தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அதிரசம் முதல் ஆடைகள் வரை... ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

ஆன்லைன் விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் விற்பனை

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில், இந்தியாவுக்குள் மட்டும் பொருள்களை விற்பதற்கும் வெளிநாடுகளில் பொருள்களை விற்பதற்கும் தனித்தனி தளங்கள் இருக்கின்றன.

சமைப்பது, வரைவது, கைவினைப்பொருள்கள் செய்வது என்று எல்லாப் பெண்களிடமும் ஏதோவொரு ஸ்பெஷல் திறமை நிச்சயம் இருக்கும். பலரும் அதைத் திறமையாகவே உணர்வதில்லை. சிலர் மட்டுமே தங்கள் திறமையைத் தொழிலாக்க முயற்சி செய்வார்கள். அவர்களில் பலரும் முதலீடு செய்து கடை ஆரம்பிக்க வீட்டில் அனுமதி கிடைக்காதது... எங்கு, எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்கிற ஐடியா இல்லாதது போன்றவற்றால் தொழில் ஆரம்பிக்கும் ஆசையை காலப்போக்கில் மறந்தே விடுவார்கள். இந்த நிலையில் உங்கள் திறமைகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விற்க முடியும் என்று அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள், ஆன் லைன் பிசினஸ் ஆலோசகர் கா.முரளி மற்றும் ஆன்லைனில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் பிரியா கண்ணன்.

கொரோனாவுக்குப் பின் பலரும், ஆன்லைனில் வாங்குவதைப் பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள். அதனால் கைவினைப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள், துணிப்பை, பிரசவ லேகியம், அதிரசம் என்று நீங்கள் எதில் ஸ்பெஷலிஸ்ட்டோ அதை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில், இந்தியாவுக்குள் மட்டும் பொருள்களை விற்பதற்கும் வெளிநாடுகளில் பொருள்களை விற்பதற்கும் தனித்தனி தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு அமேசானை எடுத்துக் கொண் டால், அமேசான் டாட் காமில் (amazon.com) உங்கள் பொருளை உலகம் முழுக்க விற்பனை செய்ய முடியும். அமேசான் டாட் இன்னில் (amazon.in) இந்தியாவுக்குள் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

அதிரசம் முதல் ஆடைகள் வரை... ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்வது பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களென்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்களுக்கென தனியாக இ-மெயில் ஐ.டியை உருவாக்குவதுதான்.

அடுத்தது உங்களுடைய பொருளுக்கான போட்டோ செஷன். அது இட்லிப்பொடி பாக்கெட்டோ, ஓவியமோ, கப் கேக்கோ, அதை முன்பக்கம், பின்பக்கம், மேல்பக்கம், லாங் ஷாட், க்ளோசப் ஷாட் என விதவிதமாக, தெளிவாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே, நீங்கள் விற்பனை செய்யவிருக்கிற பொருளைப் பற்றிய விவரங்களை அல்லது சிறப்புகளை சில வரிகளில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

கைவினைப்பொருள்களை விற்பனை செய்யவிருக்கிறீர்கள் என்றால், ஏற்கெனவே சந்தையில் இருப்பது போல் அல்லாமல் வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள். இவற்றை ஆன்லைனில் விற்பதற்கு பெரும்பாலும் ஜி.எஸ்.டி கிடையாது.

உணவுப் பொருள்களை விற்கப்போகிறீர்கள் எனில், உணவு தரச்சான்றிதழ் (fssai) அவசியம். இதை அரசின் இ-சேவை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் பொருள்கள் வாங்குபவர் களுக்கான ‘Buyer account’-க்குக் கீழேயே விற்பனை செய்பவர்களுக்கான ‘Seller’ ஆப்ஷன் இருக்கும். அந்த ஆப்ஷனுக்குள் சென்று ஜி.எஸ்.டி நம்பர் (தேவைப்பட்டால்), பான் கார்டு நம்பர், வங்கிக் கணக்கு எண், உங்கள் பொருளின் புகைப்படங்கள், அதைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். கூடவே வெள்ளைத் தாளில் உங்கள் கையெழுத்தைப் போட்டு, அதையும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அப்போதுதான் பில்லில் உங்கள் கையெழுத்து வரும்.

உணவுப்பொருள்களை ஆன்லைன் நிறுவனங்களின் குடோனில் வைத்து விற்கப்போகிறீர்கள் என்றால், ஐந்து மாதங்கள் வரைக்கும் அவை கெட்டுப் போகக் கூடாது. உங்களிடத்திலேயே வைத்து விற்கப்போகிறீர்களென்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகே, காலாவதி தேதி இருக்க வேண்டும். அதாவது, மூன்று மாதங்கள் வரை அந்த உணவுப்பொருள் கெட்டுப்போகக்கூடாது.

உங்கள் பொருள்களை குடோனில் வைத் தால், ஆன்லைன் நிறுவனமே பேக் செய்து உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவிடும். இதற்கு குறிப்பிட்ட தொகை யைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பொருளை உங்களிடத்தில் இருந்தே அனுப்பு கிறீர்கள் என்றால், பேக்கிங் உங்களுடைய பொறுப்பு. விற்றுத் தருவதற்கான கமிஷன் தொகையை ஆன்லைன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். கட்டணம், கமிஷன் இரண்டும் நிறுவனங்கள் மற்றும் பொருள்களைப் பொறுத்து மாறுபடும்.

கா.முரளி
கா.முரளி

கஸ்டமர் ஆர்டர் செய்தவுடனே உங்கள் மெயில் ஐடிக்கு நோட்டிஃபிகேஷன் வந்துவிடும். கூடவே, உங்கள் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸும் வந்துவிடும். அதனால், ஆர்டரை தவறவிடும் நிலை வராது.

கஸ்டமர் ஆர்டர் செய்தவுடன், அதற்கென இருக்கிற ஷெட்யூலில் பொருளை வாங்கு வதற்கான நேரத்தைப் போட்டுவிட்டீர்கள் என்றால், ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த நபர் உங்கள் இடத்துக்கு நேராக வந்து பொருளை வாங்கிக்கொள்வார். பிறகு கஸ்டமரிடம் பொருளை டெலிவரி செய்து விட்டு, அதற்குரிய பணத்தை வாங்கி, ஆன் லைன் நிறுவனத்தின் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் போடுவது வரை ஆன்லைன் நிறுவனத்தின் பொறுப்பு. உங்கள் பொருள் விற்பனையான ஒரு வாரத்தில் அதற்கான தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும்.

ஆன்லைனில் ‘என்னிடம் 10 கிலோ அதிரசம் இருக்கிறது’ என்று அப்லோடு செய்துவிட்டு, அதை ஆஃப்லைனில் விற்றுவிட்டீர்களென்றால், ஆன் லைனில் கஸ்டமர் கேட்கும்போது உங்களிடம் ஸ்டாக் இருக்காது. வரும் ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டி வரும். இப்படி அடிக்கடி நடந்தால் உங்கள் செல்லர் அக்கவுன்ட் (Seller Account) டீஆக்ட்டிவேட் செய்யப்பட வாய்ப்புண்டு, கவனம்.

ஏதோ ஒரு காரணத்துக்காக வாடிக்கையாளர் உங்கள் பொருளைத் திருப்பி அனுப்பி, அப்படி வந்த பொருளின் பேக்கிங் சேதமடைந்திருந்தால், அதைப் புகைப்படம் எடுத்து ஆன்லைன் நிறுவனத்துக்கு அனுப்பி பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பிரியா கண்ணன்
பிரியா கண்ணன்


ஆன்லைனில் பெண் தொழில் முனைவோருக்கென்றே பிரத்யேக தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, அமேசானில் ‘Saheli Store’ இருக்கிறது. இங்கும் உங்கள் கைவினைப்பொருள்கள் மற்றும் உணவு பொருள்களை விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களே தங்கள் ஆன்லைனில் உங்கள் பொருள்களை எப்படி விற்பனை செய்வது என்று வீடியோக்கள் மூலம் சொல்லித் தருகின்றன, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளில் இருக்கும் இந்த வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள லாம். அல்லது உங்கள் பொருளின் புகைப் படங்களை ‘Seller’ ஆப்ஷனுக்குள் பதிவேற்றம் செய்துவிட்டு, அதன் அருகில் இருக்கிற ‘Help’ என்கிற ஆப்ஷனை கொடுத்தால், அவர்களே போன் செய்து வழிகாட்டுவார்கள். இதற்குக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் பிசினஸ் செய்ய ஆரம்பித்து விட்டீர்களென்றால், உங்கள் பொருளுக்குச் செலவில்லாமல் விளம்பரமும் செய்ய முடியும். உங்கள் பொருளை அப்லோடு செய்தவுடன் அதனுடைய லிங்க்கை எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஷேர் செய்துவிட்டால், அந்த லிங்க்கில் சென்றும் உங்கள் பொருளை வாங்க முடியும்.