Published:Updated:

கைவிட்ட கணவர், தோள்கொடுத்த மாமியார்! - வைராக்கிய பிரேமாவின் வெற்றிக்கதை

பிரேமா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேமா

நம்பிக்கை மனுஷி

தீபாவளி ஆர்டர்கள் குவிந்துகிடக்க, சென்னை மடிப்பாக்கம் பிரேமாவின் டெய்லரிங் யூனிட்டில் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. சகோதரப் பாசத்துடன் பணியாளர்களிடம் வேலைவாங்கும் அவர் முகத்தில் அப்படியோர் உற்சாகம். பொறுப்பற்ற கணவரால் குடும்பத்தில் நிம்மதி பறிபோகவே, பிழைப்புக்காகத் தவிப்புடன் சென்னை வந்தவர். ‘அவர்கள்’ திரைப்பட க்ளைமாக்ஸ்போல, பிரேமாவுக்கு அவரின் மாமியார் தோள் கொடுத்திருக்கிறார். வைராக்கியத் துடன் ஜெயித்துக்காட்டியிருப்பவர், அந்தப் பகுதி மக்களின் மனத்திலும் குடிகொண்டிருக்கிறார்.

“பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். என் சின்ன வயசுலயே பெற்றோர் தவறிட்டாங்க. சொந்தக்காரங்க வீட்டுல வளர்ந்தேன். பத்தாவதுதான் படிச்சிருக்கேன். கல்யாணமானதும் சில வருஷங்கள் வாழ்க்கை நல்லாதான் போச்சு. இந்த நிலையில், கணவருடைய குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தினமும் பிரச்னை. வீட்டுல இருந்தபடியே டாக்டர் களுக்கு கோட் தைச்சுக் கொடுத்தேன். ஆனாலும் வறுமையைச் சமாளிக்க முடியலை. பிழைப்புக்காகச் சென்னை வந்தோம். சில காலம் சொந்தக்காரங்க வீட்டுல தங்கின நிலையில, தனியா வீடு பிடிச்சோம்.

கொஞ்சநாள்லயே வீட்டுக்காரர் எங்களை கைவிட்டுட்டுப் போயிட்டார். குழந்தையுடன் தவிச்சு நின்னப்போ, ‘என் பையன் செஞ்ச தப்புக்கு காலம் முழுக்க உன்கூட ஆதரவா இருக்கேன்’னு மாமியார் என்னைக் கட்டியணைச்சாங்க. மூணு பேரும் தனியாவே வாழ ஆரம்பிச்சோம். பக்கத்துல இருந்த ஒரு டெய்லரிங் கடைக்கு வேலைக்குப் போனேன். ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணி செலவு பண்ற அளவுக்கு கஷ்டங்கள். ஒரு கட்டத்துல வாடகைக்குச் சின்னதா கடை பிடிச்சு தனியா தொழில் ஆரம்பிச்சேன். கூடவே, தையல் பயிற்சியும் கொடுத்தேன்”

– கடின உழைப்பின் மூலம், படிப்படியாக வளர்ந்து இன்று ஆறு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார் பிரேமா.

கைவிட்ட கணவர், தோள்கொடுத்த மாமியார்! - வைராக்கிய பிரேமாவின் வெற்றிக்கதை

“மாமியார் தாசம்மாள் கவர்ன்மென்ட் நர்ஸா இருந்து ஓய்வு பெற்றவங்க. அவங்களுக்கு வரும் ஓய்வூதியத்துல ஒரு ரூபாய்கூட எடுத்துக்காம, அப்படியே என்கிட்ட வீட்டுச் செலவுக்குக் கொடுத்துடுவாங்க. சொந்தக் காரங்க பலர் இருந்தும்கூட ஒருநாள்கூட யார் வீட்டுலயும் தங்காம, என்கூடவேதான் இருந்தாங்க. தாய்க்கும் மேலாக என் இன்ப துன்பங்கள்ல பங்கெடுத்தாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘நீ எவ்வளவுதான் கஷ்டப்படுவே’ன்னு வீட்டு வேலைகளை நான் வரும் முன்பே செய்து வெச்சுடுவாங்க. கஷ்டங்கள் தீர்ந்து நாங்க நிம்மதியா வாழ ஆரம்பிச்சப்போ, அவங்க ரொம்பவே பூரிச்சுப்போனாங்க. நானும் அவங்களோட எல்லா ஆசைகளையும் நிறைவேத்தி வெச்சேன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவங்க, போன மாசம் 93 வயசுல காலமானாங்க. இப்படியொரு மாமியார் கிடைக்க காரணமான என் கணவருக்குத்தான் நன்றி சொல்வேன்”

- ஆனந்தக் கண்ணீருடன் மாமியாரின் நினைவுகளில் நெகிழ்கிறார் பிரேமா.

“சொந்த வீடு வாங்கினேன். மகளை நல்லா படிக்க வெச்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். பேத்தியைப் பார்த்தாச்சு. மகன் இல்லாத குறையை மருமகன் நிவர்த்தி செய்றார். சில வருஷத்துக்கு முன்புவரை நாள் முழுக்கத் துணி தைச்சேன். ஒருகட்டத்துல மெஷின்ல உட்கார்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதனால இப்ப நான் தைக்கறதில்லை. நாள் முழுக்க எனக்கு கட்டிங் வேலைகளே சரியா இருக்கும். செலவுகள், ஊழியர்களுக்கான ஊதியம்னு எல்லாம்போக, எனக்கு நிறைவான தொகை லாபமா நிக்கும்.

சென்னை வந்த புதுசுல எங்கும் போகாம, கொண்டாட்டம்னு எதுவுமேயில்லாமதான் இருந்தோம். ஒவ்வொரு பண்டிகையின்போதும், அடுத்த வருஷமாவது ஏதாச்சும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுற அளவுக்காவது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைச்சுடாதான்னு ஏங்கியிருக்கேன். அந்த நிலை இப்போ சாத்தியமாகியிருக்கு. மகள் குடும்பத்துடன் எல்லாப் பண்டிகைகளையும் சந்தோஷமா கொண்டாடுறோம். இதுக்கு காரணம் என் யூனிட்ல வேலை செய்ற சகோதரிகள். அவங்களுக்கு ஒவ்வொரு தீபாவளிக்கும் காஞ்சிபுரம் போய் பட்டுப் புடவை வாங்கிட்டு வந்து பரிசா கொடுப்பேன்.

என்னிக்காவது உதவும்னு கத்துக்கிட்ட டெய்லரிங் பயிற்சிதான் இப்பவரை என்னைக் காப்பாத்துது. ஆறு ரூபாய் நூல்கண்டுல 400 ரூபாய்வரை சம்பாதிக்க முடியுது. நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவற்றைச் சரியா அடையாளம் கண்டுபிடிச்சு, உழைக்கத் தயாரா இருந்தா நிச்சயம் ஜெயிக்கலாம்”

– உதாரண மனுஷியாகப் புன்னகைக்கிறார் பிரேமா.