பிரீமியம் ஸ்டோரி

ஓய்வு நேரத்தைப் பயனுள்ள தாக்கிக்கொள்ள சணல் பை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர் சுதா. இன்று அதே துறையில் சிறப்பான லாபம் ஈட்டும் தொழில் முனைவோர். தொழில் நுணுக்கங் களைச் சரியாகக் கடைப்பிடித்தவர், ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டு நிலையான வருமான வாய்ப்பையும் உறுதிசெய்கிறார்.

தன் வெற்றி அனுபவங்களோடு உற்சாகத்துடன் வழிகாட்டுகிறார்.

“பூர்வீகம் திருச்சி. ப்ளஸ் டூ முடிச்சிட்டு டிப்ளோமா டீச்சர் டிரெயினிங் கோர்ஸ் முடிச்சேன். கல்யாணமானதும் மதுரையில் குடியேறினேன். எனக்கு டெய்லரிங் நல்லா தெரியும். சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (Sippo) ஏற்பாடு செஞ்சிருந்த சணல் பை தயாரிப்புக் கான பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, அந்த நிறுவனம் ஏற்பாடு செஞ்ச கண்காட்சியில ஸ்டால் அமைக்க கட்டணமின்றி வாய்ப்பு கொடுத்தாங்க. அதுக்காக நிறைய டிசைன்கள்ல பலதரப்பட்ட பைகளைத் தயாரிச்சேன். அவை விரைவா விற்பனையானதும் பெரிய நம்பிக்கையும் உத்வேகமும் கிடைச்சது.

சணல் பையில் சக்சஸ் ஃபார்முலா சொல்லும் சுதா
DIXITH

சுயதொழில் ஆர்வம் அதிகரிக்கவே, லேத் ஃபேக்டரி வெச்சிருந்த கணவரும் ஊக்கம் கொடுத்தார். ‘கிருபாஸ் ஜூட் சென்டர்’ங்கிற பெயர்ல 2010-ல் வீட்டுல இருந்த படியே சுயதொழில் ஆரம்பிச்சேன். ஏற்கெனவே டெய்லரிங் மெஷின் இருந்ததால, அடிப்படை மூலப் பொருள்களை வாங்க 25,000 ரூபாய்தான் தேவைப்பட்டுச்சு. ‘சிப்போ’ நிறுவனத்தின் வழிகாட்டு தல்ல, சுற்றுவட்டாரங்கள்ல நடந்த பல்வேறு கண்காட்சிகள்லயும் தொடர்ந்து ஸ்டால் போட்டேன். வாடிக்கையாளர்கள் வட்டாரம் அதிகமாச்சு. பலரையும் சந்திச்சு சாம்பிள் பைகள் கொடுத்து ஆர்டர் கேட்டேன். ஆர்டர்கள் அதிகரிச்சதும் டெய்லரிங் யூனிட் ஆரம்பிச்சேன். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்குப் பயிற்சியும் கொடுக்கிறேன்” என்பவர், ஒன்பது பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.

“10 வருஷத்துக்கு முன்பெல்லாம் தாம்பூலப்பை ஆர்டர்கள்தான் அதிகம் வரும். அந்தப் பை தயாரிப்பில் அதிக லாபம் கிடைக்காட்டியும், அந்த ஆர்டர்களை அதிகம் எடுத்து வாடிக்கையாளர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தினேன். அதன் மூலம் பலவித பைகள் தயாரிக்கிற ஆர்டர்கள் கிடைச்சு வருமானமும் அதிகரிச்சது. மக்கள்கிட்ட வரவேற் புள்ள எல்லாப் பொருள்களுக்கும் வியாபாரப் போட்டிகள் இருக்கும். ஆனா, தனித்துவமான அடையாளம் இருந்தால்தான் நமக்கான வெற்றி கிடைக்கும். அதனால, குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்ல கார்ட்டூன் டிசைன்கள் இருக்கிற மாதிரி தயாரிச்சேன். தாம்பூலப்பைகளின் அடுத்த வெர்ஷனா பிரபலமான ரிட்டர்ன் கிஃப்ட் பைகளையும் இப்போ அதிகம் தயாரிக்கிறேன். கூடவே, ஷாப்பிங் பை, லேப்டாப் பேக் உட்பட பலதரப்பட்ட பைகளையும் உற்பத்தி செய்யுறேன். அதுல வித்தியாசமான டிசைன், பிரின்டிங், ஓவியங்கள், லோகோ, எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளை வடிவமைப்பேன். வெளியிடங்கள்ல வித்தியாசமான பைகளைப் பார்த்தா, அதை அடிப் படையா வெச்சு புது டிசைன்களை உருவாக்குவேன். சுற்றுவட்டார மாவட்டங்கள் தவிர, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர நகரங்கள்ல இருந்தும் ஆர்டர்கள் வருது. மாசத் துக்கு ரெண்டாயிரம் பைகளுக்கும் அதிகமா தயாரிக்கறேன்”

- உற்சாகம் குறையாமல் பேசும் சுதா, சணல் பை தயாரிப்பில் மட்டும் மாதம்தோறும் 40,000 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டுகிறார்.

சுதா
சுதா
DIXITH

“முகூர்த்த சீஸன்ல ஆர்டர்கள் குவியும். சிலநேரம் எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் வராது. ஆர்டர் குறையும் நேரத்துல, கண்காட்சிகள்ல ஸ்டால் அமைக்க என் விருப்பத்துக்கு ஏற்ற பைகளைத் தயாரிப்பேன். மேலும், மணப்பெண் அலங்காரம், மண மக்களுக்கான பொக்கே தயாரிப்பு, கிஃப்ட் தயாரிப்பு வேலைகளையும் வீட்டில் இருந்தே செய்யுறேன். ஒரு தொழில் மூலம் இன்னொரு தொழிலுக்கு ஆர்டர்கள் கிடைக்கும், நட்பு வட்டாரம் பெருகும். ஒரு தொழில்ல வருமானம் குறைஞ்சாலும் இன்னொரு தொழில் கை கொடுக்கும். அதையெல்லாம்விட, பல தொழில் களைச் செய்றதால கிரியேட்டிவிட்டி அதிகரிக்குது.

சொன்ன நேரத்துக்கு முன்பே டெலிவரி செய்யுறது, ஜிப், ரன்னர், கைப்பிடி உட்பட எல்லாப் பொருள் களையும் தரமானதாகப் பயன் படுத்துறது, ஃபினிஷிங் குவாலிட் டியை உறுதி செய்யுறதுனு தொழில் நேர்த்தியை எப்போதும் கடைப் பிடிச்சா வெற்றி உறுதி”

- சுதாவின் தொழில் அனுபவங்கள் உத்வேகமும் நம்பிக்கையும் கூட்டு கின்றன!

சணல் பையில் சக்சஸ் ஃபார்முலா சொல்லும் சுதா
DIXITH

எப்படிச் செய்யலாம்?

முதலீடு: டெய்லரிங் இயந்திரம் இருக்கும்பட்சத்தில், பிரத்யேகமான ஊசியை மட்டும் மாற்றி சணல் பைகளைத் தயாரிக்கலாம். தொடக்கத்தில் அவசியமான மூலப்பொருள்களை வாங்க 10,000 ரூபாய் முதலீடே போதுமானது.

மூலப்பொருள்கள்: சணல் துணி, நூல், ஊசி, டேப், ஜிப், ரன்னர், கைப்பிடி, எம்ப்ராய்டரிங் தேவைக்கான பொருள்கள்.

உபகரணங்கள்: கத்தரிக்கோல்

பயிற்சி : சணல் பை தயாரிப்பவர்களிடம் பயிற்சிக்குச் செல்லலாம். சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ளலாம்.

விற்பனை வாய்ப்பு: கைவினைப் பொருள்களுக்கான கண்காட்சிகளில் பங்கேற்பதுடன், சமூக வலைதளங்களிலும் விளம்பரம் செய்யலாம். நம் தயாரிப்புகளை பூம்புகார் விற்பனை நிலையங்களில் கொடுத்தும் விற்பனை செய்யலாம்

தொழில் யுக்தி!

``சணல் பைகள் எக்கோ ஃபிரெண்ட்லியானவை. ஆயுட் காலம் முடிஞ்சதும், இந்தப் பையை சின்னத் துண்டுகளாவோ தூளாக்கியோ செடிகளுக்கு உரமா பயன்படுத்தலாம். இதை நம்ம வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டணும். எந்த ஆர்டரா இருந்தாலும், குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸா வாங்கி அதுலயே மூலப்பொருள்களை வாங்கலாம். ஆன்லைன்லயே மூலப் பொருள்களை மொத்த விலைக்கு வாங்கிடுவேன். வியாபார விஷயமா யாரைச் சந்திச்சாலும் என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்துடுவேன். இந்த யுக்தியால ஆர்டர்கள் நிச்சயம் நம்மைத் தேடிவரும்” என்று அனுபவ ஆலோசனைகள் கூறுகிறார் சுதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு