Published:Updated:

"பிள்ளையார் உங்களுக்கு சாமி,எங்களுக்கு வாழ்க்கை... பேரம் பேசாதீங்க மக்கா"! - சிலை செய்யும் ரேகா

விநாயகர்
விநாயகர்

நவீனத்தால் அழிவுக்கு உள்ளானது இயற்கை மட்டுமில்லை, எங்களை மாதிரி எத்தனையோ தொழிலாளிகளின் வாழ்க்கையும்தான்.

மாரியம்மன் என்றால் கையில் வேப்பிலை, முருகன் என்றால் வேல், நடராஜர் என்றால் ஒரு பாதம் ஊன்றி மறுபாதம் தூக்கி ஆடும் கோலம் என்று இந்துக் கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு வடிவம் உண்டு. இந்த வடிவங்களில் இதுவரை எந்த மாற்றங்களும் நிகழ்ந்தது இல்லை. ஆனால், இந்த விதிமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர், விநாயகர். ''பிடிச்சு வெச்சா பிள்ளையார்"னு ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ற மாதிரி மக்களின் மனநிலைக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப அவதாரம் எடுப்பவர், விநாயகர். ஸ்பைடர் மேன் விநாயகர், கிரிக்கெட் ப்ளேயர், உழவர் விநாயகர் என எந்தக் கோலத்திலும் அவதாரம் எடுக்கும் விநாயகர் சிலைகளை மக்கள் ரசித்து வணங்கத்தான்செய்கிறார்கள்.

ரேகா
ரேகா

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக, ஒரு அடி முதல் 10 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளை சாலையோரம் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. பல வண்ணங்களில், வடிவங்களில் விநாயகர்களை உருவாக்கும் கலைஞர்களில் ஒருவரான ரேகாவிடம் விநாயகர் சிலை வடிவமைப்பு பற்றி கேட்டோம் .

"எங்களுக்கு சொந்த ஊர் சென்னை தான். எங்க தாத்தா காலத்தில் இருந்து மண்தான் எங்க குடும்பத் தொழில். ஆரம்ப காலத்தில் மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு என மண் சார்ந்த எல்லாப் பொருள்களையும் செய்து, கடை போட்டு வித்துட்டு இருந்தோம். காலம் மாற மாற மண் பொருளுக்கு மவுசு குறைஞ்சுபோச்சு. மக்கள் ஆரோக்கியத்தைவிட, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, எத்தனையோ விதமான பாத்திரங்கள் வர ஆரம்பிச்சிருச்சு. மண் பொருளை மட்டும் நம்பி இருந்தால், மூணு நேரம் சாப்பாட்டுக்குக்கூட காசு கிடைக்காதுங்கிற நிலைக்கு வந்த பிறகு, நிறைய பேர் மண் தொழிலை விட்டுட்டு வேற வேற வேலைக்கு போயிட்டாங்க. நவீனத்தால் அழிவுக்கு உள்ளானது இயற்கை மட்டுமில்ல, எங்களை மாதிரி எத்தனையோ தொழிலாளிகளின் வாழ்க்கையும்தான்.

ஆறு மாசம் உழைத்ததன் பயனாக ஒரு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுதான் இந்த சிலை செய்வதில் எங்களோட ஆண்டு வருமானம்.
ரேகா.

எதிர்காலம் இல்லைனு தெரிஞ்சாலும், குலத்தொழிலை முழுசா விட முடியல. இப்போ, சீசனுக்கு ஏற்ப மண் சிலைகள் மட்டும் செய்து விற்பனை செய்துட்டு இருக்கோம். சாமி சிலைகளைப் பொறுத்தவரை வீட்டில் வைக்கும் சாமி சிலைகள் மட்டும்தான் மண்ணில் செய்வாங்க. ஆனா, இப்போ அதில்கூட கண்ணாடி, வெள்ளைச் சுண்ணாம்பு, ப்ளாஸ்டிக் சிலைகள்னு நிறைய வகைகள் வந்துருச்சு. மண்ணில் செய்யும் சிலைகளுக்கு ஆயுசு கம்மி என்பதால், மண் பொம்மைகள் வாங்குவதைவிட மற்ற பொருளில் செய்யப்பட்ட சிலைகளை வாங்கத்தான் ஆர்வம் காட்டுறாங்க. இதில் விதிவிலக்கு, விநாயகர் சதுர்த்தி சிலைகள். விநாயகர் சதுர்த்திக்கு வாங்கும் சிலைகளை அடுத்த சில தினங்களில் ஆற்றிலோ,கடலிலோ கரைக்கும் பழக்கம் இருப்பதால், பெரும்பாலான மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்கி சாமி கும்பிடுறாங்க. இந்தப் பழக்கம்தான் இன்னும் எங்க குலத் தொழிலை அழியாமல் காக்குது.

கடைகளில் வாங்கி, நீங்க சாமியா கும்பிடும் சிலைகளை ஊருவாக்க, நாங்க ஆறு மாசம் இரவு பகலா உழைக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாசத்தில் வரும் என்பதால், நாங்க மார்ச் மாசத்தில் இருந்தே வேலையைத் தொடங்கிருவோம். முன்பெல்லாம் களிமண் எங்க ஏரியாவில் இருக்கும் ஏரிகளில் இருந்தே எடுத்துப்போம். ஆனா இப்போ, மணல் எடுக்க அரசு தடை விதிச்சதால, ஒரு வண்டி மண் மூவாயிரம்னு விலை கொடுத்துதான் வாங்குறோம்" என்ற ரேகா, விநாயகர் சிலை செய்யும் முறை பற்றி விளக்குகிறார்.

`மாட்டுச் சாணத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்!’ - விருதுநகர் இளைஞரின் அசத்தல் முயற்சி
விநாயகர்
விநாயகர்

"குளத்தில் இருந்து நேரடியாக எடுத்துட்டு வரக்கூடிய மண்ணில் குப்பை, கல், கண்ணாடித் துண்டுகளெல்லாம் கலந்துதான் இருக்கும். அதுல சிலையெல்லாம் செய்ய முடியாது. சிலை செய்றதுக்குனு மண் பக்குவம் இருக்கு. அந்தப் பக்குவத்திற்கு மண்ணைக் கொண்டு வர குறைந்தது ரெண்டு மாசம் ஆகும். குளத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணை, நிறைய தண்ணீர் ஊற்றி சில நாள் ஊறவிடுவோம். முதலில் மண்ணில் இருக்கும் கண்ணாடி, குப்பைகளையெல்லாம் தனியா எடுத்துட்டு, மண்ணை மிதிச்சு பக்குவப்படுத்துவோம். மண்ணைக் கையில் எடுத்துப் பிசைந்து பார்த்தால், மண் உருட்டும் பக்குவத்தில் இருக்க வேண்டும். இந்தப் பக்குவத்திற்கு மண் வந்த பிறகு அதோட, சலித்த மணல், சாம்பல் சேர்த்துப் பிசைவோம். ஒரு வண்டி களிமண்ணுக்கு மூணு மூட்டை மணலும் அரை மூட்டை சாம்பலும் தேவைப்படும். களிமண்ணுடன் மண்ணு கலந்த பிறகு குறைஞ்சது ரெண்டு வாரமாவது மண்ணு ஊறணும்

மண்ணை பக்குவப்படுத்தவே ஜூன் மாசம் ஆகிரும். ஜூன் மாசத்தில் வரும் முதல் வளர்பிறை வெள்ளிக்கிழமையில், குல சாமியைக் கும்பிட்டு படையல் போட்டு, சிலை செய்ய ஆரம்பிச்சுருவோம். சிலர் கையாலே சிலை செய்வாங்க. அதுக்கு ரொம்ப நேரம் ஆகும். கையால் செய்த சிலையும்,அச்சில் வார்க்கும் சிலையையும் மக்கள் ஒரே விலைக்குத்தான் கேட்குறாங்க. கலைஞர்களுக்குத்தான் அச்சில் செய்தது, கையால் செய்ததுனு தெரியுமே தவிர, சாதாரண மக்களுக்கு அது தெரியாது. அதனால, நாங்க அச்சு வெச்சு தான் செய்வோம். விநாயகர் சிலை செய்றதுக்குனு தனியாக அச்சு வெச்சுருக்கோம். விநாயகரின் முன்பகுதி,பின்பகுதி என ரெண்டு அச்சாக இருக்கும்.ரெண்டிலும் மண்ணை நிரப்பி, இறுக்கமா மூடி அழுத்தம்கொடுத்து, கொஞ்சநேரம் கழிச்சு அச்சை தனித்தனியாகத் திறந்தால், விநாயகர் சிலை தனியா வந்துரும். அச்சில் மண்ணு ஒட்டாமல் இருக்க, கொஞ்சம் சாம்பலை தூவிப்போம்.

விநாயகர்
விநாயகர்

அச்சில் இருந்து வெளிய எடுக்கும்போது, சிலை நல்ல வடிவமைப்பில் இருக்காது. கண்ணு, மூக்கெல்லாம் கையால் தீட்டினால்தான் விநாயகர் அம்சமாக இருப்பார். ஒரு நாளைக்கு 10 சிலைதான் தயார்செய்ய முடியும். சிலைகளைத் தயார்செய்து ஒரு இருட்டறைக்குள் அடுக்கிருவோம். அப்போதான் சிலையில் வெடிப்பு இல்லாமல் இருக்கும்." என்ற ரேகா, விநாயகர் சிலை விற்பனை பற்றி பேச ஆரம்பித்தார்.

"மண்ணில் செய்த விநாயகருக்கு கண்கள், தும்பிக்கையெல்லாம் செய்து அழகுபடுத்தி, க்ளிட்டர் பெயின்ட் செய்து விற்பனைக்கு எடுத்துட்டுபோவோம். சாதாரண பிள்ளையார் 150 ரூபாய் எனில் அழகுபடுத்தப்பட்ட விநாயகர் 200 ரூபாய். அழகுபடுத்த கொஞ்ச நேரம் அதிகம் செலவானாலும் லாபமும் அதிகமா கிடைக்கும்.

சங்கடம் தீர்க்கும் விநாயகர் :

எட்டடி, பத்தடி விநாயகர் எல்லாம் பெரும்பாலும் ஊர்வலத்திற்குத் தான் வாங்குவாங்க. வீட்டில் வைத்து வழிபட, அமர்ந்த நிலையில் யானை முகத்துடன் இருக்கும் கற்பக விநாயகரைத்தான் மக்கள் விரும்புவார்கள் என்பதால், நாங்கள் அந்த உருவ விநாயகர் மட்டும்தான் அதிகம் தயார் செய்வோம். அதுதான் அதிகம் விற்பனையும் ஆகும். சிலர், களிமண்ணில் ஊருவாக்கிய எண்ணெய் விநாயகர் வேணும்னு கேட்பாங்க. அதனால், கடை போடும் இடத்துக்கே கொஞ்சம் மண்ணையும் எடுத்துட்டு போயிருவோம். எண்ணெய்ப் பிள்ளையார் கேட்பவர்களுக்கு மட்டும் அந்த இடத்திலேயே அச்சு எடுத்து செய்து கொடுப்போம்.

 சதுர்த்திக்கு முந்தைய நாளும், சதுர்த்தி அன்றும் சிலைகள் நல்லா விற்பனை ஆகும். ஆறு மாசம் உழைத்ததன் பயனாக ஒரு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுதான் இந்த சிலை செய்வதில் எங்களோட ஆண்டு வருமானம். அதுலையும் சிலர் பேரம் பேசி குறைச்சு கேட்பாங்க. போட்டி அதிகம் என்பதால் ரொம்ப கறார் காட்ட மாட்டோம். கொஞ்சம் லாபத்தை குறைச்சுட்டு சிலையை கொடுத்து அனுப்பிருவோம்.

விற்பனை ஆகாத சிலைகளை வீட்டுக்கு எடுத்துட்டுவந்து மீண்டும் மண்ணாக மாற்றி, ஒரு ஓரமா போட்டு வெச்சுருவோம். இனி அந்த மண், அடுத்த வருஷத்துக்குத்தான் உதவும். நீங்க கும்பிடுற விநாயகர் உங்களுக்கு சாமினா, அதுதான் எங்களுக்கு வாழ்க்கை. மக்கள் இப்போ இயற்கை பக்கம் திரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. எங்களோட வாழ்க்கை வெளிச்சத்துக்காக நாங்களும் காத்திருக்கோம்" என்ற ரேகா, விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் ஆர்வமாகி நமக்கு விடைகொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு