Published:Updated:

“கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி

வெற்றிக் கதை

“கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

வெற்றிக் கதை

Published:Updated:
ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி

“மாதச் சம்பள வேலையில் எனக்கு ஆர்வம் இல்லை. செய்யுற வேலையில் சவால் இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கு பிசினஸ்தான் சிறந்த சாய்ஸ்னு முடிவெடுத்தேன். இலக்கைச் சரியா செயல் படுத்தினேன். இப்ப என் ரெண்டு பிசினஸும் சிறப்பா போயிட்டு இருக்கு!” – மெல்லிய புன்னகையுடன் பேசும் ரேவதியின் முகத்தில் நம்பிக்கை பிரகாசிக்கிறது.

தமிழ்ப் பெண் ரேவதி, லெதர் மற்றும் பிரின்டிங் தொழில்களில் கோடிகளில் வருமானம் ஈட்டும் சக்சஸ்ஃபுல் பிசினஸ் வுமன். இவர் இயக்குநராக இருக்கும் ‘Kay Kay Art’, ‘Print Plus’ நிறுவனங்கள் மும்பையில் செயல்படுகின்றன.

ரேவதி
ரேவதி

“சென்னையில் பிறந்து மும்பையில் வளர்ந்தேன். அப்பா லெதர் டிரேடிங் பிசினஸ் செய்தார். படிக்கும்போதே, அவர் தொழிலில் நானும் ஊழியரா வேலை செஞ்சேன். அப்போதே எனக்குக் கல்யாணமாக, பிறகு எம்.பி.ஏ முடிச்சேன். 1988-ல் லெதர் பிசினஸை சின்ன அளவில் தொடங்கினேன். ஆரம்பத்தில் பெண்களுக்கான ஹேண்ட்பேக் மட்டுமே உற்பத்தி செஞ்சு உள்ளூர் மார்க் கெட்ல மட்டும் கவனம் செலுத்தினேன். ஹாங்காங்ல ஆண்டுதோறும் நடைபெறும் லெதர் கண்காட்சி ரொம்பவே பிரபலம். அதில் கலந்துகிட்டு ஸ்டால் போடுவேன். வெளிநாட்டு வர்த்தகர்களின் நட்பு கிடைச்சு புதிய தொழில் வாய்ப்புகளும் வந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

லெதர் பிசினஸைப் பொறுத்தவரை திறமையான டிசைனர்கள் முக்கியம். அப்படியான என் ஊழியர்கள் பலரையும் ஒரு நிறுவனம் மொத்தமா தன் பக்கம் இழுத்துக்கொண்டது. உரிய நேரத்தில் ஆர்டரை முடிக்க முடியாமல் பெரிய சரிவைச் சந்திச்சேன். பிறகு, சுதாரிச்சுக்கிட்டு மறுபடியும் தொழில்ல நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடினேன். அதுபோன்ற எந்தப் பிரச்னையும் மீண்டும் ஏற்படாத வகையில் ஊழியர்களைக் குடும்பத்தினர்போல பார்த்துக்கிறேன். தொழில்ல இப்படியான சவால்களும் பிரச்னைகளும் அடிக்கடி வந்தாலும், அவற்றையெல்லாம் உடனுக்குடன் சரிசெய்வதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கு” – பாசிட்டிவிட்டியைப் பரப்பும் ரேவதி, பரபரப்பான பிசினஸ் பயணத்தில் புதிதாக பிரின்டிங் தொழிலிலும் களமிறங்கியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பிசினஸ் தொடங்கினப்போ, என் மூணு மகள்களும் சின்ன குழந்தைகள். ஸ்கூல், டான்ஸ், மியூசிக்னு எல்லா இடங்களுக்கும் நான்தான் கொண்டுவிட்டு, கூட்டிக்கிட்டு வருவேன். என் மகள்களின் வளர்ச்சியைக் கூட இருந்து பார்க்கவும், அவங்களின் எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்கவும் தவறலை. இந்த நிலையில் 2000-க்குப் பிறகு, ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிச்சது. லேப்டாப், ஸ்கூல், காலேஜ் டிராவல் பேக்ஸ், ஆண்களுக்கான வேலட்ஸ், பர்ஸ், பெண்களுக்கான ஹேண்ட்பேக் உட்பட பல பொருள்களை உற்பத்தி செய்றோம். அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட எட்டு நாடுகளுக்கு லெதர் பொருள் களை ஏற்றுமதி செய்யுற அளவுக்கு பிசினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு.

 “கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

பிரின்டிங் தொழில்ல இருந்த என் குடும்ப நண்பருடன் நானும் பார்ட்னரா இணைந்தேன். அவர் டெக்னிக்கல் பிரிவையும் நான் மார்க்கெட்டிங் பிரிவையும் கவனிச்சுக்கிட்டோம். நிறைய நாடுகளுக்குப் பயணம் செஞ்சு ஆர்டர்கள் பிடிச்சு தொழிலை படிப்படியா விரிவுபடுத்தினோம். பிரபல இந்தியப் பத்திரிகைகளை இந்தி, இங்கிலீஷ்ல பிரின்ட் பண்ணிக் கொடுத்திருக்கோம். குழந்தைகளுக்கான ஸ்டோரி புக்ஸ் உட்பட பலதரப்பட்ட பப்ளிகேஷன் புத்தகங்களையும் தொடர்ந்து அச்சிட்டுக்கொடுக்கிறோம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருஷத்துக்கு 17 லட்சம் டைரி தயாரிப்பதுடன், ஷீரடி சாய்பாபா கோயில், எல்.ஐ.சி உட்பட பெரிய ஆர்டர்கள் பலவும் கைவசம் இருக்கு. ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியும் நடக்குது. எங்க பிரின்டிங் நிறுவனம் நட்சத்திர ஏற்றுமதியாளர் அந்தஸ்துல இருக்கு” - முகம் மலரக் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் தேவையான ஆவணங்கள், பல மாநில அரசுகளின் பள்ளிப் பாடப் புத்தகங்கள், பல்வேறு கோயில்கள், நிறுவனங்களுக்கான டைரி, காலண்டர் உட்பட ஏராளமான ஆர்டர்களுக்கு மாதம்தோறும் 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி நடக்கிறது. லெதர் மற்றும் பிரின்டிங் தொழில் இரண்டிலும் ஏற்றுமதியும் அதிகம் நடக்கிறது. 300 ஊழியர்கள், ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் டர்ன் ஓவருடன் ரேவதியின் இரண்டு தொழில்களும் ஏறுமுகத்தில் இருக்கின்றன.

 “கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

“நான் பிசினஸ் தொடங்கும்போது போட்டியாளர்கள் குறைவு. ஆனா, இன்னிக்கு உள்ளூர் முதல் பன்னாட்டு நிறுவனங்கள்வரை நிறைய போட்டிகள் உருவாகிடுச்சு. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெறுவதுதான் இத்தனை ஆண்டு சவால். தொடர்ந்து புதுப்புது ஆர்டர்கள் எடுத்து, தொய்வில்லாமல் வேலை இருந்தால்தான், ஊழியர்கள் உற்சாகமா வேலை செய்வாங்க. அதற்கான சூழலை உருவாக்கக் கூட்டு முயற்சியுடன் வேலை செய்யறோம்.

 “கோடிகளில் சம்பாதிச்சாலும் நானும் சாமான்ய பெண்தான்!” - ரேவதி

மூணு மகள்களும் நல்ல நிலைக்கு உயர்ந்துட்டாங்க. அப்பார்ட்மென்ட்டில் நான் தனியா வசிக்கிறேன். பலருக்கும் முதலாளியா இருந்தாலும் வீட்டில் நானும் சாமான்ய பெண்தான். ஆபீஸ்ல இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும், சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை முடிச்சுட்டு அடுத்த நாளைக்கான ஆபீஸ் வேலைகளைப் பார்த்துட்டுத்தான் தூங்குவேன். இன்றைய வெற்றிக்குப் பின்னால, சரியான தூக்கம் இல்லாம, பிடிச்ச விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாம சிரமப்பட்ட நாள்கள் நிறைய இருக்கு. கஷ்டப்படாம இஷ்டப்பட்டதை அடைய முடியாதுதானே!

பெண்களுக்கு நான் சொல்றது ஒண்ணுதான்,

உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தைச் சுதந்திரமா செய்யுங்க. ஆனா, அந்தச் சுதந்திரத்தை ஒருபோதும் தவறா பயன்படுத்தாதீங்க. நம் வளர்ச்சி மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருப்பதுதான் உண்மையான வெற்றி!”

– ரேவதியின் உள்ளத்திலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உத்வேகம் கூட்டுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism