தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நேற்று ஜீரோ... இன்று கோடிகளில் வர்த்தகம்! - துர்கா தாஸின் பவுன்ஸ்பேக் கதை

துர்கா தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
துர்கா தாஸ்

வழக்கமான வேலையா இல்லாம, எதிர்காலத் தேவைக்கு ஏத்த மாதிரி புதுமையா ஏதாச்சும் செய் யணும்தான் இந்தத் தொழில்ல இறங்கினேன்.

மாத்தி யோசிப்பவர்கள் மட்டுமே மாற்றத்தை உருவாக்கும் வெற்றியாளர் களாக மாறுகிறார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் துர்கா தாஸ், எளிய முறையில் தண்ணீர் தயாரிப்பதற்கான மாற்று வழியை இந்தியாவில் பிரபலப்படுத்திவரும் தொழில்முனைவோர்.

காற்றிலிருந்து தொலைத்தொடர்பு சேவைக் கான அலைக்கற்றை, மின்சாரம் தயாரிப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கேள்விப் பட்டிருப்போம். காற்றிலிருந்து தண்ணீர்... கேட்கவே புதுமையான இந்த ஒன்லைன் கான்செப்டை பிசினஸாகச் செய்து வெற்றிகண்டிருக்கிறார் துர்கா.

கலர்ஃபுல் வாழ்க்கை திடீ ரென கசந்துபோக, ஜீரோவி லிருந்து மீண்டும் பவுன்ஸ்பேக் செய்து மீண்டெழுந்தவரின் தன்னம்பிக்கை, வெற்றியாளராக இவரை நிலைநிறுத்தியிருக்கிறது.

“செல்வாக்கான எங்க குடும்பம், அப்பாவுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தால, சீட்டுக்கட்டுப்போல சரிஞ்சுடுச்சு. குடும்பத்தைக் காப்பாத்த, ஸ்போர்ட்ஸ் ஷாப், ஐஸ்க்ரீம் பிசினஸ், டீத்தூள் டிரேடிங், விளம்பர ஏஜென்சினு 19 வயசுக் குள்ளேயே பிசினஸ்ல நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துட்டேன். அந்த நேரத்துல நேஷனல் லெவல் கிரிக்கெட் பிளேயராவும் இருந்தேன். என் 21 வயசுல அப்பா தவறிட்டார். அந்த இழப்புலேருந்து மீண்டு வர்றத்துக்குள்ள, எனக்கு ஏற்பட்ட பிரெயின் ட்யூமரால பெரும் சோதனையை எதிர் கொண்டேன்.

என்னைப் புதுப்பிச்சுக்க சில நாடுகளுக்குப் போனேன். ஒருகட்டத்துல கையிலேருந்த பணமெல்லாம் காலியாகவே, என் சிகிச்சைக்காக, ஒரு வீட்டுல பணியாளராவும், அமெரிக்காவுல ஓர் உணவகத்துல வெயிட்டராவும் வேலை செஞ்சேன். நிலையான வீடுகூட இல்லாம கஷ்டப்பட்ட அந்தக் காலம்தான், வாழ்க்கைக்கான பிடிப்பைக் கத்துக் கொடுத்துச்சு. உடல்நிலையைச் சரிப்படுத்திகிட்டு, புது மனுஷியா மாறி, அமெரிக்காவுல 25 வருஷங்கள் டெக்னாலஜி துறையில வேலை செஞ்சேன்” - நேர்மறை எண்ணத்துடன் மகிழ்ச்சியான வாழ்க் கைக்குத் திரும்பிய துர்கா, 2012-ல் சென்னை திரும்பி யுள்ளார். பிறகு, தொழில்முனைவோராகச் சில ஆண்டுகள் செயல்பட்டவர், 2019-ல் ‘Aeronero’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துக் கொடுக்கிறார். இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை விளக்கிய படியே தொடர்ந்தார் துர்கா...

“வழக்கமான வேலையா இல்லாம, எதிர்காலத் தேவைக்கு ஏத்த மாதிரி புதுமையா ஏதாச்சும் செய் யணும்தான் இந்தத் தொழில்ல இறங்கினேன். 15 வருஷங் களுக்கு முன்பே இஸ்ரேல்ல அறிமுகமான இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுல அப்போ சாத்தியமாகலை. வருஷக்கணக்குல மெனக்கெட்டு, நம்ம நாட்டுக்கும் பருவநிலைக்கும் ஏத்த மாதிரி இயந்திரத்துல மாற்றங் களைச் செஞ்சோம். நினைச்சது போலவே எங்க தயாரிப்பு வெற்றி யடைஞ்சது. நிலப்பரப்பிலிருக்கிற நீர் ஆவியாகி, மேகக்கூட்டங்களா மாறி, மழைப் பொழிவு நடக்கிற மாதிரியே தான் இந்தத் தொழில்நுட்பமும். ஈரப்பதமான காற்றை உள்ளிழுத்து, அதிலிருந்து செயற்கையான முறையில மேகக்கூட்டம் போல உருவாக்கி, நீர் எடுத்து, அதைச் சுத்திகரிச்சு, குடிநீரா மாத்துறதுதான் இதோட செயல்முறை.

துர்கா தாஸ்
துர்கா தாஸ்

ராக்கெட் சயின்ஸ் மாதிரி இதுல கடினமான தொழில்நுட்பம் இல்லை. ஆனா, எளிமையாவும், கட்டுப் படியான விலையிலயும் இதைச் செஞ்சு காட்டுறதுதான் சாமர்த்தியமே. கண்டென்சர், கம்ப்ரெஸர், எவாப்ப ரேட்டர், காயில்ஸ்னு அடிப்படையா நாலு ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்தான் இதுல முக்கியம். pH அளவு 6.5 - 8 இருக்கிற நீரைக் குடிக்க உகந்த ‘அல்கலைன் வாட்டர்’னு சொல் வாங்க. இந்த மெஷின்ல கிடைக்கிற நீர்லயும் இதே pH அளவுதான் இருக்குது. பலகட்டங்கள்லயும் சுத்திகரிப்பு நடக்கிறதால காத்து மாசுபட்டிருந்தாலும் ஃபில்டரிங் புராசஸ் மூலமா தூய்மையான தண்ணீர்தான் உற்பத்தி செய்யப் படும்” என்பவர், மாதத்துக்கு 50-க்கும் அதிகமான இயந்திரங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறார்.

“பொது இடங்கள்ல பயன்படுத்த ஏதுவா 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய இயந்திரங்களைத் தான் ஆரம்பத்துல வடிவமைச்சோம். பிறகு, வீட்டுப் பயன்பாட்டுக்கு ஏத்த மாதிரி, 10 லிட்டர்லேருந்து தேவைக்கேற்ற அளவுல இயந்திரங்களை வடிவமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சதும் ஆர்டர்கள் அதிகரிச்சது.

காத்துல ஈரப்பதம் அதிகமிருக்கும் இரவு நேரத்துல, 12 – 15 மணி நேரம் இந்த இயந்திரம் இயங்கினாலே டேங்க் நிரம்பிடும். அதுல நீர் குறையுறதுக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் நீர் உற்பத்தியாகிட்டே இருக்கும்.

ஒரு மெஷின் 7 – 10 வருஷங்களுக்குப் பயன்தரும். குடிநீர், வீட்டுத்தேவை, உற்பத்தி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஹோட்டல், மருத்துவமனைகள்ல இந்த மெஷினைப் பயன்படுத்துறாங்க. மின்சாரம், மெஷின் வாங்கிய மூலதனச் செலவு எல்லாம் சேர்த்து ஒரு லிட்டர் நீர் தயாரிக்க 2 – 3 ரூபாய் செலவாகும். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இயந்திரம் 25,000 ரூபாய்க்கு விற்கப்படுது.

ஊழியர்களுடன்... துர்கா தாஸ்
ஊழியர்களுடன்... துர்கா தாஸ்

குடிநீர் தட்டுப்பாடும், நீர் மாசுபாடும் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடு களுக்கும் சவாலா உருவெடுத்திருக்கு. அதனால நமக்கான குடிநீரைச் சுகாதாரமான முறையில நாமே தயாரிச்சுக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும். அடுத்த அஞ்சு வருஷங்கள்ல உலகம் முழுக்க இந்தத் தொழில்நுட்பம் மூலமா 10 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கும்னு கணிக்கப்பட்டிருக்கு” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் துர்கா.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் தலா 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இயந்திரத்தை வடிவமைத்துக் கொடுத் திருக்கிறார் இவர். தன் நண்பருடன் இணைந்து ‘Wassup Laundry’ என்ற பெயரில் நடத்திவரும் தன் மற்றொரு தொழிலுக்கு, காற்றிலிருந்து நீரைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவதுடன், அந்த நீரை மறுசுழற்சி செய்து நீர் சிக்கனத்தை யும் கடைப்பிடிக்கிறார்.

“முதல்கட்டமா ஒரு லாண்டரி ஃபேக்டரி யில, மறுசுழற்சி செஞ்சு நீரைப் பயன் படுத்துறோம். நீர் தேவையைக் கணிசமா குறைக்க முடியுது. இந்தச் செயல்பாட்டை எங்களோட மற்ற மூணு ஃபேக்டரியிலும், புதுசா தொடங்கவிருக்கும் ஃபேக்டரிகள்லயும் பயன்படுத்தப் போறோம்” - நாளைய கனவுகள் சொல்பவர், தன் இரண்டு தொழில்கள் மூலமாகவும் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான படகோட்டிப் போட்டிகளிலும் (Sailing) விளையாடி வருகிறார் இவர்.

“மத்தவங்க என்ன நினைப்பாங்களோ, சொல்வாங்களோங்கிற எண்ணம்தான் மன அழுத்தமும் உளவியல் சிக்கலும் ஏற்பட முக்கிய காரணம். அப்படியான எண்ணத்துல நானும் தவிச்சிருக்கேன். ‘அந்த நாலு பேரின் பேச்சு’க்கெல்லாம் வெளிநாட்டினர் பெரிசா முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. அதே அணுகுமுறை தான் இப்போவரை என்னை இயக்கிட்டிருக்கு. வாழ்க்கையில சறுக்கல் வந்தாலும் நிச்சயம் மேல வர முடியும்ங்கிற நம்பிக்கையுடன், நியாயமான உழைப்பைக் கொடுத்தா, நிச்சயம் நம் கிராஃப் உயரும்” என்று தன் உத்வேகத்துக்கான காரணத்துடன் முடித்தார் துர்கா.