Published:Updated:

ஆரோக்கியத்தில் அக்கறை... 50,000 ரூபாய் வருமானம்! - ஸ்நாக்ஸ் பிசினஸில் மாஸ் காட்டும் ஷாம்லா

ஷாம்லா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாம்லா

வழிகாட்டி

“அன்றாட தேவைகளை அடிப்படை யாகக்கொண்டு, கிரியேட்டிவ் ஐடியாக்களோடு பிசினஸ் ஆரம்பித்தால் சக்சஸ் சாத்தியமே''

- நம்பிக்கை பொங்குகிறது மேரி ஷாம்லாவின் பேச்சில். ஐந்து வருடங்களுக்கு முன் ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஸ்நாக்ஸ் விற்பனை பிசினஸைத் தொடங்கிய இவரது மாத வருமானம் இன்று 25 லட்சம். தன்னுடைய பிசினஸ் வெற்றிக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஷாம்லா.

“சொந்த ஊரு புதுக்கோட்டை. படிச்சது இன்ஜினீயரிங். அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தார். கட்டுப்பாடுகள் நிறைஞ்ச மிடில் கிளாஸ் குடும்பம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பிசினஸ் ஆலோசகராக என் கரியரைத் தொடங்கினேன். என் தம்பியும் அதே நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தார். ரெண்டு பேரும் ஒண்ணா வீடு எடுத்துத் தங்கியிருந்தோம்.

சாப்பாடு இல்லைனாலும் மூணு வேளையும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்குற டைப் நான். சென்னையில் ஸ்நாக்ஸ் தேடி கடைக்குப் போனால் பீட்சா, பர்கர், வெஜ் ரோல், பப்ஸ்னு வித்தியாசமான பண்டங்கள்தான் கிடைச்சது. அதையெல்லாம் சாப்பிடும்போது வயிறு நிறையும். ஆனா, ஆரோக்கியம் கேள்விக்குறிதான். பர்சனலா வயிற்றுவலி, வெயிட் போட்டதுனு நான் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். அதனால எனக்குத் தேவையான தின்பண்டங்களை நானே செய்ய ஆரம்பிச்சேன். அப்படிச் செய்த நட்ஸ் உருண்டைகளைச் சாப்பிட்டுட்டு, ‘இதை பிசினஸா ஆரம்பிச்சா சூப்பரா வியாபாரம் ஆகும்’னு சொன்னாரு தம்பியோட ஃபிரெண்ட். அந்த ஐடியா மனசுல பதியவே கொஞ்சம் அதிகமா நட்ஸ் லட்டுகள் தயார் செய்து அலுவலக நண்பர்களுக்குக் கொடுத் தேன். பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரவே அதையே பிசினஸாக மாற்றினோம்.

ஷாம்லா
ஷாம்லா

ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில், நானும் என் தம்பியும் சேர்ந்து ‘ஸ்நாக்ஸ் எக்ஸ்பர்ட்’ என்ற பெயரில் பிசினஸைத் தொடங்கினோம். பிறகு, என் தம்பியோட ஃபிரெண்டையும் இணைச்சுக் கிட்டோம். முதல்ல ஃபிரெண்ட்ஸ் மூலமா வந்த ஆர்டர்களைப் பண்ணிக்கொடுத்தோம். அப்புறம் எங்க பிசினஸுக்கான இணைய பக்கம் தொடங்கி அதன் மூலம் ஆர்டர் எடுக்க ஆரம்பிச்சோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தினமும் அலுவலகம் முடிஞ்சு வந்து, ஸ்நாக்ஸ் தயார் செய்யறது, பேக்கிங்னு அஞ்சு மணிநேரம் வேலை செய்வோம். இதுக்கிடையில எனக்குக் கல்யாணம் ஆனது. ஒரு வருஷத்திலேயே குழந்தையும் பிறந்தது. என் குடும்பம் கொடுத்த சப்போர்ட்தான் தொடர்ந்து என்னை இயங்க வெச்சுது’’ என்ற ஷாம்லா, ஸ்நாக்ஸ் பிசினஸில் வித்தியாசம் காட்டியது பற்றியும் பகிர்ந்தார்...

“நாங்க தயாரிக்கும் ஸ்நாக்ஸ் முழுக்க முழுக்க ஆரோக்கியமானவையா இருக்கணும்னு முடிவு பண்ணேன். அதனால் எந்தப் பண்டத்திலும் வெள்ளை சர்க்கரையும் மைதாவும் கிடையாது. வெல்லம், நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துறோம். ஒரே எண்ணெயை மீண்டும் பயன்படுத்த மாட்டோம். நெய்யை நேரடியாகப் பால் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யறோம். சிறுதானியங்களை மொத்தமா விவசாயிகளிடமிருந்தே வாங்குறோம்.

ஆரோக்கியத்தில் அக்கறை... 50,000 ரூபாய் வருமானம்! - ஸ்நாக்ஸ் பிசினஸில் மாஸ் காட்டும் ஷாம்லா

ஆரம்பத்தில் அம்மா, மாமியார்னு வீட்டிலிருக்கும் பெரியவங்ககிட்ட ரெசிப்பிகள் வாங்கி, ஊட்டத்துக்கான பொருள்களைச் சேர்த்து ஹெல்த்தியான ஸ்நாக்ஸாக ரெடி பண்ணிட்டு இருந்தேன். ஒருகட்டத்துல, நல்ல கைப்பக்குவம் உள்ள சிலரிடம் ஆர்டர் கொடுத்து தயார் பண்ண ஆரம்பிச்சோம். சில ஃபுட் இன்ஜினீயர்களை எங்க நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தோம். அவங்க மூலமா நாங்கள் தயார் செய்யும் ஸ்நாக்ஸையும், ஆர்டர் கொடுத்து வாங்கும் ஸ்நாக்ஸையும் குவாலிட்டி செக் செய்துதான் விற்பனைக்கு அனுப்புறோம்.

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு, பருப்பு உருண்டை, நட்ஸ் உருண்டை, ராகி லட்டு, எள்ளுருண்டை, தினை உருண்டை, சிறுதானிய கார வகைகள்னு 70 வகையான இனிப்பு, கார வகைகள் தயார் செய்யறோம். 30 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்திருக்கேன்’' என்றவர் தின்பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட நினைப்போருக்கு மெசேஜ் சொல்கிறார்.

``ஸ்நாக்ஸைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதா, தரமானதா இருக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், சுகர் ஃப்ரீ ஸ்நாக்ஸ், ஆயில்ஃப்ரீ ஸ்நாக்ஸ்னு உங்க ஸ்பெஷாலிட்டியை நீங்கதான் முடிவு பண்ணணும். நிறைய வெரைட்டி காட்ட தெரிஞ்சுருக்கணும். மூலப்பொருள் தேர்வில் தொடங்கி, பேக்கிங் வரை சகலத்திலும் கவனமா இருந்தால் மாதம் குறைஞ்சது 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்”

- இனிப்பான சேதி சொல்கிறார் ஷாம்லா.