Published:Updated:

ஓர் ஐடியா உங்க வாழ்க்கையை மாற்றும்! - கோடிகளில் வருமானம் ஈட்டும் ரேவதியின் வெற்றிக் கதை

ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி

#Utility

ஓர் ஐடியா உங்க வாழ்க்கையை மாற்றும்! - கோடிகளில் வருமானம் ஈட்டும் ரேவதியின் வெற்றிக் கதை

#Utility

Published:Updated:
ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி

பிசினஸ் தொடங்க முதலீட்டைவிட ஐடியாதான் முக்கியமானது. பெரிய வெற்றிகள்கூட சிறு ஐடியாவில்தான் தொடங்கியிருக்கும். அந்த வகையில், தன் பணி அனுபவத்தையே ஐடியாவாகப்

பிடித்த ரேவதி ராஜு, இன்று அதே துறையில் முன்னணி தொழில்முனைவோர். சென்னையிலுள்ள இவரது `ஸ்ரீ ஹரிஹரன் அக்வாடெக்' நிறுவனத்தின் மூலம் மீன் மற்றும் இறால் வளர்ப்புக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் விற்பனை யாகின்றன. செல்போன் அழைப்புகள் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்க, இருந்த இடத்திலேயே சாமர்த்தியமாகப் பேசி வியாபாரத்தை விரைவாக முடிக்கிறார். தொழிலாளியாக இருந்த ரேவதி, ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சும் மீன் வளர்ப்புத்துறையில் (Aquaculture) முதலாளியாக உயர்ந்த கதையை உற்சாகமாகப் பேசுகிறார்.

“காலேஜ் முடிச்சுட்டு சில நிறுவனங்களில் வேலைபார்த்துட்டு, கடைசியா அக்வா கல்சர் நிறுவனம் ஒண்ணுல வேலை செஞ்சேன். அங்கே கிடைச்ச அனுபவம், என் இளமைக்கால பிசினஸ் ஆர்வத்தை அதிகப்படுத்துச்சு. கல்யாணமானதும் கணவரும் ஊக்கம் கொடுத்தார். மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கான வரவேற்பைத் தெரிஞ்சுகிட்டு, அந்தத் தொழில் குறித்த விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டோம். பிறகு, ரெண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் வீட்டுல இருந்தே தொழில் தொடங்கினோம். ஏர் வால்வு, ஏர் கனெக்டர்ஸ், ஃபில்டர் டியூப் உள்ளிட்ட சில உபகரணங்களைத் தயாரிச்சு பலருக்கும் சாம்பிள் கொடுத்தோம். நல்ல ஃபீட்பேக்குடன் ஆர்டர்களும் கிடைச்சது.

அடுத்த அஞ்சு வருஷங்களில் தனி யூனிட் தொடங்கும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்துச்சு. பின்னர், கணவரும் நானும் அவரவர் வேலை யிலிருந்து விலகி பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தினோம். தொடக்கத்துல அதிக லாபத்தை எதிர்பார்க்காம, வாடிக்கையாளர்கள் வட்டாரத்தை விரிவுப்படுத்தவே கவனம் செலுத்தினோம்'' என்று இடைவெளிவிடும் ரேவதி, பாலிதீன் கவர் உற்பத்திக்கூடத்தைச் சுற்றிக்காட்டிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

ஓர் ஐடியா உங்க வாழ்க்கையை மாற்றும்! - கோடிகளில் வருமானம் ஈட்டும் ரேவதியின் வெற்றிக் கதை

“இந்தியாவில் கடலோரப் பகுதிகளில் இறால் மற்றும் உணவுக்கான மீன் வளர்ப்பும், சென்னை, கொளத்தூர்ல அலங்கார மீன் வளர்ப்பும் அதிகம் நடக்குது. அந்தத் தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் தொழில்முனைவோர்களும்தாம் எங்க பிரதான வாடிக்கையாளர்கள். இந்தத் தொழிலுக்குத் தேவையான பிளாஸ்டிக் தட்டுகள், பக்கெட்டுகள், இறால் மற்றும் மீன் குஞ்சுகளைச் சேகரிக்கும் கைப்பிடி வலை, பல வகையான வால்வ், மோட்டார், கம்ப்ரெஸர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தயாரிக்கிறோம். இறால், மீன் குஞ்சுகளை விற்பனை செய்யப் பயன்படும் பாலிதீன் கவர்களையும் அதிக அளவில் தயாரிக்கிறோம். இறாலுக்கு முக்கிய உணவான நெத்திலி மீன் உட்பட சில கடல்வாழ் உயிரினங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும் விற்பனை செய்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வியாபார ஏற்ற இறக்கங்கள் எப்படி இருந்தாலும், இதே தொழில்ல மட்டுமே முதலீடு செய்றோம். எல்லா வேலைகளுக்கும் சரியான ஆட்கள் இருக்காங்க. எனவே, இருந்த இடத்துலயே ஆர்டர் பிடிக்கிறது, டெலிவரி செய்றதுன்னு எல்லா வேலைகளையும் செய்து முடிப்போம். நாங்க களத்துல இல்லாட்டியும் எல்லா வேலைகளும் சரியா நடக்கணும். இந்தத் திட்டமிடலுடன், தொழில் தொடங்கின காலத்துல இருந்து இப்பவரை உற்பத்திக்கூடத்தை ஓரிடத்தில் முழுமையா ஏற்படுத்தலை. அப்படிச் செய்திருந்தா, எல்லா வேலையாட்களும் சரியா வேலை செய்றாங்களான்னு கண்காணிக்க தனி டீம் வைக்கணும். ஊழியர்களுக்குள் உரையாடல், டீ பிரேக் உட்பட அன்றாடம் விரயமாகும் நேரத்தால் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

இவற்றையெல்லாம் தவிர்க்க ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யவே ஊக்கப்படுத்தறோம். அவங்களுக்கு உரிய பயிற்சியுடன் உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துடுவோம். அவங்க உற்பத்தி செய்த வேலைக்கு ஏற்ப ஊதியம் கொடுப்போம். எங்க ஆர்டர் இல்லாத நேரத்துல மற்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்துகொடுத்து தொழில் முனைவோராக முன்னேறவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கறோம்” என்கிற ரேவதி, நேரடியாகவும் மறைமுகமாகவும் சேர்த்து 50-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.

இவரது நிறுவனத்தில் இறால், உணவுக்கான மீன்கள், அலங்கார மீன்கள் உற்பத்திக்கான அனைத்து உபகரணங்களும் தயாராகின்றன. அவை சில நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. இறால், மீன்களுக்கு ஆண்டுக்கு 50,000 டன் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார். ஆண்டுக்கு 300 டன் பேக்கிங் கவர் தயாராகிறது. இவர்களின் உற்பத்திப் பொருள்களும் இறக்குமதி உணவுகளும் இந்தியா முழுக்க விற்பனையாகின்றன. ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு அதிகமாக டர்ன் ஓவர் ஈட்டுபவர், விரைவில் இறால் பண்ணை வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

“இந்தத் தொழில்ல மீன், இறால் பண்ணைகளுக்கு அடிக்கடி விசிட் போகணும். அந்த வேலைகள் நள்ளிரவு வரை நீடிச்சாலும், தனியாவே பயணம் செய்வேன். இந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு வருஷத்துல சில முறை சுற்றுலா போவோம். அப்போ, பல்வேறு பண்ணைகளுக்குப் போய் எங்க தொழிலுக்குத் தேவையான புதிய விஷயங்களைக் கத்துப்போம். குளிர்காலத்துல மாசக்கணக்கில் இறால் உற்பத்தி நடக்காது. அப்பயெல் லாம் தொழில் விரிவாக்கம், புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்து வோம்.

இந்தத் தொழிலில் வருமான வாய்ப்புகளுக்கேற்ப, ரிஸ்க்கும் அதிகம் உண்டு. வாடிக்கையாளருக்கு மீன், இறால் விற்பனையில் உரிய விலை கிடைக்கலைனா, எனக்கு வர வேண்டிய விற்பனைத் தொகைக்கும் உத்தரவாதம் இருக்காது. இப்படி நிலையில்லாத தன்மையே இந்தத் தொழிலில் அதிகம். அதையெல்லாம் சரியா கணிச்சு, விழிப்புடன் செயல் பட்டுப் பெரிய சிக்கல்கள் உருவாகாமல் பார்த்துக்கிறேன்.

ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சும் இந்தத் துறையில் நான் இத்தனை வருஷங்களா வெற்றிகரமா வேலை செய்றது பெருமையா இருக்கு. நம்ம கொடுக்கல் வாங்கலும் அணுகுமுறையும் சரியா இருந்தா, எல்லாத் துறையிலும் யார் வேணாலும் சாதிக்கலாம். நமக்கான துறையில் அதிகபட்ச உழைப்புடன், தொழில் வளர்ச்சிக்கு ரிஸ்க்கான முடிவுகளைத் துணிஞ்சு எடுத்தால்தான் வெற்றியை வசப்படுத்த முடியும். வளர்ச்சியையும் சரிவையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறதால, துவண்டு போறதுக்கு வாய்ப்பே இல்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு. நம்பிக்கையுடன் பயணிப்போம்"

- நிறைவாகப் பேசுபவரின் முகத்தில் வெற்றிப் புன்னகைப் பிரகாசிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism