Published:Updated:

``விளம்பரமே செய்யலை; ஆனா, விற்பனை படுஜோர்!'' - நைட்டி பிசினஸில் சாதித்த நிஷா

``இந்தத் தொழிலை இஷ்டப்பட்டு செஞ்சிக்கிட்டு இருக்கதால, 58 வயசுலயும் எனக்கு அழுப்பு வரலை, கஷ்டமாகவும் தெரியலை. அன்னைக்கு இந்தத் தொழிலை வேண்டாம்னு சொல்லித் தடுத்த என்னோட வீட்டுக்காரரும், மகன் பஷீரும் இந்தத் தொழிலுக்குள்ள வந்திட்டாங்க." - சிராஜூ நிஷா

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிக் கடனில் ஒரே ஒரு தையல் மிஷினுடன் தோழிகள், உறவினர்களுக்காக நைட்டிகளைத் தைக்கத் தொடங்கினார் சிராஜூ நிஷா. இன்றைக்கு அவருக்குச் சொந்தமாக 30 பவர் மிஷின்களுடன் நிஷா நைட்டீஸ் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்று வாடகை வீட்டுக்குள் தைத்த நைட்டிகளை வைக்கக்கூட இடமில்லை, இன்று புதுக்கோட்டையில் இரண்டு தையல் யூனிட்டுகள், மொத்த விற்பனை நிலையம் என நைட்டி தொழில் பரந்து, விரிந்து கிடக்கிறது. நேரடியாக 30 பெண்களுக்கும் மறைமுகமாக 200 பெண்களுக்கும் எனத் தினமும் வேலை கொடுத்து அவர்களின் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த 58 வயதான சிராஜூ நிஷா. தனி ஆளாக அவர் இந்தத் தொழிலில் சாதித்த கதை சுவாரஸ்யமானது.

நிஷா நைட்டி
நிஷா நைட்டி
``யூடியூப்தான் என் சந்தை... மாசம் 1.5 லட்சம் வருமானம்!" - கிராமத்தில் கலக்கும் ராஜாத்தி #SheInspires

அவருடைய நைட்டிகள் தைக்கும் யூனிட்டில் உள்ள மிஷின்கள் அனைத்தும் பரபரத்துக்கொண்டிருந்தன. ஒருபுறம், பெண்கள் மும்மரமாக நைட்டிகளைத் தைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் ராஜஸ்தானிலிருந்து வந்து இறங்கிய துணிகளைப் பிரித்து, சைஸ் வாரியாகத் துணிகளை கட் செய்து கொடுக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தார் நிஷா. வேலையை முடித்தவர், நம்முடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

``நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டைதான். வீட்டுக்காரருக்குச் சென்னை. 1980-கள்ல கல்யாணம் கட்டிக்கிட்டு சென்னைக்குப் போயிட்டேன். ரொம்ப வருஷமா சென்னையில தனியா வாடகை வீட்டுலதான் குடியிருந்தோம். கொஞ்ச வருஷத்துலயே வீட்டுக்காரருக்குத் தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம். கஷ்டத்தைச் சமாளிக்கிறதுக்காக மலேசியாவுக்குக் கிளம்பிப் போனார். அவர் வெளிநாடு போனாலும், எங்களோட கஷ்டம் மட்டும் போகலை.

9-ம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சிருக்கேன். வீட்டுல சும்மா தானே இருக்கோம், ஏதாவது ஒரு தொழிலைத் தெரிஞ்சு வச்சிக்கிட்டா பிற்காலத்துல அது நமக்கு உதவும்னு சொல்லி சென்னையில இருக்கும்போது கஷ்டத்தோட, கஷ்டமா ஒரு வருஷ தையல் பயிற்சி முடிச்சேன். கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலை வந்திருச்சு. இப்படிப் பொருளாதார பிரச்னைகளால 1992-ல பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு புதுக்கோட்டைக்கே வந்திட்டேன்.

சேலை தொடங்கி ரெடிமேட்களை வாங்கிக்கிட்டு வந்து, உறவினர்கள், நண்பர்கள்கிட்ட விற்பனை செய்றது, இப்படி சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்துப் பிள்ளைகள் எல்லாரையும் ஓரளவு படிக்க வச்சேன். அப்போ நைட்டிக்கு நல்ல மூவிங் இருந்துச்சு. நமக்குத்தான் தையல் தெரியுமே, நாமலே தச்சிக் கொடுத்தா கூடுதலா கொஞ்சம் வருமானம் பார்க்கலாமேங்கிற ஒரு ஐடியாவில், ஒரு தையல் மிஷினோட தொழிலைத் தொடங்குனேன்.

நிஷா நைட்டி
நிஷா நைட்டி

மதுரைக்குப் போய் தேடிப் பிடித்து நைட்டி மெட்டீரியல்களை மொத்தமாக வாங்கிட்டு வந்திடுவேன். நைட்டி தைக்கிறவங்க பெரும்பாலும் அளவு எடுத்து தைக்க மாட்டாங்க. ஆனா, நான் அளவு எடுத்து தைக்க ஆரம்பிச்சேன். நான் தைக்கிற நைட்டி லூசாகவும், ரொம்ப டைட்டாகவும் இல்லாம கரெக்ட் பிட்டிங்கா இருக்கும்.

அப்ப எல்லாம் இப்ப மாதிரி பவர் மிஷின்கள் இல்லை. கால்ல மிதிச்சுதான் தைக்கணும். மெட்டீரியலை கட் பண்றதுல தொடங்கி, தைத்து குவாலிட்டி பார்க்குறது வரைக்கும் எல்லாமே நான் ஒரே ஆளுதான். காலையில நைட்டி தைக்க ஆரம்பிச்சா, இரவு ஆயிடும். இடுப்பு, கை கால் எல்லாம் கடுமையா வலிக்கும். ஒரு நாளைக்கு 10 முதல் 15 நைட்டி வரைக்கும்கூட தைக்க முடியும். ஆனா, நான் அப்படி செய்ய மாட்டேன். வேகமாக தைக்கணும்னு குவாலிட்டி சரியா செக் பண்ண முடியாமல் போயிடும். அதனால, அதிகபட்சமா எட்டு நைட்டி வரைக்கும்தான் தைப்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு நைட்டியையும் குவாலிட்டியாகவும், அதே நேரத்துல புதுமையாகவும் கொடுக்கணும்னு சொல்லி ரொம்பவே மெனக்கெடுவேன். எங்க நைட்டியைப் பெண்கள் அதிகமாக விரும்ப முக்கியமானக் காரணங்கள்ல ஒண்ணு, கரெக்ட் பிட்டிங். ரெண்டாவது, மாடல்கள். மூணாவது, குறைந்த விலையில் குவாலிட்டியான நைட்டி. இப்ப எங்ககிட்ட 45 மாடல் நைட்டிகள் இருக்கு.

ஒருமுறை வெளியூரிலிருந்து 40 வயசு பெண்மணி ஒருவர் தேடி வந்து ஒரு நைட்டி வாங்கிட்டுப் போனாங்க. மொத நாளுதான் அந்த மாடல் நைட்டியை தச்சு விற்பனைக்கு வச்சிருந்தோம். அந்த நைட்டியை வாங்கிகிட்டுப் போனாவங்க, அடுத்த நாள் திரும்பிவந்து அதே மாதிரி நைட்டி கேட்டாங்க. அப்போ, `இந்த நைட்டியைத்தான் நைட்டுப் போட்டிருந்தேன், அத பார்த்த என்னோட கணவர், `இந்த நைட்டியில உன்னைப் பார்க்கும்போது 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்குன்ன' என்கிட்ட சொன்னாரு'ன்னு, நெகிழ்ச்சியா அவங்க சொல்லிட்டுப் போனாங்க. இப்படி கஸ்டமர் ஃபீட்பேக்கை நோட் பண்ணி வச்சுக்குவேன். இப்படி ஏராளமான நிறைகள், ஒரு சில குறைகளும் வந்திருக்கு. அதையெல்லாம் உடனே சரிசெஞ்சுடுவேன்.

நிஷா நைட்டி
நிஷா நைட்டி

வீட்டுவாசல்ல கோலம் போடுறதுக்காக, நோட்டுல பலமுறை போட்டுப் பார்க்கிற மாதிரி, நான் மனசுக்குள்ள நைட்டி மாடல்ஸ்களைப் போட்டுப் பார்த்துக்குவேன். மனசுக்குள்ள தோணுற மாடலை அப்படியே நைட்டியில போட்டுப் பார்த்து மொதல்ல, நான் உடுத்திப் பார்ப்பேன். எனக்குப் பிடிச்சுப்போச்சுன்னா, அந்த மாடல்ல நிறைய தைக்க ஆரம்பிச்சுடுவேன்.

ஆரம்பத்துல தோழிகளோட வீடு தேடிப் போய் நைட்டிகளை விற்பனை செஞ்சுகிட்டு வருவேன். அந்தச் சமயத்துலதான், சொந்தக்காரங்களும், ஏன்... என்னோட வீட்டுக்காரரு, பிள்ளைகளும்கூட இந்த வேலை எல்லாம் வேண்டாமேன்னு சொன்னாங்க. ஆனா, நான் அவங்க யார் பேச்சையும் காதுல வாங்கலை. வழக்கம் போல, நான் என்னோட வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன்.

என்கிட்ட நைட்டி வாங்குன தோழிகள் அவர்களின் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் அவர்களின் உறவினர்களிடம் சொல்ல... இப்படித்தான் என்னோட நைட்டியோட மார்க்கெட்டிங் பெருசாச்சு. ஒரு கட்டத்துல, நைட்டிகளோட தேவைகள் ரொம்ப அதிகரிச்சுப் போச்சு. பலரும் நைட்டி கேட்டு வீட்டுக்கே வர ஆரம்பிச்சுட்டாங்க

அதற்கப்புறம் ரெண்டு மிஷின் கூடுதலாகப் போட்டு தையல் தெரிஞ்ச ரெண்டு பெண்களையும் வேலைக்கு வச்சேன். நான் தைக்கிற மாதிரி அவங்களுக்கும் சொல்லிக் கொடுத்து பழக்கிட்டேன். அதற்கப்புறம், அடுத்தடுத்த வருஷத்துல கொஞ்சம், கொஞ்சமா மிஷினோட எண்ணிக்கையை அதிகரிச்சேன். இப்ப 30 பவர் மிஷின் வச்சு தொழிலை நடத்திக்கிட்டு இருக்கேண்.

தைக்கிறது, குவாலிட்டி செக் செய்றது, விற்பனையாளர்ன்னு மொத்தம் 35 பெண்கள் என்கிட்ட வேலை பார்க்கிறாங்க. கணவனை இழந்து, பிள்ளைகளைக் காப்பாத்துறதுக்கு கஷ்டப்படுறவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்குச் சேர்த்துக்குவேன். அதனாலயேதான் 15 வருஷத்துக்கும் மேலாக என் கம்பெனியில் பல பெண்கள் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க.

நேரடியாக 35 பேர்னா, இந்த நைட்டியை வாங்கிக்கிட்டுப் போய் அதவச்சு 200 பெண்கள் மறைமுகமாகப் பிழைக்கிறாங்க. கொரோனா நேரத்துலயும் இவங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஷிப்ட் மாதிரி போட்டு பாதுகாப்போட பெண்களுக்கு வேலை கொடுத்தேன்.

நிஷா நைட்டி
நிஷா நைட்டி

என்னோட உழைப்பாளர்களுக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சிருவேன். மாஸ்க் தைத்து பலருக்கும் இலவசமாகவும் கொடுத்தோம். அப்பவும் சரி, இப்பவும் சரி, ஃபிட்டிங்க் விஷயத்துல மட்டும் ரொம்பவே கவனமாக இருப்பேன். இன்னைக்கும் மெட்டீரியல்ல எஸ், எம், எக்ஸ் எல்'னு சைஸ் வாரியாக நான் மட்டும்தான் கட் பண்ணி அனுப்புவேன். அந்த வேலையை மட்டும் வேற யாருக்கிட்டயும் கொடுக்க மாட்டேன். ஆயிரமோ, பத்தாயிரமோ நான்தான் எல்லாத்தையும் கட் பண்ணிக்கொடுப்பேன்.

இந்தத் தொழிலை இஷ்டப்பட்டு செஞ்சிக்கிட்டு இருக்கதால, 58 வயசுலயும் எனக்கு அழுப்பு வரலை, கஷ்டமாகவும் தெரியலை. மெட்டீரியல் கட்டிங் முடிச்சிட்டா, விற்பனைக்குப் போயிடுவேன். இப்பவும் யூனிட்டுக்கு வந்திட்டா, வீட்டுக்குப் போக இரவு ஆகிடும். அன்னைக்கு இந்தத் தொழிலை வேண்டாம்னு சொல்லித் தடுத்த என்னோட வீட்டுக்காரரும், மகன் பஷீரும் இந்தத் தொழிலுக்குள்ள வந்துட்டாங்க.

வாடகை வீட்டுல இருந்த நான் இந்தத் தொழிலை வச்சுத்தான் சொந்தமா இடம் வாங்கி அடுத்தடுத்து இரண்டு தையல் யூனிட் போட்டேன். அடுத்த கொஞ்ச நாள்லயே நேரடி விற்பனை நிலையத்தையும் ஆரம்பிச்சேன். தமிழகம் முழுவதும் இப்போ எல்லா ஊர்லயும் எங்களோட நைட்டிகள் கிடைக்குது. அதோட சிங்கப்பூர், மலேசியாவுக்கும் அதிகமாக அனுப்பிக்கிட்டு இருக்கோம். வெளிநாட்டுல எங்க நைட்டிகளோட தேவை ரொம்பவே அதிகரிச்சிருக்கு.

என் மகன் பஷீர் தொழிலுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் ஆன்லைன்ல எங்க நைட்டிகளை விற்கிற மாதிரியான சில விஷயங்களையும் கொண்டுவந்திருக்கான். இப்போ, கொஞ்ச நாளாக இந்தியா முழுவதுமே எங்களோட நைட்டிகளை அனுப்பிக்கிட்டு இருக்கோம். ஒரு நாளைக்கு 1,000 நைட்டிகள் வரைக்கும்தான் இப்போ தயாரிக்க முடியுது. ஆனால், இப்போ தேவை ரொம்பவே அதிகரிச்சிருக்கு.

மகனுடன்  நிஷா
மகனுடன் நிஷா
மூலிகை நாப்கின், சிறுதானிய உணவுகள்... சமூக சேவையோடு ஒரு சக்ஸஸ் பிசினஸ்! #SheInspires

ராஜஸ்தான் நேரடியாகப் போயிதான் மெட்டீரியல் எடுக்கிறோம். குறைந்த மார்ஜின் வைத்து விற்பனை செய்கிறோம். அதனாலதான் அதிகமாக எங்க நைட்டி விற்பனையாகுது. அதிக அளவு நைட்டி விற்பனையாவதன் மூலமா நமக்கு நல்ல வருமானம் கிடைக்குது.

வருஷத்துக்கு இந்தத் தொழில் மூலமாக ரூ.2 கோடி டேர்ன் ஓவர் பண்றோம். அதிகபட்ச விலையே ரூ.350 தான். எங்களோட எல்லா நைட்டிகளும் குறைஞ்சபட்சம் ஐந்து வருஷத்துக்காவது உழைக்கும். தொடர்ச்சியா யூஸ் பண்ணி வெளுத்துப் போகிற நிலைக்கு நைட்டி வந்தாலும், ஸ்டிரிச்சிங்க் மட்டும் விடவே விடாது.

அப்பவும் சரி, இப்பவும் சரி என்னோட நைட்டிக்கு விளம்பரத்துக்குன்னு நான் ரூ.1 கூட செலவழிக்கலை. ஆனா, விற்பனை படுஜோருன்னுதான் சொல்லணும்.

என் மார்க்கெட்டிங்கோட அஸ்திவாரமே கஸ்டமர்கள்தான். அடுத்தகட்டத்துக்கு நிஷா நைட்டீஸை எடுத்துப் போகணும். எனக்கு அப்புறமும் என்னோட இந்த நைட்டி கம்பெனி இயங்கணும். அதுதான் இப்போதைக்கு என்னோட வாழ் நாள் ஆசை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு