லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அள்ள அள்ள வருமானம்... கறுப்புத் தங்கத்தில் அட்டகாசமான லாபம்!

ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா

‘மண்புழு உரம்’ தயாரிப்பில் கலக்கும் ரம்யா

#Utility

மாட்டுச்சாணம், விவசாயத்துக்குப் பயன்படும் அருமையானதொரு தொழுவுரத்துக்கான மூலாதாரம். அந்த வகையில் மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மண்புழு உரம், நிலையான வருமானம் கொடுக்கும் ‘கறுப்புத் தங்கம்’ என்றே பெருமையுடன் பார்க்கப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு, மண்புழு உரத் தயாரிப்பின் மூலமாக சிறப்பான வருமானம் ஈட்டி வரும் ரம்யா, தன் வெற்றி அனுபவங்களை விரிவாகவும் புன்னகையுடனும் பேசுகிறார்.

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவ. பி.எஸ்ஸி நர்சிங் முடிச்சதுமே கல்யாணம் ஆகிடுச்சு. வேளாண் வணிகத்துறையில் உதவி வேளாண் அலுவலரான கணவர் ராமமூர்த்தி, ‘வெளி வேலைக்குப் போகாம, தொழில்முனைவோராகி பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடு’ன்னு ஊக்கம் கொடுத்தார். எங்களுடைய கிராமப்புறப் பகுதியில் பெரும்பாலான வீடுகள்லயும் மாடு இருந்தாலும், அதைப் பால் தேவைக்குத்தான் பயன்படுத்துவாங்க. ஆனா, மாட்டுச் சாணத்தை மதிப்புக்கூட்டல் செய்து வருமானம் பார்க்கும் யுக்தி அவங்கள்ல நிறைய பேருக்குத் தெரியறதில்லை. அதனாலதான் மண்புழு உரத் தயாரிப்பில் இறங்கினேன். ரசாயன உரத்தால நிலமும் மக்களின் உடல்நலனும் பாதிக்கப்படுறதைக் குறைக்கிறதுக்கு இயற்கை விவசாயம்தான் உதவும். அதுக்கு உதவி செய்யுற வகையிலயும்தான் மண்புழு உரத்தை நான் கையில எடுத்திருக்கேன்.

அள்ள அள்ள வருமானம்... கறுப்புத் தங்கத்தில் அட்டகாசமான லாபம்!

மூத்த இயற்கை விவசாயி ஒத்தர்கிட்ட 2007-ல் பயிற்சி எடுத்துகிட்டு, அவரிடமே 100 கிலோ மண்புழுக்களை விலைக்கு வாங்கினேன். திருப்பத்தூர் மாவட்டம், சொக்கலாம்பட்டி கிராமத் திலுள்ள எங்களோட பழைய பூர்வீக வீட்டை இடிச்சுட்டு, 900 சதுர அடியில், 60,000 ரூபாய் முதலீட்டில், ‘அஷ்வின் பயோ-டெக்’ங்கிற பேர்ல சின்னதா உற்பத்திக்கூடத்தைத் தொடங்கினேன். ரெண்டு பணியாளர்கள், 20 தொட்டி கள்னுதான் ஆரம்பிச்சேன். முதல் அறுவடையில் ரெண்டரை டன் மண்புழு உரம் கிடைச்சது. ‘சாண உரத்தைக் காசு கொடுத்து வாங்குறதா?’, ‘இதில் எப்படி வருமானம் பார்க்க முடியும்?’னு பலரும் எதிர்மறையா பேசினாங்க.

அதனால விவசாயிகள் பலருக்கும் சாம்பிள் கொடுத்து, மண்புழு உரப் பயன்பாட்டை விளக்கினேன். ஒரு கிலோ பாக்கெட் மூணு ரூபாய்னு சுற்றுவட்டாரப் பகுதிகள்ல விற்பனை செஞ்சேன். அதிலேயே துண்டுச் சீட்டுல என்னோட போன் நம்பரை எழுதிக் கொடுத்தேன். உரம் தீர்ந்ததும் சிலர் போன் பண்ணிக் கேட்கவே, படிப்படியா விற்பனை அதிகரிச்சது. விவசாயக் கண்காட்சிகள்ல கலந்துகிட்டு தொழில்தொடர்புகளைப் பெருக்கினேன். பிறகு, 40 சென்ட் நிலத்தில், 1,800 சதுர அடியில் தலா 48 தொட்டிகளோட மூணு உற்பத்திக்கூடங்களை அடுத்தடுத்து அமைச்சோம்” என்பவர், தற்போது எட்டுப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.

அள்ள அள்ள வருமானம்... கறுப்புத் தங்கத்தில் அட்டகாசமான லாபம்!

“மண்புழுக்களுக்குச் சாணம்தான் சிறந்த உணவு. மண்ணுக்கும் பயிருக்கும் ஊட்டச் சத்தைக் கூட்டுற வகையில... எருக்கன் இலை, வேப்பிலை, ஆவாரம் இலை எல்லாம் சேர்த்துதான் மண்புழு உரம் தயாரிக்கிறோம். சாணத்தையும் இந்த இலைதழைகளையும் ஒண்ணா கலந்து, தண்ணி சேர்த்து தினமும் ஒரு மணிநேரம் வீதம் தொடர்ந்து 10 - 15 நாள்களுக்கு நல்லா மிதிக்கணும். இதன் மூலமா அதுல இருக்கற வெப்பம் குறையுறதோட... மீத்தேன் வாயுவும் வெளியேறிடும். 100 கிலோ சாணத்துக்கு, மூணு இலை களிலும் தலா 10 கிலோ மட்டுமே பயன்படுத்தணும். 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒண்ணரை அடி உயர தொட்டிதான் மண்புழு உரம் தயாரிக்கறதுக்கு நல்லது. சாணத்தைச் சாப்பிட்டு, மண்புழுக்கள் வெளி யேற்றும் கறுப்பு நிறக் கழிவுதான் ஊட்டமேறிய மண்புழு உரம். இதை வெயில்ல உலர்த்தி, சலிச்சு விற்பனை செய்யலாம்.

இப்போ மாசத்துக்கு 25 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்யுறோம். வேப்பிலை, எருக்கன் இலை, ஆவாரம் இலைனு மூலிகைகள் சேர்த்த தரமான மண்புழு உரம்கிறதால, டன் 13,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யுறோம். சில்லறை விலையில் ஐந்து கிலோ பை 100 ரூபாய்க்கு விற்கிறோம். உற்பத்தி குறைஞ்சுடக் கூடாதுனு மாசத்துக்கு 20 கிலோ மட்டும் மண்புழுவையும் விற்பனை செய்றோம். இதில் தனி வருமானம் கிடைக்குது. உற்பத்தி பற்றாக்குறையா இருக்கும் அளவுக்கு ஆர்டர்கள் அதிகமா வருது” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டுவதுடன், வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறார்.

“எருமைச் சாணம் மட்டுமோ இல்ல, பசு மற்றும் எருமைச் சாணத்தைக் கலந்தோ இதுக்குப் பயன்படுத்தலாம். நிலமில்லாதவங்க குத்தகை நிலத்தில்கூட உற்பத்திக்கூடம் அமைக்கலாம். இப்போ டன் 2,000 ரூபாய் விலையில மாசத்துக்கு 90 டன் சாணத்தை விலைக்கு வாங்கறோம். மாடு வெச்சிருந்தா இந்தச் செலவு மொத்தமும் லாபமா மாறிடும். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், நிலத்தில் விவசாயம் செய்யுற பலருமே

இயற்கை முறையில் வேளாண்மை செய்யணும்னு நினைச் சாலும், இயற்கை இடு பொருள்கள் தயாரிக்கிறதுதான் அவங்களுக்குச் சவாலா இருக்கும். அவங்களுக் கெல்லாம் இந்த மண்புழு உரம் சிறந்த முறையில கைகொடுக்கும். அதனால இதோட தேவை எப்பவுமே இருக்கும்.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் வேலை செய்யறோம். பெரும்பாலானவங்க வீட்டுக்கே வந்து உரம் வாங்கிட்டுப் போயிடுறாங்க. மண்புழு உரத்துக்குத் தட்டுப்பாடு அதிகரிச்சுட்டே இருக்கு. அதனால சீக்கிரமே மாட்டுப் பண்ணையும் அமைச்சு இதை மேலும் விரிவு படுத்தப்போறேன்”

- கை நிறையக் கறுப்புத் தங்கத்தை அள்ளிக் காட்டியவாறு கூறும் ரம்யாவின் முகம் புன்னகையில் மின்னுகிறது!

தொழில் யுக்தி!

ண்புழு உரத் தயாரிப்புக்கு ரம்யா சொல்லும் நுட்பங்கள்... ஒரு லிட்டர் தயிர் மற்றும் ஒரு கிலோ வெல்லத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து, அந்தக் கரைசலை 3 – 4 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு தொட்டியிலும் லேசாகத் தெளிக்க வேண்டும். இந்தக் கரைசலைத் தனியாகத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும். இதைத் தெளிக்கும் தினங்களில் மட்டும் மண்புழுத் தொட்டியில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. இதனால், மண்புழுக்களின் இனப்பெருக்கம் துரிதமாக நடக்கும். மழைநீர் படாமல், தண்ணீர் தேங்காமல், சூரிய வெளிச்சம் படாமல், இருட்டான சூழல் இருக்கும்படி, எலி மற்றும் பெருச்சாளி தொந்தரவுகள் இல்லாத வகையில் உற்பத்திக் கூடத்தைப் பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் தொட்டியிலுள்ள உரத்தை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது. தொட்டியின் அடிப்பகுதியில் இருக்கும் தாய் படுக்கையானது எப்போதும் அரை அடி உயரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதனால், அதிலுள்ள வளர்ச்சி பெற்ற மண்புழுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்து புதிய புழுக்களை உருவாக்குவதுடன், தாய் படுக்கையில் ஏற்கெனவே இருக்கும் முட்டைகளிலிருந்தும் மண்புழுக்கள் உற்பத்தியாகும். பலரும்

தாய் படுக்கையையும் சேர்த்தே அறுவடை செய்துவிடுகிறார்கள். இப்படிச் செய்தால், அடுத்தடுத்து உரம் தயாராவதற்கு கால தாமதமாகும். இதனால், இந்தத் தொழிலில் நஷ்டமும் ஏற்படும்.

அள்ள அள்ள வருமானம்... கறுப்புத் தங்கத்தில் அட்டகாசமான லாபம்!

எப்படிச் செய்யலாம்?

முதலீடு: 50,000 ரூபாய் முதலீட்டில் 600 சதுர அடியில் 5–7 தொட்டிகள் கட்டி சோதனை முறையில் தொழில் தொடங்கி, மாதம் 8,000 வரை லாபம் ஈட்டலாம். முறையான அனுபவத்துடன், படிப்படியாக தொட்டிகளை அதிகப்படுத்தலாம்.

மூலப்பொருள்கள்: சாணம், வேப்பிலை, எருக்கன் இலை, ஆவாரம் இலை, வெல்லம், தயிர், தண்ணீர்.

உபகரணங்கள்: 4 மில்லிமீட்டர் துளை கொண்ட பெரிய சல்லடை, மண்வெட்டி, பிளாஸ்டிக் பக்கெட்.

தயாரிப்பு: ரெடிமேட் தொட்டி பயன் படுத்தக்கூடாது. தொட்டியின் உட்புறம் சிமென்ட் பூசக்கூடாது. தாய் படுக்கைக்காக, தயாரித்து வைத்திருக்கும் சாணக் கலவையில் 250 கிலோவைச் சேர்த்து, அதன்மீது 5–10 கிலோ வீதம் மண்புழுக்களை விட வேண்டும். பிறகு, தினமும் ஒவ்வொரு தொட்டியிலும் லேசாக தண்ணீர் தெளித்து விட வேண்டும். 30 நாள்கள் கழித்து, 10 நாள்களுக்கு ஒருமுறை தொட்டிக்கு 50 கிலோ வீதம் சாணக் கலவையைச் சேர்க்க வேண்டும். இப்படியே 4-5 முறை சேர்த்தால் தொட்டி நிரம்பிவிடும். அறுவடைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். 90-ம் நாள் முடிவில், முதல் அறுவடை செய்யலாம். மறுநாளே மீண்டும் சாணக் கலவையைச் சேர்க்கலாம். பிறகு, 5 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 50 கிலோ சாணக் கலவையைச் சேர்த்து, இதே முறையில் தொடர்ந்து 30 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.

பயிற்சி: மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் நேரில் சென்று பயிற்சி பெறலாம். இலவசமாகப் பயிற்சி அளிக்கவும் வழிகாட்டவும் நானும் தயாராக இருக்கிறேன்.

விற்பனை வாய்ப்பு: சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாயிகளைச் சந்தித்து, ஒரு கிலோ பாக்கெட் அளவில் சாம்பிள் கொடுக்கலாம். ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்காமல், வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தரமான மண்புழுக் களைத் தயாரித்தால், கொள்முதல் செய்வதற்கு தயாராக இருப்பதாக் கூறுகிறார் ரம்யா.