தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

என் டிராக்டர்தான் எனக்குத் துணை! - விழுந்த குடும்பத்தை எழவைத்த எஸ்தர்

எஸ்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்தர்

நானும் அம்மாவும் மட்டும் தனியா வீட்டுல கிடந்தோம். கொலைகாரக் குடும் பம்னு சொல்லி சொந்தபந்தம், ஊர்க்காரவங்க எல்லாரும் எங்களை ஒதுக்கினாங்க.

குடும்பத்துக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த, குடும்பப் பொறுப்புக்காகத் தைரியமும் தன்னம்பிக்கையும் பழகிக் கொண்ட பெண்கள் இங்கு பலர். அப்படி ஒருவர்தான் பட்டுக்கோட்டை, ஆண்டிக் காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்தர் ஜெலீமா. அப்பா, சகோதரர்கள் என்று தன் வீட்டில் மூன்று ஆண்களும் சிறைச் சாலைக்குச் செல்ல நேரிட, டிராக்டர் ஸ்டியரிங் பிடித்து, திருமணம் தவிர்த்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி கரை சேர்த்திருப்பவர்.

நாம் சென்றபோது எஸ்தர் உழவு ஓட்டிக்கொண்டிருக்க, டிராக்டர் மேடு, பள்ளத்தில் ஏறி இறங்கும்போது சாய்ந்துவிடுவது போல இருப்பதைப் பார்த்தபோது மனசு பதறுகிறது. ஆனால், அவர் அநாயாசமாக டிராக்டரைத் திருப்பி நிறுத்துகிறார்.

என் டிராக்டர்தான் எனக்குத் துணை! - விழுந்த குடும்பத்தை எழவைத்த எஸ்தர்

‘`அப்பா அருளானந்தம், அம்மா ஞானமேரி. விவசாயத்தை வாழ்வாதாரமா கொண்ட குடும்பம். அண்ணன், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பி இருக்காங்க. என் ரெண்டு அக்காவுக்கும், அண்ணனுக்கும் கல்யாணம் முடிஞ்சது. அண்ணன் தனிக்குடித்தனம் போயிட்டாரு. எனக்கு அப்போ 26 வயசு. வீட்டுல மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ எங்க மொத்த வாழ்க்கையவும் புரட்டிப் போடுற அந்தச் சம்பவம் நடந்துச்சு. எங்களுக்கும் எங்க சித்தப்பா குடும்பத்துக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையில, அவங்க தரப்புல ஒருத்தர் உயிரிழந்துட்டார். வயல், வேளாண்மை என்றிருந்த குடும்பம் கொலை வழக்குல சிக்கவே, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்னு அலைய ஆரம்பிச் சதுல நிலை குலைஞ்சு போச்சு. அப்பாவுக்கும் ரெண்டு தம்பிகளுக்கும் ஆயுள் தண்டனை கொடுத்துச்சு கோர்ட்’’ - வாழ்வின் திசையே மாறிப்போக, எதிர்நீச்சல் அடிக்க ஆரம்பித் திருக்கிறார் எஸ்தர்.

``நானும் அம்மாவும் மட்டும் தனியா வீட்டுல கிடந்தோம். கொலைகாரக் குடும் பம்னு சொல்லி சொந்தபந்தம், ஊர்க்காரவங்க எல்லாரும் எங்களை ஒதுக்கினாங்க. நல்லது கெட்டதுக்குக் கூப்பிட மாட்டாங்க. நேர்ல பார்த்தாலும் பேசாம வெடுக்குனு மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் போவாங்க. சொல்லப் போனா, சிறையில இருந்த எங்கப்பா, தம்பிங் களைவிட நானும் அம்மாவும்தான் சமுதாயப் புறக்கணிப்புங்கிற கொடுமையான தண்டனையை அனுபவிச்சோம். வெள்ளா மைய கவனிக்க ஆளில்ல. சாப்பாட்டுக்கும் வழியில்ல. வயல குத்தகைக்குக் கொடுத்தேன். விளைச்சலுக்கு தகுந்தாப்ல நெல்லு தருவாங்க. அத வெச்சு சாப்பிட்டு வாழ்க்கைய ஓட்டுனோம். இப்புடியே நாலு வருஷம் ஓட, காயமும் கண்ணீரும் கொஞ்சம் ஆறி இருந்துச்சு. நாமளும் வாழ்ந்து காட்டணும்னு மனசுக்குள்ள வைராக்கியம் ஏற்பட்டுச்சு’’ என்று சொல்லும் எஸ்தர், ஒரு கிராமத்துப் பெண் துணியாத காரியங்களையெல்லாம் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் செய்ய ஆரம்பித் திருக்கிறார்.

‘`குத்தகைக்குவிட்ட எங்களோட ஏழு ஏக்கர் வயலை திருப்பி, நானே விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ‘இவளுக்கு என்ன தெரியும் விவசாயம்...’னு பேசினாங்க. ஏதோ எனக்குத் தெரிஞ்சதை செய்தேன். லாபம் பெருசா இல்லைன்னாலும் தோத்துப் போயிடலைங்கிறதே மனசுக்கு தெம்பைக் கொடுத்துச்சு.

அப்போ, எங்க ஊருல ஒரே ஒருத்தர்தான் உழவு ஓட்டுற டிராக்டர் வெச்சிருந்தாரு. அதனால அதுக்கு எப்பவுமே டிமாண்டா இருக்கும். அப்போதான், நாமளே சொந்தமா டிராக்டர் வாங்கினா என்னனு முடிவு பண்ணினேன். பேங்குல, ஆம்பள இல்லாத வீடுனு லோன் தரல. இன்னொரு பேங்க்ல ஏறி இறங்கி, லோன் எடுத்து, டிராக்டர் வாங்கி, ஒரு டிரைவரைப் போட்டேன். எங்க கூட அதுவரை பேசாம இருந்தவங்கயெல்லாம், உழவு ஓட்ட டிராக்டர் கேட்டு எங்கூட பேச ஆரம்பிச்சாங்க. டிரைவர் வேலைக்கு வராம அடிக்கடி சிக்கல் ஆக, நாமளே டிராக்டர் ஓட்டக் கத்துக்கிட்டா என்னன்னு தோணுச்சு.

எங்க ஊரு பெரியவர் கருப்பையன், எனக்கு டிராக்டர் ஓட்டக் கத்துக்கொடுத்தார். எங்க வயலுல உழவு ஓட்டுனேன். டிராக்டர்ல டிப்பர் மாட்டிக்கிட்டு நெல் மூட்டைகள், வைக்கோல்னு ஏத்திக்கிட்டுப் போவேன். ஆம்பளைங்க எல்லாம், ‘உழவு ஓட்ட ஒரு பொம்பளையவா கூப்பிடுறது...’னு இறுமாப்பா இருந்தாங்க. என்னை நம்பி உழவு ஓட்டக் கூப்பிட்டவங்களுக்கு பிசிறாம ஓட்டிக் கொடுத்தேன். தானாகவே எல்லாரும் என்னையக் கூப்பிட ஆரம்பிச்சாங்க’’ என்பவருக்கு, அடுத்து எல்லாம் ஏணிகள்தான்.

‘`டிராக்டர், வயலுனு அதுக்குள்ளேயே பத்து வருஷம் ஓடிப்போச்சு. அம்மாவும் ஜெயில்ல அப்பாவ பார்க்கப் போகும்போதும், ‘குடும்பத்துக்காக வாழ்ந்தது போதும், உனக்கு ஒரு துணை வேணும்...’னு சொல்லுவாங்க. ‘நான் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா பெறவு உங்கள யார் பார்த்துக்குறது?’னு ஓங்கிப் பேசிடுவேன். என் டிராக்டர்தான் எனக்குத் துணைனு ஆகிப்போச்சு. அது தந்த வருமானம்தான் எனக்கு ஆதாரமாச்சு. 2006-ல புது டிராக்டர் வாங்கினேன். நடவு நேரத்துல உழவு ஓட்டுவேன். அறுவடை நேரத்துல நெல் மூட்டைகள், வைக்கோல்னு ஏத்திக்கிட்டு திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்னு 100 கிலோமீட்டர் வரை பல ஊர்களுக்குத் தனி ஆளா சவாரி போவேன்’’ என்ற எஸ்தர், நெஞ்சுரமிக்க அந்த அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டார்.

என் டிராக்டர்தான் எனக்குத் துணை! - விழுந்த குடும்பத்தை எழவைத்த எஸ்தர்

‘`ஒரு தடவை நெல் மூட்டை ஏத்திக்கிட்டு போனப்போ பஞ்சர் ஆகிடுச்சு. ராத்திரி நேரம், எனக்குக் கொஞ்சம் உதறல் எடுக்க தொடங்கிருச்சு. சரினு நானே ஜாக்கி போட்டு ஏத்தி, டயர கழட்டி தலையில வச்சு தூக்கிட்டு, நடந்தே போய் பஞ்சர் ஒட்டிட்டு வந்து மாட்டினேன்.

டிப்பரை சேர்த்து ஓட்டும்போது பின்னால இருக்குற ரெண்டு வீலை கணக்கு செஞ்சு ஓட்டணும்; இல்லைன்னா விபத்து ஏற்பட்டுடும். டிராக்டர்ல டிப்பரை கழட்டிட்டு உழவு ஓட்டுறதுக்கு ரொட்டேட்டர் மாட்டணும். அது கொறஞ்சது 250 கிலோ இருக்கும். அந்த நேரத்துல ரொம்பவே சிரமமா இருக்கும். மழை நேரத்துலயும், ரோடு இல்லாத இடத்துலயும் கவனமா ஓட்டலைன்னா வழுக்கி டிராக்டர் கவுந்துரும். ஆனாலும் எல்லாம் பழகி, இப்ப டிராக்டர் ஓட்டுறது எனக்கு தண்ணிப்பட்ட பாடா ஆகிருச்சு’’ என்ற எஸ்தர், தன் குடும்பத்தின் தற்போதைய நிலை பற்றிப் பகிர்ந்தார்.

‘`அப்பா, ரெண்டு தம்பிங்கனு மூணு பேரும் ஜெயில்ல இருந்து வந்துட்டாங்க. ஒரு தம்பிக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இன்னொரு தம்பிக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கோம். இப்ப மூணாவது முறையா புது வண்டி மாத்தியிருக்கேன். டிராக்டர் ஸ்டியரிங் பிடிச்சு 15 வருஷங்கள் ஆச்சு. கையெல்லாம் காய்ச்சுப் போச்சு. இப்ப எனக்கு 48 வயசாகுது.

ஊர்க்காரவங்க, ‘ஒண்ணும் இல்லாம போக இருந்த குடும்பத்தைத் தனி ஆளா தூக்கி கரை சேர்த்துட்டா...’னு சொல்லும்போது, உடம்புல உள்ள களைப்பெல்லாம் கரைஞ்சோடிடும். ஆனாலும் அப்பாவுக்கு மட்டும் மனசு ஆறாது. ‘அட விடுங்கப்பா... நான் குனிந்து தாலி வாங்கியிருந்தா என் குடும்பத்தைத் தலை நிமிர செஞ்சிருக்க முடியாதுல...’னு சொல்லுவேன். சி.பி.ஐ கட்சியில மாதர் சங்கத்துல என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளரா இருக்கேன். கட்சிக் கூட்டம், போராட்டம்னு எல்லாத்துக்கும் டிராக்டர்லதான் என் பயணம். தேருல போற மாதிரி ஜம்முனு இருக்கும்!”

எஸ்தர் வண்டியைக் கிளப்ப, புழுதி பறக்கிறது கெத்தாக!