Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!

பங்குச் சந்தை முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை முதலீடு

நிறுவனப் பங்குக்கென ஒரு முகமதிப்பு இருக்கும். அது பொதுவாக 10 ரூபாயாக இருக்கும். ஆரம்ப காலத்தில் இந்த மதிப்புக்குதான் நிறுவனங்கள் பங்கு வெளியிட்டன.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!

நிறுவனப் பங்குக்கென ஒரு முகமதிப்பு இருக்கும். அது பொதுவாக 10 ரூபாயாக இருக்கும். ஆரம்ப காலத்தில் இந்த மதிப்புக்குதான் நிறுவனங்கள் பங்கு வெளியிட்டன.

Published:Updated:
பங்குச் சந்தை முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை முதலீடு

‘`ஆண்களின் உலகமாக இருந்த பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

பங்குச் சந்தை முதலீடு என்பது ஆண்களை விட பெண்களுக்குத்தான் மிகப் பொருத்தமாக இருக்கும். காரணம், இந்த முதலீட்டில் லாபம் ஈட்ட பொறுமை மிக முக்கியம். அது பெண் களுக்கே அதிகம்... அதிக லாபம் ஈட்ட விரும்பும் பெண்களுக்கேற்ற ஏற்ற முதலீடு பங்குச் சந்தை’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் எம்.சதீஷ்குமார் (நிறுவனர், http://sathishspeaks.com/), பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்.

``விப்ரோ நிறுவனப் பங்கில் சுமார் 40 ஆண்டு களுக்கு முன் 10,000 ரூபாயை முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ.500 கோடி ஆக இருந்திருக்கும் என்கிற சோஷியல் மீடியா பார்வேர்டு மெசேஜை பார்த்திருப்பீர்கள். இது உண்மைதான். ஆனால், மோசமான நிறு வனங்களின் பங்குகளில் பணத்தை இழந்த கதைகளும் ஏராளம் உள்ளன. கவனமாகக் கையாண்டால் லாபத்தைக் கொடுக்கும் நல்ல முதலீட்டு வழிதான் பங்குச் சந்தை. மக்களுக்கு நிறுவனங்கள் வெளியிடும் புதிய பங்குகள்மீது அமோக மோகம் இருக்கிறது. அது பற்றி முதலில் விரிவாகப் பார்ப்போம்.

 எம்.சதீஷ்குமார்
எம்.சதீஷ்குமார்

புதிய பங்கு வெளியீடு!

தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக பலரிடமும் முதலீட்டைப் பெற்று, அவர்களைப் பங்குதாரர்களாக ஆக்கும் நிறுவனங்களைத்தான் `பப்ளிக் லிமிடெட் கம்பெனி' என்கிறோம். இந்த நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பதற்குப் பெயர்தான் பங்கு வெளியீடு. முதன்முதலாக பங்கு வெளியிட்டால் அது புதிய பங்கு வெளியீடு (IPO-Initial Public Offer) எனப்படும்.

இப்படிப் புதிய பங்கு வெளியிடும்போது அது நல்ல நிறுவனம், அதன் பங்கு நல்ல லாபத்தைத் தரும் என நினைத்து அதிகம் பேர் அந்தப் பங்கை வாங்க விண்ணப்பிப்பார்கள். எத்தனை பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பங்கு ஒதுக்கீடு கிடைக்கும். இந்தப் பங்குகளை சுமார் ஒரு வார காலத்தில் அனைவரும் வாங்கி விற்பதற்கு வசதியாகப் பட்டியலிடப்படும் இடம்தான் பங்குச் சந்தை. புதிய பங்கு வெளியீட்டில் வாங்காத வர்கள் பங்குச் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம்.

நிறுவனப் பங்குக்கென ஒரு முகமதிப்பு இருக்கும். அது பொதுவாக 10 ரூபாயாக இருக்கும். ஆரம்ப காலத்தில் இந்த மதிப்புக்குதான் நிறுவனங்கள் பங்கு வெளியிட்டன. ஆனால், போகப் போக ‘எங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது, அதிக மதிப்பு இருக்கிறது என கூடுதல் விலையில் புதிய பங்குகளை நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்தன. முகமதிப்புக்கு மேல் கூடுதலாக உள்ள மதிப்பு `பிரீமியம்' எனப்பட்டது. சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனம் பங்குகளை வெளியிட்டது. இதன் முகமதிப்பு ரூ.10, பங்கின் விலை ரூ.949. அதாவது, பங்கின் பிரீமியம் ரூ.939 ஆகும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
Andrii Yalanskyi

பங்கு விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

ஒரு பங்கின் விலையை நிர்ணயிக்க பல காரணிகள் இருக்கின்றன. பங்கு வெளியிடும் நிறுவனம் எந்த அளவுக்கு லாபத்தில் செயல்படுகிறது, அதற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அந்த நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறது, வருங்கால வளர்ச்சி எப்படி இருக்கும் போன்ற காரணி களை வைத்துதான் ஒரு நிறுவனத்தின் புதிய பங்கின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் முகமதிப்பில் பங்குகளை வெளி யிட்டபோது, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் கேட்ட எண்ணிக்கையில் பங்குகள் ஒதுக்கப்பட்டன. இன்று பங்கு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்திருக்கிறது. அதாவது, 2010-ம் ஆண்டில் சுமார் 2 கோடியாக இருந்த பங்கு முதலீட்டுக்கான கணக்குகள் 2022 மார்ச் மாதத்தில் சுமார் 8.97 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது ஏல முறையில் யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே பங்குகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த முறைக்கு ‘புக் பில்டிங்’ (Book Building) என்று பெயர். ஏலத்துக்கு ஓர் ஆரம்ப விலையும், இறுதி விலையும் உண்டு. இதை ‘ப்ரைஸ் பாண்டு’ (Price Bond) என்பார்கள். இதைத் தமிழில் ‘விலைப் பட்டை’ எனலாம். உதாரணம், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலைப் பட்டை ரூ.902-949 ஆகும். எல்.ஐ.சி பங்கை ரூ.949-க்குக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குத்தான் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள், பங்கிற்கு நிலையான விலையை நிர்ணயம் செய்வ துண்டு. இது ‘ஃபிக்ஸட் ப்ரைஸ்’ (Fixed Price) எனப்படும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
Drazen_

புதிய பங்குக்கு விண்ணப்பிப்பது எப்படி?

புதிதாக பங்கு வெளியிட்டு பணம் திரட்டும் நிறுவனம், அதற்காக தனியாக விண்ணப்பப் படிவங்களை அச்சடித்துக் கொடுக்கும். இந்தப் படிவங்கள், பங்கு புரோக்கர்கள், பங்குத் தரகு நிறுவனங்கள், குறிப்பிட்ட வங்கிகளில் கிடைக்கும். அதை நிரப்பி அனுப்ப வேண்டும். இப்போது ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்கும் வசதி வந்துவிட்டது.

விலைப் பட்டையில் குறிப்பிட்டிருக்கும் விலையில் எந்த விலைக்கு வாங்க விரும்புகிறோமோ, அந்த விலையை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். நல்ல நிறுவனம் என்றால், அதிகபட்ச விலையைக் குறிப்பிடலாம். இல்லை என்றால், குறைவான விலையைக் குறிப்பிடலாம் அல்லது எந்த விலைக்கும் வாங்கத் தயார் என்று குறிப்பிடலாம். மேலும், பங்கு விற்பனைக் காலத்துக்குள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த பங்கின் விலையை மாற்றி புதிதாக புது ஏலம் கேட்க முடியும்.

விற்பனைக்கு உள்ள பங்குகளைவிட அதிக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்திருந்தால், விலைப் பட்டையில் உள்ள அதிக தொகையை பங்கின் விலையாக நிர்ணயம் செய்வார்கள். எல்ஐசி நிறுவனப் பங்குகளுக்கு அதிக ஆதரவு இருந்ததால் அதன் அதிகபட்ச விலைப் பட்டைத் தொகையான ரூ.949, பங்கு வெளியீட்டு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
GaudiLab

உச்ச விலையில் யார் விண்ணப்பித்திருந்தார்களோ அவர்களுக்கு மட்டும் விகிதாசாரப்படி பங்குகள் ஒதுக்கப்படும். உச்ச விலையைவிட குறைவான விலையைக் குறிப்பிட்டிருந்த யாருக்கும் பங்குகள் கிடைக்காது. எந்த விலைக்கும் சம்மதம் என குறிப்பிட்டிருந்தவர்களுக்கு உச்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் பங்குகள் ஒதுக்கீடு கிடைக்கும். பொதுவாக, பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது புதிய வெளியீட்டுக்கு அதிக ஆதரவு இருக்கும். உச்சபட்ச விலைதான் பங்கின் விலையாக நிர்ணயமாகும்.

இப்போது `அஸ்பா' (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கிக்கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும். நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை புதிதாக விற்பனை செய்ய குறைந்தபட்சம் 3 நாள்கள், அதிகபட்சம் 10 நாள்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
hernan4429

யாருக்கு எவ்வளவு?

ஒரு நிறுவனப் பங்கில் தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர், தகுதி வாய்ந்த நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எனப் பலரும் முதலீடு செய்யலாம். புதிய பங்கு வெளியீட்டின்போது ஒவ்வொரு பிரிவினருக்கும் இத்தனை சதவிகிதப் பங்குகள் என ஒதுக்கீடு இருக்கும்.

பொதுவாக, சிறு முதலீட்டாளர்களுக்கு 35%, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு (அந்நிய நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள்) 50%, நிறுவனம் சாராத பெரிய முதலீட்டாளர்களுக்கு 15% என பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிய பங்கு வெளியீட்டின்போது 90% பங்குகள் வேண்டி விண்ணப்பம் வரவில்லை என்றால், அந்தப் பங்கு வெளியீடு வெற்றி பெறாது. அப்போது, முதலீட்டாளர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி முழுப் பணத்தையும் நிறுவனம் திருப்பி அளித்துவிடும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
pixelfusion3d

யார் சிறு முதலீட்டாளர்கள்?

`செபி' (SEBI) அமைப்பின் விதிமுறைப்படி, புதிய பங்கு வெளியீட்டின்போது ரூ.2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக பங்குகளில் முதலீடு செய்பவர்கள் சிறு முதலீட்டாளர்கள் ஆவார்கள்.

புதிய பங்கு வெளியீட்டின்போது பங்குகளை `லாட்' (LOT) ஆக, அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச தொகைக்கு முதலீடு செய்ய வேண்டும். பங்கின் விலையைப் பொறுத்து அது 10, 15, 20, 25 பங்குகள் என்பதுபோல் லாட் இருக்கும். ஒரு லாட்டின் மதிப்பு அல்லது குறைந்தபட்ச தொகை என்பது சுமார் ரூ.15,000 ஆக இருக்கும். உதாரணமாக, எல்ஐசியின் புதிய பங்கு வெளியீட்டை எடுத்துக்கொண்டால், லாட் அளவு 15 பங்குகள் ஆகும். அதாவது, குறைந்தபட்சம் 15 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் பங்குகளுக்கு விண்ணப்பிப்பது என்றால், 15 மடங்கில் அதாவது 30 பங்குகள், 45 பங்குகள் என்பதுபோல் விண்ணப்பிக்க வேண்டும். எல்ஐசி பங்கு விலைப் பட்டையின் அதிகபட்ச விலை ரூ.949. இதன் அடிப்படையில் கணக்கிட்டால் புதிய பங்கு வெளியீட்டின்போது எல்ஐசி பங்கை வாங்க (15 x 949) குறைந்தபட்சம் ரூ.14,235 தேவைப்படும். இதுவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு ஒரேயொரு பங்கைக்கூட வாங்க முடியும். 2022 மே 25-ம் தேதி 830 ரூபாய் இருந்தால் ஒரு எல்ஐசி பங்கை வாங்கி இருக்கலாம். அன்றைய தினம் எல்ஐசி பங்கின் விலையானது, வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகமானதுதான் காரணம்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
Sitthiphong

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

இதுவரை, புதிய பங்கு வெளியீடு பற்றி மிக விரிவாகப் பார்த்தோம். இனி பல ஆயிரக்கணக்கான நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும் பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது என்று பார்ப்போம்.

ஒரு பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அதன் தேவை மற்றும் அளிப்பை (Demand & Supply) பொறுத்துதான் விலை ஏற்ற இறக்கம் இருக்கும்.

ஒரு நிறுவனம், புதிய பங்கு வெளியீடு மூலம் பொதுமக்களுக்கு மட்டும்தான் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. பொதுவாக, பங்கு வெளியீட்டைப் பொது வெளியீடு (Public Issues), உரிமைப் பங்குகள் (Rights Issues), தனிப்பட்ட ஒதுக்கீடு (Private Placement) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.

பொது வெளியீடு என்பது பொதுமக்களுக்கான வெளியீடாகும். அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டு அவர்களுக்குத் தரப்படுவதாகும்.

ஏற்கெனவே பங்கு முதலீட்டாளர்களாக இருப்பவர்களுக்கு பங்குகளை விற்பனை செய்வது உரிமைப் பங்கு வெளியீடாகும். அந்த நிறுவனத்தின் நிறுவனர்களின் (Promotors) உறவினர்கள், இயக்குநர்கள், உயரதிகாரிகள், நண்பர்கள், தனிப்பட்ட நிறுவனங்கள், பெரிய முதலீட்டாளர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பங்குகளை விற்பனை செய்யலாம். இதை `தனிப்பட்ட ஒதுக்கீடு' (Private Placement) என்பார்கள்.

உரிமைப் பங்கு மற்றும் தனிப்பட்ட ஒதுக்கீடு பங்குகளை, பங்கின் சந்தை விலையைவிட குறைவான விலைக்குக் கொடுப்பார்கள்.

ஒரு நிறுவனத்துக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுமோ, அப்போ தெல்லாம் அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று, நிதி திரட்டிக்கொள்ளும் வசதி இருக்கிறது. முதன்முதலாக நிதி திரட்டினால், அது ஐ.பி.ஓ (IPO- Initial Public Offer) என பார்த்தோம். இரண்டாவது முறையாக, பொது மக்களிடமிருந்து பணம் திரட்டினால் அது எஃப்.பி.ஓ (Follow on Public Offering) என்பார்கள். அதன் பிறகு எத்தனை முறை பங்குகளை விற்றாலும் அது எஃப்.பி.ஓ என்கிற வகையில்தான் எடுத்துக் கொள்ளப்படும்.

புதிய பங்கு வெளியீட்டின்போது அந்த நிறுவனம் பங்கின் விலையை நிர்ணயம் செய்யும். அது பங்குச் சந்தைக்கு வந்தபிறகு அதன் தேவை அதிகமாக இருந்தால், அதிக விலைக்கு கைமாறும். இல்லை என்றால் பங்கின் விலை இறங்கிவிடும்.

காளையும் கரடியும்...

பங்குச் சந்தை என்றாலே நினைவுக்கு வரும் அடையாளங்கள் இவை. பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நன்றாக இருந்தால், சந்தை, காளையின் (Bull) ஆதிக்கத்தில் இருக்கிறது என்பார்கள். சந்தை இறங்கினால். அது கரடியின் (Bear) பிடியில் இருக்கிறது என்பார்கள். எதையும் தூக்கி உயர வீசுவது காளையின் தன்மை. அதேபோல் சந்தை தொடர்ந்து உயரே செல்வதை ‘காளைச் சந்தை’ என்கிறார்கள். கரடியின் இயற்கை குணம், எதையும் கீழே இழுப்பதாகும். அதனால்தான் பங்குச் சந்தை சரிந்தால் கரடியின் பிடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பங்குச் சந்தையின் இயற்கை குணமே ஏற்ற இறக்கம்தான். சந்தை அதன் உச்சத்திலிருந்து சுமார் 30% சரிந்தால் அது கரடிச் சந்தை எனப்படும். சந்தை தொடர் ஏற்றத்தில் இருந்தால் காளைச் சந்தையாகும்.

இந்தியப் பங்குச் சந்தைகள்

இந்தியாவில் ஒரு காலத்தில் மெட்ராஸ் பங்குச் சந்தை, கொல்கத்தா பங்குச் சந்தை உள்ளிட்ட பல பிராந்திய பங்குச் சந்தைகள் செயல்பட்டன. இப்போது பம்பாய் பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை என இரண்டு பெரிய சந்தைகள்தான் பிரதானமாக இயங்கி வருகின்றன. இந்த பங்குச் சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்படும். அவற்றில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வர்த்தகம் நடக்கிறது. இந்த வர்த்தகம் எல்லாமே இணைய வழியில்தான் நடக்கிறது. அதாவது, ஒருவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பங்குச் சந்தையில் முதலீட்டை ஆரம்பிக்க டீமேட் கணக்கு வேண்டும். ஆரம்ப காலத்தில் பங்கு முதலீட்டுக்கு ஆதாரமாக ‘ஷேர் சர்டிஃபிகேட்' கொடுத்தார்கள். இப்போது முதலீட்டாளருக்கு என இருக்கும் ஒரு கணக்கில் பங்குகளை வரவு வைப்பார்கள். அதன் பெயர்தான் `டீமேட்' (Demat - Dematerialisation) கணக்கு. வங்கியில் பணம் போட்டு எடுப்பது மாதிரிதான் இதுவும். இதில் பணத்துக்கு பதிலாக பங்குகளை வரவு வைப்பார்கள். டீமேட் கணக்கை வங்கிகள், இதற்கென இருக்கும் பங்குத் தரகர்கள், ஆன்லைன் பங்குத் தரகு நிறுவனங்கள் எதில் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ளலாம். டீமேட் தொடங்க ரூ.300-லிருந்து ரூ.500 வரை செலவாகும். இது தவிர, டீமேட் கணக்குக்கு ஆண்டுக்கு பராமரிப்புக் கட்டணமாக ரூ.300–ரூ.500 வரை செலுத்த வேண்டும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
SB Stock

அடிப்படை சேவை டீமேட் கணக்கு

முதன்முதலாக பங்குச் சந்தையில் முதலீட்டை சிறிய அளவில் ஆரம்பிப்பவர்கள் அடிப்படைச் சேவை டீமேட் கணக்கை (Basic Service demat Account - BSDA) ஆரம்பித்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கில் முதலீடு செய்திருக்கும் பங்குகளில் மதிப்பு ரூ.50,000-க்குள் இருந்தால் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் கிடையாது. ரூ.50,001 முதல் ரூ.2 லட்சம் என்றால் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.100 ஆகவும் ரூ. 2 லட்சத்தைத் தாண்டினால் ரூ.300 ஆகவும் இருக்கிறது. டீமேட் கணக்கு ஆரம்பிக்க பான் கார்டு எண், ஆதார் எண் அவசியம் தேவைப்படும். 7-10 நாள்களில் டீமேட் கணக்கை ஆரம்பித்துவிடலாம். ஆன்லைன் மூலம் என்றால் அதிகபட்சம் 12 மணி நேரத்துக்குள் ஆரம்பிக்க முடியும். பங்குகளை வாங்கி விற்க வர்த்தக கணக்கு ஒன்று வேண்டும். அதை நீங்கள் கொடுக்கும் வங்கிக் கணக்குடன் இணைத்துவிடுவார்கள். பங்குகளை வாங்க இந்த வங்கிக் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணத்தை மாற்ற வேண்டும். அதேபோல், பங்குகளை விற்றால் இந்த வங்கிக் கணக்கில்தான் பணம் வந்து சேரும்.

பங்குத் தரகரின் பணி!

பங்குச் சந்தையில் ஒருவர் தானே நேரடியாக பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. செபி அமைப்பிடம் பதிவு செய்துள்ள பங்குத் தரகர் அல்லது பங்குத் தரகு நிறுவனம் மூலம்தான் அதைச் செய்ய முடியும். இந்த புரோக்கர் அல்லது புரோக்கிங் நிறுவனம், முதலீட்டாளர்கள் சார்பாக பங்கை வாங்குவது / விற்பதை மேற்கொள்ளும். இந்த வாங்குவது மற்றும் விற்பது எல்லாமே ஆன்லைன் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தானே நடந்துவிடும். எங்காவது தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு, வாங்குவது / விற்பதில் சிக்கல் வந்தால், புரோக்கரை அணுகினால் அவர் தீர்த்து வைப்பார். பெரும்பாலான பங்குத் தரகு நிறுவனங்கள் ஆன்லைன், மொபைல் போன் செயலி மூலம் பங்கு முதலீடு செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

இந்தப் பங்கு புரோக்கர், பங்குத் தரகு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி (Securities and Exchange Board of India - SEBI) அமைப்பிடம் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும். பங்கு முதலீட்டைப் பொறுத்தவரை, வரவு செலவு எல்லாம் வங்கி மூலம், வங்கி இணையதளம் அல்லது காசோலை, கேட்பு காசோலை (Demand Draft) மூலம்தான் நடக்கிறது. இங்கே ரொக்கப் பணத்துக்கு இடமில்லை. யாராவது பங்கு முதலீட்டுக்கு ரொக்கப் பணம் கேட்டால் அவர்கள் போலி என உஷாராகி விட வேண்டும்.

பங்குச் சந்தை முதலீட்டுக்குப் புதியவர் என்றால், எந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும். என்ன விலையில் வாங்க வேண்டும் என்பதற்கு புரோக்கர் உதவியை நாடலாம். அதற்காக அவர் சொல்லும் பங்குகளை எல்லாம் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்களும் அந்த நிறுவனத்தின் அடிப்படை விஷயங்களை அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுப்பது நல்லது.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
SARINYAPINNGAM

பங்கு வாங்கும் செலவு!

பங்கை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகுக் கட்டணம் இருக்கிறது. இது பங்கின் விலையில் 0.10%லிருந்து 0.5% வரை இருக்கும். இந்தக் கட்டணம் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். இதுபோக பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax) 0.1%, முத்திரைக் கட்டணம், செபி கட்டணம் என வேறு சில சிறிய கட்டணங்களும் இருக்கின்றன. ஜிரோதா, க்ரோ போன்ற தள்ளுபடி புரோக்கிங் நிறுவனங்கள் பங்கு முதலீட்டுக்கு தரகுக் கட்டணம் வசூலிப்பதில்லை. புதிய பங்கு வெளியீட்டின்போது மட்டும் தரகுக் கட்டணத்தை பங்கு வெளியிடும் நிறுவனமே பங்குத் தரகு நிறுவனத்துக்குக் கொடுத்துவிடும்

சுலபமான பங்கு முதலீடு!

இதற்கு முன் பங்கில் முதலீடு செய்ய புரோக்கிங் நிறுவனத்துக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகு போன் மூலம் சொன்னால் பங்கை வாங்கித் தந்தார்கள். இப்போதெல்லாம் புரோக்கிங் நிறுவனம், முதலீட்டாளருக்கு ஆன்லைன் மூலம் பங்குகளை வாங்க, விற்க யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு கொடுத்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சுலபமாக பங்கு முதலீட்டை மேற்கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் பங்கு முதலீடு செய்யும்போது சொந்த கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது அவசியம். பிரவுசிங் சென்டரில் பங்கு முதலீட்டை மேற்கொள்வது ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
Mir Basar Suhaib

முதலீட்டுக்குப் பங்கை எப்படித் தேர்வு செய்வது?

ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் அதன் பங்கு விலை தானாக ஏறும்; செயல்பாடு சரியில்லை என்றால் விலை இறங்கும். புதிய பங்கு அல்லது ஏற்கெனவே பங்குச் சந்தையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்கு என்றால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை வைத்து முடிவு செய்யலாம். அந்த நிறுவனத்துக்கு இருக்கும் நல்ல பெயர், அதன் நிறுவனர்கள் மீதான நம்பகத்தன்மை, அதன் நிர்வாகத் திறமை, சக நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் திறன், தொழில் நேர்மை, லாபம் ஈட்டும் திறன், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.

மேலும், அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறை எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டியது முக்கியம். துறை, வேகமான வளர்ச்சியில் இருந்தால்தான் நிறுவனமும் வேகமாக வளரும். உதாரணமாக, ரியல் எஸ்டேட் துறை மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் அந்தத் துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களின் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகத்தான் செய்யும். அப்போது அந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

சில நேரங்களில் துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை, எதிர்காலத்திலும் இதே நிலைமைதான் நீடிக்கும் என்றால் அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். நிறுவனத்தின் நிலைமை இப்போது சரியில்லை ஆனால், விரைவில் சரியாகிவிடும் என்றால் அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாம். அதாவது நல்ல நிறுவனப் பங்கு மலிவான விலையில் கிடைக்கிறது என்பதன் அடிப்படையில்.

பங்கு ஈட்டிய வருமானம்!

நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்று கவனிக்க வேண்டியது மிக முக்கியம். அதனை ‘ஒரு பங்கு ஈட்டிய வருமானம்’ (Earning Per Share - EPS) என்பார்கள்.

ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது இ.பி.எஸ் ஆகும். உதாரணமாக, ஒரு கோடி பங்குகள் உள்ள ஒரு நிறுவனம் 10 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது என்றால் அந்த நிறுவனத்தின் இ.பி.எஸ். 10 ரூபாய். ஒரு நிறுவனப் பங்கின் இ.பி.எஸ்ஸை பொறுத்து அந்த நிறுவனம் எந்த அளவுக்கு நல்ல நிறுவனம் என சொல்லலாம்.

நிறுவனத்தின் நிகர லாபம் கூடினால், அந்த லாபத்தை பங்கு முதலீட்டாளர் களுக்கு டிவிடெண்ட் ஆகப் பிரித்துக் கொடுப்பார்கள். மொத்த லாபத்தையும் பிரித்துக் கொடுக்க மாட்டார்கள். நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்துக்கென ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துக் கொள்வார்கள். டிவிடெண்ட் கொடுக்கவில்லை என்றால் நிறுவனத்தின் கையிருப்பு அதிகரித்து நிறுவனத்தின் நிகர மதிப்பு அதிகரிக்கும். அப்போது பங்குச் சந்தையில் அந்த நிறுவனப் பங்கின் விலை அதிகரிக்கும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!

பி/இ விகிதம்

ஒரு பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்ஸுக்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம் (Price-to-Earnings Ratio - P/E Ratio). அதாவது, பங்கு ஈட்டு விகிதம். பொதுவாக, பி/இ விகிதம் அதிகமாக இருந்தால் அந்தப் பங்கு அதிக விலைக்கு வர்த்தகம் ஆகிறது என்றும் குறைவாக இருந்தால் குறைந்த விலைக்கு வர்த்தகம் ஆகிறது என்றும் அர்த்தம். பி/இ விகிதம் குறைவாக இருந்தால் பங்குகளை வாங்கலாம்.

புத்தக மதிப்பு!

ஒரு நிறுவனத்தின் மதிப்பைச் சொல்வதுதான் புத்தக மதிப்பு (Book Value). அதாவது, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன விலைக்குப் போகுமோ அதுதான் புத்தக மதிப்பு. இதை நிகர சொத்து மதிப்பு என்றுகூட சொல்லலாம். ஒரு பங்கின் புத்தக மதிப்பு என்பது பங்கின் சந்தை விலையைவிட அதிகமாக இருந்தால் அந்த நிறுவனப் பங்கை வாங்கலாம். புத்தக மதிப்பு குறைவாக இருந்தால் கடன் அதிகமுள்ள நிறுவனமாக இருக்கும்.

ஒரு நிறுவனம் அதன் சொத்துகளை எந்த அளவுக்குத் திறமையாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகிறது என்பதுதான் ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் (Return on Net Worth-RONW). இது அதிகமாக இருந்தால் அது நல்ல நிறுவனம் என சொல்லலாம்.

இ.பி.எஸ் மற்றும் பி/இ விகிதங்கள், புத்தக மதிப்பு, ரிட்டர்ன் ஆன் நெட் வொர்த் ஆகியவை இணையதளங்களில் சுலபமாகக் காணக் கிடைக்கின்றன.

காலாண்டு, ஆண்டு அறிக்கைகள்...

பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் செயல்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிடும். இதற்கு ‘காலாண்டு நிதி நிலை அறிக்கை' என்று பெயர். குறிப்பிட்ட அந்த மூன்று மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை, மொத்த வருமானம், நிகர லாபம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த விவரங்களை கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனம், கடந்த ஓராண்டில் அதன் செயல்பாட்டை பங்கு முதலீட்டாளர் களுக்குச் சொல்லும் நிதிநிலை அறிக்கைதான் ஆண்டு அறிக்கை (Annual Report). இதில் நிறுவனத்தின் தலைவர், இயக்குநரின் அறிக்கைகள், நிதி நிலை, நிகர லாபம் / இழப்பு, கடன்கள், முடிந்த ஆண்டில் அதன் பங்கின் அதிகபட்ச / குறைந்தபட்ச விலை, புத்தக மதிப்பு, பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட டிவிடெண்ட் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கிறது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆண்டு அறிக்கையை அவசியம் வெளியிட வேண்டும் என்பது செபி அமைப்பின் விதிமுறை. இந்த ஆண்டு அறிக்கைகள் பெரிய வண்ணப் புத்தகமாக இருக்கும். இந்த ஆண்டு அறிக்கை, ஒரே ஒரு பங்கை வாங்கிய முதலீட்டாளருக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது இந்த ஆண்டு அறிக்கை பெரும்பாலும் பி.டி.எஃப் வடிவில் மெயில் மூலம் முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், இந்த அறிக்கைகள், தொடர்புடைய நிறுவனத்தின் இணையதளம், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ இணையதளங்களிலும் கிடைக்கும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
piyato

பைசா பங்குகள், உஷார்!

நம் மக்களுக்கு எப்போதும் விலை குறைவான பங்குகள் மீது அதிக ஆர்வம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பங்கின் விலை ரூ.5 என்றால் 5,000 ரூபாய்க்கு 1000 பங்குகள் வாங்க முடியும். இதுவே ஒரு பங்கின் விலை 950 என்றால் 5 பங்குகளை மட்டும்தான் வாங்க முடியும் என்பதே காரணம். அதிக பங்குகள் கிடைப்பதால் அது லாபகரமானது அல்ல. ஒன்றுக்கும் மதிப்பில்லாத பங்குகள் நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் அவற்றால் லாபமில்லை.

பங்குகளில் அதன் முக மதிப்பைவிட குறைவான விலையில் வர்த்தகமாகும் பங்குகளை பைசா பங்குகள் என்பார்கள். இந்தப் பங்குகளை வாங்கினால் விற்க முடியாத பெரும் பிரச்னை இருக்கிறது.

பங்கு விலை முடிவும் ஆரம்பமும்...

தங்கத்தின் விலை முந்தைய தினம் ஒன்றாகவும் மறுநாள் காலையில் வேறாகவும் இருக்கிறது. அதேபோல், ஒரு பங்கிலும் முந்தைய வர்த்தக முடிவு விலையும் மறுநாள் காலை ஆரம்ப விலையும் பெரும்பாலும் வேறாகத்தான் இருக்கும். அதைவிட அதிகமான அல்லது குறைவான விலையில் வர்த்தகத்தை ஆரம்பிக்கும். எந்த ஒரு பங்கின் விலையையும் அதற்குள்ள தேவைதான் நிர்ணயிக்கிறது. முன்தினத்தைவிட அதிக முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வந்தால், விலை அதிகரித்துவிடும். வாங்குவதற்கு ஆட்கள் குறைவாக இருந்தால் விலை குறையும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
Clerkenwell

பங்குகளின் வகைகள்...

பி.எஸ்.இ பங்குச் சந்தை, பங்குகளை A, B, S, T, Z எனப் பிரித்து வைத்துள்ளன. இவை அவற்றின் பங்குகளின் பங்குச் சந்தை மதிப்புக்கேற்ப (Market Capitalisation) பிரிக்கப்பட்டிருக்கின்றன. A குரூப் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அது லார்ஜ் கேப் பங்குகள் எனப்படும். இந்தப் பங்குகளை விற்றுப் பணமாக்குவது மிக எளிது. B பிரிவு நிறுவனங்கள் மிட் கேப் பங்குகளாகும். S என்பது ஸ்மால் கேப் பங்குகளைக் குறிக்கும்.

T பிரிவின் கீழ் வரும் பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்க முடியாது. Z பிரிவில் செபியின் விதிமுறை களை சரிவர நிறைவேற்றாத நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த நிறுவனப் பங்குகள் எந்நேரமும் பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடும்.

சிறு முதலீட்டாளர்கள் A, B பிரிவு பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து லாபகரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

டிவிடெண்ட் வருமானம்!

நன்றாகச் செயல்படும் நிறுவனம் சாதாரண டிவிடெண்ட், இடைக்கால டிவிடெண்ட், இறுதி டிவிடெண்ட், சிறப்பு டிவிடெண்ட் என பல வகையில் கொடுக்கக் கூடும். நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்ய இதுவும் ஒரு வழியாகும். அதிக டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனப் பங்கில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!

போனஸ் பங்குகள்!

ஒரு நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால் நிகர லாபம் அதிகரிக்கும். அதில், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்தது போக மீதி தொகை கையிருப்பாக இருக்கும். இது மிகவும் அதிகமாக இருந்தால் அந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்கு களைக் (Bonus Shares) கொடுக்கும். இதனால், நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரித்து பங்குகளின் எண்ணிக்கை கூடும். அதே நேரத்தில், போனஸ் பங்குகள் எத்தனை கொடுக்கப்பட்டதோ, அதன் விகிதாச்சாரத்துக்கேற்ப பங்கின் விலை உடனே குறைந்து விடும்.

உதாரணமாக, ஒரு பங்கின் விலை ரூ.2,000 என வைத்துக் கொள்வோம். நிறுவனம் ஒரு பங்குக்கு ஓர் இலவச பங்கு கொடுத்தால் பங்கின் விலை சுமார் ரூ.1000 ஆக குறைந்துவிடும். இதனால், முதலீட்டாளருக்கு உடனடியாக எந்த ஆதாயமும் லாபமும் கிடைக் காது. ஆனால், பங்கு விலை படிப்படியாக ஏறத் தொடங்கும்போது கூடுதல் எண்ணிக்கையில் பங்கு இருக்கும். அதனால், கூடுதல் லாபம் கிடைக்கும். அடுத்த ஆண்டு போனஸ் பங்குகளுக்கும் சேர்த்து டிவிடெண்ட் கிடைக்கும். இது கூடுதல் லாபமாக இருக்கும். மேலும் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பலரால் அதிக எண்ணிக்கையில் அதை வாங்கி விற்க முடியாது. இந்த நிலையிலும் ஒரு நிறுவனம் இலவசப் பங்குகளை அளித்து பங்கின் விலையைக் குறைத்து அதிகம் பேர் முதலீடு செய்ய வழி வகுக்கும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
gorodenkoff

பங்கு பிரிப்பு!

பங்கின் முகமதிப்பைக் குறைத்து ஒருவரிடம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் பங்கு பிரிப்பு. உதாரணமாக, 10 ரூபாய் முகமதிப்பு உள்ள ஒரு பங்கை 5 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பங்குகளாகப் பிரிப்பார்கள். அப்படிச் செய்யும்போது முகமதிப்பு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பங்கின் சந்தை மதிப்பும் குறையும். உதாரணத்துக்கு பங்கின் முகமதிப்பு ரூ.10, அதன் சந்தை விலை ரூ 2,000 என்று வைத்துக் கொள்வோம். இப்போது முக மதிப்பை ரூ.5 ஆக குறைத்தால், ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளருக் குக் கூடுதலாக ஒரு பங்கு கிடைக்கும். கூடவே பங்கின் விலை ரூ.2,000-லிருந்து ரூ.1,000 ஆக குறைந்துவிடும்.

இந்தப் பங்கு பிரிப்பு மூலம் முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை சுலபமாக வாங்க முடியும். அதே போல், சுலபமாக விற்கவும் முடியும் என்பதைத் தவிர, உடனடி லாபம் எதுவும் கிடையாது. அதே நேரத்தில், நீண்ட காலத்தில் பங்கின் விலை ஏறி, லாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய நன்மை இருக்கிறது. பங்கு பிரிப்பால் நிறுவனத்துக்குக் கூடுதல் செலவு எதுவும் இல்லை. டிவிடெண்ட் முகமதிப்புக்குதான் கொடுக்கப்படுகிறது என்பதால் அடுத்து வரும் ஆண்டு களில், கடந்த ஆண்டுகளின் அளவுக்கு டிவிடெண்ட் கொடுத்தாலும், அதே செலவுதான் நிறுவனத்துக்கு ஆகும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
D-Keine

பங்கில் முதலீடு செய்ய சரியான நேரம்!

பொதுவாக, பங்குச் சந்தை சரியும்போது வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும். அப்போதுதான் நல்ல நிறுவனப் பங்குகளின் விலையும் குறைவாக இருக்கும். மேலும் மொத்தப் பணத்தைக் கொண்டு ஒரே ஒரு பங்கை மட்டும் வாங்கக்கூடாது. பணத்தை பல்வேறு துறை பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது பங்கு முதலீட்டில் ரிஸ்க்கை குறைக்கும்.

உதாரணமாக, வங்கித்துறை – எஸ்.பி.ஐ, தகவல் தொழில்நுட்பம் – இன்ஃபோசிஸ், மருந்து தயாரிப்பு – டாக்டர் ரெட்டீஸ், பெயின்ட் – ஏஷியன் பெயின்ட்ஸ், வாகனம் – டாடா மோட்டார்ஸ் என்பது போல் முதலீட்டைப் பிரித்துச் செய்யலாம்.

அடுத்து, ஒரு பங்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யக் கூடாது. அதை மூன்று அல்லது ஐந்து ஆக பிரித்து வைத்துக்கொண்டு, சந்தை இறக்கங்களில் வாங்கி வர வேண்டும்.

ஏற்கெனவே வாங்கிய நல்ல நிறுவனப் பங்குச் சந்தை சரிவில் விலை குறைவாகக் கிடைத்தால் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம். நல்ல நிறுவனப் பங்குகள் மலிவான விலையில் கிடைக்கும்போது, வாங்கத் தயங்கக் கூடாது. அதற்கு என எப்போதும் பணத்தைத் தனியாக ஒதுக்கி வைத்திருப்பது நல்லது.

இதை எல்லாம்விட மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து 5, 6 பங்குகளில் முதலீடு செய்துவந்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

பங்குச் சந்தை முதலீடு... பெண்களும் கலக்கலாம்!
erdikocak

முதலீட்டுக்கு பங்கை தேர்வு செய்வது எப்படி?

முதலீடு செய்யப் போகிற பங்கு புதியதோ, ஏற்கெனவே வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்கோ எதுவாக இருந்தாலும் ஒரு முதலீட்டாளர், அந்த நிறுவனத்தை நடத்துபவர்களின் நம்பகத்தன்மை, நிறுவனத்தின் கடந்த கால லாப, நஷ்ட கணக்குகள், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு என்ன தேவை இருக்கிறது, அதன் வளர்ச்சி வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் அந்த நிறுவனத்தின் விற்பனை, மொத்த வருமானம், நிகர லாபம் போன்றவை வளர்ச்சி அடைந்திருக்கின்றனவா என்று பார்ப்பதோடு, அடுத்து வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்றால் மட்டுமே அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முடிவை எடுக்க வேண்டும்.

பங்கு விலை ஏற்ற இறக்கம் என்ன காரணம்?

ஒரு நிறுவனப் பங்கு விலை ஏற்ற, இறக்கத்தை நிர்ணயிக்கும் அக மற்றும் புற காரணங்கள் அதிகம். நிறுவனத்தின் லாபம், விரிவாக்கத் திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி போன்ற பலவற்றை அக காரணங்களாகச் சொல்லலாம். புற காரணங்கள் என்கிறபோது, பன்னாட்டு, உள்நாட்டுச் சந்தை நிலவரம், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்கள், இயற்கை சீற்றம், வட்டிவிகித மாற்றம், வேலை இல்லா திண்டாட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றின் சாதக, பாதகங்களைப் பொறுத்து பங்கின் விலை மாற்றத்துக்கு உள்ளாகும்.

பங்கு முதலீடு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குடும்பச் செலவு போக உபரியாக இருக்கிற சேமிப்பு பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது.

உங்களின் முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகளுக்கு குறைவாக இருந்தால், இந்தப் பணம் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில் தேவைப்பட்டால் எக்காரணம் கொண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியப் பங்குச் சந்தை வரலாறு!

இந்தியாவின் முதல் பங்குச் சந்தை 1875–ம் ஆண்டில் ‘தி நேட்டிவ் ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதுதான் பின்னர் இன்றைய `பாம்பே பங்குச் சந்தை' (Bombay Stock Exchange-BSE) ஆக மாறியது. 1980-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 பிராந்திய பங்குச் சந்தைகள் செயல்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் மந்தமானதால் அவை மூடப்பட்டன. `தேசிய பங்குச் சந்தை' (National Stock Exchange of India-NSE) 1992–ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் இப்போது பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ என இரு பங்குச் சந்தைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. தற்போது பிஎஸ்இ (BSE)-ல் 3,440 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. என்எஸ்இ (NSE)–ல் 1,640 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு எதற்கு?

இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளையும் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அதனால்தான், சாதாரண மக்களும் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக பாம்பே பங்குச் சந்தை, அதன் சென்செக்ஸ் (SENSEX) குறியீட்டை வைத்திருக்கிறது. சென்செக்ஸ் குறியீட்டு எண் கணக்கிட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நன்றாகச் செயல்படும் 30 நிறு வனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இந்த நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றப்படும். இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி (NIFTY) கணக்கிட 50 நிறுவனப் பங்குகள் எடுத்துக்கொள்ளப்படும்.

முதலீட்டாளர்களின் பாதுகாவலன் செபி!

ஆரம்பத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் கீழ் சி.சி.ஐ (Controller of Capital Issues - CCI) என்ற அமைப்பு செயல்பட்டது. அது நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடர்பான விஷயங்களைக் கண்காணித்து வந்தது. பின்பு இது கலைக்கப்பட்டு, அதைவிட அதிக அதிகாரம் கொண்ட தற்போதைய ‘செபி’ அமைப்பு 1992–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பங்குச் சந்தை முதலீடுகளைக் கண்காணித்து அவற்றை வெளிப்படையானதாக மாற்றி உள்ளது. முதலீட்டாளர்களின் பிரச்னைகளுக்கு இந்த அமைப்பு தீர்வு அளித்து வருகிறது.

செபி (SEBI) அமைப்பு, இணைய தளம் மூலம் பங்கு, ஃபண்ட் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் புகார்களை நிவர்த்தி செய்யும் முறையான `ஸ்கோர்ஸ்' (SCORES)-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்கோர்ஸில் புகார் அளிக்க,

https://scores.gov.in/scores/Welcome.html - ஐ அணுக வேண்டும். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. தென் பிராந்திய அலுவலகம் சென்னையில் உள்ளது.

செபி - தென் பிராந்திய அலுவலகம் (Southern Regional Office),

பாரத் ஓவர்சீஸ் கட்டடம், ஏழாவது தளம், 756-எல், அண்ணா சாலை, சென்னை-2.

தொலைபேசி +91-44- 2888 0222, +91-44- 2852 6686

ஃபேக்ஸ் : +91-44 -2888 0333

இமெயில்: sebisro@sebi.gov.in

‘`அடுத்து பத்து ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை, மூடப்பட்டாலும் நீங்கள் எந்த நிறுவனப் பங்கை வைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அந்த நிறுவனப் பங்கை வாங்க வேண்டும்.'’

‘‘நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனப் பங்கு விலை 50% வரை சரிவைக் கண்டாலும் பீதி அடையாமல் இருக்கும் தகுதி இருந்தால் மட்டுமே நீங்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்குத் தகுதியானவர்.’’

‘`நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் செய்வது மூலம்தான் ரிஸ்க் வருகிறது.’'

- வாரன் பஃபெட்

ஒருங்கிணைப்பு: சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism