Published:Updated:

வெற்றியாளர்: “தோழிகளுக்கு வடிவமைத்தேன்... தொழிலதிபராக உருவெடுத்தேன்!”

நந்தினி - விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தினி - விஜய்

பாரம்பர்ய உடைகளின் டிரெண்ட் செட்டர் ‘ஷிவாங்கி’

`ஷிவாங்கி எத்னிக் வேர்’ - பெயரே சொல்கிறது, மற்றவற்றிலிருந்து நிச்சயமாக மாறுபட்ட விஷயம் என்று. மறந்தே போய்விட்ட பாரம்பர்ய உடைகளான பாவாடை, சட்டை, தாவணிக்குப் புத்துயிர் கொடுத்து, லேட்டஸ்ட் டிசைன்களில் விதவிதமாக அறிமுகப்படுத்தி, கடல் கடந்த கண்டங்களிலும் பிரபலமாக்கிக்கொண்டுள்ளனர் கோவையைச் சேர்ந்த நந்தினி - விஜய் தம்பதியர்.

இந்த நிறுவனத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டவர், ஆடை வடிவமைப்பு பற்றி எதுவும் படிக்காத, தையல் மெஷினில் நூல்கூடக் கோக்கத் தெரியாத ‘பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ்’ பட்டதாரி நந்தினி. கொங்கு மணம்கமழும் கொஞ்சும் தமிழில் சரளமாகப் பேசினார் நந்தினி... ‘‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு சொந்த ஊர் தாராபுரம்னாலும் என்னோட சின்ன வயசுலேயே கோவையில் செட்டிலாயிட்டோம். காலேஜ் படிக்கும்போது எனக்கு ‘டெக்ஸ்டைல் நாலெட்ஜ்’ கொஞ்சம்கூடக் கிடையாது. எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தேன்னு இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு.

படிச்சு முடிச்சுட்டு பெங்களூரில் வேலை செய்தபோது கல்யாணம் நிச்சயமாச்சு. கணவர் விஜய்யும் பெங்களூரில்தான் வேலை பார்த்து கிட்டிருந்தார். கல்யாணம் ஆனதும் வேலையை விட்டுட்டேன். தாய்மை அடைஞ்சதும், குழந்தைக்கு சின்னச் சின்ன டவல்கள் வாங்கி, குட்டிக் குட்டி எம்ப்ராய்டரி டிசைன்கள் போட்டு தயார் பண்ணினேன். பெண் குழந்தை மேல ஆசைங்கிறதால நானே குட்டிக் குட்டி டிரஸ்களையும் டிசைன் பண்ணி, வெளியில கொடுத்து தைச்சு வாங்கினேன். எங்களுக்கு ரெண்டுமே பையனா பிறந்தது வேற விஷயம்’’ என்று சொல்லிச் சிரித்த நந்தினி தொடர்ந்தார்...


 வெற்றியாளர்: “தோழிகளுக்கு வடிவமைத்தேன்... தொழிலதிபராக உருவெடுத்தேன்!”

``யு.எஸ்ஸுல இருந்த அண்ணன் குடும்பம் இந்தியாவுக்கு கிளம்பினப்ப, ‘எனக்கு கொஞ்சம் டிரஸ் டிசைன் பண்ணி தைச்சு வாங்கி வைக்கிறியா நந்தினி?’னு அண்ணி கேட்டாங்க. என்னோட யு.எஸ் தோழிகள் சிலரும் கேட்டாங்க. எனக்கு டிரஸ்ஸிங் சென்ஸ் அதிகம். நானும் நல்லாவே உடை உடுத்துவேன். அப்டேட்டடா இருப்பேன். இவையெல்லாம்தான் அவங்க என்கிட்ட இப்படிக் கேட்கக் காரணம். அந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து கோவைக்குத் திரும்பவும் வந்துட்டோம். கணவர் கன்சல்டன்ட் ஆக இருந்ததால் அடிக்கடி வெளியூர் போயிடுவார். நேரம் நிறைய கிடைச்சதால அண்ணி மற்றும் ஃபிரெண்ட்ஸுக்காகக் கடைக்குப் போய் ஃபேப்ரிக் எல்லாம் பார்த்து வாங்கிட்டு வந்து, சொந்தமா டிசைன் பண்ணிக்கொடுத்தேன். அண்ணியும் ஃபிரெண்ட்ஸும் அதையெல்லாம் போட்டுட்டு போனப்ப செம பாராட்டு கிடைக்கவே, ‘இதை ஒரு பிஸினஸாவே பண்ணலாம் நந்தினி’னு என்னைப் பாராட்டினாங்க. பிசினஸ் விதை அப்போதான் என்னையும் அறியாமல் எனக்குள்ள விழுந்திருக்கும் போல!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நம்ம தென்னிந்தியக் கலாசாரத்தின் அடையாளம் பாவாடை சட்டை, தாவணி. ஆனா, இன்றைய குழந்தைகள் பட்டுப் பாவாடை சட்டை போட விரும்புறதில்லை. இதற்கான காரணங்கள் குழந்தைகளிடம் நிறைய இருக்கு. அதனால, இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பிடிக்கிற மாதிரி பாவாடை சட்டை ஃபேஷனை ஏன் புதுப்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. உடனே இறங்கிட்டேன். நல்ல மெட்டீரியலில், சூப்பரான கலர் காம்பினேஷனில் துணி எடுத்து, வித்தியாசமாக டிசைன் செய்தேன். எங்களுக்குத் தெரிஞ்ச டெய்லரிடம் தைக்கக் கொடுத்தேன். 2011-ம் வருஷம்... ஃபேஸ்புக் பிரபலமாகியிருந்த நேரம். எங்களுக்கு ஈஷா யோகா மையத்துல ஈடுபாடு உண்டுங்கிறதால, அதுதொடர்பான ‘ஷிவாங்கி’ பெயர்ல ஃபேஸ்புக்கில் பக்கத்தை உருவாக்கி, டிரஸ் போட்டோக்களைப் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ்.

 தொழிற்கூடத்தில் நந்தினி...
தொழிற்கூடத்தில் நந்தினி...

ஈஷா மையத்திலிருக்கிற கடையிலிருந்தே முதல் ஆர்டர் வந்துச்சு. அங்க வர்ற வெளி நாட்டுக்காரங்களுக்குப் பிடிக்கும்னு டிஸ்பிளே பண்ணினாங்க. எல்லாமே வித்துடுச்சு. முழு உற்சாகத்தோட அடுத்தடுத்து டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். பிரபலமான பெரிய பெரிய ஜவுளி கடைகளிலிருந்தும் மளமளனு ஆர்டர்கள். வித்தியாசமான டிசைன்களில் டெலிவரி பண்ணினேன். எல்லாத்துக்கும் என் கணவர் பக்கபலமா இருந்தார். `வீட்டில் பசங்களைப் பார்த்துக்கிட்டா போதும்’னு சொல்லியிருந்தா, இதைச் சாதிச்சிருக்க முடியாது. தன் வேலையிலிருந்தபடியே நிர்வாகப் பொறுப்பு, மார்க்கெட்டிங் எல்லாத்தையும் கவனிச்சுக்கிறது அவர்தான்.

இப்ப ‘ஷிவாங்கி குளோத்திங்’ என்ற போர்ட்டலிலும் விற்பனை செய்றோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியானு வெளிநாடு தமிழ்ச் சங்கங்கள் பலவும் பொங்கல் பண்டிகை, கலாசார விழாக்களுக்கு மொத்தமா ஆர்டர் பண்றாங்க. கிரகப்பிரவேசம், பிறந்தநாள், காதுகுத்துனு எல்லா விழாக்களிலும் இப்போ யு.எஸ்ஸில் நம்ம பாவாடை சட்டை, தாவணிதான்!’’ என்று முழுமையாகத் தன் பிசினஸ் வெற்றிக்கதையைப் பகிர்ந்த நந்தினி யிடம், ‘மற்றவற்றிலிருந்து உங்க தயாரிப்புகளை வித்தியாசப்படுத்திக் காட்டுவது எது...’ என்று கேட்டோம்.

‘‘குழந்தைகளுக்கு உறுத்தாமல் இருக்கிறதுக் காக, கைகளில் ஜரிகை வர்ற இடத்தில் அதை உருட்டி தைச்சிடுவோம். இப்படி சின்னச்சின்ன விஷயங்கள்லயும் கவனம் செலுத்துறோம். சின்னியம்பாளையம் யூனிட்டில் 50 டெய்லர்கள் இருக்காங்க. சுத்துப்புற கிராமங்களில் இருந்து வரும் பெண்கள்தான் அதிகம். பனியன் மெட்டீரியல் தைச்சவங்களுக்குப் பயிற்சி கொடுத்து நாங்க எடுத்திருக்கோம். எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரிதான் இருக்கோம்’’ என்று கூறும் நந்தினியை, அவர் குடும்பமே தாங்கிக் கொண்டாடுகிறது.

‘‘என் மாமியார்தான் பசங்களைப் பார்த்துக்கிறாங்க. மகன்கள் அபூர்வ் விஜய், பாஞ்சஜன்யா விஜய் ரெண்டு பேரும் அவங்க வேலைகளை அவங்களே பார்த்துக்கிறது கூட எனக்கு ஒரு வகை சப்போர்ட்தான். என் பெற்றோர் கொடுப்பது எமோஷனல் சப்போர்ட்’’ என்று குடும்பத்தைப் போற்றிய நந்தினி, ``வெறும் 30,000 ரூபாய் முதலீட்டில் ஒரு மெஷின், ஒரு டெய்லர், ஒரு கட்டிங் மாஸ்டருடன் தொடங்கிய இந்தத் தொழில், இப்போது ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் டர்ன் ஓவருடன், 70, 80 பேருக்கு வாழ்வாதாரம் கொடுக்கக்கூடிய தொழிலா உயர்ந்து நிற்குது’’ என்று கைகூப்பினார்.