Published:Updated:

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

முதலீட்டுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டுத் திட்டங்கள்

- வழிகாட்டும் ஆலோசகர்

பொதுவாக, நம்மவர்களின் முதலீடு அதிலும் குறிப்பாக, பெண்களின் முதலீடு பாரம்பர்ய முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில்தான் அதிகம் இருக்கிறது. நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வது குறைவாக இருக்கிறது. காரணம், இவை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக இருப்பதுதான்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

பாரம்பர்யமான முதலீடுகளை விட்டுவிட்டு, நவீன முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன, பாரம்பர்யமான முதலீடுகளைவிட நவீன முதலீடுகள் எந்த அளவுக்கு அதிக நன்மை தருபவை, நவீன முதலீடுகளில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்ல, நாணயம் விகடன் சார்பில் ஆன்லைனில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் `பிரைம் இன்வெஸ்டார்’ (Primeinvestor.in) நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா.

நிதித்துறையில் 18 ஆண்டுகள் அனுபவம்கொண்ட வித்யா, ஒரு சார்டட் அக்கவுன்டன்ட். `ஃபண்ட்ஸ் இந்தியா’வில் பணிபுரிந்தபோது, ரோபோக்கள் மூலம் முதலீட்டுத் தீர்வுகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றியவர். இவருடைய ஃபண்ட் பரிந்துரைகளை முதலீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் எனப் பலரும் பின்பற்றி லாபம் சம்பாதித்துவருவது சிறப்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கமான தொகுப்பு இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலீட்டுக்கு முக்கியத் தேவை..!

நம் அம்மாவும் பாட்டியும் மளிகை டப்பாக்களில் ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியே பணத்தைப் போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்றைக்கு அதையெல்லாம் கடந்து சேமிப்பு, முதலீடு என்று மாறியிருக்கிறீர்கள்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

முதலீடு செய்ய இலக்கு தேவை. எவ்வளவு சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியவில்லையென்றால், செலவு செய்துகொண்டே இருப்போம். உடனடி சந்தோஷத்தைத் தரும் விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட காலத்தில் சந்தோஷத்தைத் தரக்கூடிய விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

எந்த ஓர் இலக்குமில்லாமல் முதலீட்டை ஆரம்பிக்கக் கூடாது. இலக்கு இருந்தால்தான் முதலீடு நீண்டகாலத்துக்குச் செல்லும். எந்தத் தேவைக்கு அதாவது, எந்தக் குறிக்கோளுக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிப்பதே சரி.

உங்களுக்கு எந்த ஒரு குறிக்கோளும் இல்லையென்றால், `30 வருட காலத்தில் செல்வம் சேர்க்க வேண்டும்’ என்றாவது ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு முதலீட்டை ஆரம்பியுங்கள்.

இலக்கில்லாமல் முதலீடு செய்யும்போது தவறான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீட்டுக்கு முன்னர் செய்ய வேண்டியது!

முதலீட்டை ஆரம்பிக்கும் முன்னர் உங்களுடைய குடும்ப மாதச் செலவில் சுமார் ஆறு மடங்குத் தொகையை, `அவசரகால நிதி’ எனச் சேமித்து வையுங்கள். திடீர் வேலை இழப்பு, அவசர மருத்துவச் செலவு, எதிர்பாராத செலவு போன்றவற்றின்போது இது மிகவும் கைகொடுக்கும்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

உதாரணமாக, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் ஏதாவது ஒன்று திடீரெனப் பழுதாகிவிட்டால், அதைச் சரிசெய்ய முடியாத நிலையில், கடனுக்குப் புதிய பொருள்கள் வாங்குவதை இந்த அவசரகால நிதி தடுக்கும். அவசரகால நிதியை எளிதில் எடுத்துச் செலவு செய்யக்கூடிய வகையில் வங்கிச் சேமிப்புக் கணக்கு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்துப் போட்டு வைக்கலாம்.

காப்பீடு கட்டாயம்..!

பொதுவாக, நாம் இருசக்கர வாகனம், கார் போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது அந்தப் பணம் திரும்ப வர வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால், ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும்போது மட்டும் ஏன் அதிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள் மக்கள்... இதற்கு, காப்பீட்டு நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளும் ஒரு காரணம். அவர்களுக்கும் எது இன்ஷூரன்ஸ், எது முதலீடு, எந்த இன்ஷூரன்ஸ் பாலிசி சரியானது என்ற விவரம் தெரியாமலிருக்கிறது.

இருப்பதிலேயே சிறந்த ஆயுள் காப்பீடு பாலிசி என்றால், அது டேர்ம் பிளான்தான். இதில் பிரீமியம் மிகக் குறைவு. இந்த பாலிசியை எடுத்துவிட்டு, மீதித் தொகையை ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால், நீண்டகாலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். கூடவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவச் செலவுக்குக் கைகொடுக்கும் ஹெல்த் பாலிசியையும் எடுத்துக்கொண்டு முதலீட்டை ஆரம்பியுங்கள்.

தங்கம் லாபகரமான முதலீடா?

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் பெரும்பாலும் அடமானம் வைப்பதற்காகவே வாங்குகிறோம். முதலீடு என்கிறபோது பெண்கள் தங்க நகையை மட்டும் முதலீடாகக் கருதக் கூடாது. காரணம், அது ஒரு காலகட்டத்தில் விலை ஏறும். ஒரு காலகட்டத்தில் விலை இறங்கும். பொதுவாக, உலகில் கெட்டது நடந்தால் தங்கம் விலை ஏறும்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

முதலீட்டுக் கோணத்தில் பார்த்தால், ஒருவர் தன் மொத்த முதலீட்டில் 10-15% தொகையைத் தங்கத்தில் வைத்துக்கொண்டால் போதும்.

பங்குச் சந்தை நன்றாகச் செயல்படாதபோதும், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போதும் தங்கம் விலை ஏறும். மேலும், இதன் விலை அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. தங்கத்தின் விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்து வைக்க ஓர் ஒழுங்குமுறை அமைப்பு கிடையாது.

தங்கத்துக்கு ‘அண்டர்லைன் அஸெட்’ என்று எதுவும் கிடையாது. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் சேவையால்தான் இதன் விலை ஏற்றம் கண்டுவருகிறது. சில்வர், காப்பர் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அவற்றுக்குத் தொழிற்சாலை சார்ந்த அதாவது பல பொருள்கள் தயாரிக்க இவை மூலப் பொருள்களாக இருக்கின்றன. தங்கத்துக்கு இந்த அளவுக்கு அதிக தேவை இல்லை. எனவே, அதன் விலை எப்போதும் ஏற்றத்தில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

தங்கத்தை ஒரு முதலீட்டு நோக்கத்தில் பார்த்தால் கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்துவரலாம். இந்தத் திட்டங்களில் தங்கமாகத் தர மாட்டார்கள். இவற்றின் யூனிட்டுகளை விற்று நீங்கள்தான் தங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இன்னொரு நல்ல திட்டம் இருக்கிறது. `கோல்டு பாண்டு’ என்பதை மத்திய அரசின் சார்பில் ஆர்.பி.ஐ வெளியிடுகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்துக்கேற்ப இதன் யூனிட்டின் மதிப்பும் உயரும். கூடவே, ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற முடியாது.

முதலீடுகள் பலவகை..!

முதலீடு என்கிறபோது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்)கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (எஃப்.டி, டெப்ட் ஃபண்ட்), தங்கம், ரியல் எஸ்டேட் எனக் கலந்து முதலீடு (அஸெட் அலொகேஷன்) செய்வதே நல்லது.

காரணம், ஒரு முதலீடு மேலே போகும்போது இன்னொரு முதலீடு கீழே இறங்கக்கூடும். இப்படிக் கலந்து முதலீடு செய்திருந்தால், உங்களின் முதலீட்டுக் கலவை (போர்ட்ஃபோலியோ) எப்போதும் அதிக இழப்பு இல்லாமல் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும்.

பொதுவாக, ஒரு பொருளின் விலை மேலே போகும்போது வாங்குவது தவறு. எப்போது விலை குறைவாக இருக்கிறதோ, அப்போதுதான் முதலீட்டு நோக்கில் அதை வாங்க வேண்டும்.

எஸ்.ஐ.பி

`இந்த ரிஸ்க்கெல்லாம் எனக்கு வேண்டாம்’ என்றால், மாதந்தோறும் முதலீடு செய்யும் ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ என்ற எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டையும் மேற்கொண்டு வரலாம். சந்தை கீழே போகும்போது அதிக யூனிட்டுகளை வாங்கித் தரும்; மேலே போகும்போது குறைந்த யூனிட்டுகளை வாங்கித் தரும். இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உங்கள் முதலீட்டை, மூலதனத்தைப் பாதுகாக்காது.

இதில் நீண்டகாலத்தில்தான் நல்ல வருமானத்தைப் பெற முடியும். நீண்டகாலத்தில் உங்களுடைய ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகள் சராசரியாக 10%-15% வருமானம் கொடுக்கக் கூடும்.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அது குறுகியகாலத்தில் அதிக இழப்பு தரக்கூடியது. ஆனால், அது நீண்டகாலத்தில் 15, 20, 25 ஆண்டுகளில் சுமார் 12%-15% வருமானத்தைத் தந்திருக்கிறது; தந்திருக்கக்கூடும்.

ரியல் எஸ்டேட்

அடுத்து நம்மவர்களுக்கு ரியல் எஸ்டேட் மீது ஓர் அளவில்லா ஆசை இருக்கிறது. குடியிருக்க ஒரு சொந்த வீடு போதும். முதலீட்டு நோக்கில் இரண்டாவது, மூன்றாவது வீடுகளை கடன் மூலம் வாங்கி வாடகைக்குவிட்டால் லாபம் ஒன்றும் பெரிதாக இல்லை. வாடகை வருமானம் என்பது சொத்தின் மதிப்பில் சுமார் 1.5% கூட இல்லை. பொதுவாக, நாம் 10,000 ரூபாய், 20,000 ரூபாய் வாடகை கிடைக்கிறது என்று பார்க்கிறோமே தவிர, வீட்டின் மதிப்புக்கேற்ப வாடகை கிடைக்கிறதா என்று பார்ப்பதில்லை.

மேலும், இப்போதெல்லாம் வீட்டுக் கடனுக்குத் திருப்பிச் செலுத்தும் வட்டியில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்தான் வரிச் சலுகை பெற முடியும்.

மேலும், உங்களின் இரண்டாவது, மூன்றாவது வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டது.

பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

நிதி ஆலோசனை

இந்தியாவைப் பொறுத்தவரை நிதி ஆலோசனை வழங்குபவர்களைவிட, இன்ஷூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் ஃபிக்ஸட் டெபாசிட் என முதலீட்டுத் திட்டங்களை விற்பவர்கள்தான் அதிகம். காரணம், முதலீட்டு ஆலோசனை பெறுவதற்கு நம் நாட்டில் யாரும் பணம் தரத் தயாராக இல்லை. இதனால், முதலீட்டு ஆலோசனை தருவதாகச் சொல்லி, அவர்களுக்கு நன்கு கமிஷன் கிடைக்கும் திட்டங்களை முதலீட்டாளர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். நன்கு விஷயம் தெரிந்த முதலீட்டு ஆலோசகர்களுக்குக் கட்டணம் செலுத்த நாம் தயாராக இருந்தால், அவர்கள் நல்ல முதலீட்டுத் திட்டங்களை நமக்குச் சொல்வார்கள்.

சிலர், `பங்குச் சந்தை வர்த்தகத்தில் (டிரேடிங்) அதிக வருமானம் கிடைக்கும்’ என்று போய் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பார்க்க அதிக வருடங்கள் அனுபவம் தேவை. பங்குச் சந்தை வர்த்தகர்கள் பணம் பண்ணியதை வெளியில் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், இழந்ததை வெளியில் சொல்ல மாட்டார்கள்.

வங்கிகள் மூலம் எந்த ஒரு நிதித் திட்டத்தையும் வாங்காதீர்கள் அவர்களுக்கு நிதித் திட்டங்களை விற்பது ஒரு சைடு பிசினஸ்தான். அவர்களுக்குக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடுகள் பற்றி முழுமையான விவரங்கள் தெரிவதில்லை.

முதலீட்டுத் திட்டங்களை நன்கு புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். போதிய அனுபவம் வரும் வரை ஆலோசகர்களின் உதவியுடன் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். சிறிது கட்டணத்தை மனமுவந்து தருவதன் மூலம் அதிக லாபம் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த யோசனைகள் அனைத்தையுமே பெண்களுக்காகச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இவற்றைப் பெண்கள் மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில்லை. பாரம்பர்யமான முதலீடுகளைத் தாண்டி, நவீன முதலீடுகள் மூலம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெற நினைக்கும் அனைவருமே தாராளமாகப் பின்பற்றலாம். இதைப் படித்த அனைவருமே முதலீட்டில் சிறக்க வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்.’’