா அலுவலகம் போட்டு, பெண் களுக்கு ஆன்லைன் ஜாப் பயிற்சி கொடுத்தோம்'' என்பவருக்கு, மறுபடியும் கீழே விழுந்து அதே காலில் அடிபட்டிருக்கிறது. அந்த சிகிச்சையில் அவருக்கு அந்தக் காலில் உயரம் ஒரு இன்ச் கம்மியாகியிருக்கிறது. ``அது வெளியே தெரியாம நான் நடக்கப் பழகினேன்'' என்பவர், மீண்டும் ஸ்பீடு மோடுக்குப் போயிருக்கிறார்.

அன்று இட்லிக் கடை... இன்று மாதம் லட்சங்களில் சம்பாத்தியம்! - சாதனைப் பெண் தேன்மொழி

``கரஸ்ல பி.காம் முடிச்சிருந்த நான், எம்.பி.ஏ ஹெச்.ஆர் படிச்சேன். 2011-ம் வருஷம், அமெரிக்காவுல உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐ.டி ஜாப் வாங்கி, 20 பெண்களோடு ஆன்லைன் வேலைகள் செய்யத் தொடங்கினேன். கடினமான உழைப்பு, கைநிறைய வருமானம் தர ஆரம்பிச்சது. இதுக்கிடையில, ரெண்டு வீட்டின் சம்மதத்தோடு நானும் ரஹ்மானும் திருமணம் செய்துக்கிட்டோம். முதல் தங்கச்சியை பி.பி..ஏ, ரெண்டாவது தங்கச்சியை பி.இ படிக்க வெச்சேன்; ரெண்டு பேருக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் முடிச்சேன். மூணு மகள்களும் சேர்ந்து, அம்மாவுக்கு கரூர்ல வீடு வாங்கிக்கொடுத்தோம்.

`மூணும் பொம்பளப் புள்ளைகளா பெத்திருக்க'னு எங்கம்மாவை பேசுனவங்க எல்லாம், `பெத்தா இந்த மாதிரி மூணு பொம்பளப் புள்ளைகளை பெக்கணும்'னு பாராட்டுற அளவுக்கு வந்திருக்கோம். ஆதில், அஹானானு எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. நான் இப்போ மாம் பிளாக்கர், என் பிள்ளைகள் சைல்டு மாடல்கள்னு வாழ்க்கை சுவாரஸ்யமா போயிட்டிருக்கு'' என்றபோது தேன்மொழியின் குரலில் நிறைவு.

``இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இந்தியா முழுக்கவிருந்து 140 பெண்கள் என்கிட்ட வேலை பார்க்கு றாங்க. கணவனால கைவிடப்பட்டவங்க, 100 நாள் வேலை பார்த்தவங்க, சொந்தக் கால்ல நிற்க நினைக்கும் குடும்பத் தலைவிகள்னு பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுத்தேன். மாதம் குறைந்தபட்சம் 7,000 ரூபாய் தொடங்கி அதிகபட்சமா 54,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க. இன்னொரு பக்கம், என் வருமானமும் லட்சங்கள்ல உயர்ந்திருக்கு. அடுத்து, 200 பெண்களுக்கு வேலை கொடுக் கணும் என்ற வேட்கையோடு ஓடிக்கிட்டு இருக்கேன்'' என்று தேன்மொழி சொன்னபோது, நமக்கு லிட்டர் லிட்டராக எனர்ஜி டானிக் குடித்த உணர்வு.