Published:Updated:

வாட்ஸ்ஆப்பில் சேலை வியாபாரம், மாத வருவாய் 21 லட்சம் - அசத்தும் சண்முகப்பிரியா!

வாடிக்கையாளர்கள் கேட்கிறாங்கனு புது டிசைன்வாங்கிட்டு வந்து கொடுத்தால் ஏற்கெனவே இருந்த பழைய புடவைகள் விற்பனை ஆகாமல் அப்படியே தேங்கிரும். அதனால் கொஞ்சம் நஷ்டமும் ஏற்பட்டுச்சு.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

வாட்ஸ்அப் பிசினஸ்:

``பொண்ணாப் பொறந்துட்டா, சமுதாயம் விதிச்சு வெச்சுருக்க எல்லைக்குள்ளதான் வாழணும்னு எந்த அவசியமும் இல்ல. வீட்டுக்குள் முடங்காமல் நமக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் தேட ஆரம்பிச்சா நாமும் வெற்றி பெற்ற சிங்கப்பெண்தான்" என புத்துணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா. வாட்ஸ்அப் மூலம் புடவைகள் விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ள இவரின் மாத வருவாய்  25 லட்சம். தன்னுடைய வெற்றிக்கதையை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார் சண்முகப்பிரியா.

வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

``பிசினஸை பொறுத்தவரை ஜெயிப்பதற்கு படிப்பு அவசியம்னு சொல்லமுடியாது. நீங்க ஒரு பெட்டிக்கடை வெச்சுருந்தா அதுகூட பிசினஸ்தான். அதனால  நல்லா படிச்சவங்க இந்தத் தொழில் பண்ணணும், படிக்காதவங்க அந்தத் தொழில் பண்ணனும்ன்னு எல்லாம் எந்த வரையறையும் இல்லை. நாம் தேர்ந்தெடுத்த வேலையில அப்டேட்டா இருந்தாப் போதும் நிச்சயம் நமக்கான அடையாளம் நம்மைத் தேடிவரும். நான் படிச்சது முதுநிலை சமூகவியல்.

படிப்பு முடிச்சு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்துட்டு இருந்தேன். மாதம் 75,000 ரூபாய் சம்பளம். என்னதான் ஒரு பொண்ணு நிறைய படிச்சு, கை நிறைய சம்பாதிச்சாலும் குடும்பம், குழந்தைனு வரும்போது நிறைய சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி நான் சந்திச்ச சூழல்தான் என்னை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆக்கியிருக்கு" என்கிறார் சண்முகப்பிரியா.

``நான் தாய்மை அடைந்திருந்த நேரம், மருத்துவ விடுப்பு முடிச்சு மீண்டும் வேலைக்குப்போக வேண்டிய சூழல் வந்துச்சு. குழந்தையை அம்மாகிட்ட விட்டுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். குழந்தைக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போக ஆரம்பிச்சுது. பணம் சம்பாதிப்பதைவிட குழந்தை நலன் முக்கியம்னு தோணுச்சு. அதனால் துணிஞ்சு வேலையை விட்டுட்டேன். அந்த நேரம் பார்த்து என் கணவருக்கும் சென்னையிலிருந்து டெல்லிக்கு பணிமாறுதல் ஆயிருச்சு. நான் தனிமையை உணர ஆரம்பிச்சேன். வேலை, குடும்பம்னு எப்பவும் பிஸியாகவே இருந்து பழக்கப்பட்ட எனக்கு என்னையே தொலைச்ச உணர்வு வர ஆரம்பிச்சுது. வீட்டுக்குள்ளயே தேங்க ஆரம்பிச்சேன். அதிக ஸ்ட்ரெஸ் ஆயிடுச்சு.

ஒரு வாட்ஸ்அப் குரூப்புக்கு 257 பேரை உறுப்பினர்கள் ஆக்க முடியும். 25 குரூப் வெச்சுருக்கேன். மூன்று குரூப்பில் இருந்தும் ஆர்டர்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும்.
சண்முகப்பிரியா

அவசியம் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. வீட்டில் இருந்தே ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போதான் என்னுடைய மாமியார் தன்னுடைய ஆரம்பக் காலங்களில் சைக்கிளில் சென்று கிராமங்களில் புடவை விற்பனை செய்தாங்கனு என் கணவர் சொன்னது நினைவுக்கு வந்துச்சு. அத்தை செய்த தொழிலையே நாமும் செய்யலாம்னு முடிவு எடுத்து என் கணவர்கிட்ட சொன்னேன். அவரும் ஆதரவு கொடுத்தார். 

முதலில் இருபதாயிரம் ரூபாய் முதலீடு செய்து சென்னைக்குப் போய் மொத்த விலைக்கு புடவைகளும் நைட்டிகளும் எடுத்துட்டு வந்தேன். தொழில் தொடங்கின புதிதில் ஒவ்வொரு புடவைக்கும் என்ன லாபம் வைக்கணும்னு தெரியல. வாங்குன விலையைவிட கொஞ்சம் விலை அதிகமாக வெச்சு அக்கம் பக்கத்தில் இருக்கவங்களுக்கு விற்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் கடனுக்கு கேட்க ஆரம்பிச்சாங்க. அது மட்டுமில்ல புதுப் புது டிசைன்களும் கேட்டுட்டே இருப்பாங்க. வாடிக்கையாளர்கள் கேட்கிறாங்கனு புது டிசைன்வாங்கிட்டு வந்து கொடுத்தால் ஏற்கெனவே இருந்த பழைய புடவைகள் விற்பனை ஆகாமல் அப்படியே தேங்கிரும். அதனால் கொஞ்சம் நஷ்டமும் ஏற்பட்டுச்சு. படிப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு துறையை தேர்வு செஞ்சுட்டோமோங்கிற ஒரு பயம் மனசுக்குள் வந்து போச்சு. 

50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்!
பிசினஸ்
பிசினஸ்

என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட போன் பண்ணி பேசினேன். புடவைகளைப் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாக அனுப்பச் சொன்னா. நானும் அனுப்பினேன். அதில் சில புடவைகளை அவளுக்குத் தேர்வு செய்துட்டு மீதியிருந்த புடவைகளின் புகைப்படங்களை அவளோட ஃப்ரெண்ட்ஸ்களுக்கு வாட்ஸ்அப் மூலமாவே ஃபார்வேர்டு செய்து விற்பனை செய்து கொடுத்தா. ஆர்டர் கொடுத்த எல்லோருக்கும் புடவைகளை கொரியர் அனுப்பி வெச்சுட்டேன். இந்த வாட்ஸ்அப் பிஸினஸ் புது ஐடியாவாக இருந்துச்சு. இதைத் தொடர்ந்து செய்யலாம்னு முடிவு எடுத்தேன்.

நிறைய இடங்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பிச்சேன். ஒவ்வொரு ஏரியாவிலும் என்னென்ன புடவைகள் ஃபேமஸோ அங்கிருந்தெல்லாம் வாங்கிட்டு வந்து, நானே போட்டோகிராபி பண்ணி என்னோட ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் வாட்ஸ்அப் பண்ணினேன். கலெக்‌ஷன் எல்லாம் நல்லா இருக்குனு கமென்ட்ஸ் வந்தோட அடுத்தடுத்து நிறைய ஆர்டர்களும் வந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் ஒரே வாட்ஸ்அப் க்ரூப்பில் இணைச்சு அடுத்தடுத்து டிசைன்களை போஸ்ட் பண்ணிட்டே இருந்தேன். என் நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள்னு என்னோட வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை பெருகிக்கிட்டே வந்துச்சு. நிறைய பேர் என்கிட்ட வாங்கி வெளியே விற்கவும் வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சாங்க. இப்படி தான் சக்சஸ் ஆக ஆரம்பிச்சுது என்னுடைய பிசினஸ்" என்ற சண்முகப்பிரியா, சந்தித்த சவால்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். 

என்கிட்ட ஆர்டர் கொடுக்கும் நபரின் பெயரில் நான் அவங்க வாடிக்கையாளர்களுக்கு கொரியர் அனுப்பி வெச்சுருவேன்
சண்முகப்பிரியா

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் ஆர்டர் கொடுத்து புடவைகளை வாங்கிருவேன். அதை தனித்தனி ரகமாக பிரிச்சு போட்டோக்கள் எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்வேன். சில நேரத்தில் சில டிசைன்களை யாருமே வாங்க மாட்டாங்க. அந்த நேரத்தில் லாபமே இல்லைனாலும் பரவாயில்லைனு ஆஃபர் விலைக்கு கொடுத்துருவேன். என்கிட்ட புடவைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யிறாங்கன்னா அவங்ககிட்ட அதிக லாபத்தை எதிர்பார்க்கமாட்டேன்.

நான் எனக்கான லாபத்தை கொஞ்சம் குறைச்சாதான் அவங்க கொஞ்சமாவது லாபம் பார்க்கமுடியும். இந்த வாட்ஸ்அப் பிசினஸ் பிடிச்சுப்போன நிறைய பெண்கள் என்கிட்ட புடவைகள் வாங்கி அதையே பிசினஸா பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. சிலர் தங்களுடைய `பொட்டிக்'குகளுக்கு வாங்கிட்டு போவாங்க. ஒரு வாட்ஸ்அப் குரூப்புக்கு 257 பேரை உறுப்பினர்கள் ஆக்க முடியும். அதனால் 25 குரூப் வெச்சுருக்கேன். மூன்று குரூப்பில் இருந்தும் ஆர்டர்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கும். 

வாட்ஸ்அப் பிசினஸ்
வாட்ஸ்அப் பிசினஸ்

மக்கள் இப்போ அப்டேட் நிறைய விரும்புவதால் புடவைக்கு ஏற்ற க்ளட்ச்களையும், நகைகளையும் பேக்கேஜா கொடுக்கிறோம். சில சமயம் நாங்க போனில் பார்த்த நிறத்தில் புடவை இல்லைனு சில வாடிக்கையாளர்கள் புகார் சொல்லுவாங்க. அவங்களுக்கு கேட்கும் டிசைனில் வேறு புடவைகள் அனுப்பி வெச்சுருவேன்.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

நிறைய தடைகளுக்குப் பின் இன்னைக்கு என்னோட மாத வருவாய் 25 லட்சம். 8 பெண்களுக்கு நேரடியாகவும் 3000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கேன்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சண்முகப்பிரியா.

`` `பொங்கிப் போட்டுட்டு வீட்ல கிட'ன்னாங்க. ஆனா, அந்த ஒத்த மனுஷி..!'' ஒரு பெண்ணின் வெற்றிக் கதை