Published:Updated:

நினைத்தாலே இனிக்கும்: “நிறைவு தராத வெளிநாட்டு வாழ்க்கை; உள்ளூரில் கிடைத்த இனிப்பான வெற்றி!”

சாக்லேட் பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சாக்லேட் பிசினஸ்

சாக்லேட் பிசினஸில் சக்சஸ் காட்டும் தம்பதி

``இந்தியாவில் சாக்லேட் விற்பனையில் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்குது. அதில், 95 சதவிகிதம் உண்மையான சாக்லேட்டே கிடையாது. ஆரோக்கியமான சாக்லேட் உற்பத்தியை மேற்கொண்டால், தயாரிக்கிறவங்களும் மக்களும் ஒருசேர பயனடையலாம். அந்த முன்னெடுப்புடன்தான் சாக்லேட் தயாரிப்பில் இறங்கினோம்” – சுவை பட பேசுகிறார்கள், பூனம் சோர்டியா – நிதின் தம்பதி. சென்னையிலுள்ள இவர்களின் ‘KOCOATRAIT’ நிறுவனத்தின் மூலம் இயற்கை விவசாய உணவுப்பொருள்களைக்கொண்டு சாக்லேட் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

“ரெண்டு பேருக்கும் பூர்வீகம் ராஜஸ்தான். பல வருஷங்களுக்கு முன்பே சென்னையில் குடியேறிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு டெல்லி, மும்பையில் சில வருஷங்கள் இவர் வேலை செஞ்சார். குழந்தையைக் கவனிச்சுக்கிட்டு நான் வீட்டுல இருந்தேன். பிறகு, அமெரிக்காவில் சில வருஷங்கள் வேலை செய்தவர், ஒருகட்டத்துல அந்த வாழ்க்கைமுறை பிடிக்காம சென்னை வந்துட்டார். எங்களுக்கு ஏற்கெனவே உணவுத்துறையில் அனுபவம் இருந்ததால, தரமான ஹோம்மேடு சாக்லேட் தயாரிக்கத் திட்டமிட்டோம். சாக்லேட் உற்பத்தி அதிகம் நடக்கும் பெல்ஜியம் உட்பட சில நாடுகளுக்குப் போய் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டோம். சாக்லேட்டின் சுவை அறிவதற்காக லண்டன்ல நிதின் பிரத்யேக பயிற்சியும் எடுத்துக்கிட்டார்.

நினைத்தாலே இனிக்கும்: “நிறைவு தராத வெளிநாட்டு வாழ்க்கை; உள்ளூரில் கிடைத்த இனிப்பான வெற்றி!”

பெரும்பாலானோர் உற்பத்திச் செலவைக் குறைக்க, சாக்லேட்ல கொழுப்புச் சத்துக்காக வனஸ்பதிதான் சேர்ப்பாங்க. உடல்நலனுக்குக் கெடுதலான வனஸ்பதி சேர்த்து தயாரிச்சா, ‘FSSAI’ விதிப்படி கவரின் பின்புறம் ‘Compound Chocolate’னு எழுதித்தான் விற்பனை செய்யணும். மேலும், அதை ‘சாக்லேட்’னு விளம்பரப்படுத்தவே கூடாது. ஆனாலும், இந்த விதிகளைக் கடைப்பிடிக்காம இந்தியாவில் ஏராளமானோர் சாக்லேட் விற்பனை செய்றாங்க. இதுபோன்ற அடிப்படை தகவல்களுடன், தரமான சாக்லேட் தயாரிக்கப் பயிற்சி கொடுத்தோம். இதுதவிர, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாசம் மட்டும் சாக்லேட் டேஸ்ட்டிங் வகுப்பை நடத்துவோம். நாங்க தயாரிக்கும் ‘டார்க்’ சாக்லேட் உள்ளிட்ட பலதையும் கடிச்சு சாப்பிடக் கூடாது. உமிழ்நீர்பட்டு தானாகக் கரையும் அதன் சுவையை ரசிச்சு உணரணும். பல தரப்பட்ட ஃப்ளேவர்ல பல நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லேட்டில் எது தரமானது, சுவையானதுன்னு உணர சொல்லிக்கொடுப்போம். தவிர, சாக்லேட் தயாரிப்புக்குத் தரமான கோகோ பயிரை விளைவிக்க களத்துக்கே சென்று விவசாயிகளுக்கும் ஆலோசனை கொடுக்கிறோம்” - மனைவி நிறுத்த, கணவர் தொடர்கிறார்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“2018-ல் சொந்தமா சாக்லேட் தயாரிக்க ஆரம்பிச்சோம். சில வெளிநாட்டு உணவுத் திருவிழாக்கள்ல மட்டும் அவற்றைக் காட்சிப்படுத்தினோம். இதனால், வெளி நாட்டு ஆர்டர்கள் கிடைச்சது. ரோஜா இதழ், காய்ந்த மிளகாய், வாழைப்பழம் உட்பட 12 ஃப்ளேவர்கள்ல சாக்லேட் தயாரிக்கிறோம். அதிக வெப்பநிலை இல்லாத இடத்திலும் ஃப்ரிட்ஜிலும் வெச்சுப் பயன்படுத்தினால் ஒரு வருஷம்வரை ‘டார்க்’ சாக்லேட் கெடாது.

நினைத்தாலே இனிக்கும்: “நிறைவு தராத வெளிநாட்டு வாழ்க்கை; உள்ளூரில் கிடைத்த இனிப்பான வெற்றி!”

காட்டன் துணி வேஸ்ட், கோகோ கொட்டையின் தோல் இரண்டையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கும் ‘எக்கோ ஃப்ரெண்ட்லி’ கவரைத்தான் பயன் படுத்தறோம். அமெரிக்காவின் ‘USDA’ (US Department of Agriculture) அமைப்புதான், உலக அளவில் இயற்கை விளைபொருள்களுக்குச் சான்று அளிக்கும் பெரிய நிறுவனம். இந்தச் சான்றிதழ் இருந்தால் உலகின் எல்லா நாடுகள்லயும் நம்ம உணவுப்பொருள்களை எளிதில் ஏத்துப்பாங்க. கோகோ, நாட்டுச்சர்க்கரை உட்பட எங்க தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தையும் இந்த அமைப்பின் சான்றிதழ் பெற்ற விவசாயிகள், நிறுவனங்கள்கிட்டதான் வாங்குறோம். மக்களின் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த உணவுப்பொருளையும் நாங்க சேர்ப்பதேயில்லை” என்று புன்னகைக்கிறார் நிதின்.

தமிழகத்தில் சென்னை, ஏற்காடு உட்பட நான்கு இடங்களில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் சாக்லேட் தயாரிப்புக் கூடங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளதுடன், அங்குள்ள ஊழியர்களுக்கு இவர்கள் சாக்லேட் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துள்ளனர். சாக்லேட் தவிர, கோகோ பவுடரும் தயாரித்து, சென்னையிலுள்ள இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். புதிதாகத் தொழில் தொடங்கும் சாக்லேட் நிறுவனங்களுக்குக் கட்டமைப்புப் பணிகளுக்கான ஆலோசனைகளுடன், சாக்லேட் தயாரிக்கவும் பயிற்சி வழங்கு கின்றனர். மூன்று பெண்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதுடன், ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்கின்றனர்.

“உற்பத்திப் பிரிவை நானும், மார்க்கெட்டிங் பிரிவை கணவரும் கவனிச்சுக்கறோம். கொரோனாவால் இயற்கை உணவுப்பொருள்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டிருப்பதால், ஆர்டர்கள் அதிகரிச்சிருக்கு. கொரோனா சூழலால், சாக்லேட் தயாரிப்பு மற்றும் டேஸ்ட்டிங் வகுப்பு களை ஆன்லைன்ல நடத்துறோம். உலக அளவில் பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தாலும், அதிக விலை, விழிப்புணர்வின்மை காரணங்களால் தரமான சாக்லேட் பயன்பாடு குறைவா இருக்கு. இனிப்பான இந்தச் சந்தைக்குப் பின்னாடி, ஆரோக்கியக் கேட்டுக்கான ஆபத்தான பாதை யும் திறந்துகிடக்குது. இந்தச் சூழலை ஆரோக்கியமானதாக மாற்ற எங்களால் முடிஞ்ச பங்களிப்பைக் கொடுப்போம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பூனம்.