Published:Updated:

விதை அமெரிக்காவில்... விளைச்சல் இந்தியாவில்! - சாம்பவி சுப்பையன்

சாம்பவி சுப்பையன்
பிரீமியம் ஸ்டோரி
News
சாம்பவி சுப்பையன்

வெற்றிக் கதை

``படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என்று செல்லும் சராசரி வாழ்க்கையில் கூடுதலாக ஒரு விஷயத்தைச் செய்து நமக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதில்தான் இருக்கிறது வாழ்வின் சுவாரஸ்யம்” என்கிறார் சென்னையில் உள்ள ‘நவ்ரா பீட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சாம்பவி சுப்பையன்... ஜுவல்ஸ் மேக்கிங் தொழிலில் மாதம் பல லட்சம் வருமானம் பார்க்கும் தொழிலதிபர்!

சொந்த ஊர் காஞ்சிபுரம், தொழில் தொடங்கியது அமெரிக்காவில், செட்டிலாகியிருப்பது சென்னையில் என்பதில் தொடங்கி தன்னுடைய தொழில் பயணங்கள் வரை நம்முடன் பகிர்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“இன்ஜினீயரிங் முடிச்சிட்டு ஐ.டியில் வேலை பார்த்துட்டிருந்தேன். என்னுடன் வேலை செய்த ரவி பாலசந்தரை காதலித்துத் திருமணம் செய்தேன். 2007-ல் என் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, நானும் அவருடன் அமெரிக்காவுக்குச் செல்லும் முடிவுடன் என் வேலையை விட்டேன். அமெரிக்காவில் பொண்ணும் பையனும் பிறந்தாங்க. அவங்களைப் பார்த்துக்கிறதுக்காக வேலைக்குப் போக முயற்சி செய்யல. போரடிக்கும்போதெல்லாம் யூடியூப்ல, ‘நீங்களே செய்யலாம்’ மாதிரியான கிராஃப்ட் மேக்கிங் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். நானும் பொழுதுபோக்கா நிறைய கிராஃப்ட் செய்ய ஆரம்பிச்சேன்” என்கிறவர், தன் மகளின் பிறந்த நாளுக்காகச் செய்த கிராஃப்ட்தான் தன்னை ஒரு தொழிலதிபராக உருவாக்கியிருக்கிறது என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

விதை அமெரிக்காவில்...
விளைச்சல் இந்தியாவில்! - சாம்பவி சுப்பையன்

“என் பெண்ணோட பிறந்தநாள் டிரஸ் ஸுக்குப் பொருத்தமா ஒரு நெக்லெஸ் வாங் கறதுக்குக் கடை கடையா அலைந்தும் திருப்தியா எதுவும் கிடைக்கல. சரின்னு நானே ஒரு நெக்லஸ் செய்தேன். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தவர்கள், அந்த நெக்லெஸ் குறித்து விசாரிச்சதும் பாராட்டினதும் என் ஆர்வத்தைத் தூண்ட, அதுக்கப்புறம் யூடியூபில் ஜுவல்லரி மேக்கிங் வீடியோக்களை தீவிரமா பார்க்க ஆரம்பிச்சேன். விதவிதமா நெக்லெஸ், கம்மல்னு செய்தேன். அக்கம்பக்கத்தினர், நண்பர்கள்னு நிறைய பேர் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2013-ல் குடும்பத்தோடு சென்னையில் செட்டிலானோம். அப்படியும் அமெரிக்க நண்பர்களிடமிருந்து தொடர்ந்து ஜுவல்லரி ஆர்டர்கள் வர ஆரம்பிக்க, அமெரிக்கா மாதிரியே சென்னையிலும் வீட்டிலிருந்தே தொழிலைத் தொடங்கலாம்னு முடிவு செஞ்சேன்” என்கிறவர், அதில் நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறார்.

சாம்பவி சுப்பையன்
சாம்பவி சுப்பையன்

“சென்னை பாரீஸ் கார்னரில் ஜுவல் மேக்கிங் மெட்டீரியல்களுக்காக அலைந்தப்போ, அமெரிக்காவில் கிடைத்த அளவுக்கு வெரைட்டியும் தரமும் இல்லாததால் ஏமாற்றம் அடைஞ்சேன். பிறகு, தரமான மூலப்பொருள்கள் மொத்த விலையில் எங்கு கிடைக்கும்னு நானும் என் கணவரும் தேடிப்பிடிச்சு, அங்கிருந்து அவற்றை வரவழைத்தோம்.

ஃபேஸ்புக்ல ஒரு பிசினஸ் பக்கம் ஆரம்பித்து, அதில் நான் செய்த நகைகளின் புகைப்படங்களைப் பதிவு செய்ய ஆரம்பிச்சேன். மூன்று, நான்கு மாதங்களிலேயே பிரமாதமான வரவேற்பு கிடைச்சது. அமெரிக்காவிலிருந்து மட்டுமல்ல; தமிழ்நாட்டிலிருந்தும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. அந்த உத்வேகத்தில் ‘நவ்ரா பீட்ஸ்’ என நிறுவனத்துக்கான பெயரை பதிவுசெய்து 2014-ல் வெப்சைட் தொடங்கினேன். என்கிட்ட ஆன்லைன் மூலமா மொத்தவிலைக்கு நகைகள் வாங்கி, அதை விற்பனை செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். இப்படியே பிசினஸ் வட்டம் வளர ஆரம்பிச்சது’’ என்கிறவர், வெற்றி என்பதிலிருந்து சாதனை என்ற கட்டத்துக்கு உயர்ந்தது இதற்குப் பிறகு தானாம்.

“எங்ககிட்ட நகைகளை வாங்கிக் கொண்டிருந்த பெண்களில் பலருக்கும், அவங்களே சொந்தமா நகைகள் செய்து விற்பனை செய்யணும் என்ற ஆசை இருந்துச்சு. அப்போதான், நகைகளை மட்டும் செய்து விற்காம, மூலப்பொருள்களையும் விற்கலாமேன்னு தோணுச்சு. 2017-ல் சென்னை, பெரும்பாக்கத்தில் ‘நவ்ரா பீட்ஸ்’ என்ற கடையைத் திறந்து, நகைகளோடு மூலப்பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. அமெரிக்காவில் பொழுதுபோக்குக்காக 500 ரூபாயில் ஆரம்பிச்ச விஷயம் இது. இங்கே 50,000 ரூபாய் முதலீட்டில் தொழிலாக மாறி, இப்போது ஆண்டுக்கு 75 முதல் 85 லட்சங்கள்வரை வருமானம் கொடுத் துட்டிருக்கு’’ - அசர வைக்கும் வருமானக் கணக்கு சொன்ன சாம்பவி, தனக்குத் தொழில் திருப்தி தருவதாகக் குறிப்பிடும் விஷயம், சிறப்பு.

‘`எங்களிடம் மூலப்பொருள்களை வாங்கி நகை செய்து விற்கும் பெண்கள் மட்டுமே கிட்டத்தட்ட 5,000 பேர் இருக்காங்க. நகைகளாக வாங்கி விற்பவர்கள் 500 பேர் இருக்காங்க. இத்தனை பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கியிருப்பது பிரமிப்பையும் திருப்தி யையும் கொடுக்குது. அடுத்தகட்டமா, இந்தப் பெண்களுக்கு விற்பனைக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கணும்’’ என்கிறவர், ‘`நான் வேலைக்குப் போயிட்டிருந்தப்போகூட கிடைக்காத மனநிறைவு இப்போ இருக்குது. பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி தொழில் தொடங்கிறது கஷ்டமான விஷயமா இருந்துச்சு. ஆனா, இப்போ அப்படியில்ல. விருப்பமே இல்லைன்னாலும், குடும்பச் சூழலுக்காக வேலைக்குப் போகும் பொண்ணுங்க, சுலபமா விரும்புற தொழிலைச் செய்ய முடியும். ஒரு விஷயத்தைக் கத்துக்க யூடியூப், விற்பனைக்கு வாட்ஸ்அப், முகநூல்னு சோஷியல் மீடியாவும் நமக்கு வரப்பிரசாதம்தான்” எனத் தன் அனுபவத்தின் வழியே வழிகாட்டுகிறார் சாம்பவி.