Published:Updated:

என் வலியை மறந்து மத்த அம்மாக்களை சிரிக்க வைக்கிறேன்'' - குழந்தை புகைப்படக்கலையில் ஜொலிக்கும் சாரதா

சாரதா
சாரதா

வசதியானவங்கதான் தங்களுடைய பிறந்த குழந்தையை விதவிதமான போஸ்களில் பல ஆயிரங்கள் செலவழித்து போட்டோ எடுக்க முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து, மினிமம் பட்ஜெட் கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கேன்.

"சில எதிர்பார்ப்புகளையும் ஏளனங்களையும் கடந்தால்தான் நமக்கான அடையாளம் கிடைக்கும்னா அதுக்காகத் துணிஞ்சு போராடலாம். கனவு காண்பதற்கு ஆண், பெண் என எந்த வேறுபாடும் கிடையாது. மத்தவங்களை பத்தி கவலைப்படாமல், நம் கனவுகளுக்கு உயிர் கொடுக்க அதை நோக்கி போறதுக்காகப் போராடுறதுனு நீங்க முடிவு பண்ணிட்டா நிச்சயம் நீங்க ஜெயிச்சிடுவீங்க'' என நம்பிக்கை விதைகளை விதைத்துப் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சாரதா. ஏழு வருடங்களாக போட்டோகிராபியைத் தன்னுடைய தொழிலாக செய்துகொண்டு இருக்கிறார். குழந்தைப் பேறு என்கிற அரிய செல்வத்தை இழந்தவர். அதன் காரணமாகவே குழந்தைகளை ரசித்து ரசித்து புகைப்படம் எடுக்கத் தொடங்கி, அதிலேயே வெற்றியும் கண்டிருக்கிறார். போட்டோகிராபி துறையில் பெண்களுக்கான சவால்கள் பற்றியும் வாய்ப்புகள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார் சாரதா.

குழந்தை
குழந்தை

எங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயசிலேயே சென்னையில் செட்டில் ஆகிட்டோம். ப்ளஸ் டூ முடிச்சதும் இன்ஜினீயரிங்கில் சேர்த்து விட்டாங்க. ஆர்வமே இல்லாம படிச்சப்பதான் இதை இப்படியே தொடர்றதுக்கு பேசாம நிப்பாட்டிரலாம்னு தோணுச்சு. படிப்பை பாதியில் விட்டுட்டேன்.

வீட்டில் பயங்கர எதிர்ப்பு. படிப்பைப் பாதியில் விட்டு காசை வீணடிக்கிறதோடு சேர்த்து காலத்தையும் வீணடிக்கிறேன்னு கண்டபடி திட்டினாங்க. நான் தனித்துவமா தெரிய விரும்புறேன் என்பதைத் தாண்டி என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை. சில நாள்களுக்கு அப்புறம் நான் விஸ்காம் படிக்க போறேன்னு சொன்னேன். ஆரம்பத்தில் அந்தத் துறையெல்லாம் பொம்பள புள்ளைக்கு சரிப்பட்டு வராது சொன்னாங்க. ஆனா, நான் உறுதியா நின்னேன். படிச்சா விஸ்.காம் இல்லாட்டி படிப்பே வேண்டாம்னு சொல்லவும் கல்லூரியில் சேர்த்து விட்டாங்க.

எதிர்பாராத விதமாக என்னுடைய மகள் பிறக்கும்போதே இறந்தே பிறந்தாள். என் பொண்ணு என் கூட இல்லைனாலும், அவளை எல்லோரும் கொண்டாடணும்னு முடிவு எடுத்து, அவளுக்கு நான் யோசிச்சு வெச்சிருந்த பெயரான 'அஹானா' என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு கால பெண்களின் போட்டோகிராபியைத் தொடங்கினேன்.
சாரதா.

விஸ்காம் சேர்ந்த சில மாதங்களியே எதிர்காலத்தில் என்ன பண்ண போறோம்ங்கிற தெளிவு கிடைச்சது. கல்லூரியில் படிக்கும்போதே விளம்ரங்கள், குறும்படங்கள், வித்தியாசமான புகைப்படங்கள்னு ஒவ்வொரு விஷயத்திலேயும் என்னை மெருகேத்திகிட்டேன். படிப்புக்குத் தேவையான போட்டோ ஷாப், போட்டோ எடிட்டிங் மாதிரியான எக்ஸ்ட்ரா கோர்ஸ்களையும் படிச்சேன். படிக்கும் போதே சின்னச் சின்ன போட்டோகிராபி வாய்ப்புகளும் கிடைத்தன.

படிப்பு முடிந்ததும் இயக்குநர் நந்தினியிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சுது. விளம்பரங்கள், புகைப்படங்கள்னு நிறைய நுணுக்கமான விஷயங்களை கத்துக்கிட்டேன். அதில் கிடைச்ச அனுபவத்தில் போட்டோகிராபி துறையில் இறங்கிட்டேன். ஆரம்பத்தில் சில நூறு ரூபாய் அளவுக்குதான் வருமானம் கிடைச்சுது. பிறந்த நாள், திருமண நிகழ்வுனு நான் எடுத்த புகைப்படங்கள் மூலமா வாய்வழி விளம்பரங்கள் என்னை தேடி வர ஆரம்பிச்சது. திருமண ஆர்டர்கள், மகப்பேறு கால புகைப்பட ஆர்டர்கள்னு என்னுடைய பயணம் பல ஆயிரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது. பல ஆயிரங்களை நோக்கி என்னுடைய பயணம் தொடங்கியது. ஒரு ஆளா ஆரம்பிச்ச என்னுடன் 40 பேர் சேர்ந்து குழுவா பயணிக்கிற நிலைக்கு உயர்ந்தோம்.

போட்டோகிராபி
போட்டோகிராபி

மற்ற போட்டோகிராபிகளை விட மகப்பேறு காலத்தில் பெண்களை எடுக்கும் புகைப்படம் என் மனசுக்கு நெருக்கமாச்சு. அவங்களை ரசிச்சு எடுக்கிறதுக்காகவே சில கோர்ஸ்கள் பண்ணினேன். கருவுற்றதும் எடுக்கப்படும் புகைப்படம்ங்கள்ல ஆரம்பிச்சு குழந்தை பிறந்த பிறகான புகைப்படம் வரைக்கும் ஒவ்வொண்ணுலேயும் வெரைட்டி காட்ட ஆரம்பிச்சேன். எல்லா செலவுகளும் போக, ஒரு ஆர்டருக்கு எனக்கு 30,000 வரை லாபம் கிடைக்க ஆரம்பிச்சுது. ஆர்டர்கள் பொறுத்து மாதம் குறைந்தது மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டத்தொடங்கினேன்" என்ற சாரதா குழந்தை போட்டோகிராபியில் உள்ள சிக்கல்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

"என்னுடன் பார்டனரா வொர்க் பண்ணினவரே என் லைஃப் பார்ட்னராவும் ஆனார். அதனால வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்தோம். நான் கருவுற்ற நேரம், என்னை எப்படியெல்லாம் அழகா புகைப்படம் எடுக்கலாம்னு பிளான் பண்ணி அப்படியே செய்தோம். அதே மாதிரி குழந்தை பிறந்ததும் வித்தியாசமா புகைப்படம் எடுக்கணும்னு வெளிநாட்டில் இருந்து தேவையான பொருள்களை இறக்குமதி பண்னேன். ஆனால், எதிர்பாராத விதமாக என்னுடைய மகள் பிறக்கும்போதே இறந்துதான் பிறந்தாள்'' என்பவரிடம் கடந்த காலங்களின் வலி மிச்சமிருக்கிறது.

குழந்தை
குழந்தை

"வாழ்க்கை அவ்வளவுதான் போலனு உடைஞ்சு போயிட்டேன். உடலாலும் மனசாலும் ரொம்ப பாதிப்புக்கு உள்ளானேன். மாற்றம் வேணும்ங்கிறதுக்காக மறுபடியும் கேமராவை கையில் எடுத்தேன். திருமண ஆர்டர்களை என் யூனிட்டில் இருக்கவங்களும் என் கணவரும் பண்ணட்டும்னு விட்டுட்டு குழந்தைகள் போட்டோகிராபியில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

என் பொண்ணு என் கூட இல்லைனா என்ன, அவளை எல்லோரும் கொண்டாடணும்னு முடிவெடுத்து, அவளுக்காகத் தேர்ந்தெடுத்து வைச்சிருந்த பெயரான 'அஹானா'ங்கிற பேர்ல மகப்பேறு கால பெண்கள், குழந்தைகளைப் புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சேன். என் பொண்ணுக்கு நான் கொடுக்க நினைச்ச பரிசா இதை எடுத்துகிட்டேன்.

குழந்தை இல்லைனு சமூகத்தால் எனக்கும் நிறைய அவமானம் நேர்ந்திருக்கு. மத்த பெண்கள் எப்படியெல்லாம் கூனி குறுகி போவாங்களோ அதே நிலையை நானும் அனுபவிச்சேன். அந்த வலிகள்ல இருந்தெல்லாம் போராடித்தான் மீண்டெழுந்தேன்.

மகப்பேறு
மகப்பேறு

மகப்பேறு கால போட்டோகிராபியைத் தொடங்கியதும் என் நெருங்கிய தோழிகள்கிட்ட இருந்தே ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பிச்சுது. ஆடைகள், மேக்கப் எல்லாவற்றையும் நானே அவங்களுக்குப் பரிந்துரைப்பேன். குழந்தை போட்டோகிராபியைப் பொறுத்தவரை, குழந்தை பிறந்த ஐந்தாவது நாளிலிருந்து பத்தாவது நாளுக்குள் போட்டோ எடுக்க ஆரம்பிப்போம். குழந்தைகளை போஸ் கொடுக்க வைக்க முடியாது. நாம் எதிர்பார்க்கும் விஷயத்தை அவங்க செய்யும் வரை பொறுமையாக இருக்கணும். பசிக்கு அழுவாங்க, தூங்கிருவாங்கனு நிறைய சிக்கல்கள் இருக்கும். அதனால் ஒரு போட்டோ ஷூட்டே ஆறு நாள் எடுக்கும். எல்லாவற்றையும் தாண்டி, குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன அசைவுகளில்கூட அவ்வளவு அழகு கொட்டிக் கிடக்கும். சில சமயம் எதிர்பாராமல் எடுக்கும் கேண்டிட் ஷாட்கூட பொக்கிஷமாக மாறும். சில பெற்றோர்கள், வளர்ந்த தங்களோட குழந்தை ஒரு நாள் முழுவதும் செய்யும் ஒவ்வொரு நிமிஷத்தையும் புகைப்படமாக எடுத்து கொடுங்கனு கேட்பாங்க. அதையும் மினிமம் பட்ஜெட்டில் பண்ணிட்டு இருக்கேன். வசதியானவங்களாலதான் தங்களோட குழந்தையை விதவிதமான போஸ்கள்ல அழகா புகைப்படம் எடுத்துக்க முடியும்ங்கிற கான்சப்டை உடைக்க நினைச்சேன்.

இது என் குழந்தையின் நினைவாகத் தொடங்கிய பிசினஸ் என்பதால் இதுதான் தொகைனு கறாராகப் பேசுறது கிடையாது. பணம் என்பதைத் தாண்டி நிம்மதியான உணர்வு கிடைச்சா போதும்னு நினைக்கிறேன்.

பிசினஸ்
பிசினஸ்

என்னோட வித்தியாசமான புகைப்படங்களை பார்த்துட்டு நிறைய ஆர்டர்கள் வந்துட்டிருக்கு. குழந்தைகள் போட்டோகிராபியை பொறுத்த வரை என் கணவர் உட்பட யூனிட்டில் இருக்கும் வேறு யாரையும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறது இல்லை என்பதால் குறைந்த ஆர்டர்கள் தான் பண்னிட்டு இருக்கேன். ஆனால், ரசிச்சு பண்ணிட்டு இருக்கேன். தாய்மையைக் குழந்தையின் கூடவே இருந்துதான் கொண்டாணும்னு இல்ல. உணர்வாகவும் கொண்டாடலாம்'' என்று சிரிக்கும் சாரதா பல தாய்மார்களையும் குழந்தைகளையும் லென்ஸ் வழியாகச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு