Published:Updated:

முருங்கையில் 18 தயாரிப்புகள்... வருடம் ரூ.2 கோடி டர்ன் ஓவர்! - வறட்சி பூமியில் சாதிக்கும் தீபிகா

தீபிகா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா

நிரந்தரமா மூணு பெண் ஊழியர்கள், டெம்ப்ரரியா நாலு பெண் ஊழியர்கள்னு ஏழு பேர் இப்போ எங்க கம்பெனியில வேலை பார்க்குறாங்க.

கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதி, வறட்சி காரணமாகத் தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதி களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால், இந்த வறண்ட பூமி யிலிருந்து, முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலையில் 18 வகையான உணவு மற்றும் இயற்கை காஸ்மெட்டிக் பொருள்களைத் தயாரித்து, வருடம் 2 கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்து அசத்தி வருகிறார் 25 வயதே நிரம்பிய இளம்பெண் தீபிகா.

க.பரமத்தி அருகில் உள்ள குப்பகவுண்டன்வலசு கிராமத்தில் இயங்கி வரும் தங்கள் தெழிற்கூடத்தில், தன் தந்தை ரவியோடு, வேலையாட்களிடம் ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த தீபிகாவைச் சந்தித்தோம்.

“தனியார் கம்பெனியில மேலாளராக இருந்த எங்கப்பா அதை விட்டுட்டு, 2011-ல எங்க பூர்வீகக் கிராமமான குப்பகவுண்டன்வலசுல எங்களோட பூர்வீக நிலம் மூணு ஏக்கர்ல முருங்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சார். ஆனா, இந்தப் பகுதியில வறட்சி அதிகமாகிட்டே வந்ததால, முருங்கை விவசாயத்துல பெருசா வருமானம் எடுக்க முடியலை. அடிக்கடி என்கிட்ட, ‘உலகம் முழுக்க ஊட்டச்சத்து பிரச்னை இருக்கு. மக்களோட நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைஞ் சுட்டு வருது. ரெண்டுக்கும் முருங்கை மாமருந்தா இருக்கும். அதை மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா நல்ல வரவேற்பு இருக்கும்’னு சொல்லிட்டே இருப்பார்.

முருங்கையில் 18 தயாரிப்புகள்... வருடம் ரூ.2 கோடி டர்ன் ஓவர்! - வறட்சி பூமியில் சாதிக்கும் தீபிகா

பெங்களூரில் நான் எம்.எஸ்சி இறுதியாண்டு படிச்சபோதே, 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் முருங்கைக்காயை பவுடராக்கி விற்பனை செய்யும் முயற்சியை கையில் எடுத்தோம். கரூர்ல இருந்த எங்க வீட்டுலேயே அதை தயாரிச்சோம். கம்பெனிக்கு ‘DPR Moringa’ என்றும், எங்க தயாரிப்புப் பொருள்களுக்கு ‘The Good Leaf’ என்றும் பெயர்வெச்சோம். இயற்கை முறையில் எந்த ரசாயனமும் கலக் காமல் பொருள்களைத் தயாரிச்சோம். விடுமுறை நாள்கள்ல வீட்டுக்கு வரும் நான், எங்க முருங்கை பவுடரை கோவை, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள்ல டிப்பார்ட் மென்டல் ஸ்டோர்கள், மளிகைக் கடைகள் மூலமா விற்பனை செய்ய முயற்சி செய்தேன்’’ என்பவர், படிப்பை முடித்துவிட்டு பெங் களூரில் ஒரு நிறுவனத்தில் ஓர் அனுபவத்துக்காக வேலைபார்த்துவிட்டுப் பின்னர் ஊர் திரும்பி தங்கள் நிறுவனப் பொறுப்பை முழுகையாகக் கையில் எடுத்திருக்கிறார்.

‘`மாவட்டத் தொழில் மையத்துல 40 சதவிகிதம் மானியத்துல, 25 லட்சம் ரூபாய் லோன் எடுத்தோம். 2018-ம் ஆண்டு குப்ப கவுண்டன்வலசில் தொழிற்கூடம் அமைத் தோம். முருங்கை பவுடர் அரைக்கும் மெஷின், பவுடரை காயவைக்கும் மெஷின், பேக்கிங் மெஷின்னு பல இயந்திரங்களை அமைச்சோம். ஆரம்பத்தில் பலர், ‘எங்க வீட்டுல இருக்கிற முருங்கையையே நாங்க சாப்புடமாட்டோம். இதுல முருங்கைக்காய் பவுடரை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடணுமா?’னு கேட்ட கேள்வியிலயும் நியாயம் இருந்தது. என்றாலும் சிலர், ‘நல்லாயிருக்கு. ஆனா, முருங்கை இலையில்தானே சத்து அதிகம்?’னு கேட்க, முருங்கை இலையையும் பவுடராக்கினோம். எங்க தோட்டத்தில் இலையைப் பறித்தால், முருங்கைக்காய் அதிகம் கிடைக்காது என்பதால், கோவை, தேனி, பரமத்தி வேலூர்னு பல பகுதி இயற்கை விவசாயிகளின் நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில முருங்கை இலைகளை வாங்கினோம். முருங்கைக்காய் பவுடரை விட, முருங்கை இலைப் பவுடருக்கு வரவேற்பு கொஞ்சம் அதிகமா கிடைச்சது. தொடர்ந்து ரைஸ்மிக்ஸ், சட்னி பவுடர், கேப்சூல், ஹெர்பல் டீனு பல தயாரிப்புகளை முருங்கையில் செய் தோம். ஆனாலும், எதிர்பார்த்த விற்பனை நடக்கல’’ என்பவருக்குப் பிறகுதான் கிடைத்திருக்கிறது அந்தப் பெரிய வெளி, வழி.

முருங்கையில் 18 தயாரிப்புகள்... வருடம் ரூ.2 கோடி டர்ன் ஓவர்! - வறட்சி பூமியில் சாதிக்கும் தீபிகா

‘`2020-ம் ஆண்டு தொடக்கத்துல, எங்க வலைதளம், சமூக வலைதளங்கள்னு ஆன்லைனில் பொருள்களை விற்க ஆரம்பிச் சோம். இந்தியா முழுக்க இருந்த, முருங்கை யோட அருமை தெரிஞ்சவங்களை எங்களால ரீச் பண்ண முடிஞ்சது. வெளிநாடுகள் வரை கஸ்டமர்கள் கிடைச்சாங்க. இன்னொரு பக்கம், முருங்கை இலை பவுடர் டீ, முருங்கை இலை பவுடர் கலந்த ஜிஞ்சர் டீ, முருங்கை இலை பவுடர் கலந்த துளசி டீ, முருங்கை விதை எண்ணெய்னு பல பொருள்களைத் தயாரிக்க ஆரம்பிச்சோம். அதோடு முருங்கை சோப், முருங்கை ஃபேஸ் சீரம் லிக்யுட், முருங்கை ஃபேஸ்பேக் பவுடர், முருங்கை ஹேர் சீரம் ஆயில்னு மொத்தம் 18 வகையான பொருள்களைத் தயாரிச்சோம். எல்லா பொருள்களுக்கும் கஸ்டமர்கள்கிட்ட வரவேற்பு கிடைக்க, எங்க ஃபேக்டரியை விரிவுபடுத்த ரூ. 1 கோடி ரூபாய் வரை செலவு பண்ற அளவுக்கு வருமானமும் தைரியமும் கிடைச்சது’’ என்றவர், ஊழியர்கள் மற்றும் வருவாய் குறித்தும் பகிர்ந்தார்.

“நிரந்தரமா மூணு பெண் ஊழியர்கள், டெம்ப்ரரியா நாலு பெண் ஊழியர்கள்னு ஏழு பேர் இப்போ எங்க கம்பெனியில வேலை பார்க்குறாங்க. மேலும் சென்னையை மையமா வெச்சு மார்க்கெட்டிங்குக்காக தனியார் ஏஜென்ஸி மூலமாக அஞ்சு பேர் வேலை பார்க்குறாங்க. ஆறு நாடுகள்ல எங்க கம்பெனிக்கு 37,000 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. வருடம் 2 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் அளவுக்கு எங்க கம்பெனி வளர்ந்திருக்கு. எங்க கம்பெனி தயாரிப்புப் பொருள்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தறதுதான் அடுத்த இலக்கு’’ என்று வியக்க வைத்த தீபிகா, ‘`இங்கே பொருள்களை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம். அதை மார்க்கெட்டிங் பண்றதுதான் சிரமம். ஆனா, இப்போ சமூக வலைதளங்கள் அதுக்கு வரமா கிடைச்சிருக்கு. அதை சரியா பயன் படுத்திக்கிட்டா வெற்றி எட்டும் தூரம்தான்’’ என்கிறார் சக தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனையாக.

முருங்கையில் 18 தயாரிப்புகள்... வருடம் ரூ.2 கோடி டர்ன் ஓவர்! - வறட்சி பூமியில் சாதிக்கும் தீபிகா

மகள் பேசுவதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ரவி தொடர்ந்தார். ‘`ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, சர்க்கரை நோய்னு பல பிரச்னைகளுக்கும் முருங்கை அருமருந்து. இந்த வறண்ட பூமியில இருந்து என் மகள், முருங்கையை மதிப்புக்கூட்டி உலகம் முழுக்க விற்பனை செய்றது மற்ற முருங்கை விவசாயி களுக்கு உத்வேகம் தந்திருக்கு. ஆரம்பக் காலத்தில், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் சார் எங்களுக்குக் கொடுத்த உத்வேகத்தையும் குறிப்பிடணும். க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் உள்ள 90 சத விகித விவசாயிகள் முருங்கை விவசாயம்தான் செய்யுறோம். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி யில், இந்த ரெண்டு ஒன்றியங்கள்ல இருந்துதான் 60 சதவிகித உற்பத்தி நடக்குது. அதை மதிப்புக் கூட்டி விற்கும் யோசனைதான் என்கிட்ட இருந்தது, செயல்படுத்த நம்பிக்கை இல்லை. என் மகள் அதை செய்து காட்டியிருக்கார்’’ - பெருமையும் பூரிப்புமாகச் சொல்கிறார்.

இது மகள்களின் யுகம்!