Published:Updated:

``ஆன்லைனில் 1,500 ரூபாய்; என்கிட்ட 50 ரூபாய்தான்!’’ - கொட்டாங்குச்சி பிசினஸில் அசத்தும் ராதா

``எப்போதுமே, நம்ம ஊரில் கிடைக்கும் பொருள்களை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் வாங்கி, அதை ஒரு டிரெண்டாக செட் செய்த பின்தான், நம்ம மக்களுக்கு அதோட மதிப்பே புரியும்."

ராதா
ராதா

கொட்டாங்குச்சியில் உருவாக்கப்பட்ட ஒரு பவுல், 1500 ரூபாய்க்கு இணையத்தில் விற்கப்பட்டது பலரும் தெரிந்திருக்கும். கொட்டாங்குச்சியில் தயாராகும் பொருள்களை, சில ஆயிரங்கள் கொடுத்து ஆன்லைனில் வாங்குவதற்கு, மக்கள் தற்போதும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது கொட்டாங்குச்சி பொருள்களில், அதை எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ராதாவைத் தொடர்பு கொண்டோம். இவர், கொட்டாங்குச்சியில் ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் என விதவிதமான மதிப்புக் கூட்டல் பொருள்களை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார்.

கொட்டாங்குச்சி பிசினஸ்
கொட்டாங்குச்சி பிசினஸ்

``எப்போதுமே, நம்ம ஊரில் கிடைக்கும் பொருள்களை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் வாங்கி, அதை ஒரு டிரெண்டாக செட் செய்த பின்தான், நம்ம மக்களுக்கு அதோட மதிப்பே புரியும். கொட்டாங்குச்சியிலும் அதுதான் நடந்திருக்கு. ஆரம்பத்தில் `இதெல்லாம் ஒரு பிசினஸா'னு நிறைய பேர் என்னைக் கிண்டல் செய்திருக்காங்க. ஆனா, இணையதளத்தில் 1,500 ரூபாய்க்கு விற்கப்படும் கொட்டாங்குச்சி என்ற விளம்பரம் பரவ ஆரம்பித்த பிறகு, வாடிக்கையாளர்கள் என்னைத்தேடி வந்து ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதே பொருளை 50 ரூபாய்க்கு செய்து கொடுத்தேன். இப்படிச் சிறிய அளவில் ஆரம்பிச்ச பிசினஸ், மக்கள் கொடுக்கும் வரவேற்பு காரணமாக, இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கு" என்றவரிடம், அவரைப் பற்றிய விவரம் கேட்டோம்.

``எனக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர். படிச்சது எம்.பி.ஏ. எங்க குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை தொழில் முனைவோர். `பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன்'னு சொன்னவுடன், `படிச்ச படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலைக்கு போ. பிசினஸ் எல்லாம் நமக்கு செட் ஆகாது'னு குடும்பமே எனக்கு எதிராக நின்னாங்க. அத்தனை பேரின் எதிர்ப்பையும் மீறி, கார்மென்ட்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சேன். நான் எதிர்பார்த்ததைவிட ரொம்ப சவாலாகவும் போராட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்துச்சு.

பல சிரமங்களுக்கு மத்தியில், ஒரு வருடம் கார்மென்ட்ஸ் பிசினஸை நடத்தினாலும், தனித்துவமாக எதுவுமே பண்ண முடியல. எனக்கான அடையாளத்தை உருவாக்க முடியலங்கிற குறை மனசுக்குள் இருந்துட்டே இருந்துச்சு. நாளடைவில் அது ஆர்வமின்மையாக மாற, கார்மென்ட்ஸ் பிசினஸைப் பாதியிலேயே நிறுத்திட்டேன். நாலு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுச்சு. அந்த இழப்பு ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாழ்க்கையே முடிந்துபோன மாதிரி இருந்துச்சு.

கார்மென்ட்ஸ் பிசினஸ் கொடுத்த இழப்பைச் சரிசெய்யவே ஆறு மாதங்கள் என் குடும்பம் படாதபாடுபடது. நிறைய அவமானங்களைச் சந்தித்தேன். ஆனாலும் என்னை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பை மனசு தேடிட்டே இருந்துச்சு. அப்போது எங்க ஏரியாவில் தென்னந்தோப்பு ஒன்று குத்தகைக்கு வந்தது. அதை குத்தகைக்கு எடுத்து தேங்காய் தொழில் பண்ணலாம்னு ஆசை. ஆனால், கார்மென்ட்ஸ் பிசினஸ் நஷ்டத்தில் இருந்து, அது கொடுத்த பாதிப்பிலிருந்தே மீளாமல் இருந்ததால், என் யோசனையை வீட்டில் சொல்ல தயங்கினேன்.

கொட்டாங்குச்சியை நான்கு நாள் தண்ணீரில் ஊற வைப்போம். தண்ணீரில் ஊறிய கொட்டாங்குச்சியிலிருந்து நார்களை எளிதாகப் பிரித்து எடுத்துவிடலாம். அதன்பின், மூன்று வகையான உப்புத்தாள் போட்டு தேய்ப்போம். நார்கள் முழுவதும் நீங்கிய பின், பட்டை தீட்டும் மிஷினில் கொடுத்து கொட்டாங்குச்சியை மெருகேற்றுவோம்.
ராதா

ஒருநாள் என் கணவர்கிட்ட ஐடியாவைப் பயத்துடன் சொன்னேன். `இன்னொரு பிசினஸா அதெல்லாம் வேண்டவே வேண்டாம்'னு வீட்டில் ரொம்ப உறுதியா சொல்லிட்டாங்க. ஆனால், என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட என் கணவர், எனக்கு பக்கபலமாக இருந்தார். வங்கியில் லோன் வாங்கி தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்தோம். தோப்பிலிருந்து இளநீர் இறக்கி, அதை உறிச்சு, தேங்காய்களை அளவுக்குத் தகுந்தாற்போல் பிரித்து, கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு காய்க்கு 15 - 20 வரை லாபம் இருக்கும். ரெண்டு வருஷம் ஒரே தொழிலில் இருந்ததால் தேங்காய்களின் வகை, தன்மை எல்லாவற்றையும் நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன்.

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நேரம், பாக்கு மட்டை பொருள்கள், மண் பொருள்களுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சு. அப்போதுதான் கொட்டாங்குச்சியில் வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்கும் எண்ணம் எனக்குள் வந்துச்சு. கடைகளுக்கு தேங்காய் அனுப்புவதற்கு முன்பே, உருண்டையாக இருக்கும் சில தேங்காய்களைத் தனியே எடுத்து வெச்சுருவேன். நார்களையெல்லாம் சுரண்டி எடுத்துட்டு, வெறும் கொட்டாங்குச்சியில் டம்ளர், பவுல், கம்மல், வளையல், டீ கப், ஐஸ் கப், சோப்பு டப்பா என நிறைய பொருள்களை உருவாக்கினேன். என் தோழிகளிடம் நான் உருவாக்கிய பொருள்களைக் காட்டியபோது, அவங்க அதை விலைக்குக் கேட்டாங்க. அப்போதான் இதை பிசினஸாகப் பண்ணலாம்னு எண்ணம் வந்துச்சு. பிசினஸ்க்கான இணையப் பக்கத்தை நானே உருவாக்கி, அதில் என்னுடைய பொருள்களை விலையுடன் பதிவிட்டேன். வித்தியாசமான பொருள்களைப் பார்த்ததும் நிறைய பேர் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

தேங்காய்
தேங்காய்

பவுல், டம்ளர், கிண்ணம்... என கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப கொட்டாங்குச்சிகளைத் தேர்வுசெய்து, நார்களை நீக்கி, ஆக்ஸா ப்ளேடு பயன்படுத்தி பொருள்களைத் தயார்செய்து விற்பனை செய்தேன். ஒருமுறை துபாயிலிருந்து 10,000 ரூபாய்க்கு ஆர்டர் வந்தது. அந்த நிமிஷம் கனவு மாதிரி இருந்துச்சு. அதன்தான் என்னுடைய பிசினஸ்ஸின் ஆரம்பம்னு நினைச்சேன்" என்ற ராதா, பிசினஸின், அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிப் பேசினார்.

``மொத்தமாக ஆர்டர் வரவே, கொட்டாங்குச்சிகளுக்குத் தேவை அதிகமாயிருச்சு. அதனால் கடைகளுக்கு தேங்காய் விநியோகம் செய்வதை நிறுத்திட்டேன். மரத்திலிருந்து தேங்காய் பறிச்சு, உறிச்சு, உட்புறம் இருக்கும் தேங்காய் பத்தையை தனியே எடுத்து காயவைச்சு, எண்ணெய் தயாரிக்க செக்குக்கு அனுப்பிருவேன். அதனால், தேவைக்கு ஏற்ப கொட்டாங்குச்சிகள் கிடைக்க ஆரம்பிச்சுது. எண்ணெய் மூலமும் வருமானம் கிடைச்சுது. சிலர் தென்னைமட்டையை அடுப்பு எரிப்பதற்கு விலை கொடுத்தும் வாங்கிட்டுப் போவாங்க. அதன்மூலமும் லாபம் கிடைச்சுது. அதனால் இந்தத் தொழிலில் நஷ்டமோ வேஸ்ட்டோ கிடையாது" என்றவரிடம், கொட்டாங்குச்சியில் அழகுப் பொருள்கள் தயார் செய்வது எப்படி என்பது குறித்து கேட்டோம்.

கொட்டாங்குச்சி பிசினஸ்
கொட்டாங்குச்சி பிசினஸ்

``கொட்டாங்குச்சியை நான்கு நாள்கள் தண்ணீரில் ஊற வைப்போம். ஊறிய கொட்டாங்குச்சியில் மேலிருக்கும் நார்களை எளிதாக எடுத்துவிடலாம். அதன்பின், மூன்று வகையான உப்புத்தாள்களைக் கொண்டு தேய்ப்போம். நார்கள் முழுவதும் நீங்கிய பின், பட்டை தீட்டும் மிஷினில் கொடுத்து கொட்டாங்குச்சியை மெருகேற்றுவோம். சின்னச்சின்ன துகள்களையும் நீக்கி பாலிஷ் செய்து, தென்னை மட்டையில் தயாரித்த கைப்பிடிகளைப் பட்டைதீட்டிய கொட்டாங்குச்சியுடன் பொருத்தி, விற்பனைக்கு அனுப்புவோம்.

டம்ளர், பவுலுக்குத் தேவையான கைப்பிடிகள், ஸ்டாண்டுகள் போன்றவற்றையும் தென்னை மட்டைகளிலிருந்து நாங்களே தயாரிக்கிறோம். தொழில் தொடங்கிய புதிதில், ஆக்ஸா பிளேடு வெச்சுத்தான் ஒவ்வொரு பொருளையுமே கைகளால் செய்வேன். ஒரு பொருள் செய்யவே இரண்டு நாள்வரை ஆகும். இப்போது நிறைய ஆர்டர்கள் வரவே, மிஷின்களைப் பயன்படுத்தி பொருள்கள் உருவாக்கிட்டு இருக்கேன். 20 பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன்.

கொட்டாங்குச்சி பிசினஸ்
கொட்டாங்குச்சி பிசினஸ்
Vikatan

கொட்டாங்குச்சியில் தயாராகும் 32 வகையான பொருள்கள் இப்போ எங்ககிட்ட கிடைக்கும். துபாய், மலேசியா உட்பட இன்னும் சில நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிட்டு இருக்கோம். வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல், 20 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்கிறோம். ஆர்டர்களுக்கு ஏற்ப மாதம் 3,00,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. போராடினால் வெற்றி எளிமையான ஒன்றுதான்" என்று நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்கிறார் ராதா.