Published:Updated:

``பி.இ. படிப்பு, மூணு வருஷ கஷ்டம், கோரை பாய், நாலு லட்சம் வருவாய்!'' - நாமக்கல் தம்பதி

மேனகா
News
மேனகா

இல்லாத ஒன்றைத் தேடுவதற்குப் பதிலா, நம்மகிட்ட இருக்கும் வளத்தை எப்படிச் சிறப்பா மாற்றலாம்னு நானும் என் கணவரும் யோசிச்சதுதான் எங்களோட வாழ்க்கையின் மாற்றமா அமைஞ்சுது.

``படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலனு நிறைய பேர் புலம்பிட்டு இருக்காங்க. ஆனால், நாங்க வேலையைத் தேடல. வேலையை உருவாக்க நினைச்சோம் அதுதான் எங்களோட சக்சஸ்" என்று நம்பிக்கை வார்த்தைகளோடு பேசத் தொடங்குகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா. பட்டதாரி. கணவரும் பட்டம் படித்தவர். இவர்கள் நாமக்கலின் பாரம்பர்ய தொழிலான கோரைப்பாய் நெய்வதை, மூன்று வருடங்களாகச் சிரத்தையோடு செய்துவருகின்றனர். இந்தத் தொழிலில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி நம்மிடம் பகிர்கிறார் மேனகா.

பாய் தயாரிப்பு
பாய் தயாரிப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"எங்களுக்குச் சொந்த ஊரு நாமக்கல். வானம் பார்த்த பூமி. அதுக்காக வளம் இல்லாத ஊருனு சொல்ல முடியாது. எங்க நிலத்தில விளையும் கோரைப்புல் உலகளவில் ஃபேமஸ். அதுதான் எங்களோட அடையாளம்னுகூடச் சொல்லலாம்.

இல்லாத ஒன்றைத் தேடுவதற்குப் பதிலா, நம்மகிட்ட இருக்கும் வளத்தை எப்படிச் சிறப்பா மாற்றலாம்னு நானும் என் கணவரும் யோசிச்சதுதான் எங்களோட வாழ்க்கையின் மாற்றமா அமைஞ்சுது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான் பி.இ முடிச்சுருக்கேன். என் கணவர் எம்.பி.ஏ முடிச்சுருக்காரு. ஆளுக்கொரு இடத்தில் வேலை பார்த்துட்டு, இயந்திரம்போல வாழ பிடிக்காம எங்க ஊருலயே வாழ்க்கையை ஆரம்பிச்சோம். அப்போ எங்ககிட்ட இருந்த ஒரே நம்பிக்கை கோரைப்புல்தான். நானும் என் கணவரும் சேர்ந்து கோரைப்புல் வியாபாரம் செய்யப்போறோம்னு சொன்னதும், 'படிச்ச படிப்பை வீணாக்குறீங்க', 'பிழைக்க தெரியாதவங்க' 'எதிர்காலத்தை நினைச்சுப் பாருங்க'னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணினாங்க.

சொந்த ஊருலையே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வது ஒரு தனி சந்தோஷம்
மேனகா.

படிப்பை முடிச்சதும், வெளியூரில் இருக்க ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போகணும் என்பதைத்தான் நம் படிப்பின் வெற்றியா பார்க்குறாங்க. பொது சமூகத்தின் மனநிலை அதுதான். ஆனால், அப்படி இயந்திரமா வாழ ஆரம்பிச்சு அடையாளத்தைத் தொலைச்சுட்டு, ஸ்ட்ரெஸ்லேயே காலத்தைத் தள்ளி, வாழ்க்கையில் தோத்துட்டு இருக்கோம்ங்கிறது பலருக்குத் தெரியல. உண்மையைச் சொல்லணும்னா, நாம் செய்யற தொழில்களில் இது கெளரமானது, இது கெளரவக் குறைச்சல்னு எதையும் ஒதுக்க முடியாது.

நம்ம மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையான முறையில் செய்யற எல்லாத் தொழில்களுமே நல்ல தொழில்கள்தான். வாழ்க்கையில படிப்புக்கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லைனு நிரூபிச்சு காட்டுவோம்னு முடிவு பண்ணி களத்தில் இறங்கினோம்; ஜெயிச்சும் காட்டிருக்கோம்" என்ற மேனகா கோரைப் புல் விவசாயம் பற்றி பேச ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"கோரைப்புல் விவசாயத்தைப் பொறுத்தவரை ரொம்ப மெனக்கிடணும்னு அவசியம் இல்ல. ஒருமுறை நிலத்தை உழுது விதைச்சுட்டா அடுத்த 20 வருஷத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம். தரமான உரமும், வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினா போதும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை அறுவடை செய்யுற மாதிரி புல்லு செழிச்சு வளர்ந்துரும். முதல்முறை அறுவடை செய்ய மட்டும் பத்துமாசம் ஆகும். அடுத்தடுத்த முறை ஆறு மாசத்திலேயே அறுவடை செய்ய முடியும்.

மேனகா
மேனகா

ஆரம்பத்தில் எங்களோட நிலம், பக்கத்து நிலங்களில் விளைந்த புல்லை மொத்தமா அறுவடை செய்து, வெளியூரில் பாய்  தயாரிக்கும்  நிறுவனங்களுக்கு வியபாரம் செய்துட்டு இருந்தோம். ஒரு கோரைப்புல் கட்டுக்கு 30 ரூபாய் கிடைக்கும். வாரத்துக்கு 300 கட்டு வரை விற்பனை செய்வோம். குழந்தை பிறந்த பிறகு அந்த வருமானம் போதுமானதா இல்லை. வருமானத்துக்கு மாற்று வழி யோசிச்சப்போ, நம்ம இடத்தில் விளையும் புல்லை வெச்சு நாமளே பாய் நெய்ய ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா வந்துச்சு.

என் ஐடியாவை என் கணவரிடம் சொன்னேன். அவரும் சம்மதிச்சார். எங்களுக்கு பாய் நெய்ய தெரியாது என்பதால காஞ்சிபுரத்தில் போயி, அங்கயே பத்து நாள் தங்கி, பாய் நெய்யும் ஒரு குடும்பத்திடம் பாய் நெய்வதில் உள்ள நெளிவு சுழிவுகளை என் கணவர் கத்துக்கிட்டு வந்து எனக்கும் கத்துக்கொடுத்தார். ஆனால், பாய் தயாரிக்க ஆரம்பிக்கணும்னா தறி, கட்டிங் மிஷினெல்லாம் வாங்கணும் அதையெல்லாம் வாங்க லட்சங்கள்ல பணம் தேவைப்பட்டுச்சு.

ஒரு நாள் கூட இவ்வளவு படிச்சுட்டு இந்த வேலை செய்யுறோம்னு நாங்க வருத்தப்பட்டது இல்லை.
மேனகா

அவ்வளவு தொகையை வாழ்க்கையில் ஒருமுறைகூட முழுசா பார்க்காத நமக்கு, இந்தக் கனவெல்லாம் தேவையானுகூட லேசான தயக்கம் ஏற்பட்டுச்சு. ஆனா, அதை வெளியே காட்டிக்காம, பேங்க் லோனுக்காக அலைய ஆரம்பிச்சேன். நானும் என் கணவரும் சில பேங்குகள்  ஏறி இறங்கினோம். லோன் கிடைக்கல. கடைசியா வீட்டில் இருந்த நகையெல்லாம் வித்து எங்க தொழிலை ஆரம்பிச்சோம்" என்ற மேனகா புல்லுக்குச் சாயம் ஏற்றிக்கொண்டே, பாய் தயாரிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

"புல்லை அறுவடை செய்யறதில் இருந்து, கலர் ஏத்தும்வரை எல்லா வேலைகளையும் நாங்கதான் பண்னோம். முதல்முறை 50 பாய்களை நெய்து முடிச்சோம். உள்ளூர்ல நிறைய குடும்பங்கள் பாய் நெய்றதால் வெளியூரில் விற்கலாம்னு முடிவு பண்ணோம். என் கணவர், தமிழ்நாட்டில் இருக்க நிறைய கிராமங்களுக்குச் சென்று, நாங்க தயாரித்த பாயை அங்குள்ள கடைகளில் கொடுத்து, விற்பனைக்கு வைக்கச்சொன்னார். ஆரம்பத்தில் 10 பாய், 15 பாய் என ஆர்டர்கள் வந்துட்டு இருந்துச்சு. ஒரு பாயிக்கு 30 ரூபாய் லாபம் இருக்கும். தொடக்கம் என்பதால் நாங்களும் லாபத்தில் பெரிசா கவனம் செலுத்தல.

நாமக்கல் பாய்
நாமக்கல் பாய்

அதன்பின், உற்பத்தியை அதிகரிச்சு, பாயை வெளி மாநிலங்களுக்கும் விற்க ஆரம்பிச்சோம். கேரளா, கர்நாடகா, சண்டிகர், பீஹார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இப்போ எங்க 'பாய்' பயணப்பட்டுட்டு இருக்கு.

மூணு வருஷம் இரவு பகல் பார்க்காமல் உழைச்சோம். இப்போ  மூணு ஏக்கர் நிலத்தில் புல் விவசாயம் பண்றோம். தேவைப்படும்போது எங்க ஊரு ஜனங்ககிட்ட இருந்தும் புல் வாங்கிப்போம். புல் ரெகுலரா கிடைப்பதால் எங்க கிட்ட ஆர்டர் கொடுத்தா சீக்கிரம் தயார்செய்து கொடுத்துருவோம். அதுமட்டுமில்ல புல்லு நல்ல வளமாக இருந்தால்தான் அதை அறுவடை செய்து பாய் நெய்ய ஆரம்பிப்போம். அதனால் பாயோட தரமும் நல்லா இருக்கு என்பதால் நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. இப்போ மாசத்துக்கு 6,000 பாய் உற்பத்தி செய்றோம். எங்களோட மாத வருவாய் நாலு லட்சம்.

அறுவடைக்கு, சாயம் ஏத்துறதுக்கு, பாய் நெய்ய, ஏற்றுமதி செய்யனு பத்து பேர் எங்ககிட்ட வேலைக்கு இருக்காங்க. இதுவரை ஒருநாள்கூட இவ்வளவு படிச்சுட்டு இந்த வேலை செய்யுறோம்னு நாங்க வருத்தப்பட்டது இல்லை.

பாய்
பாய்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கு. ஒவ்வொரு ஊரு மண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட வளம் இருக்கு. ஆனா, அதை மறந்து, வசதியா வாழ்றோங்கிற பெயரில் சொந்த ஊரைவிட்டுட்டு நிம்மதியைத் தொலைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். அதுக்குப் பதிலா சொந்த ஊரிலேயே நமக்கான அடையாளத்தை உருவாக்குகிறதில் ஒரு தனி சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது" என்றவாறு 'பாய்' நெய்யத் தொடங்கினார் மேனகா.