Published:Updated:

ஃபைஃபைஃபை பாட்காஸ்ட்ஃபை! - இங்கிலீஷுக்கு மாறும் இலக்கியங்கள்... அசத்தும் நந்தினி கார்க்கி

நந்தினி கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தினி கார்க்கி

செந்தமிழ் உலா

“நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளும்போது ஏற்படும் பரவசமும் அதை மற்றவர்களிடம் பகிரும்போது உண்டாகும் இன்பமும் சொல்லில் அடங்காதவை”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

- சங்க இலக்கியப் பாடல்களை ‘பாட்காஸ்ட்’ செய்துகொண்டிருப்பது பற்றிக் கேட்டதுதான் தாமதம், நந்தினி கார்க்கியின் வார்த்தைகளில் உற்சாகம் பொங்கி வழிகிறது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் மருமகளும் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மனைவியுமான நந்தினி, திரைத்துறையில் சப்-டைட்டிலிங்கில் (மொழியாக்கம்) கலக்கிக்கொண்டிருப்பவர். பிசியான வேலை, குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவே சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘பாட்காஸ்ட்’ செய்துகொண்டிருக்கிறார். இதுவரை 360-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை முடித்திருக்கிறார். நந்தினியிடம் பேசினோம்.

“திருமணத்துக்கு முன்பு சாஃப்ட்வேர் துறையில் இருந்த நான், மொழிமீது இருந்த அதீத ஆர்வத்தால் திருமணத்துக்குப் பிறகு, சப்-டைட்டிலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். மனதுக்கு மிகவும் பிடித்த வேலை. திரைத் துறையில் சப்-டைட்டிலிங்குக்கான தேவையும் அதிகம் இருந்தது. நிறைய பேருக்குக் கற்றுக்கொடுத்து அதை ஏன் நிறுவனமாக மாற்றக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான், என்னுடைய ‘சுபமி’ சப் டைட்டிலிங் நிறுவனம். பல படங்களுக்கு சப்-டைட்டிலிங் செய்துகொண்டிருக்கிறோம்.

 கணவர், மகனுடன்...
கணவர், மகனுடன்...

நாம் யார், நம்முடைய மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் காலம் எப்படி இருந்தது என நம்முடைய வேர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. பள்ளிக்கூடத்தில் சங்க இலக்கியப் பாடல்களை விரும்பிப் படித்திருக்கிறேன். கீழடி அகழ்வாராய்ச்சி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றியெல்லாம் படிக்கும் போது, தொன்மையான அந்தச் சமுதாயம் பற்றியெல்லாம் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். அந்தக் காலத்தில் என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தினார்கள், என்னென்ன சீஸன்கள் இருந்தன, என்னென்ன பூக்கள் பூத்தன, என்னென்ன மரங்கள் இருந்தன... இப்படிப் பல விஷயங்களை சங்க இலக்கியங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

உ.வே.சாமிநாத ஐயர் காலத்திலிருந்து சங்க இலக்கியங்களுக்கு நிறைய உரைகள் எழுதப்பட்டிருந்தாலும் அந்த உரைகளெல்லாம் நமக்குத் தொலைவாகவே இருக்கின்றன. எனவே, நான் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதை எளிமையாக்கி மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். தமிழ், தமிழர்கள் என்று சுருக்கிவிடாமல் உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்தப் புள்ளியில்தான் என்னுடைய `சங்கம் லிட்' (Sangam Lit) பாட்காஸ்ட் ஆரம்பமானது” என்று முன்னுரை கொடுத்தவர், அதில் செய்யும் விஷயங்களையும் விவரிக்க ஆரம்பித்தார்...

“முதலில் எட்டுத்தொகையில் நற்றிணை யிலிருந்து ஆரம்பித்தேன். நற்றிணையில் ஒரு பாட்டை எடுத்துக்கொள்வேன். ஔவை துரைசாமி ஐயா, பின்னத்தூர் நாராயணசாமி, சிலம்பொலி செல்லப்பன் உள்ளிட்ட பலருடைய உரைகளையெல்லாம் எடுத்து அந்தப் பாடலுக்கு என்னென்ன விளக்கங்களெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன என ஆழ்ந்து படிப்பேன். பல்வேறு உரைகளின் விளக்கங்களை உள்வாங்கிக்கொண்ட பிறகு, அந்தப் பாடலை நான் எப்படிப் பார்க்கிறேன் என்று என்னுடைய பார்வையை இறுதி செய்வேன். அந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமைகள் மற்றும் சிறப்புச் சொற்களைப் பற்றிய விளக்கங்களை எடுத்துக்கொள்வேன். அதன் பிறகுதான் மொழிபெயர்ப்பு.

மொழிபெயர்ப்பு என்றால் பாடல்வரிகளை அப்படியே மொழிபெயர்ப்பு செய்வது மட்டுமல்ல, ஏன் அந்த இடத்தில் அந்தக் காட்சி இடம்பெறுகிறது என்பதையும் அந்த விஷயங்களை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டும் சொல்வேன். உதாரணத்துக்கு, ஏதாவதொரு சங்க இலக்கியப் பாடலில் மயில் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், அதைப் பற்றி இப்போதைய அறிவியல் உலகம் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்வேன்.

ஃபைஃபைஃபை பாட்காஸ்ட்ஃபை! - இங்கிலீஷுக்கு மாறும் இலக்கியங்கள்... அசத்தும் நந்தினி கார்க்கி

21-ம் நூற்றாண்டிலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு திரும்பிப் பார்ப்பதும் அதில் சிலவற்றை நிகழ்காலத்துடன் இணைத்துப் பார்ப்பதும் ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். பாட்காஸ்ட் மூலமும் வருமானம் பார்க்கலாம். ஆனால், நான் அந்த நோக்கத்தில் இதைச் செயல்படுத்தவில்லை. தமிழ் இலக்கியங்கள் உலக அளவில் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே செய்து வருகிறேன். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாட்டில் செட்டில் ஆன தமிழர்களின் வாரிசுகளும், தமிழ் இலக்கியங் களைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ள வெளிநாட்டவர்களும் என்னுடைய ஃபாலோயர்களில் அதிகளவில் இருக்கின்றனர். அவர்களுக்கு நம் வேர்களைப் பற்றிச் சொல்வது எனக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என்று சிலாகித்தவர்...

“இரண்டு வருடங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறேன். முதல் வருடத்தில் 200 பாடல்கள் நற்றிணையில் முடித்தேன். இப்போது 360 பாடல்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 2020 டிசம்பருக்குள் நற்றிணையை முடித்துவிட்டு குறுந்தொகை, பரிபாடல் என ஒவ்வொன்றாகச் செல்லலாம் என்பது கனவு” என்று முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாட்காஸ்ட்... ஒரு பார்வை

“ `பாட்காஸ்ட்’ என்பது நீங்கள் பகிர விரும்பும் தகவல்களை ஆடியோவாகவோ வீடியோவாகவோ பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு தளம். இதை தளம் என்று சொல்வதைவிட ஒரு வகை என்று சொல்வதுதான் சரி. ஐபோன், கூகுள் ப்ளே, இன்டர்நெட் இப்படிப் பல்வேறு தளங் களில் உங்களது பாட்காஸ்ட்டை நீங்கள் பகிரலாம். அப்படிப் பகிர்ந்துவிட்டால் ஒரு பாடலை நீங்கள் எப்படியெல்லாம் கேட்கிறீர்களோ அதேபோல உங்கள் ‘பாட்காஸ்ட்’டையும் கேட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக உங்கள் ‘பாட்காஸ்ட்’டைக் கொண்டு சேர்ப்பதற்கென சர்வீஸ் புரொவைடர்கள் இருக்கின்றன. அதில் ஏதாவதொரு சர்வீஸ் புரொவைடரை உங்கள் வெப்சைட்டுடன் இணைத்துவிட்டால் போதும். அதில் நீங்கள் பகிரும் பாட்காஸ்ட்டை மற்ற எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வேலையை அந்த சர்வீஸ் புரொவைடர் நிறுவனம் பார்த்துக்கொள்ளும் அதற்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். ‘nandinikarky.com’ என்ற என் வெப்சைட்டுடன் ‘blubrry’ என்ற சர்வீஸ் புரொவைடரை இணைத்துள்ளேன். ‘Sangam Lit’ என்பதுதான் என்னுடைய பாட்காஸ்ட் பெயர்” என்றார் நந்தினி.