லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல... விரிவான வழிகாட்டி

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல

இன்ஷூரன்ஸ் என்று வந்துவிட்டாலே நம்மவர்கள் முக்கியமாகக் கவனிப்பது, கட்டிய பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது தான்.

நம் சம்பாத்தியத்தை நம்பியே நம் குடும்பமும் உறவுகளும் இருக்கின்றன. நம் சம்பாத்தியம்தான் அவர்களுக்கான வாழ்வாதாரம். ‘ஒருவேளை நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவர்கள் கதி..?’ - இந்தக் கேள்வி, எதிர்மறையாகத் தெரியலாம். ஆனால், யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்வி நம் நிம்மதிக்கு வித்திடும் அலாரமாகவே இருக்கும்.

பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய மாதச் சம்பளம் 1,20,000 ரூபாய். தனிநபர் கடன் இ.எம்.ஐ, வீட்டுக் கடன் இ.எம்.ஐ, நகைக்கடன் வட்டி போன்றவற்றைத் தாண்டி, தன் பிள்ளைக்குப் படிப்பு, வீட்டுச்செலவு, தன் பெற்றோருக்கும் தன் மனைவியின் பெற்றோருக்குமான செலவு என அனைத்தையும் கச்சிதமாக நிர்வகித்து வந்தார். மனைவி சித்ரா, குடும்ப நிர்வாகி. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல... விரிவான வழிகாட்டி
marrio31

ஒருநாள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது பெரும் விபத்தை கிருஷ்ணமூர்த்தி சந்திக்க, தங்கள் நேசத்துக்குரியவரை இழந்துவிட்ட சோகத்தில் அந்தக் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது. பலரும் எழுப்பிய கேள்வி... ‘இனிமே இந்தக் குடும்பத்தோட கதி..?’

தனக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், தன் குடும்பம் பொருளாதார நெருக்கடியால் தவிக்கக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன், தனது 25 வயதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ‘டேர்ம் இன்ஷூரன்ஸ்’ எடுத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு அவர் ஒவ்வொரு வருடமும் சுமார் 14,800 ரூபாய் பிரீமியத்தை, இடைநிறுத்தம் செய்யாமல் செலுத்தி வந்திருக்கிறார். அப்படிப் பார்க்கப்போனால், இந்த பாலிசிக்காக மாதம் அவர் செலவழித்த தொகை சுமார் ரூ.1,234 மட்டுமே. பிரீமியத்தை முறையாகச் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்து வந்த காரணத்தால் அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்குக் கிடைத்த அந்த பாலிசி தொகை, பிள்ளைகள் பெரியவர்களாகி வேலைக்குப் போகும்வரை உதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இப்போது புரிகிறதா இன்ஷூரன்ஸின் மகத்தான பலன் என்னவென்று?!

இன்ஷூரன்ஸ் என்று வந்துவிட்டாலே நம்மவர்கள் முக்கியமாகக் கவனிப்பது, கட்டிய பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது தான். இது சரியான எதிர்பார்ப்பா, இன்ஷூரன்ஸ் என்பது சேமிப்பா அல்லது முதலீடா, குடும்பத்தில் சம்பாதிக்கும் அனைவரும் ஏன் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள புதுச்சேரியில் உள்ள நிதி ஆலோசகர் சா.ராஜ சேகரனிடம் பேசினோம்.

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல... விரிவான வழிகாட்டி

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல!

“நம்மில் பலருக்கு இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மீது தவறான கண்ணோட்டம் இருக்கிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் என்பதை, நமது குடும்பத்தின் பாதுகாப்பாகக் கருதாமல் முத லீடாகப் பார்க்கிறோம். இன்ஷூரன்ஸையும் முதலீட்டையும் ஒன்றாக நினைத்து, எப் போதுமே குழப்பிக்கொள்ளாமல், இன்ஷூ ரன்ஸைத் தனியாகவும், முதலீட்டைத் தனியாக வும் தேர்வு செய்வது முக்கியம். இங்கிருக்கும் பெரும்பாலான இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்களும், ஏஜென்டுகளும் வருமானம் பார்ப்பதற்காகத் தேவையில்லாத பாலிசிகளையெல்லாம் மக்கள் தலையில் கட்டுகிறார்கள். கொரோனா பேரிடர் மாதிரியான நேரத்தைப் பயன்படுத்தி, மக்களை இன்ஷூரன்ஸ் எடுக்க வைப்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். பாலிசியின் பெயர்களில் சில்ட்ரன்ஸ் பிளான், ரிட்டையர் மென்ட் பிளான் எனத் திட்டங்களின் பெயர் களை வைத்திருப்பதால், அந்தத் தேவையை நிறைவேற்ற இந்த பாலிசிகள் பயன்படும் என்று கருதி மக்கள் அதை ஒரு முதலீடாகப் பார்க் கிறார்கள்.

காப்பீடு, சேமிப்பு, முதலீடு... என்ன வித்தியாசம்?

கையில் வாங்கும் சம்பளம், ஆண்டுக்கு ஒரு முறை உயர்கிறதோ இல்லையோ, பொருள் களின் விலையும், விலைவாசியும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. பொருள்களின் விலை உயர்வு, நம்மை பாதிக்காமல் இருக்க அல்லது அவற்றைச் சமாளிக்க, இரண்டாவது வருமானம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. அந்த இரண்டாவது வருமானத்தை நீண்ட காலத்தில் பெற்றுத்தர இன்ஷூரன்ஸ் திட்டங் களால் முடியாது. காரணம், இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாக இருக்கும் என்பதால், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைவாகவே இருக்கும். சேமிப்புத் திட்டங்களில் நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்குமே தவிர, அதிக வருமானம் கிடைக்காது. காரணம், அந்தப் பத்திரமும் கடன் சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது.

ஆனால், முதலீடு என்பது அப்படி கிடை யாது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு போன்றவை அதிக ரிஸ்க் உள்ள, அதே சமயம் அதிக வருமானம் தரக்கூடிய முதலீடுகளாகும். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம், கார் வாங்க, வீடு கட்ட என எதிர்கால இலக்கு களுக்குத் தேவையான தொகைக்கு, இந்த முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யும் போது, நீண்டகால அடிப்படையில் நல்ல லாபத்தை நம்மால் சம்பாதிக்க முடியும்.

குறைந்த வயதில் குறைந்த பிரீமியம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது மிகக் குறைந்த பிரீமியத்தில் மிக அதிகமான இழப் பீட்டைத் தரக்கூடியது. இந்த வகை பாலிசியில் உயிரிழப்பு நடந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். இல்லாவிட்டால் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. இந்த ஒரு காரணத்தினாலேயே நம் மக்கள் இந்த காப்பீட்டு பாலிசியை எடுக்கத் தயங்கு கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு தவறானது. மருத்துவக் காப்பீட்டிலும், இருசக்கர வாகனக் காப்பீட்டிலும் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பதில்லை. அதற்காக அந்த பாலிசிகளை நாம் எடுக்காமல் இருப்ப தில்லையே... அது போலத்தான் டேர்ம் இன்ஷூரன்ஸும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாம் கேட்கும் கவரேஜ் தொகையானது நமது வருமானம், வயது, உடல்நிலை, செய்யும் வேலையில் இருக்கும் ரிஸ்க் எனப் பல விஷயங்களையும் கணக்கில் கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். அதனால், டேர்ம் இன்ஷூரன்ஸை குறைந்த வயதில் எடுத்துக் கொள்வது நல்லது. குறைந்த வயதில் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது குறைவான பிரீமியம் கட்டினால் போதும்.

மேலும், இன்றைய நிலையில் 40 வயதுக்குமேல் உண்டாகும் நோய்கள் மிகவும் பொதுவானவையாக இருப்ப தால், பிரீமியம் தொகை மாறுபடுவதுடன், பாலிசி எடுப்பதிலும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. புகை, குடிப்பழக்கம் இருந்தால் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியம் தொகை மாறும். அதனால் வயது குறைவாக இருக்கும் போதே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸில் ஒருவர் தனது வருடாந்தரச் சம்பளத்தில் 10 அல்லது 15 மடங்கு வரை கவரேஜ் எடுத்துக் கொள்ளலாம். ஓய்வுபெறும் வயது வரை மட்டும் பாலிசிக் காலத்தை வைத்துக் கொள்ளலாம். டேர்ம் இன்ஷூரன்ஸுடன் கூடுதல் கவரேஜ் பெறும் வழிமுறையும் உள்ளது. அதற்கான வசதிகள் `ரைடர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. விபத்து, நோய் போன்றவற்றுக்குக் காப்பீடு தனியாக எடுத்தால், அதிக பிரீமியம் செலுத்த வேண்டிவரும். அதுவே டேர்ம் பிளானுடன் சேர்த்து ரைடராக எடுத்தால், பிரீமியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

அதனால், இனி முதலீட்டுக் கண்ணோட் டத்தில் இன்ஷூரன்ஸை அணுகாமல், வயது குறைவாக இருக்கும்போதே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

யாருக்கெல்லாம் காப்பீடு அவசியம்?

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டுபவர்களுக்கானது. யாரின் வருமானத்தை குடும்பம் சார்ந்து இருக்கிறதோ, எவர் ஒருவரின் இறப்பு பொருளாதார ரீதியில் குடும்பத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்குமோ, எவர் ஒருவரின் இழப்பால் ஒரு குடும்பம் ஸ்தம்பித்து நிற்குமோ அவர்கள் அனைவருக்கும் டேர்ம் பாலிசி அவசியம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குடும் பத்துக்காக வருமானம் ஈட்டும் அனைவருக்கும் டேர்ம் பாலிசி கட்டாயம் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு பிரீமியம் குறைவு!

டேர்ம் பிளான் பாலிசிகளில் ஆண்களைவிட பெண்களுக்கு பிரீமியம் குறைவா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஆம். டேர்ம் பாலிசி பிரீமியம் ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்றுக் குறைவாகவே இருக்கும். பெண்களின் இறப்பு சதவிகிதம் ஆண்களின் இறப்பு சதவிகி தத்தைவிட சற்றுக் குறைவு. மேலும், ஆண்களின் சராசரி ஆயுள் காலத்தைவிட, பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகம் என்பதும் பிரீமியம் குறைவாக இருப்பதற்கு காரணம்.

*****

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல... விரிவான வழிகாட்டி

* டேர்ம் பாலிசியை அதிகபட்சம் 70 வயது வரை எடுக்கலாம். அந்த வயது வரை பிரீமியமும் செலுத்தலாம். பிரீமியம் தொகையானது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, வயது அதிகரிக்க அதிகரிக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகரிக்கும் என்பதால், வயது குறைவாக இருக்கும்போதே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வதுதான் லாபகரமாக இருக்கும். பாலிசி எடுக்கும்போது நிர்ணயிக்கப்படும் பிரீமியம் தொகைதான், முதிர்வுக்காலம் வரையிலும் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை என்பதை நினைவில்கொள்க. அதனால் வேலைக்குச் சேர்ந்த புதிதிலேயே இந்த வகை பாலிசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது பைக், கார் உள்ளிட்டவற்றுக்கான மோட்டார் இன்ஷூரன்ஸ், மெடிக்ளெய்ம் இன்ஷூரன்ஸ் ஆகியவை போல ஒவ்வோர் ஆண்டும் பிரீமியம் செலுத்தி புதுப்பிக்க வேண்டிய இன்ஷூரன்ஸ் ஆகும். அதனால், இடை நிறுத்தம் செய்யாமல், ஒவ்வோர் ஆண்டும் பிரீமியம் செலுத்தி, பாலிசியைப் புதுப்பிப்பது அவசியம்.

புகை மற்றும் மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு, வழக்கமாக பிரீமியம் விலையிலிருந்து சற்றுக் கூடுதலான விலை நிர்ணயிக்கப்படும். பிரீமியம் விலை அதிகமாகும் என்பதற்காக, போதைப் பழக்கம் இருப்பதை சொல்லாமல் விடக் கூடாது. அப்படி மீறி மறைத்தால், க்ளெய்ம் பெறுவதற்காக சமர்ப்பிக்கும் மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிய வந்தால், க்ளெய்ம் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.