Published:Updated:

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

பாவை
பிரீமியம் ஸ்டோரி
பாவை

சகலகலாவல்லி

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

சகலகலாவல்லி

Published:Updated:
பாவை
பிரீமியம் ஸ்டோரி
பாவை

திருமணத்துக்கு முன்பு விவசாய வேலைகளில் முன் அனுபவம் ஏதுமில்லாத பாவை, இன்று 85 ஏக்கர் விவசாய நிலத்தை நிர்வகிக்கும் இயற்கை விவசாயி. விளைபொருள்களைப் பல்வேறு நகரங்களுக்கு விற்பனை செய்பவர், செடி வளர்ப்புக்கான மெட்டல் தொட்டி தயாரிப்பு, ஆடைகளில் பெயின்டிங் டிசைன் செய்து விற்பனை செய்வது, குழந்தைகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி வழங்குவது என மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இவ்வளவுதானா என்றால்...

“இன்னும் பல புதிய முயற்சிகளில் கவனம் செலுத்திட்டிருக்கேன். திறமையை வெளிப்படுத்த எல்லையே இல்லை” என்று உற்சாகமாகக் கூறும் பாவை, தன் வெற்றி அனுபவங்களைப் பகிர்கிறார்.

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

“இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சதுமே கல்யாணம். கணவருடையது பிசினஸ் குடும்பம். நேரமின்மையால் அவர்களின் பூர்வீக நிலத்தில் முழுமையா விவசாயம் செய்யாம இருந்தாங்க. அந்த நிலையில், 2,500 மா மரங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தோம். கணவரின் பிசினஸுக்கு உதவியா இருந்த என்னிடம் விவசாய பொறுப்புகளை ஒப்படைச்சாங்க. என் தேடல் பயணத்தைத் தொடங்கினேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சு அனுபவங்கள் கற்றேன். சேலத்திலுள்ள எங்க வீட்டில் சின்னதா தோட்டம் அமைச்சேன். ஏற்காடு அடிவாரத்திலுள்ள எங்களின் 3,000 சதுர அடி நிலத்திலும் காய்கறித் தோட்டம் அமைச்சேன். முறையான அனுபவங்கள் கற்ற பிறகு, சேலத்தில் இருந்து சற்று தொலைவில் கருமந்துறையில் இருக்கும் எங்க விவசாய நிலத்தின் பொறுப்புகளை ஏத்துக்கிட்டேன்.

தொழு உரம், கரும்புச் சக்கையை அதிகளவில் கொட்டி நிலத்தை வளப் படுத்தினேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, புதிய பயிர்களை வளர்க்க ஆரம்பிச் சேன். வளர்ச்சி சரியா இல்லாதது, விற்பனை செய்வதில் சிக்கல்னு நிறைய எதிர்மறையான அனுபவங்கள். மண்ணி லுள்ள நுண்ணூட்டச் சத்துகளைச் சோதனை செஞ்சு உரிய பயிர்களை மட்டும் வளர்த்து சிக்கல்களைக் குறைச்சேன். பருவமழை பொய்த்துப்போவது, சிலமுறை அதிக மழையால் சேதம்னு பல்வேறு இடர்ப்பாடுகள் இப்பவும் தொடருது. ஆனா, கடந்த எட்டு வருஷ அனுபவத்துல பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் பக்குவம் கிடைச்சிருக்கு. களைகளைக் குறைக்க மூடாக்கு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இடுபொருள்களைப் பயன்படுத்தி முழுமையா இயற்கை விவசாயம்தான் செய்றேன். விற்பனை வாய்ப்புகளும் சிறப்பா இருக்கு”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

- பெருமிதத்துடன் கூறுபவர், பொறுப்புணர்வுடன் குழந்தைகளுக்குப் பயிற்சியாளராகவும் மாறியிருக்கிறார்.

“மொத்தமுள்ள 100 ஏக்கர் நிலத்துல 85 ஏக்கர்லதான் விவசாயம் நடக்குது. அதில், பாக்கு, மா மரங்கள்தான் அதிகமிருக்கு. அவற்றுக்கு இடையே ஊடுபயிரா தென்னை மற்றும் புளியமரத்துடன், பலா, மாதுளை, சப்போட்டா, அவகேடோ, சீத்தா, எலுமிச்சை உட்பட நூற்றுக்கணக்கில் பழ மரங்களையும் வெச்சிருக்கோம்.

2,000 தேக்கு மரங்கள் இருக்கு. தவிர, வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடியுடன், தானிய வகை பயிர்களையும் வளர்க்கறோம். வெங்காயம், தக்காளி, வெண்டை, கத்திரி உட்பட பெரும்பாலான காய்கறிகளும் விளையுது. உயரமும் தடிமனும் சற்றே சிறுசா இருந்தாலும், குளிர்காலத்தில் கேரட், பீட்ரூட், குடமிளகாய் போன்ற மலைப்பகுதி பயிர்களும் சிறப்பா விளைச்சல் தருது. மண்புழு உரம் தயாரிப்பதுடன், மாடு, நாட்டுக்கோழி, நாட்டு நாய், வாத்து வளர்ப்பும் இருக்கு. கூடுதலான மரங்கள் மற்றும் பயிர்களுடன், தோட்டத்தை அடர் வனம் மாதிரி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கேன்.

இந்த மாற்றங்கள் எல்லாம் எளிதில் நடந்துடலை. இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் வகையில் விடுமுறை தினங்கள்ல பள்ளிக் குழந்தைகளை என் தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போய் பயிற்சி வகுப்புகள் நடத்தினேன். நிறைய குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகிட்டாங்க. நிறைய கேள்விகள் கேட்டு என் தேடலையும் அதிகப் படுத்தினாங்க. கொரோனா சூழலால் தடைப்பட்டுள்ள அந்தப் பணிகளை, இனி மீண்டும் தொடரணும்” என்ற பாவை, தொழில்முனைவோரான அனுபவங்களையும் பகிர்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் செடிகள் வளர்ப்பது சிரமம். அவங்களுக்குப் பயன்படும் வகையில் பால்கனி சுவரில் அல்லது தடுப்பு கம்பியில் மாட்டிக்கொள்ளும் வகையிலான ஸ்டீல் தொட்டிகளைத் தயாரிக்கறேன். இந்தத் தொட்டிகளை விற்பனை செய்ய, ஆரம்பத்தில் நிறைய நர்சரிகளுக்கு ஏறி இறங்கினேன். வெளியூர் கண்காட்சிகளில் ஸ்டால் அமைச்சேன். நிறைய சவால்களுக்குப் பிறகே, மெட்டல் தொட்டிகள் விற்பனைக்கு வரவேற்பு கிடைச்சது. இதற்காகத் தனி உற்பத்திக்கூடம் நடத்துவதோடு, சிலருக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கறேன். ஓவியத்தில் எனக்கு அனுபவம் உண்டு. அதைத் தொழில் வாய்ப்பாக மாற்றும் முயற்சிக்கு வரவேற்பு கிடைச்சது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள்ல பிரின்டிங் டிசைன்களுக்குப் பதிலாக கை வேலைப்பாடுகளுடன்கூடிய பெயின்டிங் டிசைன்களை வடிவமைச்சு ஆன்லைனில் விற்பனை செய்யறேன். வீட்டில் இருந்தே இந்த வேலைகளைச் செய்வதுடன், நாலு பெண்களுக்கும் வேலை கொடுக்கறேன். வெளிநாட்டு ஆர்டர்களும் வருது.

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

வீட்டில் பிளாஸ்டிக் பைகளில் பல வகையான கீரைகள் வளர்க்கறேன். அஞ்சு வருஷங்களா அன்றாட சமையலில் எங்கத் தோட்டத்துக் கீரையைத்தான் பயன்படுத்தறோம். தேங்காய் மற்றும் பலாவில் ஐஸ்க்ரீம் தயாரிக்கவும், கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்தவும் முயற்சிகள் எடுத்திட்டிருக்கேன்”

- ஆச்சர்யங்கள் கூட்டும் பாவை, மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி அசத்துகிறார்.

“வானமா எல்லை... இல்லவே இல்லை!” - மல்டி டாஸ்க்கிங்கில் கலக்கும் பாவை

“படிப்புக்கு ஏத்த வேலைக்குப் போயிருந்தா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊழியராகவே இருந்திருப்பேன். ஆனா, எனக்குப் பிடிச்ச வேலைகளை மனநிறைவுடன் செய்வதோடு, சுதந்திரமாகவும் இயங்க முடியுது. இவையெல்லாம் குடும்பத்தினரின் ஊக்கத்தால்தான் சாத்தியமாகுது. தேடல்தான் என்னோட திறமைகளை அடையாளம் காண உதவியது. தேடல் ஒருபோதும் பயன்தராமல் போகாது”

- நம்பிக்கையுடன் முடிக்கும் பாவையின் முகத்தில் மத்தாப்பு சிரிப்பு!