Published:Updated:

பழைய டயரிலிருந்து ரூ.10,000 - 50,000 வரை விலைபோகும் பொம்மைகள்... அசத்தும் செங்கல்பட்டு தம்பதி!

முழுக்க முழுக்க கார், லாரி ஆகியவற்றின் பழைய டயர்களால் செய்யப்படும் பொம்மைகள். பயன்படாத டயர்களுக்கு புது உருவம் கொடுக்கிறதுதான் எங்களோட தொழில்.

செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் சாலையோரத்தில் நான்கு, ஐந்து அடி உயரத்திலுள்ள மான், கரடி, குரங்கு பொம்மைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனருகில் சென்று தொட்டுப் பார்த்தபோது அவை பிளாஸ்டிக் பொம்மைகள் இல்லை என்பது உறுதியானது. ஆச்சர்யத்துடன் இது என்ன வகை பொம்மைகள் எங்கு பயன்படுகிறது எனப் பொம்மைகள் தயாரித்துக்கொண்டிந்த பெண்ணிடம் விசாரித்தேன்.

"இது பழைய டயர்களால் செய்யப்படும் பொம்மைகள். கார், லாரியின் பயன்படாத டயர்களுக்குப் புது உருவம் கொடுப்பதுதான் எங்களின் தொழில். புது ஐடியா என்பதால் நிறைய பேர் தேடி வந்து வாங்கிகிட்டுப் போறாங்க" என்றவர், டயரில் பொம்மைகள் தயாரித்துக்கொண்டே பொம்மைகள் தயாரிக்கும் விதம் பற்றி பேச ஆரம்பித்தார்.

டயர் பொம்மைகள்
டயர் பொம்மைகள்

"என்னோட பெயர் கவிதா. எங்களுக்குச் சொந்த ஊரு திருக்கழுக்குன்றம். எங்களுக்குத் திருமணமான புதிதில் என் கணவர் வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுற கடை வைத்திருந்தார். புதுப் புது டிசைன்களில் ஸ்டிக்கர்களை ரெடி பண்ணிகிட்டே இருப்போம் என்பதால் எங்களுக்கு கஸ்டமர்கள் அதிகம். இது தவிர, சின்னச் சின்ன வெல்டிங் வேலைகள், குழந்தைகளுக்கான பார்க் ரெடி பண்ற ஆர்டர்கள்னு கிடைக்கிற வேலைகளையெல்லாம் எடுத்துச் செய்வோம்.

டெங்கு காய்ச்சல் பரவின நேரம் எங்க ஏரியாவில் பயன்படாமல் இருந்த டயர்கள், குப்பைகளையெல்லாம் பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செஞ்சாங்க. சுத்திகரிப்பின்போது சேகரிச்ச டயர்களையெல்லாம் எங்க ஏரியாவில் ஒரு இடத்தில் குவிச்சு வைத்திருந்தாங்க. இவ்வளவு டயரை வெச்சு என்ன பண்ணுவீங்கனு கேட்டப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எரித்தாலும் அந்தப் புகையால் காற்று மாசுபடும்னு புலம்புனாங்க. அப்போ பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த கேசவன் சார், வெளிநாடுகளிலெல்லாம் பயன்படாத டயர்களில் வீட்டு உபயோகப் பொருள்கள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள்னு பல விதத்தில் மாற்றி பயன்படுத்துவாங்கனு சொல்லி சில போட்டோக்களைக் காட்டுனாங்க. வெளிநாடுகளில் செய்ய முடியுதுன்னா எங்களாலும் செய்ய முடியும்னு எனக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

ஒரு டன் டயர்கள் 14,000 ரூபாய். 14 பொம்மைகள் வரை தயார் செய்யலாம்.
கவிதா
`மாட்டுச் சாணத்தில் செல்போன் ஸ்டாண்டு உள்ளிட்ட 100 கலை பொருள்கள்!'- அசத்தும் மதுரை கணேசன்

எங்க வீட்டுக்காரரிடம் சொன்னேன். முதலில் தயங்கினாலும் ஒரு முயற்சிசெய்து பார்க்கலாம்னு சொன்னார். பேரூராட்சியில் அனுமதிகேட்டு சில டயர்களை வீட்டுக்கு எடுத்துகிட்டு வந்தோம். புதுசா என்ன பண்ணலாம்னு யோசித்தோம். பல மாச முயற்சிக்குப் பின்தான் பொம்மைகள் செய்வது முழுமையாகக் கைக்கூடுச்சு. சில பொம்மைகள் செய்து செயல் அலுவலருக்கு வாட்ஸ் அப் பண்ணினோம். 'அருமையா இருக்கு'னு சொல்லி அதையெல்லாம் எங்க ஏரியாவில் இருந்த பூங்காவுல வைக்கச் சொன்னாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'டயரில் தயாரிச்ச பொம்மையா'னு எல்லோருமே ஆச்சர்யமாக பார்த்தாங்க. எங்க ஏரியாவில் இருக்கும் எல்லா பூங்காக்களிலும் பொம்மைகள் வைக்க ஆர்டர்கள் பேரூராட்சி மூலமாகக் கிடைச்சுது. பூங்காவின் இடத்தைப் பொறுத்து என்ன பொம்மைகள் வைக்கலாம்னு முடிவு பண்ணி தயாரிப்போம். பொம்மைகளுக்கு ஏற்றாற்போல பணம் வசூல் பண்ணினோம்.

டயர் பொம்மைகள்
டயர் பொம்மைகள்

பூங்காவில் டயர் பொம்மைகளைப் பார்த்த நிறைய பேர், அவங்க வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்க ஆர்டர் பண்ணினாங்க. பிறகு, கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம்னு பல இடங்களுக்கான ஆர்டர் வந்துச்சு. ஆர்டர் வந்திருக்கும் பொம்மைகளுக்கு ஏற்ற மாதிரி டயர்கள் இல்லைன்னா, வெளியூர்களிலிருந்து வர வைப்போம். ஒரு டன் டயர் 14,000 ரூபாய். அதை வெச்சு, 14 பொம்மைகள் வரை செய்யலாம்" என்ற கவிதாவிடம் பொம்மைகள் தயாரிக்கும் முறைகளைக் கேட்டோம்.

"டயரில் பொம்மைகள் தயாரிக்கிறது சாதாரண வேலையில்லை, கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும். முதலில், டயரை வாங்கிட்டு வந்து, இரும்பு அல்லது அலுமினியத்தில் இருக்கும் வீலைத் தனியா எடுப்போம். பிறகு, நடுப்பகுதியை மட்டும் வைத்துவிட்டு, ரெண்டு பக்கம் உள்ள கெட்டியான பகுதிகளை வெட்டி எடுப்போம். மீதமிருப்பதே டயர் மெட்டீரியல். அதை சுத்தியால் அடித்து சமப்படுத்துவோம். பிறகு, அதை இலை போன்று ஒரே வடிவத்தில் வெட்டி வெச்சுப்போம். கஸ்டமர்கள் என்ன உருவம் ஆர்டர் சொல்லிருக்காங்களோ உருவத்தை முதலில் இரும்பு பயன்படுத்தி வெல்டிங் செய்து அதை ஒரு உருவமாக செஞ்சு வெச்சுக்குவோம்.

வெட்டி வெச்சிருக்கிற டயர்களை இரும்பு உருவத்தோடு இணைத்தால் பொம்மை தயார். சொல்லும்போது சாதாரணமாகச் சொல்லிட்டேன். ஆனால், இதைத் தெரிஞ்சுக்கிறதுக்கு நாங்க ஆறு மாசம் ரொம்பவே சிரமப்பட்டோம். அதுக்கு நிறைய உழைப்பும் பணமும் தேவைப்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து இது எதுக்கு வேண்டாத வேலைனு விட்டுறலாம்ன்னுகூட கணவர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனால், அவர்தான் முழு நம்பிக்கையோடு அடுத்தடுத்து செய்துகிட்டே இருந்தார். கடை வேலையைப் பார்த்துக்கிட்டு இரவு வீட்டுக்கு வந்து டயர் பொம்மைகளைச் செய்து பார்ப்பார். நான் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு ஹெல்ப் பண்ணுவேன். நிறைய வீடியோக்களும் எங்களுக்கு கை கொடுத்துச்சு. தொடர்ச்சியான முயற்சிதான் இப்போ எங்க அடையாளமாக மாறியிருக்கு" என்றார் கவிதா பெருமையுடன்.

கவிதா பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர் கணவர் அசோக் குமாரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

"ஒரு பொம்மை செய்ய ஒரு வாரமாயிடும். ஆரம்பத்தில் நானும் என் மனைவியும் மட்டும் பொம்மைகள் தயாரித்தோம். வேலை அதிகமாகிவிட்டதால இப்போ ரெண்டு பேரை வேலைக்கு வெச்சிருக்கோம்.

டயர் பொம்மைகள்
டயர் பொம்மைகள்
விற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல்! - புதிய தொடர் - 1

பொம்மையின் தலையை உருவாக்குவதுதான் ரொம்ப சிக்கலான வேலை. கொஞ்சம் சொதப்பினாலும் ஒட்டு மொத்த உழைப்பும் வேஸ்டாயிரும். அதனால, பொம்மைகளின் தலையை உருவாக்கிற வேலையை எப்போதும் நான் மட்டும்தான் செய்வேன். அதன் பின் பெயின்டிங் வேலை, காலில் இரும்பு பொருத்தும் பணினு ரெண்டு நாள் வேலையிருக்கும். டயர் வாங்குவதிலிருந்து பொம்மைகளை, தகுந்த இடத்தில் பொருத்துகிற வரை எல்லா வேலைகளையும் கஸ்டமர்களின் விருப்பமறிந்து செய்துகொடுப்பதால் நிறைய ஆர்டர்கள் வருகின்றன.

டயர் பொம்மைகள் செய்ய மெட்டீரியலுக்கு குறைவான செலவு தான் ஆகும். ஆனா, கூலி அதிகம். பொம்மையின் உருவம், டிசைன், உயரம் பொறுத்து 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை விலையை நிர்ணயிப்போம். மாசம் ஐந்து முதல் பத்து ஆர்டர்கள் வரை எடுத்துச் செய்துகொடுக்கிறோம்.

டயர் பொம்மைகள்
டயர் பொம்மைகள்
Vikatan

புதுமைக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும். அதுவும் மறுசுழற்சி முறையில் ஒரு பொருளைத் தயார் செய்து தருவதால் பாராட்டும் கிடைக்குது. அடுத்தபடியாக வெளி மாநிலங்களுக்கும் பொம்மைகள் தயார் செய்துகொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இன்னிக்கு சக்ஸான பிசினஸாக மாறி, வருமானம் தருது" என்று வெற்றிக்கதையைச் சொல்கிறார் அசோக்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு