Published:Updated:

தயக்கம் உடைத்தேன்... தொழில்முனைவோராக ஏற்றம் பெற்றேன்! - ‘கழனி’ கவிதாவின் தன்னம்பிக்கை

கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

#Utility

தயக்கம் உடைத்தேன்... தொழில்முனைவோராக ஏற்றம் பெற்றேன்! - ‘கழனி’ கவிதாவின் தன்னம்பிக்கை

#Utility

Published:Updated:
கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

“கல்யாணமானதும் வீடு, குடும்பத் தொழிலான விவசாய வேலைனு 13 வருஷங்கள் இருந்தேன். அதுவரை என் ஊரைத் தாண்டிக்கூட அதிகம் போனதில்லை. இன்னிக்கு ஒரு நிறுவனத்தின் நிர்வாகியா மாறியிருக்கேன். இது எனக்கே ஆச்சர்யமான மாற்றம்தான். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்தான். ஆனா, வெளியுலகத்துல பெண்கள் ஜெயிக்கிறதுக்கு நிறைய வாய்ப்புகள் குவிஞ்சுகிடக்கு. நமக்குப் பொருத்தமானதைக் கண்டுபிடிச்சா, நாமும் சொந்தக் காலில் நின்னு சாதிக்கலாம்”

- உதாரண மனுஷியாகப் பேசும் கவிதா, திடீர் நிர்பந்தத்தால் வேலைக்குச் செல்லத் தொடங்கியவர். விவசாயத்துறையில் அனுபவம் பெற்று தொழில்முனைவோராக மாறியவர், ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியிலுள்ள ‘கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவன’த்தைத் தொடங்கி, அதன் சி.இ.ஓ-வாகச் செயல்படுகிறார். பெண்கள் உட்பட விவசாயத் துறையிலுள்ள பலரையும் தொழில்முனைவோராகவும் ஊக்கப்படுத்தும் கவிதாவைச் சந்தித்தோம்.

"பூர்வீகம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம். காலேஜ் முடிச்சதும் கல்யாணம். குடும்ப வாழ்க்கை நல்லா போயிட்டிருந்த நிலையில், திடீர்னு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுச்சு. விவசாயம் சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குப் போனேன். விவசாயிகளின் அறிமுகம் கிடைச்சதோடு, விவசாயத் திட்டங்கள் பலவற்றையும் தெரிஞ்சுகிட்டேன். ஒருமுறை நபார்டு வங்கியின் கருத்தரங்கில் கலந்துகிட்டபோதுதான், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்குவதற்கான மத்திய அரசின் பயனுள்ள திட்டம் பத்தி தெரிஞ்சுகிட்டேன். 500 விவசாயிகளை உறுப்பினர்களாகச் சேர்த்து, 2016-ல் எங்க நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இப்போ எங்க நிறுவனத்துல உறுப்பினர்களாக இருக்கிற ஆயிரம் விவசாயிகளும் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தினோம். அந்தப் பத்து லட்ச ரூபாய் மூலதனத்தில் நிறுவன வளர்ச்சிக்கான விஷயங்களை மேற்கொண்டோம். வரவுக்கு ஏற்ப நிறுவனத்தை விரிவுபடுத்தினோம். விவசாயிகள்கிட்ட இருந்து விளைபொருள்களை வாங்கி அப்படியேவும், மதிப்புக்கூட்டல் செய்தும் விற்பனை செய்யறோம். வங்கிக் கடனுதவியும் வாங்கறோம். விவசாயம் சார்ந்த நிறுவனமா இருந்தாலும், மற்ற பொதுவான நிறுவனங்களைப் போல விற்பனை, ஏற்றுமதி, வியாபார யுக்தி உள்ளிட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்” என்றவர், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்.

கவிதா
கவிதா

“உற்பத்தி செய்வதுடன், விவசாயிகளே விற்பனையாளர்களாகவும் மாறினால் விவசாயத்தில் நஷ்டம்ங்கிற பேச்சுக்கே இடமிருக்காது. அதுக்கு உதவுவதுதான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நோக்கம். எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை சிரமமின்றி விற்பனை செய்யறதோடு, அவர்களின் விளைபொருள்களை மதிப்புக்கூட்டல் செஞ்சு கூடுதல் லாபத்தில் விற்பனை செய்யவும் ஊக்கப்படுத்தறோம். எங்க நிறுவன உறுப்பினர்களுக்கும், இயற்கை விவசாய விளைபொருள்களை வாங்கவும் முன்னுரிமை கொடுப்போம். சுற்றுவட்டாரப் பகுதிகள்ல காய்கறிகள், பழங்களுடன், நெல், மஞ்சள், கரும்பு, வாழைதான் அதிகம் விளையும். அவை தவிர, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மிளகு, உலர் பழங்கள் உள்ளிட்ட மற்ற உணவுப் பொருள்களை வெளி மாவட்டத்திலுள்ள எங்களைப் போன்ற பிற உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து வாங்குவோம்.

இந்த நிலையம் தவிர, அருகிலுள்ள கோபிசெட்டிப்பாளையத்திலும் விற்பனைக்கூடம் வெச்சிருக்கோம். இவற்றில் பொதுமக்கள் நேரடியாக தேவையான உணவுப் பொருள்களை வாங்கலாம். தவிர, எங்களைப் போன்ற பிற உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யறோம். ஐரோப்பாவுக்கு செவ்வாழை ஏற்றுமதி செய்ய ஆர்டர் கிடைச்சிருக்கு. அடுத்த மாசத்துல இருந்து வாரம் 20 டன் வீதம் ஒரு வருஷத்துக்கு இந்த ஆர்டர் கைவசம் இருக்கும். உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள்கூட எங்களைத் தொடர்புகொண்டு வியாபாரம் செய்ய முன்வர்றாங்க. புதுசா 500 விவசாயிகளை எங்க நிறுவனத்தில் சேர்க்க முடிவெடுத்திருக்கோம். விற்பனை தவிர, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் இலவசமாகவே கொடுக்கிறோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

10 இயக்குநர்கள் மற்றும் 11 பணியாளர்களுடன் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 140 வகையான உணவுப் பொருள்களை நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் விற்பனை செய்கிறார்கள். சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் தற்போது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்வரை வர்த்தகம் நடக்கிறது.

“ரெண்டு டிகிரி முடிச்சிருந்தாலும், வெளி வேலைக்குப் போற வரைக்கும் கிராமப்புறப் பெண்களுக்கே உண்டான தயக்கம், தடுமாற்றம் எனக்கும் இருந்துச்சு.

இந்த நிறுவனப் பொறுப்புக்கு வந்த பிறகு, வியாபார விஷயமா வெளியூர்களுக்குத் தனியாவே போறேன். கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த பயிற்சி வகுப்புக்கும் தனியாவே போயிட்டு வந்தேன். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையா இருக்கிறதே சவாலான காலகட்டத்தில், ஆயிரம் உறுப்பினர்கள் கைகோத்து இருக்கிறதுதான் எங்க நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம். நம்பிக்கையுடன் உழைக்கத் தயாரா இருந்தால், எல்லோருக்கும் வெற்றி உறுதிதான்!”

- தம்ஸ்அப் காட்டிச் சிரிக்கிறார் கவிதா!

நீங்களும் ஆகலாம் சி.இ.ஓ!

“விவசாயத்தில் அனுபவமும் ஆர்வமும் உள்ள பெண்கள் உட்பட படித்தவர்கள் எவரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கி தொழில்முனைவோராகலாம்” என்று நம்பிக்கையூட்டும் கவிதா, அதற்கு எளிமையான வழிகளைக் காட்டுகிறார்.

* விவசாய அனுபவம் உள்ளோர், இல்லாதோர், கிராமத்தினர், நகரப்பகுதியினர்கூட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் வேளாண்துறை சார்ந்த பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* அருகிலுள்ள நபார்டு வங்கியை அணுகி தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து, முறையான பயிற்சி பெற வேண்டும். குறைந்தபட்சம் 50 விவசாயிகளை குழுவாக இணைத்து, முறையான திட்ட அறிக்கை சமர்ப்பித்து, வேளாண்துறையின் அனுமதி பெற்ற பிறகு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்கலாம்.

* தங்கள் பகுதியிலுள்ள வேளாண்துறை அலுவலத்தின் மூலமும் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க முன்வருவோருக்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும்.

* முதல் மூன்றாண்டுகளுக்கு உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்யும். மேலும், குழுவிலுள்ள ஒவ்வொரு விவசாயி பெயரிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு ஏற்பவும், ஒருவர் பெயரில் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரையிலும் அரசின் மானியத் தொகையும் கிடைக்கும். இதனை நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism