Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம்... சர்க்கரைக் காய்ச்சுவதிலும் அசத்தும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கவிதா

புதிய பாதை

பிரீமியம் ஸ்டோரி

‘கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளால் பலரும் கலங்கிக்கிடக்க, `ஒருவகையில் கொரோனா எனக்கு நன்மையே செய்திருக்கிறது’ என்று நம்பிக்கையூட்டுகிறார் கவிதா.

கணினி மென்பொருள் பொறியாளரான கவிதா, தற்போது `வீட்டிலிருந்தே வேலை' என்கிற அடிப்படையில், அதைத் தொடர்கிறார். கூடவே, தன் குடும்பத்துக்குச் சொந்தமான வயலில் விளையும் கரும்பிலிருந்து நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் வரை அசத்த ஆரம்பித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகேயுள்ள கணியூர் கிராமத்திலிருக்கும் தங்களுடைய தோட்டத்தில், கொதிக்கும் கொப்பரை நிறைய இருந்த பொன்னிற சர்க்கரைப் பாகை நீண்ட துடுப்பு மூலம் கிளறிக்கொண்டே பேசினார் கவிதா.

``பரம்பரை விவசாயக் குடும்பத்துப் பொண்ணு நான். படிக்கிற காலத்தில் இருந்தே விவசாய ஆர்வம் நிறைய உண்டு. விவசாயம் சம்பந்தமான செய்திகளை விரும்பிப் படிப்பேன். குறிப்பா, `பசுமை விகடன்’ இதழைத் தொடர்ந்து வாசிப்பேன். விவசாயம் செய்ய ஆர்வமிருந்தாலும், வாய்ப்பு அமையல. படிப்பு முடிஞ்சதும், மென்பொருள் பொறியாளரா வேலை கிடைச்சு வெளியூர் போயிட்டேன். திருமணம். குழந்தைகள்னு பரபரப்பாக இயங்கவேண்டிய சூழ்நிலை. வீட்டுக்கு நான் ஒரே பெண். அப்பா, தனியாளா நின்னு விவசாயத்தை கவனிச்சிட்டிருந்தார். அடிக்கடி போன் மூலமா விவசாயம் சம்பந்தமாக நிறைய பேசிக்குவோம். இயற்கை இடுபொருள் தயாரிப்புக் குறித்து வாட்ஸ்அப் தகவல்களை அனுப்புவேன். அதைப் பார்த்து அவரும் செயல்படுத்துவார். சில நேரங்கள்ல விவசாயத்துல நஷ்டம் ஏற்படுறப்ப `விவசாயத்தைவிட்டே போயிடலாம்னு தோணுதும்மா'னு சொல்வார். அந்த நேரத்துல, நம்மாழ்வார் ஐயாவைத்தான் அவருக்கு மேற்கோள் காட்டுவேன். `விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களில் ஒரு பகுதியை மதிப்புக்கூட்டல் செய்து நேரடி விற்பனை செய்தால் விலைவீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய முடியும்' என்று அழுத்தம் திருத்தமாக நம்மாழ்வார் ஐயா சொல்லியிருக்கார்.

`கரும்பை மதிப்புக்கூட்டல் செய்து நாட்டுச் சர்க்கரையாக மாற்றி விற்பனை செய்யலாம்'னு அப்பாவுக்கு ஆலோசனை சொன்னேன். அவரும் சர்க்கரையா மாற்றி விற்பனை செய்ய ஆரம்பிச்சிட்டார். `என்னிக்காவது ஒருநாள் மென்பொருள் வேலையைவிட்டு, கிராமத்தில் வந்து உட்கார்ந்து அப்பாவோட சேர்ந்து விவசாயம் செய்யணும்' என்கிற கனவு உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும். இந்த நீண்டநாள் கனவை கொரோனா சாதிச்சுக் கொடுத்திருக்கு.

ஊரடங்கு காரணமா நாலு மாசமா என் கிராமத்துலதான் இருக்கேன். நான் மட்டுமில்லாம... கணவர் பிரபு மற்றும் குழந்தைகளையும் அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறக்கிவிட்டுட்டேன். வெட்டின கரும்புகளை வயல்ல இருந்து களத்து மேட்டுக்கு எடுத்து வர்றது, இயந்திரத்தில் அரைச்சி பால் எடுக்கிறது, கொப்பரையில் ஊற்றி கொதிக்கவைக்கிறது, ஆறவெச்சி நாட்டுச்சர்க்கரை தயாரிக்கிறது, மூட்டை பிடிச்சி சந்தைக்கு அனுப்புறது வரைக்கும் ஆள்களோட சேர்ந்து எல்லா வேலைகளையும் நாங்களும் செய்துட்டிருக்கோம்'' என்று சொன்ன கவிதா, மதிப்புக்கூட்டல் முறையில் உற்பத்தி செய்துவரும் நாட்டுச் சர்க்கரையை ஊரடங்குக் காலத்தில் விற்பனை செய்ய முடியாமல் தவித்த அப்பா ரங்கராஜனுக்கு, டிஜிட்டல் மூலமாக கைகொடுத்திருக்கிறார்.

கவிதா
கவிதா

``வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு சமூக ஊடகங்கள் வழியா தொடர்ந்து எங்கள் தயாரிப்பு குறித்து விளம்பரப்படுத்தினேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் விளைந்த கரும்பில் தயாரிக்கப்பட்ட நாட்டுச்சர்க்கரைங்கறத அழுத்தம்திருத்தமாகப் பதிவு செய்தேன். அதைப் பார்த்த பலரும் வயலுக்கே வந்து கிலோ 80 ரூபாய்ன்னு வாங்கிட்டுப் போறாங்க. வெளியூர்கள்ல இருந்து கேட்கறவங்களுக்கு கொரியர் மூலமாவும் அனுப்பிட்டிருக்கோம். இப்ப நாட்டுச்சர்க்கரை வியாபாரம் தூள் பறக்குது’’ என்று சொல்லும்போதே கவிதாவின் குரலில் அத்தனை உற்சாகம்.

``தொடரும் கொரோனா பரவல், என்னை மட்டுமல்ல; உலகத்தில் உள்ள எல்லாரையும் தலைகீழா புரட்டிப் போட்டுக்கிட்டிருக்கு. அந்த வகையில, கணினி மென்பொறியாளரான நான், இப்ப விவசாயியாவும் வடிவெடுத்திருக்கேன். ஒரு பொறியாளர் என்கிறதைவிட, `இயற்கை விவசாயி'ங்கறதுல கிடைக்குற மகிழ்ச்சியே தனி’’ என்று உற்சாகக் குரலில் விடையளித்தார் கவிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு