லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவசரகால நிதி... என்ன, ஏன், யாருக்கு, எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

அவசரகால நிதி
பிரீமியம் ஸ்டோரி
News
அவசரகால நிதி

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் முக்கியம்.

அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வேலையிழப்புகள் அதிகமாகி யிருக்கின்றன. குடும்ப பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதைச் சமாளிக்க அனைவரிடமும் ‘அவசரகால நிதி (Emergency Fund)’ இருப்பது அவசியம் என்கின்றனர் நிதி ஆலோசககர்கள்.

 யூ.என்.சுபாஷ்
யூ.என்.சுபாஷ்

அவசரகால நிதி என்றால் என்ன, அதன் அவசியம் என்ன, அதை எப்படி, எதில் சேமிப்பது போன்ற கேள்விகளுடன் நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் பேசினோம்.

“கொரோனா தொற்றிலிருந்து பாது காப்பாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் முக்கியம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோ னாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, ஏராளமானோர் வேலையை இழந்தனர். பெரும்பாலானவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடியில் தள்ளப்பட்டன. பல தரப்பினரும் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர். இதற்கு மிக முக்கிய காரணம் கொரோனாவாக இருந்தாலும், அவசரகால நிதி சேமிப்பு இல்லாததும் ஒரு காரணம். அவசரகால நிதியைச் சேமித்து வைத்திருந்தால், பொருளாதார பிரச்னைகள் எழும் சூழ்நிலை களைச் சமாளித்துவிட முடியும்.

அவசரகால நிதி என்றால் என்ன?

அவசர செலவுகள் யாரிடமும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எதிர்பாராமல் ஏற் படக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும் சமாளிக்க உதவுவதுதான் அவசர கால நிதி. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை திடீரென இழக்கும் சூழல் ஏற்பட்டாலோ, சொந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டாலோ, சம்பளம் குறைக்கப்பட்டாலோ, பணிபுரியும் நிறுவனம் மூடப்பட்டாலோ, குடும்பத்தினர் யாருக் காவது அவசர மருத்துவ சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டாலோ எந்த ஒரு நிகழ்வையும் எளிதாகச் சமாளிக்க அவசர கால நிதி அவசியம். அந்தவகையில் குறைந்தபட்சம்

6 மாதங்கள், அதிகபட்சம் 12 மாதங்களுக்குக் குடும்பச் செலவுக்குத் தேவையான தொகை அவசரகால நிதியாக ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

எவ்வளவு சேமிக்க வேண்டும்?

உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தின் மாதச் செலவு 10,000 என்றால், அவர் குறைந்த பட்சம் 60,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,20,000 ரூபாய் வரை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும். இதை ஒரே நாளில் உருவாக்குவது சிரமமான காரியம். இதற்கான தொகையை இத்தனை மாதம் அல்லது ஆண்டில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப சேமிக்கலாம். நீங்கள் உட்பட உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே, தங்கள் பாக் கெட்டுகளில் அன்றாடம் மிஞ்சும் 5, 10, 20, 50 என எத்தனை ரூபாயாக இருந் தாலும் அதை வீட்டில் ஓர் உண்டியலில் சேமித்து வந்தால்கூட, அதுவும் அவசரகால நிதி சேமிப்புக்கான மாதத் தவணைக்கு உதவும். அவசரகால நிதிக்கான சேமிப்பை, மாதம்தோறும் வங்கியி லேயே பிடித்தம் செய்யும் ஆட்டோ மேஷன் முறையில் சேமியுங்கள். இப்படிச் செய்வதால், ஒவ்வொரு மாதமும் அவசரகால நிதி சேமிப்பு குறித்து நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க தேவையில்லை.

அவசரகால நிதி... என்ன, ஏன், யாருக்கு, எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

அவசரகால நிதியின் நன்மைகள்!

கொரோனா மாதிரியான நெருக்கடி காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டாலும், வேலையை இழக்க நேரிட்டாலும், சம்பளம் குறைந்தாலும் அவசரகால நிதி உங்களுக்கு கைகொடுக்கும். எதிர் பாரா செலவுகளைச் சமாளிக்க கடன் அல்லது வேறொருவரின் சொந்த பணத்தைச் சார்ந்திருக்காமல் இருக்க உதவும்.

அவசரகால மருத்துவச் செலவுகள் ஏற்படும்போது இந்த நிதியைப் பயன்படுத்தலாம். ஹெல்த் இன் ஷூரன்ஸ் இருந்தால், அதைப் பயன் படுத்திக்கொண்டு, அவசரகால நிதிச் சேமிப்பை பிற தேவைகளுக்காகப் பயன்படுத்துவது நல்லது.

சொந்த தொழில்முனைவோராக இருந்தால், தொழில் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர அவசரகால நிதி பயன்படும். ஆனால், குடும்பத்தின் தேவைகளுக்கும், நெருக்கடி காலங்களில் தொழில் தேவைகளுக்கும் எனத் தனித்தனியே அவசரகால நிதியைச் சேமிப்பது முக்கியம்.

வீடு வாங்குதல் அல்லது குழந்தை களின் கல்வி, திருமணத் தேவைகள் மற்றும் தொழில் தொடங்குதல் போன்ற எதிர்காலத் தேவைகளைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்போது, ஏதேனும் அவசர செலவு வந்து அதைத் தடுத்துவிடாமல் இருக்க இந்த நிதி உதவும்.

பராமரிப்பது எப்படி?

அவசரகால நிதியைச் சேமித்து வைக்கும்போது, அதை அவசரத்துக்கு எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். அதனால் வழக்கமான வங்கிச் சேமிப்புக் கணக்கில் சேமித்து அதைப் பராமரித்து வரலாம்.

சம்பளக் கணக்கு அல்லது இதர கணக்குகளில் அவசரகால நிதியைச் சேமிக்காமல், தனியாக இதற்கென்று வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது நல்லது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், இந்தத் தொகையை அவசர காரணங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங் களால் எடுத்து செலவு செய்தால், மீண்டும் அதை அதே அளவில் பராமரிப்பது அவசியம்.

ஆர்.டி போட்டு வரலாம். மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ரிஸ்க் இல்லா லிக்விட் ஃபண்டிலும் முதலீடு செய்து வரலாம். அவசரகால நிதியை முதலீடு செய்யும்போது, மூலதனத் துக்கு இழப்பு வரக் கூடாது. அந்தத் தொகையை முதலீடு செய்யவோ, அவசரத்தேவைக்கு எடுக்கும்போதோ, எந்தக் கட்டணமும் இருக்கக் கூடாது என்பதை கவனத்தில்கொள்ளவும்.

அவசர கால நிதித்தொகை மொத்த மாகச் சேர்ந்தவுடன், அதில் 20% தொகையை வங்கிச் சேமிப்புக்கணக்கு, மீதியை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம். இதில் 5% முன் பின் இருக்கலாம். அப்போதுதான் இந்த நிதி மூலமும் வருமானத்தை ஈட்ட முடியும். அவசரகால நிதியை, கணவன் மனைவி இணைந்து ஜாயின்ட் கணக்கில் வைத்துக் கொள்வது நல்லது. ஒருவருக்கு சிக்கல் எனில், மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியும்” என்றார் தெளிவாக.

ஆக, அவசரகால நிதியை இதுவரை சேமிக்காமல் இருந்தால், இனிமேல் மாதாந்தர பட்ஜெட் போடும்போது உங்களது முதல் சேமிப்பு அவசரகால நிதிக்காக இருக்கட்டும்.

ட்விட்டர் சர்வே: அவசரகால நிதி இருக்கிறதா?

எதிர்பாராமல் வேலை இழந்தால், அடுத்து வரும் ஆறு மாதக் காலத்துக்கு யாரிடமும் கடன் வாங்காமல், குடும்பத்துக்குத் தேவையான செலவுகளைச் செய்கிற அளவுக்கு அவசரகால நிதியைச் சேமித்து வைத்திருக்கிறீர்களா என்கிற கேள்வியை அண்மையில் நாணயம் விகடனின் ட்விட்டர் கணக்கில் கேட்டு, சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 41% பேர், அவசரகால நிலையைச் சமாளிக்கத் தேவை யான நிதி தங்களிடம் இல்லை என்றும், 39% பேர் அவசரகால நிதியைச் சேர்க்க வேண்டும் என்கிற யோசனையே தங்களுக்கு இன்னும் வரவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதுமாதிரி இருப்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, திடீர் மருத்துவச் செலவுகள் வந் தாலோ கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டி யிருக்கும்.

இன்றைய கொரோனா காலகட்டத்தில் கடன் கிடைக்குமா கிடைக்காதா என்பது சந்தேகம்தான். அப்படியே கடன் கிடைத்தாலும் அதிக அளவில் வட்டி கட்ட வேண்டியிருக்கும். வெறும் 20% பேர் மட்டுமே, அவசரகால நிலையைச் சமாளிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் நிதி நிர்வாகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் என்பதால், கடன் வாங்கி நிலைமையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்காது.