Published:Updated:

நைட்டி பிசினஸ்... மாதம் நாலு லட்சம் வருமானம்! முத்துமாரியின் `மாத்தியோசி' கதை

சு.சூர்யா கோமதி

நைட்டி மற்றும் நைட் டிரஸ்களைத் தைத்து விற்பனை செய்துவரும் முத்துமாரியின் மாத விற்பனைத் தொகை 4 லட்சம் ரூபாய்.

பிசினஸ்
பிசினஸ்

" இரவு நேர ஆடையான நைட்டியைப் பெண்கள் பகலில் அணிகிறார்கள் எனப் பலரும் சொல்லி வந்தாலும், பெண்களிடம் நைட்டிக்கான மவுசு குறையறதே இல்ல. விதவிதமான நைட்டிகள் எப்போதும் பெண்களின் விருப்பமாகவே இருக்கிறது. நைட்டியிலும் காலர், நெக், ஸ்லீவ்கள் என வெரைட்டியான டிசைன்களைப் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பதுக்கு ஏற்றவாறும் டிரெண்டியாகவும் தயார்செய்து விற்க ஆரம்பித்தால் சக்சஸ்தான்" என உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த முத்துமாரி. நைட்டிக்கான துணி தேர்வு, விற்பனை செய்யும்விதம் உள்ளிட்ட நைட்டி தயாரிப்பில் உள்ள சாதக பாதகங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் முத்துமாரி.

பிசினஸ்
பிசினஸ்

" நாம செய்யும் தொழில்களில் இது கெளரவமானது; இது கெளரவக் குறைச்சல்னு எதையும் ஒதுக்க முடியாதுங்க. நம்ம மனசாட்சிக்கு உட்பட்டு, நேர்மையான முறையில் செய்யுற எல்லாத் தொழில்களுமே நல்ல தொழில்தான். நான் நைட்டி பிசினஸ் பண்ணப் போறேன்னு சொன்னப்ப, ஆரம்பத்துல நிறைய பேர் சிரிச்சாங்க. அதெல்லாம் ஒரு பிசினஸானுகூட உதாசினப்படுத்தியிருக்காங்க. பேங்க்கில் லோனும் கிடைக்கல. ஆனாலும் துணிஞ்சு பிசினஸ்ஸை ஆரம்பிச்சேன்.

 என் கணவர் பத்தாம் வகுப்பு படிச்சிருக்காரு. நான் எட்டாம் வகுப்பு படிச்சிருக்கேன். கல்யாணமான புதிதில் என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போயிட்டு இருந்தார். நான் குடும்பத்தைப் பார்த்துட்டு வீட்டில் இருந்தேன். குழந்தைகள் பிறந்த பிறகு, அவரோட வருமானம் போதுமானதாக இல்ல. அதனால, இரவு பகலா உழைக்க ஆரம்பிச்சாரு. எங்களுக்காக அவரு தனி ஒரு மனுஷனா கஷ்டப்படுறத பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவருக்கு உதவியா இருக்கலாம்னு நானும் வேலைக்குப் போறேன்னு சொன்னேன். ஆரம்பத்தில் வேண்டாம்னு சொன்னாரு. நான் கட்டாயப்படுத்திக் கேட்டதால சம்மதிச்சார். நிறைய இடங்கள்ல வேலைகேட்டுப் போனேன். படிப்பு இல்லாததால் வேலை கிடைக்கிறது கஷ்டமாக இருந்துச்சு.

கடைகளுக்கு மொத்தவிலைக்கு விற்பனை செய்யும்போது நம்மளோட லாபத்தை பாதியாக குறைக்கவேண்டியிருந்தது. நைட்டி வாங்கும்போதே மொத்த பணத்தையும் கொடுக்க மாட்டாங்க. அதனால நூற்றுக்கணக்கில் கடைகளுக்கு நைட்டி சப்ளை பண்றதைவிட, சில்லறை விலைக்கு விற்பனை செய்றவங்க தான் என்னோட கஸ்டமர்கள்.
முத்துமாரி

அப்போதான் கோயம்புத்தூரில் நைட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நைட்டி தைச்சுச் கொடுக்க ஆள் எடுக்கிறாங்கன்னு தகவல் தெரிஞ்சுது. எனக்கு தையல் தெரியும்ங்கிறதால அந்த வேலையில் சேர்ந்துட்டேன். சிறுவாட்டுக் காசை எடுத்து ஒரு தையல் மிஷின் வாங்கினேன். நைட்டி நிறுவனங்களிலேருந்து மொத்தமாகத் துணியை வாங்கிட்டு வந்து, அவங்க சொல்லும் அளவுகள் மற்றும் டிசைன்களில் நைட்டியைத் தைச்சு எடுத்துட்டுப் போயி, மறுநாள் போய் கொடுத்துட்டு வருவேன்.

ஒரு நைட்டி தைச்சா எட்டு ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 20 நைட்டி வரை தைப்பேன். தினமும் 160 ரூபாய் கிடைச்சுட்டு இருந்துச்சு. ஒரு நாளைக்கு 50 நைட்டிகள் வரை தைக்கும் பெண்கள் இருக்காங்க. ஆனா, நான் தைக்கும் நைட்டிகளில் ஃபினிஷ்ங் நல்லா இருக்கணுங்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பேன். குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு தைக்க வேண்டியிருந்ததால், ஒரு நாளைக்கு 20 நைட்டிதான் ரெடி பண்ண முடிஞ்சுது. பசங்களுக்கு ஸ்கூல் லீவ்னா இன்னும் குறைச்சலான நைட்டிதான் தைப்பேன்.

நைட்டி
நைட்டி

நான் வீட்டில் வெச்சு நைட்டி தைப்பதால, வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க எல்லோரும் நைட்டியை விலைக்குக் கேட்பாங்க. நிறுவனத்தில் சொன்னப்போ, கம்பெனி சொல்லுற விலையை அவங்களுக்குக் கொடுத்திரணும். அதிக லாபம் வெச்சு வேண்டுமானால் விற்பனை செஞ்சுக்கலாம்னு சொன்னாங்க. எனக்கு மொத்தவிலையில் கிடைக்கும் நைட்டியை, கடை விலைக்கு வெச்சு விற்பனை செய்யும்போது ஒரு நைட்டிக்கு 50 ரூபாய்வரை லாபம் கிடைக்க ஆரம்பிச்சுது.

நைட்டி தைக்கிறதோடு சேர்த்து நைட்டிகளைச் சில்லறை விலைக்கு விற்கவும் ஆரம்பிச்சேன். நைட்டியை தைச்சுக் கொடுப்பதைவிட விற்பனை செய்வதில் நல்ல லாபம் கிடைச்சுது. நான் சம்பாதிக்கும் தொகையை சேமிச்சு வெச்சுட்டே வந்தேன். சில்லறை விலைக்கு என்கிட்ட நைட்டி வாங்குற கஸ்டமர்களும் அதிகரிச்சுட்டே வந்தாங்க. ஒரு கட்டத்துக்கு மேல் நாமளே தனியாகத் துணி வாங்கி நைட்டி தயார் செய்தால், இன்னும் லாபம் அதிகரிக்குமேன்னு தோணுச்சு.10,000 ரூபாய்க்கு துணிகள் வாங்கி என்னுடைய பிசினஸ்ஸை ஆரம்பிச்சேன்.

பிசினஸ்
பிசினஸ்

எங்களோட மெட்டீரியல் நல்லா இருந்ததால், வெளியூர்களில் இருந்து நிறைய பேர் நைட்டி கேட்க ஆரம்பிச்சாங்க. எங்ககிட்ட இருந்து நைட்டிகளை மொத்தமாக விலைக்கு வாங்கிட்டுப் போயி விற்பனையும் செய்யவும் ஆரம்பிச்சாங்க. நானே தயாரிக்கும் நைட்டி என்பதால், நிறைய புதுப்புது டிசைன்களில் தைக்க ஆரம்பிச்சேன். எங்ககிட்ட இருந்து சில்லறை விலைக்கு நைட்டி வாங்கிட்டுப் போறவங்க, சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கலர் விற்பனை ஆகலைனு ரிட்டன் கொடுப்பாங்க. அதை வேறு யாருக்காவது மாத்திவிட்டுருவேன். அதனால நிறைய பேர் கடைகளுக்கு மொத்தவிலைக்கு நைட்டி தயார் செய்து தரச் சொல்லி கேட்டாங்க. கடைகளுக்கு மொத்தவிலைக்கு விற்பனை செய்யும்போது, நம்மளோட லாபத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டியிருந்தது. நைட்டி வாங்கும்போதே மொத்த பணத்தையும் கொடுக்க மாட்டாங்க. அதனால நூற்றுக்கணக்கில் கடைகளுக்கு நைட்டி சப்ளை பண்றதைவிட, சில்லறை விலைக்கு விற்பனை செய்றவங்கதான் என்னோட கஸ்டமர்கள் என்பதில் தெளிவா இருந்தேன்.

நைட்டிகளோட தேவையும் உற்பத்தியும் பெருக ஆரம்பிச்சுது. என் கணவரும் அவர் வேலையை விட்டுட்டு என்னோட பிசினஸ்ஸுக்கு ஹெல்ப் பண்ணினார். நிறைய நைட்டிகள் தைக்கவேண்டியிருந்தால், சில பெண்களுக்கு நாங்களே நைட்டி தைக்க பயிற்சிகள் வழங்கி, துணிகளையும் கொடுத்து நைட்டி தைச்சு வாங்கிட்டு இருக்கோம். நாங்க உற்பத்தி பண்ற நைட்டி சென்னை, விழுப்புரம், உடுமலைப்பேட்டை, விருதுநகர், ராஜபாளையம்... எனத் தமிழகம் முழுவதும் நிறைய இடங்களுக்கு விற்பனைக்குப் போகுது.

முத்துமாரி
முத்துமாரி

ஹைதராபாத்திலேருந்து துணிகளை பேல் கணக்கில் விலைக்கு வாங்கிட்டு இருக்கோம். ஒரு பேலில் எட்டு பண்டல் இருக்கும். ஒரு பண்டலில் 5 கலர் துணிகள் இருக்கும். ஒரு பண்டலுக்கு 30 நைட்டி தயார்செய்ய முடியும். நிறைய கலர் டிசைன் என ஒரே நேரத்தில் நம்மிடம் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு துணிகளின் டிசைகள் மற்றும் கலர்களை வாட்ஸ் அப் பண்ணிருவேன். அவங்க தேர்வுசெய்யும் கலர் மற்றும் டிசைன்களில் நைட்டி தயார்செய்து கொடுப்பது எங்களுடைய ஸ்பெஷல். இதனால், வாடிக்கையாளர்களையும் எளிதில் தக்க வைக்க முடியுது.

ஆரம்பத்தில், மாதத்திற்கு 600 நைட்டிகளைத் தயார் செய்த நாங்கள், இன்று 3,000 நைட்டிகள் வரை தயார் செய்துட்டு இருக்கோம். மாதம் நான்கு லட்சம் ரூபாய் விற்பனை என்பது ஒரே நாளில் கிடைக்கல. இதுக்குப் பின்னாடி எத்தனையோ அவமானங்கள், வலிகளும் உழைப்பும் இருக்கு. எல்லாச் சூழ்நிலையிலும் என் கணவர் எனக்குத் துணையா நின்னுட்டு இருக்கார். இதை எங்களோட வெற்றி!

பிசினஸ்
பிசினஸ்

படிச்சவங்கதான் எல்லாத்துலையும் சாதிக்க முடியும்னு வீட்டில் முடங்கிக்கிடந்தால், நமக்கான அடையாளமே இல்லாமல் போயிரும். படிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கடின உழைப்பும் முக்கியம்" என்று சக்சஸ் ஃபார்முலாவுடன் முடிக்கிறார் முத்துமாரி.